பாமரரை எதிர்கொள்வது…

முன்தொடர்ச்சிகள்

மக்கள், பாமரர் எனும் சொற்கள்- முன்தொடர்ச்சி…  

மக்கள் பாமரர் இன்று 

மக்கள் எனும் திரளை எதிர்கொள்வது…

பாமரர் என்று நாம் மொழியாக்கம் செய்து பயன்படுத்தும் சொல் கடைக்கோடிக் குடிமகன் என்னும் பொருளில் மேலைநாட்டு ஜனநாயக விவாதங்களில் பயன்படுத்தப்பட்டது. ஜான் ரஸ்கினின் Unto This Last என்னும் நூலில் இருந்து உருவான கருதுகோள் அது. அரசு என்பது கடைக்கோடி மனிதனுக்கும் நலம்புரிவதாக, அவனையும் கருத்தில்கொள்வதாக அமையவேண்டும் என அன்றைய ஜனநாயகவாதிகள் சொன்னார்கள்.

அது ஓர் உயர்ந்த சிந்தனை. ஜனநாயகத்தின் அடிப்படைக் கருதுகோள். ஒரு குடிமகன் படிக்காதவனாக, பண்படாதவனாக, தன் உரிமைகள் என்ன என்பதையே அறியாதவனாக இருக்கலாம். அப்போதும் ஜனநாயகம் அவனை ஒதுக்கிவிடக்கூடாது. அவனுக்காகவும் அது நிலைகொள்ளவேண்டும். அவனுக்கும் உரிமைகளில்  எந்த பாகுபாடும் இருக்கலாகாது.

அதற்கு அடுத்த படியில் இடதுசாரிகள் பாமரர்களை கற்பனாவாத நெகிழ்வுடன் மகிமைப்படுத்தலானார்கள். படித்தவர்கள் படித்த படிப்பென்பது நிலவுடைமைச் சமூகத்தின் கல்வி. அல்லது முதலாளித்துவச் சமூகத்தின் கல்வி. அக்கல்வியால் அவர்கள் கறைபட்டவர்கள். பாமரர் அந்த கறையேதும் இல்லாத தூய குடிமகன். மக்கள் என்பவர்கள் உண்மையில் பாமரர்களே என அவர்கள் வாதிட்டனர். அந்தப் பாமரர்களை வழிநடத்தவேண்டியவர்கள் புரட்சிக்கல்வி கற்றவர்களாகிய தாங்கள் என்றனர். (மார்க்ஸியர்களான மாவோ சே துங்கும் போல்பாட்டும் பாமரர் அல்லாதவர்களை கொன்று குவித்து சமூகத்தை தூய்மைப்படுத்தியதும் உண்டு)

பாமரரை புனிதப்படுத்துதல் என்பது இடதுசாரிச் சிந்தனையின் ஒரு பகுதியாக நம் இலக்கியங்களில் ஊடுருவியது. தொடக்ககால எழுத்துக்களின் மையக்கருவே பாமரர்களில் வெளிப்படும் உயர்பண்புகளை விதந்தோதுவதுதான். ஆரம்பத்தில் அது விந்தையான ஒரு புதியசிந்தனையாக இருந்தது. பின்னர் ஏற்பு பெற்றது. பின்பு அரசியல்சரிநிலையாக ஆகியது. இன்று பாமரன் என்றாலே நல்லவன், பண்பானவன் என்று சொல்லவேண்டும் என்பது ஒரு அறிவுத்தளக் கெடுபிடி. பாமரனை கொண்டாடவேண்டுமே ஒழிய விமர்சிக்கவே கூடாது என்கிறார்கள்.

