தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் வாங்க
பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது இது. நட்டாலத்தில் எங்கள் குடும்ப வீட்டின் கொல்லைப்பக்கம். என் பெரியம்மா அமர்ந்திருக்கிறார். ஒரு சின்னக்குழந்தை விளையாடியபடி எருமையின் காலடிக்குச் சென்றுவிட்டது. எருமையால் தன் வயிற்றின் அடிப்பகுதியைப் பார்க்கமுடியாது. அது மிதித்திருந்தால் குழந்தை இறந்திருக்கும். சட்டென்று எவரோ பார்த்துவிட பெரியம்மா ஓடிப்போய் குழந்தையை அள்ளித்தூக்கிக்கொண்டனர்.
ஆக்ரோஷத்துடன் பெரியம்மா திரும்பி “சீ, கூறுகெட்டவளே. பாத்துட்டா சும்மா இருக்கே…?” என ஆரம்பித்து வசைபாடினார். வசைபாடப்பட்டவள் எங்கள் இல்லத்தைக் காக்கும் யட்சி. அவளை பல தலைமுறைகளுக்கு முன்பு எவரோ ஒரு மூதாதை கள்ளியங்காட்டிலிருந்து கொண்டுவந்து அங்கே குடிவைத்திருந்தார். ஆண்டுக்காண்டு பூசை, கொடை எல்லாம் பெற்று அவள் அங்கே அமர்ந்திருக்கிறாள்.
விந்தையான தெய்வ உறவு அது. விண்ணிலுள்ள தெய்வம் அல்ல, மண்ணிலுள்ள தெய்வம். மன்றாடிக் கேட்கவேண்டிய சன்னிதி அல்ல. அதட்டி கோரவேண்டிய உரிமை கொண்டது. மனிதனை நம்பியிருப்பது. மனிதன் பலிதராவிட்டால் அது அனாதைதான். பலி கோரி சீற்றமடையும். பலி கிடைத்தால் மகிழ்ந்து அருளும். அத்தனை அண்மையிலுள்ள தெய்வம்.
வள்ளத்தோள் நாராயண மேனனின் மொழியாக்கத்தில் வேதங்களை படிக்கையில் தோன்றிக்கொண்டே இருந்ததும் அதுவே. வேத தெய்வங்கள் மிக மிக அணுக்கமானவை. அவி கோருபவை. கிடைத்தால் நிறைவடைந்து அருள்பவை. ’அவியால் தெய்வங்களை மனிதர்கள் வளர்க்கிறார்கள். அந்த தெய்வங்கள் மனிதர்களை வளர்க்கின்றன. மாறிமாறி வளர்க்கப்படுகிறார்கள் தேவர்களும் மனிதர்களும்’ என்கின்றது ரிக் வேதம்.
சர்வவல்லமை கொண்ட தெய்வம், படைத்தல் காத்தல் அழித்தல் செய்யும் தெய்வம் காலத்தால் பின்னரே வருகிறது. அதற்கு முன்னரே பிரம்மம் என்னும் அறியமுடியாத, நுண்ணுணர்வால் உணரமட்டுமே முடிந்த முழுமுதன்மை வேதங்களால் உணரப்பட்டுவிட்டது.
பெருந்தெய்வத்திற்கு மனிதர்களின் கொடை பொருட்டல்ல. அது பிரபஞ்சங்களை ஆள்வது. மானுடர் அதன் முன் இன்மை அளவுக்கே சின்னஞ்சிறியவர்கள். மனிதர்கள் கொடையளிக்கலாம். ஆனால் அதன் பின்னரும் இரந்து மன்றாடிக் கேட்டுக்கொள்ள வேண்டும். அது எங்கோ அறியமுடியாத பிறிதொரு உலகில் வாழ்வது.
எனக்கு இந்த சிறுதெய்வங்கள் மேல் எப்போதும் ஈர்ப்புண்டு. எனக்கு பெண்குழந்தை பிறந்தபோது என் சிறிய அன்னை சொன்னார். ‘பெண்ணாக்கும் பிறந்திருக்கு. ஒரு யட்சிப்பிரசாதம் வேணும். குடும்ப யட்சிக்கு ஒரு பூசை போட்டாகணும்’. நட்டாலம் யட்சிக்கு பூசை போட்டேன். யட்சியின் நிமிர்வும், அருளும் ஒருங்கே அமையவேண்டும் பெண்ணுக்கு. பணிவும் ஒடுக்கமும் பெண்ணுக்குரிய பண்புகள் அல்ல எங்கள் குடிமரபில்.
பெருந்தெய்வ ஆலயங்களுக்குச் செல்கிறேனோ இல்லையோ குடித்தெய்வம், ஊர்த்தெய்வம் உட்பட சிறுதெய்வ ஆலயங்களுக்குத் தவறாமல் சென்றுவிடுபவன் நான். என் குலதெய்வம் மேலாங்கோடு இயக்கியை அடிக்கடி சந்திப்பதுண்டு. என் நண்பர்களையும் அழைத்துச்சென்றிருக்கிறேன். நீலி எனக்கு மிக நெருக்கம். என் புனைவுகளில் பெரும்பாலும் எல்லாவற்றிலும் நீலி நேரடியாகவோ மறைமுகமாகவோ இடம்பெறுகிறாள்.
