கதையடுக்குகளின் கதை, கடிதம்

கதாநாயகி வாங்க

அன்புள்ள ஜெ

நலம்தானே?

கதாநாயகி நாவலை வாசிப்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். என்னுடைய தயக்கத்துக்கான காரணம் அது ஒரு பேய்க்கதை என்று நண்பர் ஒருவர் சொன்னதுதான். பேய்க்கதைகளுக்குரிய ஒரு டெம்ப்ளேட் உண்டு. அதை இன்றைக்கெல்லாம் சினிமாவாக எடுத்து  exhaust செய்துவிட்டார்கள். ஆகவே ஒரு சலிப்பு. நானே இந்த ஆண்டு பத்து பேய்ப்படங்களுக்குமேல் பார்த்துவிட்டேன்,. நான்கு பேய்க்கதைகளையும் வாசித்துவிட்டேன். ஆகவே தயக்கம்.

ஆனால் தற்செயலாக ஒரு ரயில்பயணத்தின்போது வாசிக்க ஆரம்பித்தேன். முதலில் அந்த பேய்க்கதை தொடங்கும்போதே ஆர்வம் உருவாகிவிட்டது. அதற்குக்காரணம் அந்த லொக்கேஷனின் வர்ணனைதான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தின் மழை, காடு ஆகியவற்றுக்குள் சென்றுவிட்டேன். நான் வாசிக்கும் பேய்க்கதைகளுக்கும் இந்த நாவலுக்குமான வேறுபாடென்ன என்பதை அதன்பிறகுதான் புரிந்துகொண்டேன். மற்ற நாவல்கள் விறுவிறுப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒன்று செய்வார்கள். மினிமலிஸ்ட் முறையில் கதையைச் சொல்வார்கள். ஆகவே நிகழ்ச்சிகள்தான் நிறைய இருக்கும். அந்த இடம் நம் கண்முன் வராது. நாம் நமக்கு பழக்கமான ஏதாவது சினிமாவைக்கொண்டு எல்லாவற்றையும் கற்பனைசெய்துகொள்வோம். அந்தக் கற்பனைதான் இந்த மாதிரி கதைகளை மொனொடொனெஸ் ஆக வைக்கிறது என படுகிறது. இந்நாவலில் இந்த நிலம் ஒரு பெரிய கனவு மாதிரி ஒரு டூர் மாதிரி இருந்தது.

அதன்பிறகுதான் நாவலின் ஆழம் தெரியவந்தது. அது அடுக்கடுக்காக பல இடங்களுக்குச் செல்கிறது. பழைய பிரிட்டிஷ் ஆட்சிக்காலம். லண்டனில் உள்ள காலகட்டம். அப்படியே இன்னொரு நாவலுக்குள் செல்கிறது. பல அடுக்குகள். பல உலகங்கள். ஆனால் அந்த பேய்க்கதை டெம்ப்ளேட்டுக்குள் அந்த கதைகள் மிக அழகாக கச்சிதமாக உட்கார்ந்து ஒரு நல்ல கட்டமைப்பாக ஆகின்றன. அந்த பொருத்தமான அமைப்புதான் அற்புதமான வாசிப்பை அளிக்கிறது. ஏற்கனவே இந்தவகையில் பல அடுக்கு நாவல்களை பல ஆசிரியர்கள் தமிழிலே எழுத முயன்றுள்ளார்கள். அவர்களால் கதையின் ஒத்திசைவை கொண்டுவர முடியவில்லை. ஆகவே சில பக்கங்களுக்குள் பெரிய சலிப்பை அவை உருவாக்கிவிடுகின்றன. அந்த சலிப்பு இதில் இல்லை.

அத்துடன் சொல்லவேண்டிய ஒன்று உண்டு. பல நாவல்கள் இந்தவகையான கதைகளை எழுதும்போது அவை ஒரு fiction play யாக நின்றுவிடுகின்றன. வாசிக்கும்போது நாம் விளையாடுவோம். ஆனால் சீட்டாடி முடிந்தால் நேரத்தை வீணடித்த குற்றவுணர்ச்சியும் சலிப்பும் எரிச்சலும் வரும். அது இங்கும் வந்துவிடும். ஆனால் இந்நாவலின் உச்சத்தில் ஒரு sense of justice வெளிப்படுகிறது.  அது ஒரு liberation of soul தான். அந்த உச்சம் ஒரு பெரிய இலக்கிய அனுபவமாகவும் ஆகிறது. வெறும் பேய்க்கதையாகச் சுவாரசியமாகவும் படிக்கலாம். ஒரு அபாரமான இலக்கியப்படைப்பாகவும் இருக்கிறது.

எம். பாஸ்கர்

முந்தைய கட்டுரைஅகவெளி வாசிப்பில்… கடிதம்
அடுத்த கட்டுரைகனவறிவு – கடிதம்