வடிவங்கள், வரையறைகள்

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள எழுதும் கலை நூலின் முன்னுரை)

எழுதும் கலை என்ற இந்த நூலை இரண்டு தனி அனுபவங்களிலிருந்து உருவாக்கினேன். 2002ல் எனது நண்பர் இளங்கோ கல்லானை மதுரை அமெரிக்கன் கல்லூரி சார்பில் கொடைக்கானலில் ஒரு சிறுகதைப்  பயிலரங்கை நடத்தும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார். பதினைந்து மாணவர்கள் பங்கெடுத்த அந்நிகழ்வில் சிறுகதை எழுதும் கலை குறித்து இரண்டு நாட்கள் நான் வகுப்பெடுத்தேன். அந்த வகுப்பு என்னைப் பொறுத்தவரை மிக வெற்றிகரமான ஒன்று. மிகத்திட்டவட்டமாகவும் தெளிவாகவும் சிறுகதை என்னும் கலை, அதன் கட்டமைப்பு, அதன் சாத்தியங்கள் ஆகியவற்றைப் பற்றி என்னால் கற்பிக்க முடிந்தது. 

ஆனால் அந்த வகுப்பிலிருந்து எவரும் சிறுகதை எழுதவில்லை. எவரும் நல்ல வாசகர்களாக ஆனார்கள் என்றுகூட எனக்கு பின்னர் தெரியவரவில்லை. அது ஏமாற்றம் அளித்தாலும் என் வரையில் சிறுகதையை பற்றிய வரையறைகளை புதிய வாய்ப்புகளை மேலும் தெளிவுபடுத்திக்கொண்டேன் என்று தோன்றியது.

1991-ல் நான் ‘நாவல் (கோட்பாடு)’ எனும் நூல் ஒன்றை எழுதினேன். என் நண்பர் பெங்களூர் மகாலிங்கம் அதை வெளியிட்டார். நாவல் எனும் கலை கதையோ தொடர்கதையோ அல்ல என்றும், அது ஒரு மொழிவெளி என்றும், ஒரு வாழ்க்கைப்பரப்பு என்றும் அந்த நூலில் விவாதித்திருந்தேன். அதையொட்டி நாவலின் வடிவங்களைப் பற்றிய ஒரு தொடர்விவாதம் எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையே நடந்துவந்தது.  

என்னுடைய  விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்தபோது அது நாவல் தானா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் அது தன்னை ஒரு புராணமாகவும் கற்பனை செய்துகொள்கிறது. புராணத்திற்கு உரிய அழகியலும் அதற்கு உண்டு. நாவல் என்றால் அது யதார்த்த ச்சித்தரிப்பைக் கொண்டது, நேரடியானது, அரசியல் மற்றும் சமூக உண்மைகளை முன்வைப்பது என்னும் பார்வை கொண்டிருந்த நண்பர்களுக்கு அது குழப்பத்தை அளித்தது. அதை ஒட்டி பல்வேறு நண்பர்களிடம் நாவல் பற்றிய  தொடர் கடித விவாதங்களில் ஈடுபட்டேன். பலருக்கும் நாவல் குறித்த எனது எண்ணங்களை நீண்ட கடிதங்களாக எழுதியிருக்கிறேன். பா.ராகவன் போன்ற சிலர் அது தங்களுக்கு உதவியாக இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.    

பின்னர் அக்குறிப்புகளை தொகுத்து சிறுகதை, நாவல் ஆகியவற்றைப் பற்றிய ஒரு சிறுநூலை உருவாக்கலாம் என்ற எண்ணம் வந்தது. கூடவே இணையத்தில் எழுதிய கட்டுரைகளைப் பற்றிய குறிப்புகளை இணைத்துக்கொண்டு நூலை முழுமை செய்தேன். சென்ற ஆண்டுகளில் மூன்று பதிப்புகள் வந்துள்ள இந்த நூல் தொடர்ச்சியாக இரண்டு தலைமுறை இளைஞர்களுக்கு இலக்கியத்தின் வடிவங்கள் பற்றிய ஒரு தெளிவை அளிப்பதாக இருந்தது என்று சொன்னார்கள். 

