அன்புள்ள ஜெ,
சென்ற ஆண்டு ஜனவரி 1 அன்று நான் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். விஷ்ணுபுரம் நாவலை 2023 டிசம்பருக்குள் வாசிப்பது என்று. ஜனவரியிலேயே தொடங்கினாலும் பல தடைகள். தடைகள் என்னுடைய தரப்பிலிருந்துதான். அதை வாசித்து முடித்தபின் இப்போது யோசிக்கும்போதுதான் உணர்ந்துகொள்கிறேன்.
இன்றைக்கு இப்படி ஒரு வாசிப்புக்கு என்று மட்டுமல்ல எந்த ஒரு கவனமான விஷயத்தை பலநாட்கள் தொடர்ச்சியாகச் செய்வது என்றாலும் இதே தடைகள் உள்ளன. 2005 வாக்கில் நான் வேதாத்திரி சுவாமிகளின் வாழ்க வளமுடன் தியானப்பயிற்சி எடுத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவந்த பயிற்சி அது. ஆனால் அதை என்னால் முறையாக எடுக்க முடியவில்லை. கொஞ்ச நாளிலேயே நின்றுவிட்டது. 2009வ் நான் ராமச்சந்திரா மிஷனின் தியானப்பயிற்சி எடுத்தேன். அங்கேயும் என்னால் நீடிக்க முடியவில்லை.
ஒரு விஷயத்தை வாழ்க்கையில் ஒரு தொடர்ச்சியுடன் செய்வதற்கு நம்மால் முடியவில்லை என்பதுதான் காரணம். நம் தொழில் தவிர எதையுமே தொடர்ச்சியாகச் செய்வதில்லை. தொழில் செய்யாமல் வேறுவழியில்லை. இதனால் தொடர்ச்சியாகச் வாசிக்கவே முடியவில்லை. இந்த ஆண்டு அதை எப்படியாவது உடைக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன்.
ஆகவே ஒரு வெறியுடன் தொடங்கினாலும் பல தடவை அந்த முயற்சி நின்றுவிட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதம் ஒரு வெளிநாட்டுப் பயணம். 16 நாட்கள் சிஷெல்ஸ் நாட்டில் இருக்கவேண்டியிருந்தது. தனிமையில் இருந்தேன். ஆகவே காலையிலேயே ஒருமணி நேரம் கண்டிப்பாக விஷ்ணுபுரம் வாசிப்பது என்று தொடங்கினேன். ஐம்பது பக்கம் கடந்ததும் படிப்பதை விடமுடியாதபடி ஆகிவிட்டது. ஆகவே திரும்பி வந்தபிறகும் அதையே தொடர்ச்சியாகச் செய்தேன். செப்டம்பரில் முடித்தேன்
ஆனால் நான் சரியாகப் படிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே அக்டோபரில் மீண்டும் விஷ்ணுபுரத்தை ஆரம்பித்தேன். நவம்பர் இறுதியில் இரண்டாவது முறையும் வாசித்தேன். டிசம்பரில் விஷ்ணுபுரம் பற்றி எழுதப்பட்ட எல்லா கட்டுரைகளையும் வாசிக்கவேண்டும் என்று முடிவுசெய்து டிசம்பர் 30 வரை தினமும் படித்தேன்.
விஷ்ணுபுரம் போன்ற ஒரு நாவல் மட்டும்தான் அப்படி ஒரு வாசிப்பை அளிப்பதற்கான தகுதி உடைய படைப்பு. ஏனென்றால் அதை வாசிக்க வாசிக்க இந்தியச் சிற்பக்கலை, இந்திய தத்துவம், இந்திய ஆன்மிக மரபுகள், இந்திய வரலாறு எல்லாமே கூடவே வருகிறது. விக்கியில் ரெபரென்ஸ் எடுத்துப் படித்தால் அதை வாசிப்பது ஒரு பெரிய டிப்ளமோ கோர்ஸ் போல என்று தெரியவரும். வாசித்தபின் நாம் இருந்த சிந்தனைமுறையும் நம்முடைய அறிவுநிலையும் முழுமையாகவே மாறியிருக்கும். நம் மரபு, நம் மதம், நமது நம்பிக்கைகள், நம்முடைய அன்றாட வாழ்க்கையிலுள்ள சடங்குகள் ஆகியவை பற்றிய எல்லா பார்வைகளும் கூர்மையாகியிருக்கும். அப்படி ஓர் அறிவுப்பயிற்சியாகவும் ஆன்மிகப்பயிற்சியாகவும் அமையாத நாவலுக்கு அந்த அளவு உழைப்பை கொடுக்கவேண்டிய தேவையில்லை என்பது என் எண்ணம்.