பாமரனை கொண்டாடும் இந்த மனநிலை முன்னர் மதங்களில் இருந்தது. இந்தியப் பக்தி இயக்கம் பாமரர்களை கொண்டாடுவதை காணலாம். அறிஞர்களுக்கு காணக்கிடைக்காத கடவுள் மூர்க்கமான பக்தி கொண்ட பாமரனுக்கு அருள்கிறார் என பக்திக்கதைகள் சொல்கின்றன. கிறிஸ்தவ மரபிலும் கல்வி சாத்தானுடன் தொடர்புபடுத்தப்பட்டது, கல்லாமை நேரடியாக ஏசுவுக்கு அணுக்கமானதாக கொண்டுசெல்லும் என்று சொல்லப்பட்டது. ஏசு பாவிகளை மீட்கவே வந்தார் என்னும் நம்பிக்கையானது அவ்வாறு மீட்டமைக்கப்பட்டது.

கிறிஸ்தவம் , பக்தி இயக்கத்தின் சைவ வைணவப் பெருமதங்கள் முதலியவை பாமரரைக் கொண்டாடுவதன் வழியாக பாமரரைக் கவர்ந்து பெரிய அமைப்புகளாக மாறின. அதையே பின்னர் இடதுசாரி புரட்சிகர அமைப்புகள் செய்தன. அவையும் பாமரரை புகழ்ந்து பாமரரை ஒருங்குதிரட்டி ஆற்றல்கொண்டவையாக ஆயின. அந்த வழியையே இன்று அரசியல்வாதிகளும் செய்கிறார்கள். அவர்கள் பாமரரை புகழ்வது பாமரர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே.

ஓர் அறிவியக்கவாதி ஒருபோதும் பாமரரைப் புகழமுடியாது. அது அவன் செயல்படும் அறிவியக்கத்தையே அவன் நிராகரிப்பது போன்றது. மானுடகுலம் உருவானபோதே தோன்றி இன்று வரை நீடிக்கும் மானுட அறிவு என்னும் மாபெரும் சக்தியை மறுப்பது போன்றது. மனிதகுலம் பிற உயிர்களில் இருந்து வேறுபட்டிருப்பது அந்த அறிவியக்கத்தால்தான்.  மனிதகுலம் உருவாக்கியுள்ள சமூக அமைப்புகள், நம்பிக்கைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், கலைப்படைப்புகள் அனைத்தும் அதன் அறிவியக்கத்தின் உருவாக்கங்கள்தான்.

பாமரர் என்றால் யார்? ‘சமூகத்தில் நிகழும் அறிவியக்கத்துடன் எவ்வகையிலும் பிரக்ஞைபூர்வமாக தொடர்பு கொள்ளாத ஒருவர்’ என பொதுவாக வரையறை செய்யலாம். அந்த அறிவியக்கத்துடன் இருவகையில் தொடர்புகொள்ள முடியும். அதை அறிந்துகொள்ளுதல், அதில் பங்களித்தல். இரண்டையுமே செய்யாதவர் பாமரர்.

அப்படி, அறிவியக்கத்துடன் தொடர்பே அற்றவர்கள் உண்டா என்று கேட்கலாம்.அறிவியக்கத்தால் தொடப்படாத ஓர் மானுட உயிர் பூமியில் இருக்க முடியாது. ஏனென்றால் ஆசாரங்கள், வாழ்க்கைமுறைகள், மதம், அறிவியல் எல்லாமே அறிவியக்கத்தால் உருவானவைதான். கல்வி எதுவானாலும் அறிவியக்க அறிமுகம்தான். ஆனால் பாமரர் என்பவர் அறிவியக்கம் பற்றி அறியாமல், தனக்கு புகட்டப்பட்டதை மட்டும் அறிந்திருப்பார். தன் உயிர்வாழ்தலுக்குத் தேவையானவற்றை மட்டும் கற்றிருப்பார். அதற்குமேல் அக்கறையே அற்றவராக இருப்பார். அத்தகையோரை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம்.

