கல்பற்றா நாராயணன் தமிழ் விக்கி
அன்புள்ள ஆசிரியருக்கு ,
வணக்கம்.
சில நாட்களுக்கு முன் நவீனக் கவிதைகள் குறித்த தங்களின் உரையைக் கேட்டேன்.
அதில் ‘ஒரு வருடத்திற்கு தினம் ஒரு கவிதையென’ வாசிக்கும் முறையை குறிப்பிட்டிருந்தீர்கள்.
அதை தற்போது பின்பற்றி வருகிறேன். அதன் பகுதியாக ‘தொடுதிரை’ தொகுப்பை வாசிக்க விரும்பினேன்.
ஆனால் அப்போது அது கிண்டிலில் இல்லை . எப்போது வருமென விஷ்ணுபுரம் பதிப்பகத்தை தொடர்பு கொண்டு கேட்டேன் . அது சார்ந்து இலக்கிய நண்பர்களும் கோபம் அடையும் வண்ணம் தொல்லை கொடுத்தேன் .
அந்த நேரத்தில் ஊரில் இருந்து நண்பர் ஒருவர் இங்கு (இங்கிலாந்து ) வருவதாகவும் ஏதேனும் முக்கியமான மருந்துகள் , ஃ பைல் எடுத்து வர தேவை இருந்தால் சொல்லுங்கள் என்றார் . ஒரு தடுப்பு மருந்து மட்டும் உங்கள் முகவரிக்கு ஆர்டர் செய்கிறேன் . தயவு செய்து எடுத்து வாருங்கள் என வேண்டினேன் .
பின்பு உடனே தொடுதிரை புத்தகமாக ஆர்டர் செய்து விட்டேன் . என்ன மருந்து என்று சொல்லி புத்தகம் இருக்கிறீர்கள் என நண்பர் கேட்டார். ஒரு வகையில் இது தடுப்பு மருந்து தான் என்று சொல்லி சற்று விளக்கினேன் . புரிந்துகொண்டிருப்பார் என நம்புகிறேன் .
ஏற்கனவே தொடுதிரை , நெடுஞ்சாலை புத்தர் தளத்தில் வாசித்து இருந்தாலும் . தொகுப்பாக கையில் வைத்து வாசிக்கும் அனுபவமே தனிதான் . தினம் ஒன்றென , மெல்ல மெல்ல உள் வாங்கி , புரியவில்லை என ஏதுமில்லை என்றாலும் மறுபடி மறுபடி வெவ்வெறு தரிசனங்களை அளித்தது இத்தொகுப்பு.
‘சாயல் ‘ மற்றும் ‘சிம்மம்’ என்னை சீர்தூக்கி பார்த்து செப்பனிட்டுக்கொள்ள பெரிதும் உதவுகிறது.
‘தவறாக’ & ‘சில சமயங்களில்’ தன்னம்பிக்கைக்கு நம்மை இட்டு செல்லும் உற்ற துணையாய் உடன் வரும்.
நான் இந்த கடிதத்தை எழுத என்னை பயத்திற்கு உள்ளாக்கி ஆட்கொண்டது தூண்டியது ‘விதிப்பயன்’ & ‘கூடுதல் பொறுப்புகள்’. இந்த இரண்டு கவிதைகளும் உள்ளபடியே சொல்ல வேண்டுமென்றால் ‘மிரட்டி விட்டன’. நம் அன்றாடத்தை , சொற்களை மட்டுமல்ல ..எண்ணங்களையும் மறு சீராய்வு செய்ய வைக்கிறது இந்த இரண்டு கவிதைகளும் . மூலத்தின் ஆசிரியர் திரு.கல்பற்றா அவர்களுக்கும் தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இந்த கவிதைகளை எழுத்தாளர் திரு. சுரேஷ் பிரதீப் , நண்பர் திரு.கணேஷ் பெரியசாமி ஆகியோரின் முன்னெடுப்பில் நண்பர்களின் ஒத்துழைப்பில் இயங்கி வரும் சொற்சுவை எனும் வாட்சாப் வாசிப்பு குழுமத்தில் வாசித்தேன். என்னில் தோன்றியதே தனக்கும் தோன்றியதாய் சுரேஷ் சொன்னார். அந்த வார்த்தை ‘ பயமா இருந்துச்சு !’
எனக்கு என்னை முன்னெடுத்து செல்ல சில வரிகள் அவ்வப்போது மனதில் தோன்றும், அவை :
‘அசையும்போதே தோணி , அசையாத போது அது தீவு ‘ – தேவதேவன்
‘சொற்ப பொழுதே ஜீவிதம் என அறியாமலா கொல்லென்று பூத்து சிரிக்கிறது பொற் கொன்றை ‘ – சுகுமாரன்
இவைகளோடு இப்போது ..கல்பற்றா அவர்களின்
‘நீங்கள் அறிவதில்லை , சில நேரங்களில் சொற்களின் அகலம்’ (கூடுதல் பொறுப்புகள்)
‘நினைக்காதது நடக்குமளவுக்கு பெரிதல்ல இவ்வுலகம் ‘ (விதிப்பயன்).
கை போன போக்கில் மேசையில் இருக்கும் கம்ப ராமாயணத்தை எடுத்து ஒரு பத்தி வாசிப்பது தங்களின் வழக்கம் என ஒரு தடவை சொன்னீர்கள் . அதுபோல என் கணினி திரை அருகே எனக்கு இன்று இருப்பது ‘தொடுதிரை’
எனது பணிவான வேண்டுகோள் கலந்த ஆசை : கல்பற்றா நாராயணன் அவர்களின் மொத்த கவிதைகள் தங்கள் மொழி பெயர்ப்பில் வாசிக்க !
மிக்க நன்றி !
அன்புடன்
கே.எம்.ஆர் . விக்னேஸ்