நான் என்னுடைய இதுவரையிலான வாழ்க்கையில் விஷ்ணுபுரம் வாசிப்பு வழியாக வந்த தூரம் மிகவும் அதிகம். நான் இதுவரை தெரிந்துகொள்ளாத பலதுறைகளை தெரிந்துகொண்டேன். இப்போது எந்த விஷயத்தை வாசித்தாலும் விஷ்ணுபுரம் வழியாக அதற்கு ஓர் அறிமுகம் இருப்பதாகத் தோன்றுகிறது. விஷ்ணுபுரம் நாவலுக்கு பின் வெண்முரசு வாசிக்கவேண்டும் என்று இந்த ஆண்டு உறுதிமொழி எடுத்திருக்கிறேன்.,
சங்கர் ராஜசேகர்
அன்புள்ள சங்கர்,
நலம்தானே?
உங்கள் கடிதத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் விரிவாகப் பேச விரும்புகிறேன். நாம் நம் வாழ்க்கையில் அன்றாடச்செயலாகச் செய்யும் விஷயங்கள் வழியாகவே நம்முடைய மெய்யான கல்வி, மெய்யான சாதனை ஆகியவை நிகழ முடியும். ஓர் உற்சாகத்தில் மிகையான வேகம் அடைந்து சிலநாட்கள் மட்டுமே செய்து விட்டுவிடும் செயல்களால் நம்மால் எதையும் கற்க முடியாது. எதையும் சாதிக்க முடியாது. அவை உண்மையில் நேரவிரயம், வாழ்க்கை வீணடிப்பு மட்டுமே.
இது என் வாழ்க்கையில் நான் கண்டறிந்தது, நான் இயற்றி வென்றது. ஆகவே இதை அழுத்தமாக வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். விஷ்ணுபுரம் நாவல் அப்படித்தான் எழுதப்பட்டது. அந்நாவலின் முதல் வடிவம், மிக எளிய அளவில், 1988 வாக்கிலேயே எழுதப்பட்டது. தொடங்கியபோதுதான் தெரிந்தது நான் அறிந்துகொள்ள வேண்டியவை மிகுதி என்று.
ஆகவே நூல்களைச் சேகரிக்கவும் வாசிக்கவும் தொடங்கினேன். பல ஆண்டுகள் வாசித்துக்கொண்டே இருந்தேன். எந்த நிலையில் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் விஷ்ணுபுரத்துக்கான தனியான வாசிப்பு, குறிப்பெடுத்தல் நிகழவேண்டும் என உறுதிகொண்டேன். பயணங்களில் இருந்தபோதும்கூட ஒருநாளில் குறைந்தது ஒரு மணிநேரமாவது விஷ்ணுபுரம் நாவலுக்கான வாசிப்பை நிகழ்த்தினேன். 1989ல் ஒரு முறை கடுமையான டைபாய்ட் வந்து படுத்திருந்தேன். 12 நாட்கள். அதில் ஒரே ஒரு நாள் எனக்கு முழுமையாகவே நினைவில்லை. அன்று மட்டும் விஷ்ணுபுரம் நாவலுக்கான வாசிப்பைச் செய்யவில்லை.
