சுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்

சுஜாதா அறிமுகம்

அன்புள்ள ஜெயமோகன்,

எனக்கு வயது நாற்பத்துமூன்று. என்னுடைய பிளஸ்டூ வயதிலே நான் சுஜாதா வாசித்தேன். அப்போது என்னுடைய ஆதர்சம் அவர்தான். பின்னாடி ஒரு பத்துப்பதினைஞ்சு வருஷம் கழித்து வாசித்தபோது ’என்ன இது’ங்கிற மாதிரித்தான் இருந்தது. ஆனாலும் வாசிக்கவும் முடிந்தது. தொடர்ந்து ஒரு மூன்றுநாவல் வாசித்தபின் சலிப்பாகிவிட்டது.

உங்கள் இணைய தளத்தில் சுஜாதாவைப்பற்றி நடக்கும் சர்ச்சைகளை வாசிக்கிறேன். பலருக்குக் கோபம் இருக்கிறது என்று இணையத்தில் வாசித்தேன். அப்படி கோபம் கொள்பவர்களிலே கொஞ்சம் சாதியபிமானமும் உண்டா என்று எனக்கு சந்தேகம் வந்தது. ஒருவர் என் அலுவலகத்திலேயே மிகவும் கோபமாகப் பேசினார். ஆனால் எல்லாருமே அந்த இளமைப்பருவ வாசிப்பிலேயே நின்றுபோனார்கள் என்றும் நினைத்தேன். மேலே எதையும் வாசிக்கும் மனநிலை இல்லாமல் சுஜாதாவை வைத்துக்கொள்ளக் கஷ்டப்படுகிறார்கள்.

இப்போது ஒரு இருபது வயசாகக்கூடிய பையன்களுக்கு சுஜாதா பிடித்திருக்குமா என்று தோன்றியது. சிலரிடம் கேட்டுப்பார்த்தேன். அப்படி இல்லை. அவர்களுக்கு சுஜாதா பெரிதாக சுவாரசியமாக இல்லை. சுஜாதாவின் கதைகளிலே உள்ள டெக்னிக் எல்லாம் அவர்களுக்கு சிறுபிள்ளைத்தனமாக தோன்றுகிறது. நடையும் பெரிதாக ஈடுபாடு இல்லை. நான் சொல்வது பெரிய இலக்கிய வாசகர்களை இல்லை. சும்மா ஆங்கிலநாவல் வாசிக்கும் வாசகர்களைத்தான். சுஜாதாவைக் கட்டுக்கட்டாக வாங்கிக்கொண்டு போகிறவர்கள் சின்னவயசிலே அவரைப் படித்தபிறகு வேறு எதுவுமே பெரிதாகப் படிக்காமல் இப்போது மீண்டும் படிப்பவர்கள்தான்.

சமீபத்திலே சுஜாதா என்று தேடியபோது இந்த இணைப்பு கிடைத்தது. http://crackedpots.co.in/?p=1136 , http://crackedpots.co.in/?p=1146. இந்தப்பையன் சின்னவயசு. யாரோ சொல்லிக் கேள்விப்பட்டு சாதாரணமாக சுஜாதாவை வாசிக்க ஆரம்பித்து ஏமாற்றம் அடைந்திருக்கிறான்.அவனை அதற்காக நிறையப்பேர் திட்டியிருக்கிறார்கள்.சுஜாதா இளையதலைமுறைக்கான எழுத்தாளர் என்ற பில்ட் அப் கலைகிறதே என்றுதான் திட்டியிருப்பார்கள் என நினைக்கிறேன். சுஜாதாவின் எழுத்துக்களை ஏன் எல்லாரும் வாசிக்கிறார்கள் என்றால் அதைப்பற்றித்தான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதை வாசிக்கப் பெரிதாக சிரமப்படவும் தேவையில்லை என்பதுதான் காரணம்

சீனிவாசன் கண்ணன்

அன்புள்ள சீனிவாசன்,

சுஜாதா ஒரு வாசிப்புக்கட்டத்தை நிரப்பக்கூடியவர். அந்த இடத்தில் அவர் கொஞ்சநாள் இருப்பார் என்றே நினைக்கிறேன். அதை வாசித்து வளர்ந்தவர்களின் மலரும் நினைவுகளில் இன்னும் அரைநூற்றாண்டு கூட நீடிக்கலாம். நீங்கள் சொல்வதுபோல அவரது எழுத்து இளைஞர்களைக் கவர்கிறதா என்பது எனக்கே சந்தேகம்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைசிங்காரவேலரின் பிராமண வெறுப்பு
அடுத்த கட்டுரைநவகண்டம்