பொதுவாக தமிழ்ச்சூழலில், குறிப்பாக சிற்றிதழ் சூழலில் எதையுமே திட்டமிட்டு செய்யக்கூடாது, திட்டவட்டமாக பேசக்கூடாது என்ற ஒரு உளமயக்கு உண்டு. இது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அநேகமாக தமிழ் சூழலில் முன்னோடிகளாகத் திகழ்ந்த சிலர் தற்செயலாக ஜே.கிருஷ்ணமூர்த்தியின் செல்வாக்கிலிருந்ததும், அவரது புகழ் பெற்ற சிந்தனைகள் சிலவற்றை அவர்கள் தங்களுக்குரிய வகையில் விளக்கிக்கொண்டதும், அவற்றைத் தங்கள் தனியவைகளில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததும் அதற்குக் காரணம் என்று தோன்றுகிறது.

ஜே.கிருஷ்ணமூர்த்தி கிட்டத்தட்ட செயலின்மையை சிந்தனையின்மையை முன்வைப்பவர். அதை அவர் ஒரு யோகம் போல முன்வைத்தாலும் இவர்கள் அதை ஒரு சோம்பல் பயிற்சியாக புரிந்துகொண்டார்கள். ஆகவே தத்துவத்திற்கு எதிரான மனநிலை, இலக்கிய விமர்சன கோட்பாடுகளுக்கு எதிரான மனநிலை, பொதுவாகவே சிந்தனைக்கு எதிரான மனநிலை இவர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. எதைச் சொன்னாலும் ’அப்படியெல்லாம் வரையறுத்துவிட முடியாது, அப்படியெல்லாம் அறுதியிட்டு கூறிவிடமுடியாது’ என்று ஒருவர் சொன்னால் அவர் சிந்தனையாளர் என்ற வண்ணத்தை பெறுகிறார் என்பதை எண்பதுகளில் இலக்கியத்துக்குள் வந்து சேர்ந்த இளம் தலைமுறையினர் உடனே கற்றுக்கொண்டார்கள். அதை இன்று வரையிலும் பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

‘எதையும் வரையறை செய்யக்கூடாது’ என்பது ஓர் அசட்டு நிலைபாடு மட்டுமே. உலகத்தில் எங்கும் அப்படி ஒரு மைய ஓட்ட சிந்தனை கிடையாது. ஒரு சிலருக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட ஆளுமை அல்லது ஆளுமைக் குறைபாடு சம்பந்தப்பட்டதே ஒழிய வரையறுக்கலாகாது, பொதுமைப்படுத்தலாகாது, திட்டவட்டமாக சொல்லக்கூடாது என்னும் சிந்தனை உலகில் எங்கும் எனக்குத் தெரிந்து கிடையாது.

வரையறுத்து சொல்பவன் அவ்வரையறையானது வாழ்வின் வண்ணங்களாலும், மனிதப்படைப்பூக்கத்தின் சாத்தியங்களாலும் உடனடியாக மீறப்படும் என்பதை அறிந்தே இருப்பான். அந்த மீறல்கள் நிகழும்போது அவற்றையும் உள்ளடக்கிக்கொண்டு தன் வரையறையை இன்னும் விரிவாக்கிக் கொள்ளவே முயல்வான். அவ்வண்ணமே  மானுட சிந்தனை இதுவரைக்கும் வந்து சேர்ந்துள்ளது. வாழ்வு, அறம், ஒழுக்கம் குறித்ததானாலும்; அன்பு, நீதி போன்ற விழுமியங்கள் குறித்ததானாலும் அவ்வாறே. இலக்கிய வடிவங்கள் குறித்தும் அதையே கூறமுடியும். 