இந்திய தத்துவம் சார்ந்து கே.தாமோதரன், எம்.என்.ராய், ஷெர்பாட்ஸ்கி, குந்தர், பட்டாச்சாரியா, அகேகானந்த பாரதி என பல ஆசிரியர்களின் நூல்கள். கிரிபித், வள்ளத்தோள் நாராயண மேனன் போன்றவர்கள் எழுதிய வேதங்கள், உபநிடதங்களின் மொழியாக்கங்கள். கோபிநாதராவ் போன்றவர்கள் எழுதிய இந்திய சிற்பக்கலை குறித்த நூல்கள். நாலப்பாட்டு நாராயண மேனன் எழுதிய ஆர்ஷஞானம் போன்ற பழைய சாஸ்திரங்கள் பற்றிய நூல்கள். கூடவே ஶ்ரீகண்டேஸ்வரத்தின் மலையாள சம்ஸ்கிருத அகராதி. அப்பட்டியல் மிகப்பெரியது.
அன்று இணையம், மின்னூல் இல்லை. ஆகவே நூல்களை வாசித்தால் முறையாக ‘கார்டு’ போட்டு வைக்கவேண்டும். இல்லையேல் வாசித்தவற்றை திரும்ப எடுக்க முடியாது அப்படி கார்டு போட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் கார்டு போடுவதனாலேயே எனக்குள் அந்த தகவல்கள் அதே வரிசையில் நினைவிலும் பதிவதை உணர்ந்தேன். அதன்பின் கார்டு போடாவிட்டாலும் எனக்குள் நினைவுகள் அப்படியே பதிவாயின.
(கார்டு போடும் கலை இன்றில்லை. அன்றெல்லாம் முனைவர்பட்ட ஆய்வேடுகள் எழுத அந்த முறை அவசியமானது. அது இதுதான். வாசித்த செய்திகளை தலைப்பு வாரியாக சிறிய கார்டுகளில் எழுதவேண்டும். மேலதிக வாசிப்பு எந்நூலில் எப்பக்கத்தில் என்றும் அதிலேயே எழுதவேண்டும். அந்தக் கார்டுகளை தலைப்பு வாரியாக அகரவரிசையில் அடுக்கவேண்டும். தேவையானபோது அந்தத் தலைப்பைக்கொண்ட கார்டை எடுத்து அதை வாசித்து, மேலதிகமாக வாசிக்கலாம்.வாசிப்பு பெருகப்பெருக கார்டுகளின் எண்ணிக்கையும் பெருகும். நான் அந்ந்தந்த நூல்களில் கார்டுகளின் தலைப்பையும் எழுதி வைத்திருப்பேன். அண்மையில் ஒரு கார்டு ஒரு நூலில் இருந்து கிடைத்தபோது ஏக்கமாக இருந்தது. பழைய நினைவுகள்!)
1991-ல் விஷ்ணுபுரம் எழுத ஆரம்பித்த பின்னரும் ஒவ்வொரு நாளும் விடாமல் எழுதவேண்டும் என்பதை நெறியாகக் கொண்டேன். ஒவ்வொருநாளும் ஒரு பக்கமேனும் எழுதியாகவேண்டும். எழுதுவதற்கான வழிமுறை முந்தைய நாள் எழுதியதை திருத்தியமைப்பதுதான். அந்த மனநிலைக்குள், அந்த புனைவுலகுக்குள் சென்றுவிடுவேன். அந்த தீவிரம் அமைந்துவிடும். எழுத ஆரம்பித்துவிடுவேன். அல்லது அந்த கதை நிகழும் களத்தைச் சித்தரிக்க ஆரம்பிப்பேன். அப்படியே கதைமாந்தர் உள்ளத்துக்குள் சென்றுவிடுவேன்.
சிலநாட்கள் கதை அப்படி எழுந்து வராது. அன்று எழுதியதை நகல் எடுப்பேன். மொத்த விஷ்ணுபுரமும் கைப்பிரதியில் 2000 பக்கம். அதை நான்கு முறை செம்மையாக பிரதி எடுத்துள்ளேன். அந்நாவல் தொடங்கப்பட்டது 1991ல். அச்சாகி வெளியானது 1997ல்.
