பஞ்சமும் விடுதலையும்: வாசிப்பு

வெள்ளையானை மின்னூல் வாங்க

வெள்ளையானை வாங்க

வெள்ளை_யானை என்ற பெயரே இந்த நாவலுக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைகிறது. உண்மையில், யானையின் அத்தனை பெரிய உருவத்தை, சிறிய உருவம் கொண்ட மனிதன் பழக்கப் படுத்தித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் உவமைதான், சிறிய அளவிலான ஆங்கிலேயர்கள் இத்தனை பெரிய, சனத்தொகை கொண்ட இந்திய நாட்டை, அடக்கி ஆண்டு வந்தனர் என்பதற்குச் சொல்லப் படுகிறது. அதேநேரம், அந்த யானைக்கு மதம் பிடித்து, மந்தகத்தைக் கொண்டு, தாக்க வருமானால்…? ஆம், அத்தகைய ஆங்கிலேய ஆட்சியில், சென்னையில் நடந்த முதல் தொழிலாளர் போராட்டத்தைப் பற்றிப் பேசுவது தான் இந்நாவலின் அடிநாதம்.

தென்னிந்தியாவில் நிலவிய ஒரு பெரும் பஞ்சகாலத்தில் நடந்த நிகழ்வுகள், பிரிட்டிஷ் அரசின் காவல்துறையில் பணியாற்றிய ஒரு அயர்லாந்து அதிகாரி, ஏய்டன் பைர்னின் பார்வையில் கதையாகச் சொல்லப் படுகிறது. அவன் எண்ணிப்பார்க்கும் தனது இளவயது நிகழ்வுகளுடன் தொடங்கும் நாவல், அடுத்தடுத்த காட்சிகளில், அவன் நேரில் காணும் சாதி வெறி, தீண்டாமைக் கொடுமை, தலை விரித்தாடும் பஞ்சம், அதன் தாக்கத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இந்நாட்டின் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர், அவர்களைச் சுரண்டிக் கொழுக்கும் ஆங்கிலேய அரசு, அரசினைச் சார்ந்து அவர்களுக்கு வேண்டிய சேவைகளைச் செய்து வந்த உள்ளூர் பணக்காரர்கள் என, பல்வேறு உண்மைகள் அவனைச் சுற்றி நடந்தேருகிறது. அது அவனுக்குத் தரும் ஆற்றாமையும், கோபமும், வியப்பும், தனது முன்னோர்களை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகளாக விரிகிறது.

ஐஸ் ஹவுஸ் எனும் பெயரில், பிரெடரிக் டுடோர் என்பவரின் அமெரிக்க நிறுவனம், நியூ இங்கிலாந்தின் ஏரிகளில் உறைந்த பணிமலையை பெயர்த்து எடுத்து, கப்பலில் 6 மாத காலப் பயணத்தில் உருகாமல் சென்னைக்குக் கொண்டு வருகிறார்கள். அவ்வாறு கொண்டு வரப்பட்ட பனிமலையைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, இங்கு இருந்த ஆங்கிலேயர்களின் மதுக் குவளைகளுக்காக விற்பனை செய்து வந்தது. அந்த நிறுவனத்தின் இருள் சூழ்ந்த பனிக்கட்டி அறையில், கேப்டன் ஏய்டன் முதன்முதலாகக் கண்ட, 30 டன் எடையுள்ள ஒற்றைப் பனிக்கட்டியைத் தான் #வெள்ளை_யானை என்று விவரிக்கிறார், நூலாசிரியர் ஜெயமோகன். ஆம். இத்தனை பெரிய பனிமலை மீது, இந்தியத் தொழிலாளர்கள் வெற்றுடம்புடன் வேலை செய்த, ஐஸ் ஹவுஸ் கட்டிடம் இன்றளவும் சென்னையின் அடையாளப் பெயர்களில் ஒன்று.

அப்போதைய சென்னையில் வெள்ளையர் நகரம் – கருப்பர் நகரம் என்றிருந்த இரு வேறு உலகங்களையும், அதன் வேறுபாடுகளையும் கண்முன் நிறுத்துகிறது, ஆசிரியர் ஜெயமோகனின் விவரணைகள். காட்சிகளை மட்டுமின்றி, அங்கு நிலவிய ஏழ்மை, பசி, நோய் போன்றவற்றைக் கண்ட ஏய்டனைப் போலவே, நாமும் உறைந்து நிற்கின்றோம். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள், ஏன் இப்படி ஒதுக்கப் பட்டார்கள், எப்படி இந்த நிலையிலும் உயிர் வாழ்கிறார்கள், என எண்ணற்ற கேள்விகள் அவனைத் துளைக்கின்றன. செங்கல்பட்டு சாலையில் ஏய்டனுடன் இணைந்து கொள்ளும் ஆண்ட்ருவின் வாயிலாகப் பஞ்சத்தின் கொடுமையான காட்சிகளை ஆசிரியர் விவரிக்கும் தருணங்கள், அதன் இரு கைகளால் நம்மையும் பற்றி, உள்ளிழுத்துக் கொள்கின்றன. ஆனால், பின்னால், வந்த சில இடங்களில், இந்த அதீத விவரணைகள், வாசிப்பின் இடையில் சற்று சலிப்பை உண்டாக்கி விடுகின்றன. இதனைத் தேவையான அளவுடன் தவிர்த்திருக்கலாம்.