இலக்கிய வடிவங்கள் எவையும் அறுதியாக வரையறுக்கப்படுபவை அல்ல. ஓர் இலக்கியப் படைப்பிலிருந்து குறைந்தபட்சம் எதிர்பார்க்கப்படும் வடிவ ஒருமை என்ன என்பதே அவ்வரையறையின் அடிப்படையாகும்.  அந்தக் குறைந்தபட்சமென்பது அதுவரையிலான தலைசிறந்த படைப்புகளால் உருவாக்கப்பட்ட இலக்கணம். அதற்கு மேல் ஓர் அடியாவது எடுத்து வை என்று அது புதிதாக எழுத வருபவனிடம் கோருகிறது. இன்று இதுவரை இவ்வாறு சாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு வாசகன் இதை எதிர்பார்ப்பான் என்றும் இதை ளித்து மேலே சற்றேனும் நகர முயற்சி செய் என்ன்றும் சொல்வதே  எல்லா வடிவ இலக்கணங்களின் அடிப்படை. 

தமிழில் நெடுங்காலமாக அழகியல் விமர்சனமே மையப்போக்காக இருந்துள்ளது. ஆனால் அழகியல் விமர்சனத்தின் அடிப்படையாகிய வடிவங்கள் எங்குமே வரையறுக்கப்பட்டது கிடையாது, ஒரு விதிவிலக்கு தவிர. சிறுகதையின் வடிவம் பற்றி எழுத்து இதழில் க.நா.சு, சி.சு.செல்லப்பா முதலியோர் பங்கெடுத்த ஒரு தீவிரமான விவாதம் நிகழ்ந்துள்ளது. அகிலன் முதலியோரின் கதைகள் வடிவமற்றவை என்று நிராகரித்து க.நா.சு எழுதிய விவாதத்தை ஒட்டி அந்த கருத்துகள் இங்கே பேசப்பட்டன. அவை தமிழில் சிறுகதை வடிவம் கூர்படவும் இந்திய அளவில் தமிழ்ச்சிறுகதை துல்லியம் கொண்டிருக்கவும் காரணமாக  அமைந்தன. அந்த விவாதத்தை எம்.வேதசகாய குமார் அவருடைய ‘தமிழ்ச்சிறுகதை வரலாறு’ என்னும் நூலில் முன்னெடுத்தார்

நீண்ட காலத்திற்கு பிறகு நாவல் என்ற வடிவம் பற்றி நான் உருவாக்கிய ஒரு விவாதம் தமிழில் நிகழ்ந்தது 1991-ல். அது தமிழ் நாவலின் வடிவை மாற்றியமைத்தது. தமிழில் முழுமைப்பார்வையும், தொகுப்புத்தன்மையும், மையத்தரிசனமும் அல்லது எதிர்த்தரிசனமும் கொண்ட பெருநாவல் உருவாக வழிவகுத்தது. அதை அதற்குப்பின் வந்த நாவல்கள் அனைத்தையும் பார்ப்பவர்கள் உணர முடியும். அத்தகைய தொடர் விவாதங்கள் ஒரு சூழலில் நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். 

க.நா.சு அல்லது சுந்தர ராமசாமி ஒரு படைப்பை விவாதிக்கையில் சரியாக மொழியும் வடிவமும் கொண்டு வந்துள்ளது என்பதையே சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் அந்த மொழி எப்படி இருக்கவேண்டும் அந்த வடிவம் என்ன என்பதைப்பற்றிய விவாதங்களுக்குள் வருவதைத் தவிர்க்கிறார்கள். 

இந்த நூல் அந்த வடிவம் பற்றிய ஒரு விவாதத்தை முன்வைக்கிறது. மீறக்கூடாத இலக்கணமாக அல்ல, குறைந்த பட்ச எதிர்ப்பார்ப்பாகவும் சாத்தியமாகவும் மீறப்படவேண்டிய எல்லையாகவும். இன்று எழுத வரும் வாசகர்களுக்கு இந்த நூல் உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இதை அவர்கள் ஒரு அறைகூவலாகக் கொள்ளலாம். இதிலிருந்து முன் செல்லும் கனவை தீட்டிக்கொள்ளலாம். 

ஜெ

எழுதும் கலை வாங்க

எழுதும் கலை மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைகுமரித்தோழன்
அடுத்த கட்டுரைமருத்துவம், கடிதம்