ரூமியை புனைதல்

இதயங்களின் உதவியாளர் வாங்க

ரூமி தமிழ் நவீன இலக்கியச் சூழலில் முப்பதாண்டுகளாகவே அதிகம் பேசப்படும் கவிஞர்களில் ஒருவர். இந்த இடம் அவருக்கு ஏறத்தாழ ஐரோப்பிய நவீன இலக்கிய மரபிலும் உள்ளது. தொடர்ச்சியாக அவருடைய படைப்புகளின் வெவ்வேறு மொழியாக்கங்களை நான் அமெரிக்க நூலகங்களிலும் புத்தகக்கடைகளிலும் கண்டிருக்கிறேன்.

மரபிலக்கியத்தில் இருந்து ஒரு கவிஞர் நவீனக் கவிதையில் எப்படி முதன்மையான இடம் பெறுகிறார் என்பது ஒரு நுட்பமான கேள்வி. பேசுபொருள் நவீனக் காலகட்டத்தைச் சேர்ந்தததாக இருப்பது ஒரு காரணம் என முதன்மையாக குறிப்பிடலாம்.

ஆனால் ரூமி அப்படி நவீன உள்ளத்தின் நிலைகளை, இடர்களை தொட்டுப்பேசும் கவிஞர் அல்ல. அவருடையது ஒரு மரபான ஆன்மிகம்தான். அவர் வாழ்ந்தது 12 ஆம் நூற்றாண்டு. கம்பனுக்கும் நூறாண்டு முன்பு.

எனில் எப்படி ரூமி ஒரு நவீனக் கவிஞருக்குரிய வாசிப்பை உலகமெங்கும் அடைகிறார்?  பாரசீக மொழியை அறிந்த ஒரு ஈரானிய நாடக ஆசிரியர்- கவிஞர் திரிச்சூர் நாடக விழாவில் நிகழ்ந்த உரையாடலின்போது ரூமி நவீன ஈரானிய மனதிற்கு மிக அன்னியமான கவிஞர் என்றார். அது அன்று ஓர் வியப்பை உருவாக்கியது.

அவர் மேலும் எழுந்த வினாக்களுக்கு விடையாக ரூமியின் மொழி மிகப்பழையது, அவருடைய அணிகளும் பழையவை, ஈரானிய கவிதை அந்தக் காலகட்டத்தைக் கடந்து, அந்தக் காலகட்ட மனநிலைகளுக்கு எதிரான விமர்சனத்தன்மை கொண்டு உருவாகி வந்தது என்று சொன்னார்.

அதன்மேல் மீண்டும் வினாக்கள் எழுந்தபோது அவர் சொன்னார். ரூமியின் கவிதைகளாக உலகமெங்கும் வாசிக்கப்படுபவை அவருடைய வரிகளை ஒட்டி நவீன ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட மொழியாக்கங்கள்தான். அவற்றின் மொழிநடை நவீனமானது என்று.

அது ஒரு திறப்பாக எனக்கு அமைந்தது. அந்தக் கோணத்தில் நான் யோசித்ததில்லை. ஆயிரமாண்டுக்காலம் முந்தைய ஒரு கவிதை அது எழுதப்பட்ட மொழிக்கு மிகவும் பழமையானது. அதன் சொல்லாட்சிகளே அந்த பழமையை முதன்மையாக உருவாக்குகின்றன. கவிதை என்பது பெரும்பாலும் சொல்லிணைவு, சொற்தேர்வு வழியாக நிகழ்வது.

ஆனால் அது மிக நவீனமான இன்னொரு மொழியில் அதன் சமகால இலக்கிய நடையில் மிகச்சிறந்த இலக்கிய ஆசிரியரால் மொழியாக்கம் செய்யப்பட்டால் அந்தப் பழைமை மறைந்துவிடுகிறது. மொழியாக்கத்தை வாசிப்பவர்கள் ஒரு நவீனக் கவிதைமொழியினூடாக அக்கவிஞரை அடைகிறார்கள். அவர்கள் அறிவது வேறொரு கவிதையை.