ஏய்டனுடன் இணையும் காத்தவராயன் எனும் இளைஞன் இந்தியர்களில் மாறுபட்டவனாகத் தெரிகிறான். அவர்களுடைய உரையாடல் இந்தியாவின் தீண்டாமைக் கொடுமையைப் புரிந்து கொள்ள ஏய்டனுக்கு உதவுகிறது. கூடவே, வெள்ளையர்கள் செய்த, செய்து கொண்டிருந்த சுரண்டல்களையும் தான். பிரிட்டிஷ் அரசினால் சுரண்டப்பட்ட விசயத்தில், பறையர்களையும், ஐரிஷ்காரர்களையும் பொருத்திப் பேசும் இடத்தில், கேப்டன் ஏய்டனின் தடுமாற்றம் நுண்ணிய அளவிலேனும் பதிவு செய்யப் பட்டிருப்பது சிறப்பு. வெள்ளையர் என்று ஒரே வார்த்தையில் அழைக்கப்பட்டாலும், அவர்களுக்குள் இருக்கும் பிரிட்டிஷ், ஐரிஷ், அமெரிக்க முகங்களையும், ஆட்சியாளர்களின் லஞ்சம் மலிந்த வாழ்க்கையையும் தோலுரித்துக் காட்டுகிறது, மெக்கென்சியுடனான உரையாடல்கள். ஐரோப்பிய நாடுகளில் சாதாரணமாக வண்டி ஓட்டியும், மண் சுமந்தும், கரிவெட்டியும் வாழ்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகள், ராணுவத்தில் சேர்ந்து, இந்தியாவிற்கு வந்துவிட்டால், அவர்கள் தங்கள் பழைய முகங்களைக் களைந்து, இங்குள்ள மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரியாக மாறும் ரசாயன மாற்றத்தை, விரிவாக விவரிக்கிறார், ஜெமோ. இவ்வாறு பிரிட்டிஷ் வீரனாக மாறிய பின், அவர்களுடைய நடை, உடை, பாவனை, பேச்சு, சக மனிதரிடம் காட்டும் ஆதிக்கம், வெறுப்பு, ஆகியனவே இம்மக்களை ஆள்வதற்கான தகுதி என அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கப் பட்டது. அவர்கள் இந்த மக்களைச் சுரண்டுவதும், அவர்களை மனமார வெறுப்பதும், இழிவு படுத்துவதும், தங்களின் மேட்டிமை உணர்வுகள் என்று தெரிந்தே இருந்தார்கள்.

ஏய்டன், தான் ஒவ்வொரு முறையும் உணர்ச்சி வசப்படும்போதும் ஷெல்லியின் கவிதைகளைத் தனக்குள் சொல்லிக் கொள்வதை அவனது அணிச்சை செயலாகவே கட்டமைத்திருக்கிறார், ஆசிரியர். பஞ்சத்திற்கும், சுரண்டலுக்கும் ஆளான மக்களைக் கண்டு வெகுண்ட அவனது மனம், ஏனோ அவர்களின் முதுகுத் தண்டில் கால் வைத்து வண்டி ஏறும் போது அமைதி காப்பது – நெருடல்.

இந்த நாட்டில் விளையும் தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டு, இங்கு பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. அந்தப் பஞ்சத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இங்கே சாப்பாட்டுக்கே வழியின்றி அகதிகளாக மாறிய மனித சக்தியை, மிகக் குறைந்த கூலிக்கு வாங்கிச் செல்ல நினைக்கும் அவலம் நிறைந்த காலம் – அதுவே உள்ளூர் குத்தகைக்காரர்களுக்கும், ஆங்கிலேயருக்கும் சாதகமான காலம் என்றும் விவரிக்கிறார். இதுபோன்ற பஞ்ச காலங்களில் தான், சென்னையிலும் மற்ற ஊர்களிலும் வளர்ச்சி என்ற பெயரில் ஆங்கிலேயர்களால், பல புதிய கட்டிடங்களும், கட்டுமானங்களும் முன்னெடுக்கப்பட்டன என்ற கசப்பான உண்மையை நிறுவுகிறார்.

