இன்னுமொரு ஆங்கிலச் சிறுகதைத் தொகுதி- கடிதம்

 

A Fine thread and Other Stories  நூல் வாங்க.

அன்புள்ள ஜெ,

புத்தாண்டு வாழ்த்துக்கள். நலமே நாடுகிறேன்.

A Fine thread and Other Stories அமேசான்.இன்-ல் வெளியாகி விட்டது. மூன்று நாட்கள் முன்பே உங்களுக்கு எழுத முயற்சித்தேன். பென்ஸில்வேனியாவின் பொகோனோ மலைத்தொடரில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுலத்தில் வேதாந்த வகுப்புகளுக்காக அனுவும், நானும் வந்துள்ளோம். மௌன வியாக்கினத்துக்கு இணையத் தொடர்பு அவசியமில்லை என்று ஆலமர்ந்த ஆசிரியர் முடிவு செய்து விட்டார் போல. விட்டு விட்டுத்தான் வருகிறது. எனவே தாமதம். உங்கள் எண் என்னிடம் இல்லை. இத்தனை ஆண்டுத் தொடர்பில் இருந்தும் கூட எனக்கு உங்களிடம் எண் கேட்கக் கூச்சமாகவே இருந்திருக்கிறது. இப்போதும் அப்படியே.

கடந்த ஒரு மாத காலமாகவே A Fine thread and Other Stories வெளிவருவது குறித்து சமூக வலைதளங்களில் பரப்புரை செய்து வருகிறேன். இன்ஸ்டாகிராம், டிக்டாக், எக்ஸ் தளம்,  முக நூல் ஆகியவற்றில் புத்தகம் குறித்த செய்திகளையும், வீடியோக்களையும் பரப்பி வருகிறேன். நீங்கள் இதிலெல்லாம் இல்லாததால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நண்பர்கள் யாரேனும் தெரிவித்திருக்கக் கூடும். தொடர்ந்து இந்த நூல் குறித்து சமூகவெளியில் பேசிக் கொண்டிருக்க வேண்டும்.

குருகுலத்தின் ஆசிரியர் சுவாமினி ஸ்வாத்மவித்யானந்தா சாந்தோக்கிய உபநிடதத்தில் சனத்குமாரர் நாரதருக்கு ஆனந்தம் பற்றி விளக்கும் பகுதியைப் பயின்று கொண்டிருக்கும் வேளையில் தான் புத்தகம் வெளியான செய்தி கிடைத்தது. வகுப்பு முடிந்து அனுவும், நானும் ஸ்வாமினியைச் சந்தித்தபோது என் மகிழ்ச்சியை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். “என்னோட காப்பி எங்கே?” என்று கண்கள் விரியக் கேட்டார். எழுத்துக்கும், ஆன்மிக சாதனைகளுக்கும் உண்டான தொடர்புகள் குறித்து என் ஐயங்களை அவரிடம் கேட்டு விளங்கிக் கொண்டேன். ஆர்ஷவித்யா குருகுலத்தின் புத்தாண்டுத் தினக் கொண்டாட்டத்தில் இந்தச் செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு பணித்தார். ஆன்மிக சாதகர்கள் கூடியுள்ள இடத்தில் புத்தகத்துக்கான பரப்புரையைச் செய்வதா என்று தயங்கினேன். ஆனால் அவர் நான் பகிர்ந்து கொண்டுதான் ஆக வேண்டும் என்று சொல்லி விட்டார். 650க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் A Fine Thread and Other Stories குறித்தும், அதிலிலுள்ள வேதாந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சில கதைகளே அவற்றை மொழியாக்கத் தூண்டுதலாக இருந்தது பற்றியும் சில வரிகள் பேசினேன். அந்த வீடியோவை இத்துடன் இணைத்துள்ளேன். நிகழ்ச்சிக்குப் பிறகு பலர் என்னை அணுகி வாழ்த்துத் தெரிவித்து, புத்தகத்தை வாசிக்க ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தனர். குருகுலத்தின் புத்தக நிலையத்தில் நூலின் சில பிரதிகளை வைப்பதாக குருகுலத்தின் நிர்வாகி சுத்தாத்மா உறுதியளித்துள்ளார். இந்தப் புத்தாண்டு எனக்கு நன்றாகவேதான் துவங்கியிருக்கிறது.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நூலின் பிரதிகளை விற்பனைக்கு வைக்க வேண்டுமென்பது என் அவா. ரத்னா பதிப்பகம் சென்னையில் ஸ்டால் போடுகிறார்களா என்று தெரியவில்லை. விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் ஸ்டாலில் நூல்களை விற்பனைக்கு வைக்கலாம். விஷ்ணுபுரம் பதிப்பகத்தார் விரும்பினால் ஆஸ்டின் சௌந்தர் (அண்ணா) இது குறித்து ரத்னா பதிப்பகத்திடம் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

நண்பர்கள் இந்த நூல் அமெரிக்காவில் கிடைக்குமா என்று கேட்கிறார்கள். இந்தியாவில் நூல் வெளியாகிச் சில வாரங்கள் கழித்து, அமேசான்.காமில் நூலின் கின்டில் பதிப்பும், புத்தக வடிவும் கிடைக்கும். இப்போதைக்கு நண்பர்கள் இந்தியாவில் வாங்கி, தருவித்துக் கொள்ளலாம்.

இந்த நூலுக்கான கலந்துரையாடல் ஒன்றை ரத்னா பதிப்பகம் புது தில்லியின் மிகப் பிரபலமான புத்தக அங்காடியில் நிகழ்த்தத் திட்டமிட்டு, அதில் நீங்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கலந்துரையாடலில் கலந்து கொள்ளும்  ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் GJV. பிரசாத் ஒரு மொழிபெயர்ப்பாளரும் கூட. அவர் மொழிபெயர்த்த நூலொன்று இவ்வாண்டின் காலிங்கி இலக்கியப் பரிசுக்கான நீள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எனக்கும் கலந்து கொள்ள ஆவல்தான். நண்பர்கள் பலரும் இந்தியாவுக்குப் போ என்று என்று தூண்டிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் என்னுடைய விசா நிலைமை காரணமாக இப்போது என்னால் பயணம் செய்ய இயலாது. என் மனம் அங்கிருக்கும்.

அருண்மொழி அவர்களுக்கும், அஜிதன், சைதன்யாவுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புது மாப்பிள்ளைக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்.

ஜெகதீஷ் குமார்

முந்தைய கட்டுரைஅறமும் ஆலமும்- கடிதம்
அடுத்த கட்டுரைவிழா – கிருஷ்ணன் சங்கரன்