கனவறிவு – கடிதம்

தங்கப்புத்தகம் மின்னூல் வாங்க 

தங்கப்புத்தகம் வாங்க 

அன்புள்ள ஜெ

நான் சென்ற மார்ச்சில் லடாக் சென்றேன். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் என்றால் அதுதான். லடாக் செல்ல உங்கள் லடாக் பயணக்கட்டுரைகளே ஆதாரம். சில நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு என்ஃபீல்ட் பைக்கிலேயே சென்றுவந்தோம். நீங்கள் சொன்ன எல்லா இடங்களுக்கும் செல்லமுடிந்தது. (வழிகள் திறக்காத நிலையிலும் பைக்கில் சென்றால் சில குறுக்கு வழிகள் உள்ளன என்று அதை கண்டறிந்தோம்) திரும்ப வந்து அதே மே மாதம் ஸ்பிடி வேலி சென்று வந்தேன்.

அதன்பிறகு எங்கள் குழுவைச்சேர்ந்த ஒரு நண்பர் சொல்லித்தான் நான் உங்கள் தங்கப்புத்தகம் என்னும் கதைத்தொகுப்பை வாங்கி வாசித்தேன். நான் கதைகளை அதிகமாக வாசிப்பவனல்ல. லடாக் செல்லாவிட்டால் என்னால் தங்கப்புத்தகம் நூலை வாசித்திருக்கவும் முடியாது. ஒரு பத்துநாள் பிரமை பிடித்ததைப்போல அந்தக்கதைகளை வாசித்துக் கொண்டே இருந்தேன்.

தங்கப்புத்தகம் என்று ஒரு கதை அதிலே உள்ளது. அந்தக்கதையின் அதே அனுபவம்தான் தங்கப்புத்தகம் என்ற சிறுகதைப்புத்தகத்தை வாசிக்கும் அனுபவம். கனவுபோன்ற ஓர் அனுபவம்.

பிரவீன்குமார் ராம்

 

அன்புள்ள ஜெ

நலம்தானே?

எங்கள் தியான வகுப்பில் தங்கப்புத்தகம் நூலை பயிற்றுநர் ஒருவர் சொல்ல நான் வாசித்தேன். தியானம் பழகுபவர்களுக்கு மிக நுணுக்கமாகப்புரியும் கதை அது. திபேத் நம் இந்தியநாட்டின் நெற்றி. யோகமரபில் நெற்றி என்பது சகஸ்ரபத்மத்தின் இருப்பிடம். மொத்த உடம்பிலிருந்தும் எழும் ஆற்றல் குவியும் இடம் அது. இந்தியா முழுக்க விளைந்த ஞானம் என்பது ஒன்றாகச் சேர்ந்து கனிந்திருக்கும் இடம் திபெத் மற்றும் இமையமலை. கைலாசம் அங்கேதான் உள்ளது. மானசரோவர் அங்கேதான் உள்ளது. அந்த ஞானம் கனிந்து வைரமாக ஆகிய இடங்களை தங்கப்புத்தகம் சொல்கிறது. பலகதைகளை பலமுறை வாசித்து விவாதித்து உணரவேண்டியிருந்தது. மாயங்களும் கதைச்சுழற்சியும் உண்டு. ஆனால் அதெல்லாம் நம்மை நாமே அறியும் முயற்சிகள்தான்.

எம்,ராகவேந்திரா

முந்தைய கட்டுரைகதையடுக்குகளின் கதை, கடிதம்
அடுத்த கட்டுரைவே.நி.சூர்யா