சென்னையில் நடைபெற்ற அந்த முதல் தொழிலாளர் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த, வெள்ளையர்களை விட, இந்திய உயர்சாதியினர் மேற்கொண்ட சாதி வேறுபாடும், தீண்டாமைக் கொடுமையும் ஏய்டனை அயர்ச்சி அடையச் செய்தது. நாவலின் தொடக்கம் முதல் ஏய்டனுடன் பயணிக்கும் காத்தவராயன், ஆங்கில ஆட்சியின் கொடுமைகளை விட, அவர்களால் இங்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த சிறிய அளவிலான கல்வியையும், மனிதர்கள் என்று மதித்து, அவர்களுக்கு அளித்த மானுட நீதியையும் பாராட்டுகிறான். இருந்தாலும், ஆங்கிலேய ஆட்சியில்,தலித்துகளுக்குக் கல்வி கற்கவும், உடல் உழைப்பால் கடினமாக உள்ள வேலைகளைச் செய்யவும் உரிமை வழங்கியதாக உருவகப் படுத்தி, அவர்களின் ஏழ்மையை உழைப்பாக உரிஞ்சிக் கொள்கிறது. அதேநேரம், சாதிய அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், பணம் படைத்தோர் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திக் கொள்ளவும் என அவர்களுக்கான உரிமையையும் வழங்கப்பட்டது – இது ஆட்சியாளர்களின் வசதிக்காக என்று மேலோட்டமாக எண்ணினாலும், ஆங்கிலேயர்களுக்கு இந்த எண்ணம் தழைத்து வளர, சாதி இந்துக்களே காரணமாக இருந்திருந்தனர் என்பது திண்ணம்.

இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக, ஏய்டனை சிந்திக்கவும் செயல்படவும் வைத்தது இந்தக் காத்தவராயன் தான். இவர்தான், பின்னாளில் திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவரான, அயோத்தி தாசர் என்று அறிய முடிகின்றது.

வரலாற்றில் சென்னையைப் பற்றிய முக்கியமான நாவல் என்றாலும், வெளியான காலம் முதல், சர்ச்சைகளையும் எதிர்வினைகளையும் சந்தித்திருக்கிறது. அவ்வாறு வந்த எதிர்வினைகளுக்கு அவ்வப்போது தனது வலைத்தளத்தில் விளக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தார், ஆசிரியர் ஜெயமோகன்.

முரஹரி ஐய்யங்காரை தான் வணங்கும் விஷ்ணுவாகப் பார்த்த காத்தவராயன் தனது மதத்தைக் கைவிடுவதும், ரோமானிய சீசரின் முகத்தினைக் கொண்ட கிறிஸ்து ஆதிக்கத்தின் முகம் என்று அறிந்த ஏய்டன் தனது கிறிஸ்துவைக் கைவிடுவதும் வெவ்வேறு நிலைகளில், ஆனால் ஒரே புள்ளியில் ஒத்துப் போகின்றன. தலித் அரசியலையும், ஆங்கில ஆட்சியின் மனசாட்சியாக ஒரு சிறு துளியையும், இரண்டையும் சேர விடாமல் தடுத்த உள்ளூர் சாதிய – வர்க்க பேதங்களையும் ஒரே தளத்தில் பயணிக்கச் செய்கிறது, இந்நூல்.

வரலாற்றில் இடம்பெற்ற நிகழ்வுகளை வைத்துக் கொண்டு புனைகதைகள் எழுதும்போது, அதில் வரலாறு எது, புனைவு எது என்று பிரித்துப் பார்க்கும் முயற்சியும் அவ்வப்போது நடந்துள்ளது. அந்த விதத்தில், இந்நூலில், ‘வெள்ளை யானை’யாக உருவகப் படுத்தப் பட்ட பனிக்கட்டி, உண்மையில் அத்தனை பெரியதாக இருந்திருக்கவில்லை. மேலும், ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல, பின்னி மில் போராட்டத்திற்கு, தலித் மக்கள் ஆதரவு தெரிவிக்காமல் இருந்ததற்கு, அதற்கு முன் நடந்து முடிந்த, இந்த ஐஸ் ஹவுஸ் போராட்டத்தின் கசப்பான அனுபவம் தான் காரணம் என்று சொல்வதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் – ஏனெனில், இந்தச் செய்தி தலித் அறிஞர், அன்பு பொன்னோவியத்தின் அனுமானம் என்று சொல்லப்படுகிறது.

புனைவிலக்கியம் என்ற பெயரில் நிச்சயம், ‘வெள்ளை யானை’ ஒரு நல்ல அனுபவம். அடுத்ததாக, 19ம் நூற்றாண்டின் சென்னை என்ற இதே பின்னணியில் வந்த ‘வலம்’ என்ற நாவலையும் வாசிக்க வேண்டும்.

Sankar.T A.B,

Chennai.

வாசிப்பை நேசிப்போம்

முந்தைய கட்டுரைகாடு- பதிவுகள்
அடுத்த கட்டுரைகிராவின் உலகம்