தொலைவில் – கடிதங்கள்

தொலைவில் எங்கோ- வல்லினம்

மனதை மனிதத்தளையில் இருந்து விடுவித்துப் பார்த்தல் (ஜெமோவின் “தொலைவில் எங்கோ” சிறுகதை குறித்து)

மனிதனை மனிதனாக்குவது மனது தான்.மனது என்பது எண்ணக்குவியல் அன்றி வேறில்லை. ஒரு எண்ணம் எண்ணப்பட்டபோதே மனது உருவாகிவிடுகிறது என்று சொல்லலாம்.மனிதன் என்னும் தன்னிருப்பிலிருந்தே மனது இதுநாள் வரை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ‘தனியாக அலையும் மனது’ என்பது நாம் கேள்விப்பட்டதே இல்லை.மனது மனிதனுக்குள் கட்டுண்டதாய் தான் இத்தனைக் காலம் இருக்கிறது.

அந்தத் தளையை அகற்றிப்பார்ப்பது தான் இந்தக் கதையின் கரு. இதில் பிரபஞ்சத்தின் வேறொரு கோளில் தனிமனது, மனிதர்களை தேர்ந்தெடுக்கிறது.

மனிதன் —> மனம் ( நம் பூமி)

மனம் —-> மனிதன் (தொலைவில் எங்கோ)

ஒரு மனம் தான் ஆனால் அங்கு ஒவ்வொரு நாளும் அதற்கு வேறு வேறு மனிதர்கள். அந்த மனிதர்களுக்கு “அது அப்படி” இயங்குகிறது என்பதே தெரியவில்லை.நம் பூமியில் இருந்து ஒருவன் சென்று உணர்த்த வேண்டியிருக்கிறது.கடைசியில் அந்த வேற்று கிரக மனிதனிலிருந்து வெளிப்படும் “அவன் பரிதாபத்திற்குரியவன்” எனும் குரல்,நம்மை நோக்கிய குரல். நம்மால் நம் மனதை ஒருபோதும் தனித்து உலவ வைத்திட முடியாது. அந்தத் தளைப் பற்றிப் பேசுகிறது கதை.

லோகேஷ் ரகுராமன்

*

அன்புள்ள ஜெ

புத்தாண்டில் ஒரு சமன் குலைக்கும் சிறுகதை. இதே போன்ற ஒரு சமன்குலைவு உங்களுடைய ஜடம் என்னும் கதையில் உருவானது. நாம் வாழும் இந்த ரியாலிட்டி என்பது உண்மையில் என்ன என்ற கேள்வியை எழுப்பும் கதை. மிக எளிய ஃபேபிள் மாதிரி எழுதப்பட்டிருந்தாலும் சிக்கலாகிக்கொண்டே செல்கிறது. அந்தக் கடைசிவரியில் நெஞ்சில் ஓர் அடி விழுந்த உணர்வு

அருண்

முந்தைய கட்டுரைவெண்முரசு வாசிப்பை தொடங்குதல்
அடுத்த கட்டுரைஆன்மிகமும் அறிவியலும்- ஜோஸா பாக்