மருபூமி நூல் வெளியீட்டு விழாவில் அஜிதன் ஆற்றிய ஏற்புரை காணொளி . மைத்ரி வெளியீட்டு விழா உரை போலவே வெறும் சம்பிரதாய ஏற்புரையாக அன்றி தீவிரமான ஒரு சிந்தனையை முன்வைக்கும் உரை.
இந்த உரை தமிழ்ச்சூழலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. வாசகனை பற்றி கவனம்கொண்டு, பாவனைகளில்லாமல் இயல்பாக ஆற்றப்படும் இத்தகைய தீவிரமான தத்துவ- இலக்கிய உரைகள் அரிதாகவே நிகழ்கின்றன. விரிவான வாசிப்பும், புரிதலும் வெளிப்படும் உரை.
தத்துவார்த்தமான அல்லது கோட்பாட்டு விவாதங்களில் நான் எப்போதுமே முதல் நிபந்தனையாக முன்வைப்பது தெளிவு. அதை அடைவதற்காகவே வாசிப்பு என்பது என் எண்ணம். தெளிவின்மை என்பது புரிதலின்மை அல்லது, வெறும் பாவலாவின் விளைவு. அத்தகைய உரைகள், கட்டுரைகளை பொருட்படுத்தலாகாது என்பது என் நீண்டகால முடிவு. இவ்வுரையில் துல்லியமான ஒரு புரிதலும் பயணமும் உள்ளது.
சென்ற இருபதாண்டுகளாக எல்லாவற்றையும் ‘இது பின்நவீனத்துவம்’ என்று சொல்ல பழகியிருக்கிறோம். அதுவே ஆகப்புதிய சிந்தனை என எண்ண ஆரம்பித்துள்ளோம். இது பின்னவீனத்துவ யுகம் என்றே பலர் நம்புகிறார்கள். இவர்களில் மெய்யான தத்துவவாசிப்பும் புரிதலும் கொண்டவர்கள் மிகமிகக் குறைவு. உதிரிவரிகள் வழியாக உருவாகும் புரிதல் இது.
பின்நவீனத்துவ எழுத்துமுறை, அல்லது வெளிப்பாட்டு முறை இன்று பல புனைவுகளில் உள்ளது என கூறப்படுகிறது. ’இந்நாவல் வாசகனை விளையாட அழைக்கிறது’ என்றவகையான வரிகள் அனேகமாக எல்லா புனைகதைகளிலும் பின்னட்டைக் குறிப்புகளில் உள்ளன. ஆனால் எப்போது மாநாடு போன்ற ஒரு வணிகத் திரைப்படத்தில் பின்நவீனத்துவத்தின் முகமாகச் சொல்லப்படும் கதைவிளையாட்டு வெளிவந்து அது வெகுஜன ரசனையில் வெற்றியும் அடைந்துள்ளதோ அப்ப்போதே அது இலக்கியத்தில் பழையதாகிவிட்டது என்று கொள்ளவேண்டியதுதான்.
அழகு, உண்மை, அறம் உள்ளிட்ட மதிப்பீடுகளை நிராகரிப்பதே ’இன்றைய’ பின்நவீனத்துவச் சிந்தனை என்னும் எண்ணம் இங்கே வெளிப்பட்டுக்கொண்டே உள்ளது. எல்லாவற்றையும் கட்டுடைத்தலும், பகடி செய்வதும், கவிழ்த்து விளையாடுவதும்தான் இன்றைய இலக்கியம் செய்யவேண்டியது என பலர் நம்புகிறார்கள்.
ஆனால் இவற்றையெல்லாம் முன்வைத்த பின்நவீனத்துவம் முற்றிலும் காலாவதியாகியே இருபதாண்டுகள் கடந்துவிட்டன. அதற்கு அடுத்த காலகட்டத்தைச் சேர்ந்தவை நான் எழுதிய அறம் முதலிய புனைவுகள். வெள்ளையானை, குமரித்துறைவி போன்ற நாவல்கள். அவை மீண்டும் அறம், உண்மை, அழகு ஆகிய மதிப்பீடுகளை தீவிரமாக முன்வைப்பவை. வாழ்க்கையுடன் நேரடியாக உரையாடுபவை, செயல்பாடு நோக்கி அழைப்பவை, அதன் விளைவுகளும் கண்கூடானவை.
