அன்புள்ள ஜெ,
என் வாழ்க்கையின் மிகச்சிக்கலான காலகட்டம் வழியாக கடந்த ஆண்டு ஊடுருவி வந்தேன். நான் 6 ஆண்டுகளாக போட்டித்தேர்வுகளுக்கு பயின்று வருகிறேன். பலமுறை அணுக்கமாகச் சென்று தோல்வியை அடைந்தேன். ஒவ்வொரு தோல்வியிலும் கேலி கிண்டல்களைச் சந்தித்தேன். கூனிக்குறுகி அறைக்குள்ளேயே அடைந்து கிடந்து ஒரு தவம்போல படித்தேன். மீண்டும் தோல்வி. என்னால் மனிதர்களை சந்திக்கவே முடியவில்லை. மனிதர்களை வெறுத்தேன். என் அப்பா அம்மா அனைவரையும் வெறுத்தேன். அனுதாபமாக விசாரிப்பவர்களையும் வெறுத்தேன். அந்த வெறுப்பால் என்னால் மேற்கொண்டு படிக்கமுடியாமலும் ஆகியது. ஒரு கட்டத்தில் தற்கொலை பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தேன்.
அப்போதுதான் தன்மீட்சி நூலை ஒருவர் எனக்கு தந்தார். அவருக்கு இலவசமாகக் கிடைத்த நூல். அவர் பணம் கொடுத்து புத்தகம் வாங்குபவர் அல்ல. சும்மா கிடைத்ததனால் எனக்குத் தந்தார். நான் அந்நூலை படித்தபோது முதலில் எரிச்சல்தான் வந்தது. ஆனால் மறக்கவும் முடியவில்லை. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக படித்தேன். மானுட அறிவியக்கம் என ஒன்று உண்டு என்றும், அதிலொரு உறுப்பாக இருப்பதே அறிவுடைமையின் இலக்கணம் என்றும் அறிந்தேன். தொழிலோ வேலையோ எவருக்கும் வாழ்க்கை இலட்சியம் அல்ல. அது ஒரு கருவிதான். உலகவாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு அடிப்படைதான் வேலை. அது ஒருவரின் அடையாளம் அல்ல.
எனக்கு அந்த புத்தகம் தன்னம்பிக்கையை அளித்தது. அதன்பின் ஒளிரும்பாதை என்ற நூலை வாங்கி வாசித்தேன். பலமுறை படித்திருக்கிறேன். எனக்கு அந்நூல் மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்தது. எனக்கு நடுவே ஒரு காதல்தோல்வியும் இருந்தது. அப்போது நான் ஏராளமான காதல்தோல்விக் கவிதைகளை படிப்பதுண்டு. அதெல்லாம் எத்தனை அபத்தம் என்று தெரிந்துகொண்டேன். வாழ்க்கையின் இலட்சியம் எதையாவது சென்று அடைவது அல்ல. பயனுறவாழ்வதும் மகிழ்ச்சியாக வாழ்வதும்தான். என் அறிவுத்திறனை பயனுறச்செய்யும்படி வாழ்வதே என் இலட்சியம் என்று தெரிந்தது.
அந்த தன்னம்பிக்கையால் நான் அனைவரிடமும் பேச ஆரம்பித்தேன். நான் படித்தவற்றை பிறருக்கு கற்பிக்க ஆரம்பித்தேன். ஓராண்டில் இரு தேர்வுகளில் வென்றேன். இப்போது வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். மனிதர்களை நேசிக்கவும் கூடவே அவர்களிடமிருந்து ஓர் அறிவுஜீவியாக கொஞ்சம் விலகி நிற்கவும் நான் கற்றுக்கொண்டேன். மிகத்தெளிவான மொழியில் அற்புதமாக எழுதப்பட்ட நூல்கள் அவை. அந்நூல்கள் இல்லாவிட்டால் மீண்டிருக்க மாட்டேன். நன்றி
அர்விந்த்குமார். மா