குமரிநிலம் பற்றிய ஒரு பத்தியை ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். அதை வாசித்தபின்னர் கொற்றவை நாவலை படிக்க ஆர்வம் எழுந்தது.
…..தலைமுறைகள் மடிய மடிய தூக்கமற்ற நுதல்விழியுடன் அவன் மட்டும் மலைமீது வாழ்ந்தான். இருண்ட வானில் அவன் வாழும் கயிலை எனும் வெண்மலையின் உச்சிப்பாறையில் நிற்கையில் கூனலிளம் பிறை அவன் சடைமுடிமீது வந்தமரக் கண்டார்கள். வறண்ட கோடையில் விடாய்நீர் தேடிச் சீவங்கள் காட்டுக்குள் அலைமோதும்போது அவன் தன் மலைப்பாறைமீது ஏறி நிற்க கருஞ்சடைக் கற்றைகள் விரிந்து வானில் பரந்து கறுத்து கனத்து இடிபிளிறி பிளந்து வழிவிட வானின் திரைக்கு அப்பால் அணையுண்டு கிடந்து அலைமோதும் வான்பேராறுகள் மண் நோக்கிப் பொழிவதைக் கண்டார்கள். புயலில் காடுகள் கொந்தளிக்கையில் தன் மலையுச்சி மேடை மீது அவன் ஆடும் அந்தக் கூத்தைக் காண அவர்கள் கூடுவதுண்டு. அவனது தூக்கிய பாதத்துக்குக் கீழே குமரிநிலம் வாழ்ந்தது.
கொற்றவையை பகுத்தறிவுப்பார்வை கொண்ட ஒரு புதுத் தமிழ்க்காவியம் என்று சொல்லலாமா? அதில் தமிழின் எல்லா தொன்மக்கதைகளும் ஏதோ ஒருவகையில் வருகின்றன. ஆட்டனத்தி ஆதிமந்தி வருகிறார்களா என்று பார்த்தேன். வருகிறார்கள். தமிழின் சமயம் எப்படி தென்திசையில் உருவானது என்ற மாபெரும் சித்திரமும் உள்ளது.
கொற்றவை எளிமையான அரசியலால் புரிந்துகொள்ளப்படவேண்டிய நூல் அல்ல. இங்கே தமிழ் வரலாறை திராவிடப்பார்வை, தமிழ்த்தேசியப்பார்வை என்றெல்லாம் குறுகலான அரசியல்நோக்கங்களுடன் எளிமையாக விளக்கும்போக்கு உள்ளது. கொற்றவை முன்வைப்பது உள்ளுணர்வு சார்ந்த ஒரு வரலாற்றை. intuitive history என்று அதைச் சொல்லமுடியும். நுணுக்கமான ஒரு வரலாறு அது. இங்கே உள்ள எல்லா தெய்வங்களையும் தொன்மங்களையும் இணைத்துக் கொண்டு அந்த நாவல் முன்னகர்கிறது.
கொற்றவையுடன் சேர்த்துப் படிப்பதற்காக கொடுங்கோளூர் கண்ணகி என்ற உங்கள் நூலையும் வாங்கினேன். அந்நூல் கொடுத்த அனுபவமும் ஒரு நல்ல புனைவுக்குச் சமானமானது. நம் வரலாற்றில் எத்தனை மர்மமான நுட்பமான இடங்கள் உள்ளன என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அந்த மர்மம் அரசியல் அல்ல. வழக்கமான ஆதிக்கம், சுரண்டல் என்றெல்லாம் ஜல்லியடித்து விளக்கக்கூடியது அல்ல. அதைப் புரிந்துகொள்ள ஒரு mystic approach தேவையாகிறது. தியானம் வழியாக மட்டுமே விரியும் ஒரு அகவெளி அது
inner space பற்றி ஒரு தெளிவு உடையாவ்ர்கள் இங்கே பலர் உண்டு. அவர்களால் இந்த உலகத்துக்குள் செல்லமுடியும்.உதாரணமாக பாலையில் கண்ணகி கொற்றவையின் ஆலயத்தின் முன் நேருக்குநேர் நிற்கும்போது என்ன நடக்கிறது என்பதை அவர்களால் உணர முடியும். ஆனால் அவர்களில் பலருக்கு புனைவிலக்கியங்கள் இதையெல்லாம் செய்யும் என்னும் நம்பிக்கை இல்லை. ஆகவே அவர்கள் வாசிப்பதில்லை. அவர்கள் வாசிக்கவேண்டிய நாவல் இது.
Meditation னுக்கு இலக்கியம் உதவுமா என்று ஒரு நண்பர் கேட்டார். புராணம் உதவுமா என்று நான் கேட்டேன். ஆமாம், புராணத்திலுள்ள myths and archetypes உதவும் என்று அவர் சொன்னார். அவற்றை விட்டு நிறைய மேலே செல்லவேண்டும் என்பதும் உண்மை. நான் சொன்னேன். அப்படியென்றால் கொற்றவை உங்களுக்கு உதவும் என்று சொன்னேன்.
கொற்றவை எழுதியமைக்கு நன்றி
மந்த்ர சைதன்யா