உண்மையில் அத்தகைய மொழியாக்கம் கவிதையில் மிகப்பெரிய வேறுபாட்டை உருவாக்குகிறது – புனைவுகளில் அவ்வளவு வேறுபாடு உருவாவதில்லை. உதாரணமாக, ஒரு எதுகைமோனை கொண்ட வரி நமக்கு சம்பிரதாயமான ஒரு மனநிலையை அளிக்கிறது. அது சுருக்கமான செறிவான வரியாக மொழியாக்கத்தில் மாறிவிட்டால் அது நவீனக் கவிதையனுபவத்தை அளிக்கிறது.

ஆரத் தழுவியபடி
விழுந்தனர்
வானிலிருந்து கீழே.
நெய்த்திரியுடன்
சுடர்.

இது காளிதாசனின் ரகுவம்சம் காவியத்தில் இருந்து ஒரு கவிதைவரி. நான் நவீனக் கவிதையின் மொழிக்கு மாற்றியிருக்கிறேன். இப்படி கம்பனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் அதன் வாசகர்கள் அடையும் கவிஞன் எப்படிப்பட்டவன்?

இந்த விஷயத்தை பின்னர் மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணனுடன் விவாதித்தேன். பாஷோவின் ஹைக்கூ கவிதைகளை நாம் திருக்குறளை எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் ஜப்பானியர் அணுகுகிறார்கள். மரபு என்னும் மதிப்பும் மரபு உருவாக்கும் விலக்கமும் அவர்களிடம் உண்டு.ஆனால் நமக்கு அவர் நவீனக் கவிஞராகத் தெரிகிறார்.

இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். ரூமியும் பாஷோவும் உள்ளடக்கத்திலும் ஐரோப்பியருக்கோ நமக்கோ புதியவர்கள்தான். ஐரோப்பாவின் நம்பிக்கை சார்ந்த மதப்பின்னணியில் ரூமி முன்வைக்கும் சூஃபி ஞானத்தின் சுதந்திரத்தன்மை, பாஷோ முன்வைக்கும் ஜென் ஞானத்தின் உள்ளடங்கிய மௌனம் முற்றிலும் மாறுபட்ட ஒன்று.

முந்நூறாண்டுகளாக ஐரோப்பா அவர்களின் மரபான நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தில் இருந்து வெளியேறி பிற ஆன்மிகங்களுக்கான தேடலில் உள்ளது. குறிப்பாக கவிஞர்கள். இயற்கைவாதம் முதல் பலவகையான ஆன்மிகங்கள் அங்கே அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த தேடலுக்கு சூஃபி மரபும் ஜென் மரபும் கிளர்ச்சியூட்டும் புதுவரவுகள்.

ஆகவே நவீனக்கவிதைக்குரிய மொழியும் வடிவமும் கொண்டு, புதிய உள்ளடக்கத்துடன் வந்தமையால் ரூமியும் பாஷோவும் ஐரோப்பாவில் நவகவிஞர்களாகவே வாசிக்கப்பட்டனர். ஆங்கிலம் வழியாகவே அவர்கள் நம்மை வந்தடைகிறார்கள். ஆங்கிலம் வழியாகவே நாம் நவகவிதையையும் கண்டடைந்தோம். ஆகவே நமக்கு அவர்கள் நவகவிஞர்களாகவே அறிமுகமானார்கள்.

அத்துடன் நாமும் ஆசாரங்களும் நம்பிக்கையும் கொண்ட பக்திமதத்தின் அணியலங்காரங்கள் நெகிழ்வுகளைக் கடந்து புதிய ஆன்மிகத்திற்கான தேடலில் இருந்தோம். ஆகவே அவர்கள் இங்கே பெரிய ஏற்பை அடைந்தனர். இந்தியாவில் ரூமி, பாஷோ போன்றவர்களை பெரும்புகழ்பெறச் செய்தவர் ஓஷோ என்பது யோசிக்கத்தக்கது.