தெய்வங்களில் சிறுதெய்வம் பெருந்தெய்வம் என உண்டா? ஏதோ ஞானப்பிரகடனம் போல ’அப்படியெல்லாம் பேதமில்லை தெய்வங்களில்’ என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் அவ்வாறு சொல்பவர்களே மறைமுகமாக எல்லா சிறுதெய்வங்களுக்கும் பெருந்தெய்வங்களின் இயல்பை ஏற்றிக்கொண்டே இருப்பார்கள். சிறுதெய்வங்களை பெருந்தெய்வங்களின் ஒரு பகுதி அல்லது ஒரு தோற்றம் என சித்தரிப்பார்கள். சிறுதெய்வங்களின் இயல்புகளை ஏற்கவியலாத ஒவ்வாமையில் இருந்து வரும் சொற்கள் அவர்களுடையவை என்று கொள்ளவேண்டியுள்ளது.
தெய்வமென்பது நாம் கொள்வதுதான். நம் அறிதலே நமக்கான தெய்வங்கள் ஆகிறது. அவற்றை சகுணபிரம்மம் என்கின்றன தத்துவநூல்கள். குணங்கள் கொண்ட தெய்வம். அந்த குணம் அறிபவனின் குணமே ஒழிய பிரம்மத்தின் குணம் அல்ல. நாம் ஏற்றும் அம்சங்களே நம் தெய்வத்தின் தோற்றமென ஆகிறது. நாம் அறிவதற்கு அப்பால் தெய்வமென்பது என்ன என்று நாமறிய முடியாது.
கடல் என்றும் முகில் என்றும் காற்றில் ஈரமென்றும் எங்குமுள்ள நீர்தான் கங்கையும் காவிரியும் நம் இல்லத்துக்கு அருகே நெளியும் சிற்றோடையும். நம் கோப்பையில் இருக்கும் குடிநீரும் அதுவே. நமக்கு அது தெரியும். இருந்தாலும் நமது ஓடை நம்மை தேடிவந்து அருள்வது. நம்முடன் இளமை முதல் இருப்பது. ஆகவே நமக்கு மேலும் அணுக்கமானது.
ஓடை வேறு பேராறு வேறுதான். பேராற்றின் அகலமும் விசையும் சீற்றமும் இந்த ஓடைக்கு இல்லை என்றும் நாம் அறிவோம். ஓடையையும் பேராற்றையும் தனித்தனியாக வழிபட நமக்குத் தெரியும். உள்ளூர எல்லாம் நீரே என அறியாதவர்களும் அல்ல இந்துக்களாகிய நாம்.
சிறுதெய்வங்கள் அவை வாழும்நிலம்சார்ந்த இயல்பு கொண்டவை. அவை உருவான குலம், குடி சார்ந்த இயல்பு கொண்டவை. பலசமயம் அவை அறியப்பட்ட, நிறுவப்பட்ட காலத்தின் அடையாளமும் கொண்டவை. தெளிவான வரலாறு கொண்டவையும் உண்டு. கண்முன் மானுடராக வாழ்ந்து தெய்வமானவையும் பல உண்டு. அவ்வியல்புகளை நீக்கம் செய்து அவற்றை பெருந்தெய்வங்களின் அருவுருத்தன்மை நோக்கி கொண்டுசெல்லவேண்டியதில்லை.
நமக்கான ஓடை அவ்வாறே நமக்கானதாக நீடிக்கலாம். அந்த தெய்வங்களின் அத்தகைய தனித்தன்மைகளே அவற்றை நமக்கு அணுக்கமாக்குகின்றன. அவற்றின் சீற்றம், கருணை மட்டுமல்ல இன்று நம் விழுமியங்களுக்கு ஒவ்வாதவையாக இருக்கும் சில இயல்புகளும்கூட அப்படியே நீடிக்கலாம். வரலாறாக மட்டுமல்ல ஆன்மிகமான குறியீடாகக்கூட அவ்வியல்புகள் முக்கியமானவை.
அண்மைக்காலத்தில் நாட்டாரியல், மானுடவியல் ஆய்வுகள் தோன்றி சிறுதெய்வங்களை ஆய்வுப்பொருளாகக் காணும் போக்கு உருவானது. அந்த ஆய்வுகள் பெரும்பாலும் மேலைநாட்டினரின் பார்வையை ஒட்டியவை. இந்த மண்ணின் பண்பாட்டையும் வாழ்க்கையையும் கலையையும் ஆன்மிகத்தையும் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப விளக்குவது அவர்களின் இயல்பு. அந்தக் கொள்கைகள் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறும் கல்வித்தள அணுகுமுறைகள். அவற்றை ஒட்டி பல்லாயிரமாண்டு தொன்மை கொண்ட நம் மரபை நாம் புரிந்துகொள்வோம் என்றால் இழப்பு நமக்கே.
நம் தெய்வங்கள் ஆய்படு பொருட்கள் அல்ல. அவை மிக எளிய சமூகவியல் உண்மைகளையோ, சல்லிசான அரசியல் கோட்பாடுகளையோ விளக்குவதற்குரிய உதாரணங்கள் அல்ல. அவை நம் முன்னோர் அவர்களின் நுண்ணுணர்வால், கனவால் கண்டடைந்த சில அகம்சார்ந்த அறிதல்களின் வெளிப்பாடுகள். அவர்களின் மெய்ஞானம் கண்ணீரும் களிப்புமாக நிகழ்பவை. அவற்றை நாம் நம் கண்ணீரால், களிப்பால் கண்டடையவேண்டும். நம் தியானத்தால் விரித்துக்கொள்ளவேண்டும்.
இந்நூல் அந்த வகையான அறிதலுக்கான ஓர் எழுத்தாளனின் முயற்சி. ஆகவே இது ஆய்வுநூல் அல்ல. சொல்லப்போனால் ஆய்வுகளுக்கு எதிரான ஒரு நூல்.
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் – கடிதங்கள்