ஒன்றை ஒரு நோன்பெனக் கொள்வது என்னும் வழக்கத்தை இன்றும் கடைப்பிடிக்கிறேன். ஆகவேதான் வெண்முரசு நாவலை ஒவ்வொருநாளும் எழுதமுடிந்தது. 2009 முதல் இந்த இணையதளம் ஒருநாள்கூட வலையேறாமல் இருந்ததில்லை. நடுவே நீண்ட மலைப்பயணங்கள், உலகப்பயணங்கள், கொரோனா போன்ற நோய்கள், பல சினிமா வேலைகள், பல எழுத்துப்பணிகள். எனக்கென ஒரு பணியை நான் விடுத்துக்கொண்டால் அதை நான் ஒருபோதும் செய்யாமலிருப்பதில்லை. நண்பர்களிடம் சொல்வதுண்டு, நான் எனக்குநானே சாக்குபோக்குகள் சொல்லிக்கொள்வதில்லை. நான் ஏமாற்றவே முடியாத நபர் நானேதான்.
நோன்பென ஒன்றைச் செய்வது என்பதன் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையில் பலருக்கும் சொல்லிக்கொண்டே இருந்தாகவேண்டும். ஏனென்றால் அவ்வழக்கம் மிக குறைந்து வருகிறது. காரணம், ஊடகப்பெருக்கம்.
மின் ஊடகம் உருவானபின் உலகமே நம் முன் திறந்து கிடக்கிறது. உலகையே நாம் அறியமுடியும் என்பது ஒரு வசதி. வெண்முரசுக்கான வாசிப்பு விஷ்ணுபுரம் வாசிப்பு போல அத்தனை கடினமானதாக இருக்கவில்லை. கூகிள் புக்ஸ் என்னும் இணைய நூலகம் பல லட்சம் நூல்கள் கொண்டது. தேவையான நூலை சில நிமிடங்களில் தேடி எடுக்கலாம். தேவையான போது எந்த ஊரில் இருந்தாலும் வாசிக்கலாம். எழுத்தை நிறுத்திவிட்டு ஒருமணிநேரத்தில் ஆய்வைச் செய்துவிடலாம்.
அதன் எதிர்ப்பக்கம் என்பது ஊடகம் நம்மைச் சிதறடிக்கிறது என்பதுதான். நாம் எதையும் நீடித்துச் செய்ய முடியாமலாகிறது. எதையும் கூர்ந்து செய்யமுடியாமலாகிறது. நாம் ஊடகத்தின் விசைகளால் அடித்துச்செல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். ஊடகநிகழ்வுகளால் அலைக்கழிக்கப்படுகிறோம். நாம் நமக்குரியவற்றில் குவியவே கூடாது என ஊடகம் நினைக்கிறது.
நான் சொல்லிக்கொண்டே இருக்கும் விஷயம் இது. மூன்று மாபெரும் சக்திகள் இங்குள்ளன. அரசியல், நுகர்வு மற்றும் கேளிக்கை. மூன்றுமே மாபெரும் தொழில்கள். நிபுணர்களின் உதவியுடன் கோடானுகோடி ரூபாய்ச் செலவில் அவை பிரச்சாரம் செய்யப்படுகின்றன. நம் மூளைக்குள் திணிக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து நாமே கடுமையாக முயன்று விலகினாலொழிய தப்பவே முடியாது. அதற்கு முறையான பயிற்சியும், புற உதவியும் தேவை. புற உதவி என்பது கற்பிக்கும் ஆசிரியர்கள். தியானம், யோகம் போன்றவை.
