தொலைவும் காலமும் – கடிதங்கள்

தொலைவில் எங்கோ- வல்லினம்

அன்புள்ள ஜெ,

“தொலைவில் எங்கோ” சிறுகதை வாசித்தேன். சிறுவயதுமுதல் நான் கேட்ட வாசித்த ஆன்மிகக்கதைகள் அனைத்திலும் உள்ள பொதுக்கூறாக ஒன்றைச் சுட்டவேண்டுமென்றால் இறையுருவகங்களின் மாற்றமின்மையைச் சொல்லலாம். மேலுலகத்திலுள்ள தேவர்கள் நம்மைவிட நிலைத்த தன்மை கொண்டவர்களாகவே உருவகிக்கப்படுகிறார்கள். “நமக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள். அதில் மார்கழி மாதம் அவர்களுக்கு வைகறைப் பொழுது”, என்ற வரியைப் பல்வேறு ஆன்மிகச் சொற்பொழிவுகளில் கேட்டிருக்கிறேன். அதேபோல் “பதினாறு இந்திரர்களின் வாழ்வு பிரம்மாவுக்கு ஒருநாள்” என்ற வரி. அதாவது தேவர்களுக்கு மேலுலகில் இருப்பவரான பிரம்மா அவர்களைவிட நிலைத்த தன்மை கொண்டவர் என்பது பொருள்.

ஆனால் “தொலைவில் எங்கோ” சிறுகதை இந்தக் கற்பனையைத் தலைகீழாக்குகிறது. ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும் உலகத்தைக் காட்சிப்படுத்துகிறது. “நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்” என்ற தேய்வழக்குச் சொல் அங்கு நிஜத்தில் நடக்கிறது. ஆபிகள் நாளுக்கொரு உடல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்; ஆபா முழுவதுமே ஒவ்வொரு நாளும் வண்ணம் மாறுகிறது. இது அங்கு சென்ற மனிதனை நிலைகுலையச்செய்கிறது. கதையில் கால் சொல்வது போல் வரலாறு முழுக்கவே மனிதனின் மொழியென்றாகி நிற்பது மாறாமையே. பாறை கனமானதாகவும் பஞ்சு கனமற்றதாகவும் இருக்கும்போதே மொழி பொருள் கொள்கிறது. பாறை இன்று கனமானதாகவும் நாளை கனமற்றதாகவும் இருந்தால் “கனம்” என்ற சொல்லுக்கு என்னதான் பொருள்?

ஆபாவின் ஞானிகள் மாற்றமின்மை மட்டுமே மனிதனின் சிந்தையை வடிவமைத்திருப்பதையும் ஒவ்வொரு மாற்றமும் அவனுக்குப் பேரச்சத்தையும் விளைவிப்பதை உணர்ந்துகொள்கிறார்கள். அதனாலேயே “அவன் பரிதாபத்துக்குரியவன்” என்கிறார்கள். சிறப்பான சிறுகதை.

அன்புடன்,
த.திருமூலநாதன்.

***

அன்புள்ள ஜெ

தொலைவின் வேறுபாடு என்பது ஒரு திகைப்பூட்டும் கொள்கை. அல்லது கேள்வி. தொலைவு என்பதனால் அடிப்படைகளில் ஏதாவது வேறுபாடு வந்தேயாகவேண்டுமா? ஆனால் வந்தாகவேண்டும் என்றும் இல்லை என்றும் படுகிறது. உண்மையில் இப்பிரபஞ்சம் நாம் இங்கே பூமியில் அறியும் விதிகளின்படித்தான் எல்லா இடங்களிலும் இயங்குகிறது என்று எவர் சொல்லமுடியும்? எங்கோ காலம் இல்லாமல் இருக்கலாம். பருப்பொருளின் உறுதிப்பாடும் நிலைத்த தன்மையும் இல்லாமலிருக்கலாம். அப்படியென்றால் கான்ஷியஸ் என்பது என்ன? அது பருப்பொருளை ஆட்சி செய்கிறதா என்ன? மிக ஆழமான சிக்கல்கொண்ட ஒரு கதை

மோகன் பலராமன்

முந்தைய கட்டுரைவாசித்தலெனும் பயணம்… கடிதம்
அடுத்த கட்டுரைசுழற்பாதை யாத்ரிகன், மதிப்பீடு