அத்தகைய பாமரர்கள் பயனற்றவர்கள் என்றோ, அவர்கள் வெறுக்கப்படவேண்டியவர்கள் என்றோ எந்த அறிவியக்கவாதியும் சொல்ல மாட்டான். அறிவியக்கம் பாமரர்களுக்கு எதிரானது அல்ல. பாமரர்களுக்கும் அவர்களுக்குரிய சமூகப்பங்களிப்பு உண்டு. அவர்கள் அறிவியக்கத்தின் ஆராய்ச்சிக்குரிய மூலப்பொருட்கள், அறிவியக்கத்தின் பேசுபொருட்கள் மட்டுமே. அவர்கள் சமூகத்தின் பகுதியினர் என்பதனால் அறிவியக்கம் அவர்களின் நலனையும் கருத்தில்கொண்டே செயல்படமுடியும்.

ஆனால் அறிவியக்கத்தின் பார்வையில் அவர்களின் கருத்துக்கள் பொருட்படுத்தப்படவேண்டியவை அல்ல. அவர்களை அறிவியக்கம் ஒரு தரப்பாகக் கொள்ளாது. அவர்கள் அறிவியக்கம் மீது கொண்டுள்ள அச்சம், இளக்காரம் ஆகியவை எதிர்கொள்ளப்படவேண்டிய எதிர்மறை விசைகள். அவர்களிடமிருந்து அறிவியக்கம் பாதுகாக்கப்படவேண்டும்.

இன்று, சமூகவலைத்தளச் சூழலில் பாமரர்களுக்கு ஊடகம் அமைந்துள்ளது. அவர்களின் கருத்துக்கள் திரண்டு ஆற்றல் கொண்டவை ஆகியுள்ளன. இன்று அந்த பாமரர் அறிவியக்கத்தை அழிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகத் திரண்டுள்ளனர். அந்த புரிதல் அறிவியக்கத்தில் செயல்படுபவர்களுக்குத் தேவை. சென்ற காலகட்டத்தில் ஜனநாயகத்தை முன்வைத்த அறிவியக்கவாதிகளும் இடதுசாரிகளும் பாமரர் பற்றி கொண்டிருந்த கற்பனாவாத நெகிழ்வுடன் இன்று அவர்களை அணுகுவது அறிவியக்கத்தின் அழிவுக்கே வழிவகுக்கும்.

பாமரர் என்ற சொல்லை இரண்டு வகைகளில் மேலும் பகுத்து விரித்துக்கொள்ள வேண்டியுள்ளது. துறைசார் பாமரர்கள் இன்று உண்டு. ஏனென்றால் இன்று எல்லா அறிவுத்துறைகளும் பிரம்மாண்டமாக பெருகி வளர்ந்து தனி உலகங்களாக மாறிவிட்டிருக்கின்றன. முறையான பயிற்சியின்றி எந்த அறிவுத்துறைக்குள்ளும் நுழைய முடியாது. ஆகவே ஒரு துறை அறிஞர் இன்னொரு துறையில் பாமரர் ஆக இருக்க முடியும். முன்புபோல எல்லாத்துறைகளிலும் ஓர் அறிதல் இன்று இயல்வது இல்லை.

நான் கணிதம் அல்லது கணிப்பொறியியல் போன்ற ஏராளமான துறைகளில் பாமரனே. அங்கே சென்று என் கருத்துக்களைச் சொல்ல மாட்டேன். எனக்கு புரியாதவை என்பதனால் அவற்றை இகழ மாட்டேன். எனக்கு என்ன தெரியும், எங்கு நான் கருத்து சொல்லலாம் என்று தெரிந்திருப்பதே இன்று ஓருவனின் அடிப்படைத் தகுதி. அது இல்லாதவர் பாமரர். ஒரு துறையில் நீங்கள் எந்நிலையில் நின்று கருத்து சொல்கிறீர்கள் என்பதை நீங்களே வரையறை செய்துகொள்ளவேண்டும். உதாரணமாக நான் பங்குச்சந்தையில் வெறும் எளிய முதலீட்டாளனாக மட்டுமே எதையேனும் சொல்லமுடியும். நிபுணனாக அல்ல.

