நம் குழந்தைகளுக்கான கதைகள்

அன்புள்ள ஜெ

எழுத்தாளர் கே.ஜே.அசோக் குமார் இப்படி எழுதியிருந்தார்.

பனிமனிதன், வெள்ளிநிலம் ஆகிய இருபடைப்புகளிலும் சிறார்களுக்கு எது புரியும் எது புரியாது என்கிற எண்ணமற்று தன் ஆழ்மன குழந்தையுடன் உரையாடுகிறார் ஜெயமோகன்.

இதைப்பற்றி உங்கள் மதிப்பீடு என்ன?

ஆனந்த்ராஜ்

பனிமனிதன் புதிய பதிப்பு  வாங்க 

பனிமனிதன் மின்னூல் வாங்க

அன்புள்ள ஆனந்த்,

அது சரியான மதிப்பீடுதான்.

எந்த இலக்கியமும் அந்த ஆசிரியன் தன் அகத்தே வாழும் வாசகனுக்கு எழுதிக்கொள்வதே. குழந்தையோ இளைஞனோ முதியவனோ. வெளியே வாசிக்கும் வாசகனைப் பற்றி ஒரு தெளிவான மதிப்பீட்டை உருவாக்கிக் கொள்ளவே முடியாது. சமகால வாசகனைப் பற்றி ஒரு ’சர்வே’ எடுக்கலாம் என்றே வைத்துக்கொள்வோம். பிறந்து வரும் எதிர்கால வாசகர்களை எப்படிக் கணிப்பது?

பனிமனிதன் 1997ல் தினமணியில் வெளிவந்தது. அதன் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அதன்பின் பதினைந்தாண்டுகள் கழித்து பிறந்தவர்கள். இன்னும் அதை வாசிக்கவிருப்பவர்கள் பிறக்கவே இல்லை. அவர்களின் பெற்றோருக்குத் திருமணமே ஆகவில்லை.

நான் அந்நாவலை எழுதியது என் மகனுக்காக. அன்று அவன் சிறுகுழந்தை. அவனுக்கு கதையை வாசித்துக் காட்டினேன். அவனுக்கு பிடித்திருந்தது. இன்று அவன் ஓர் எழுத்தாளனும் கூடவே தத்துவ மாணவனும் ஆக மாற அந்நாவலே அடித்தளம். அவன் நினைவில் அழியாமல் நிலைகொள்கிறது. அவனை பயணத்தில் ஈடுபாடுள்ளனவனாக ஆக்கியது. அவனுடன் இருந்துகொண்டே இருக்கும் இயற்கைரசனை உள்ளிட்ட பலவற்றுக்கு அடித்தளமிட்டது.நான் செய்யக்கூடுவது அது மட்டுமே.

உடையாள் வாங்க

இரண்டு கணிப்புகள் எனக்கு அதை எழுதும்போது இருந்தன. ஒன்று, நம் குழந்தைகளின் அறிவுத்திறன் மிகுதி. தொழில்நுட்பம் அவர்களை மேலும் கூர்மையாக்கிக்கொண்டே செல்கிறது. அன்று இணைய ஊடகம் இல்லை. ஆனால் நான் அதைப்பற்றிய அறிவியல் ஊகங்களை அறிந்திருந்தேன் (ஒரு கட்டுரையும் எழுதியிருந்தேன்). ஆகவே நம்மைவிட அறிவியல் உட்பட பலவற்றிலும் மேலான ஒரு தலைமுறை உருவாகும்.

அந்தக்குழந்தைகளுக்கு நாம் நம் குழந்தைக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதும் புனைவுகள் உகக்காது. நாம் நம்முன் உள்ள சாதாரணமான குழந்தைகளை உத்தேசித்து எழுதும் கதைகளும் நிறைவளிக்காது. நான் அக்கூர்மையான வருங்காலக் குழந்தைக்காகவே பனிமனிதன், உடையாள், வெள்ளிநிலம் ஆகியவற்றை எழுதினேன். பரிணாமவியல், மானுடத்தோற்றவியல், மதங்களின் உருவாக்கம் பற்றிய மிகத்தீவிரமான சிந்தனைகள் கொண்ட, அதேசமயம் எளிய மொழியாலான கதைகள் அவை.

நம் குழந்தைகளுக்கு அறிவியலறிவு மேலானதாகவும் மொழியறிவு குறைவானதாகவும் இருக்கும் என ஊகித்தேன். ஏனென்றால் அவர்களின் இன்றைய கல்வி குறைவாகவே மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆகவே மிக எளிய மொழியில் எழுதினேன். அதைப்பற்றி முறையான ஆய்வையும் அன்று செய்தேன். குறைவான சொற்களையே பயன்படுத்தினேன். நீளமான சொற்றொடர்களை திட்டமிட்டே தவிர்த்தேன். அரிதான சொற்களை கூடுமானவரை பயன்படுத்தவில்லை. கதையில் சாகசம் இருந்துகொண்டே இருக்கும்படி செய்தேன். ஆனால் உள்ளடக்கம் தீவிரமான அறிவியல் சார்ந்தது.

குழந்தைகள் வாசிக்கும் கதைகள் அவர்களுக்கு உடனடியாக முழுமையாகப் புரிந்தாகவேண்டும் என்பதில்லை. அவை மெல்லமெல்ல அவர்களின் அறிவில் வளர்ந்தால் போதும். அவர்களின் கற்பனை அறியப்படாத பகுதிகளை நிறைக்கும்படி விரிந்தால் போதும். அது நிகழ்ந்தது. வெளிவந்த இருபத்தைந்தாண்டுகளில் பனிமனிதன் எல்லா காலகட்டங்களிலும் வெவ்வேறு தலைமுறையினரால் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் படைப்பாகவே உள்ளது.

ஜெ

முந்தைய கட்டுரைபாலமுருகனடிமை சுவாமிகள்
அடுத்த கட்டுரைஅஜிதன் சிறுநேர்காணல் – அகரமுதல்வன்