ஏறத்தாழ இதே விஷயத்தை ஏ.கே.ராமானுஜன் மொழியாக்கம் செய்த சங்கத்தமிழ் கவிதைகளையும், பக்திக்கவிதைகளையும் ஆங்கிலத்தில் படிக்கையில் நாம் உணரலாம். தமிழில் நமக்கு மரபின் தேய்வழக்குகளாகத் தெரிந்த சொல்லாட்சிகள் ஆங்கிலச் சொல்லமைப்பில் புத்தம்புதியவையாக இருந்தன. பக்திக்கவிதைகளின் சம்பிரதாயமான உணர்ச்சிகரம் ஆங்கிலத்தில் புதிய ஒரு கற்பனாவாதத்தன்மை கொண்டிருந்தது.

க. மோகனரங்கன் நவீனக் கவிஞராகவும் விமர்சகராகவும் அறியப்படுபவர். அவருடைய மொழியாக்கத்தில் நூல்வனம் பதிப்பகம் ரூமியின் கவிதைகளை வெளியிட்டுள்ளது. நவீனத்தமிழின் கவிஞரின் திறமையான மொழியின் வழியாக நாம் ரூமியைச் சென்றடைகிறோம். அவருக்கு மூலமாக இருப்பது ஆங்கிலக் கவிஞர் ஒருவரின் மொழியாக்கம்.

இங்கே ரூமியை இரு கவிஞர்கள் மீண்டும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

‘என் இதயத்தில்
நீ நிலவென எழுந்தாய்
ஆயினும் நான் உன்னைப் பார்க்கையில்
நீ மறைந்து போனாய்
உன் தோட்டத்தை ஒருமுறை பார்த்தபின்
இனியும் என் இருப்பை தாங்க
எனக்குப் பொறுமையில்லை.

என்ற வரி மூலத்தில் ஒரு கஸல் இசைப்பாடல் போல இருந்திருக்கக்கூடும். இங்கே நவீன மொழிக்கு உருமாறுகிறது.  என் ‘இருப்பு’ என்னும் சொல்லாட்சி இன்றைய இருத்தலியல் பொருளேற்றம் கொண்டு இக்கவிதையை இன்றைய வாசிப்பால் உருவானதாக ஆக்குகிறது.

அன்பின் ரத்தக்கறை படிந்த
திரைகளுக்குப் பின்னால்
காதலர்கள் உலவிடும்
பூந்தோட்டங்கள் உள்ளன

என்னும் வரி மரபிலிருந்து வந்து நவீன வாழ்க்கையுடன் உறவாடும் ஒரு காலம்கடந்த தன்மையையும் கொண்டுள்ளது.

ரூமியின் மீதான ஐரோப்பிய வாசிப்பு பிழையானது என்னும் வாதம் ஈரானிய விமர்சகர்களிடம் உண்டு. ரூமி பேசும் இறைக்காதலை அவர்கள் உலகியல் காதலாக வாசிக்கிறார்கள் என்பார்கள்.

நீ
என் நெஞ்சில் நடம்புரியும்
ஆனந்தம்
மற்றவர்களிடமிருந்து மறைக்கப்பட்ட
என் ரகசியக் காதல்

என்னும் வரி ஒரு நவீனக் காதல்கவிதையாகவே வெறுமே பொருள்கொள்கிறது. ‘கள்ளக்காதலி காதலனை நினைப்பதுபோல இரவும்பகலும் இறைவனை பக்தன் எண்ணிக்கொள்ளவேண்டும்’ என்னும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் வரியின் உணர்வை கொண்டது அந்த மூலம்.

ஆனால் மொழியாக்கத்தினூடாக ஒரு கவிஞர் உருமாறி வேறொன்றாக வெளிப்படுவதும் ஒருவகையான கவிதைச் செயல்பாடுதான் என்று படுகிறது. ஒரு கவிஞரை உலகமெங்குமிருந்து கவிஞர்கள் வெவ்வேறு வழிகளினூடாக மறுஆக்கம் செய்துகொண்டே இருப்பதென்பதே ஒரு பெரும் பண்பாட்டு நிகழ்வுதான்

இதயங்களின் உதவியாளர் ரூமி கவிதைகள்

முந்தைய கட்டுரைபிரான்சுவா குரோ
அடுத்த கட்டுரைசங்க இலக்கியம், உரை- கடிதங்கள்