அவை வெளிவந்தபோது நவீனத்துவர்களும், பின்நவீனத்துவர்களும் அடைந்த திகைப்பு புரிந்துகொள்ளத் தக்கதே. அவர்கள் அவற்றை பழைய வகை எழுத்து என வகைப்படுத்த முயன்றனர். ஆனால் அறம் போன்ற நூல்கள் பழைய செவ்வியல் – கற்பனாவாத புனைவுகள் போல விழுமியங்களை முழுமுதல் உண்மையாக முன்வைக்கவில்லை. புனைவுக்கு வெளியே மதம், நிலைபெற்ற தத்துவக்கொள்கை என எதையும் அவை சார்ந்திருக்கவுமில்லை. ஒரு புனைவுக்களத்தை உருவாக்கி அதற்குள் அவற்றை முன்வைக்கின்றன. புனைவுக்களத்தை வாழ்க்கையின் ஒரு பிரதிநிதித்துவ வட்டமாக கருதுகின்றன. அதன் மிகச்சிறந்த உதாரணம் வெண்முரசு.
அதை இன்று கோட்பாட்டாளர்கள் சொல்வதுபோல பின் பின்நவீனத்துவம் (post postmodernism) எனலாம். அல்லது transmodernism எனலாம் . அதைப்பற்றிய ஒரு சுருக்கமான, ஆழமான அறிமுகம் இந்த உரை.
இலக்கியத்தின் தன்னிச்சையான முன்னகர்வை கோட்பாட்டுவாதிகள் பின்னால் வந்து தொட்டெடுத்து வரையறைசெய்து பெயர் சூட்டும்போதே அந்த அழகியல் பழையதாக ஆகிவிட்டிருக்கும் என்று அஜிதன் கூறுகிறான். இலக்கியம் அதற்கு அடுத்த காலகட்டத்தை நோக்கி முன்னரே நகர்ந்து சென்றுவிட்டிருக்கும்.
பின்நவீனத்துவத்தின் தத்துவ இடர்கள், அதன் தன்னைத்தான் தோற்கடிக்கும் தன்மை, அதன்மேல் பின்ன்நவீனத்துவத்தின் உள்ளும் புறமும் செயல்பட்ட வெவ்வேறு அறிஞர்கள் முன்வைத்த விமர்சனங்கள், அதை கலையும் சிந்தனையும் கடந்துசென்ற விதம், இன்றைய இலக்கியத்தில் பிளேட்டோவிய இலட்சியவாதம் விழுமியங்களாக வந்தமைந்திருக்கும் தீவிரம் ஆகியவற்றை விளக்கும் உரை இது.
உதாரணமாக, சிஷெக் போன்ற இன்றைய நுண்முதலாளித்துவ தத்துவச் சொற்பொழிவாளர்கள்கூட பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களுடன் நடைமுறையில் இணையும் புள்ளியை தொட்டுக்காட்டிச் செல்கிறது இந்த உரை. எமர்ஸன் போன்ற ஆழ்நிலைவாதச் சிந்தனையாளர்களை நாம் இன்று கண்டெடுக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டுகிறது. பின்நவீனத்துவ சிதறடித்தல், மையமழித்தல் ஆகியவற்றில் இருந்து அடுத்தகட்ட சிந்தனைமுறையான பின் பின்நவீனத்துவம் கடந்து முன்செல்கிறது என்று காட்டுகிறது.
வெண்முரசு போன்ற புனைவுகள் இன்றைய கலைச்சிந்தனையில் எப்படி மதிப்பிடப்படும், எந்த இடத்தில் பொருத்தப்படும் என்பதை இந்த உரை வெளிப்படுத்துகிறது. நான் என் அகத்தேடலின் வழிச் சென்று எழுதிய புனைவுகளை இன்றைய பின் பின்நவீனத்துவச் சூழலின் வெளிப்பாடுகளாக புரிந்துகொள்கிறேன். எனக்கு இந்த உரை மிகப்பெரிய அறிதலின் தொடக்கமாக அமைந்துள்ளது.