அரசியல், நுகர்வு, ஊடகம் என்னும் மூன்று அமைப்புகளும் நவீன ஊடகங்களை முழுமையாகக் கைப்பற்றி வைத்துள்ளன. அவை உருவாக்கும் மாயை என்பது நமக்கொரு ஊடகவெளியை உருவாக்கி அளிப்பது. முகநூல், யூடியூப், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் என நமக்கு அவை ஊடகங்களை அளிக்கின்றன. நாம் நினைக்கிறோம் அவற்றில் நாம் நமக்கு பிடித்தமானவற்றை வெளிப்படுத்துவதாக. இல்லை, அவை நம் மூளைக்குள் திணிப்பதையே நாம் வெளிப்படுத்துகிறோம். நம்முடைய வெளிப்பாடுகளை அந்த ஊடகங்களாலேயே வேவுபார்க்கிறார்கள். அவற்றை அடிப்படையாகக் கொண்டு மேலும் பிரச்சார முறைகளை வகுக்கிறார்கள். மேலும் நம்மை அடிமைப்படுத்துகிறார்கள்.
இந்தச் சிதறலில் இருந்து தப்புவது இன்றைய அவசியத்தேவை. அதற்குரிய வழி என்பது நம் வாழ்க்கையை ஒரு வகையில் ஒழுங்குசெய்துகொள்வதுதான். இதை ‘நவீன ஆசாரம்’ என்று சொல்லலாம். பழையகால மனிதர்கள் சில ஆசாரங்களை பிடிவாதமாகக் கடைப்பிடித்தனர். சிவபூஜை செய்யாமல் சாப்பிடாதவர்கள் உண்டு. பிரம்மமுகூர்த்தத்தில் குளித்து கோயிலுக்குச் செல்பவர்கள் உண்டு. யமநியமங்கள் என பழங்காலத்தில் சொல்வார்கள். யமம் என்றால் உளநெறி. நியமம் என்றால் உடல் நெறி. அவை போல ஒரு நெறியை இன்று நாம் வகுத்துக்கொள்ளவேண்டும். அப்படி ஒரு நெறியை நாம் நமக்காக எடுக்க நாமே உறுதிகொள்ளவேண்டும்.
முந்தைய தலைமுறையில் ஒரு நம்பிக்கை இருந்தது. படைப்பூக்கத்தன்மை கொண்ட வாழ்க்கை என்பது கட்டற்றது, தன்னியல்பாக உள்ளத்தை விடுவதே அகச்சுதந்திரம் என அன்றைய சிந்தனையாளர் நம்பினர். சுந்தர ராமசாமி ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலில் அதை சொல்கிறார். அது ஜே.கிருஷ்ணமூர்த்தி சொன்னதுதான். ஆனால் அது அன்றைய காலகட்டத்திற்கு மட்டுமே பொருந்துவது.
ஒரு விலங்கு காட்டில் இயல்பாக மேய்வதே சிறந்தது. அதன் ருசியை மட்டுமே அது பின்தொடர்ந்தால் போதும். அதற்கு நல்ல உணவு அமைந்துவிடும். ஆனால் அதற்கு அது காட்டில் இருக்க வேண்டும். அது காடுபோன்று வடிவமைக்கப்பட்ட ஒரு தோட்டத்தில் இருந்தால், அதன் சுதந்திரம் செயற்கையானது என்றால், அதன் காட்சிகளையும் ருசிகளையும் அதை மேய்ப்பவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள் என்றால் அது ஒரு விழிப்புணர்வை அடைந்தே ஆகவேண்டும். தனக்கு என்ன தேவை என அது முடிவெடுக்கவேண்டும். தன்னை அது முழுமையாகவே கட்டுப்படுத்திக்கொண்டு, தனக்கான வழியை தேர்வுசெய்யவேண்டும். அதுவே மெய்யான சுதந்திரம்.
அதை ஒரு தீட்சை என்றே வைத்துக் கொள்வோம். நவீன தீட்சை. கல்வியோ, தொழிலோ எதுவானாலும். செய்யவேண்டிய ஒன்றை, அன்றாடவாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ளவேண்டும். செய்தே ஆகவேண்டும். அது முதலில் கடினமானது. ஆனால் பழகிவிட்டால் செய்யாமலிருப்பதுதான் கடினம்.
ஒரு கல்வி அப்படி நிகழுமென்றால் அது நம் மொத்தச் சிந்தனையை, உலகப்பார்வையை மாற்றுவதை உணரமுடியும்
ஜெ