ஆனால் இன்று சமூகவலைத்தளச் சூழலில் கணிப்பொறியியலில் உயர்தகுதி கொண்ட ஒருவர் மருத்துவத்தில் புகுந்து கருத்துச் சொல்வது சாதாரணமாகக் காணக்கிடைக்கிறது. ஒரு கணித நிபுணர் தொல்லியல் தேவையற்றது என இகழ்வதை கண்டுள்ளேன். அவர்கள் அந்ததந்த களங்களில் பாமரர்களே.

இன்னொரு வகை பாமரர்களை ‘படித்த பாமரர்’ என்று சொல்லலாம். இன்று கல்வி பரவலாக ஆகியுள்ளது. தொழில் வாய்ப்புகள் பெருகியுள்ளன. ஊடகம் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. ஆகவே ஏராளமானவர்களுக்கு தங்கள் துறைகளின் தேர்ச்சி உண்டு. செய்திகளை தெரிந்தும் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களும் ஒருவகை பாமரர்களாக இருக்கக்கூடும்.

ஒருவர் இன்றுள்ள ‘அரசியல்- நுகர்வு- கேளிக்கை’ என்ற மூன்று மாபெரும் பிரச்சார அமைப்புகளால் மூளைக்குள் திணிக்கப்பட்டவற்றை மட்டுமே அறிந்து, அவற்றை மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர் என்றால் அவர் படித்த பாமரரே. தனக்குரிய சுயமான தேடலுடன், தனக்குரிய களத்தில் படித்தும் அறிந்தும் முன்செல்லாதவர் அனைவருமே பாமரர்கள்தான். ஏதேனும் ஒருவகையில் மெய்யான அறிவியக்கத்துடன் தொடர்புகொண்டிராதவர் பொதுக்களத்தில் என்ன அறிந்திருந்தாலும் பாமரரே.இந்நூற்றாண்டு உருவாக்கிய ஒருவகை நவீனப்பாமரர்கள் இவர்கள்.

இப்படி ஒரு கூட்டம் இருக்கிறது என்பதை அறிவியக்கத்தில் செயல்படுபவர் உணர்ந்தாகவேண்டும். இவர்களை நாம் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். இவர்களிடம் ஏமாந்துகொண்டே இருக்கிறோம். ‘படிச்சவனா தெரியறான் சார், ஆனா….’ என்று அடிக்கடி நாம் சொல்ல நேர்கிறது. ஆனால் அவர்களை நம்மால் வரையறை செய்துகொள்ள முடிவதில்லை. அதனால் பல இடர்கள் நம் சிந்தனையிலேயே உருவாகின்றன.

என் இளம் நண்பர் ஒருவர் சொன்னார். ‘எம்.பி.பி.எஸ் படிச்சிருக்கான் சார். ஆனா அரசியல் கட்சிக்கு அடியாள் மாதிரி மூர்க்கமாப் பேசிட்டிருக்கான்… கல்லத்தூக்கி வீசுற தொண்டனைவிட கேவலமா இருக்கான்’.  இங்கே ஒரு பாமரர் ஒரு பட்டம் வைத்திருப்பதுதான் குழப்பத்தை உருவாக்குகிறது. பாமரர்களின் இயல்பு அவர்களுக்கு புகட்டப்பட்டவற்றில் அப்படியே மூழ்கிவிடுவது. அதன் விளைவாக அரசியல், மதம், இனவாதம், மொழிவாதம், தனிநபர் வழிபாடு போன்றவற்றில் கண்மூடித்தனமாக இருப்பது. சில அடிப்படை நம்பிக்கைகளை வெறியுடன் சொல்லிக்கொண்டிருப்பது.

இன்னொரு நண்பர் புதியவாசகர் சந்திப்பின்போது சொன்னார். ‘நல்ல படிச்சிருக்காங்க. அரசியல் சினிமா எல்லாம் பேசுறாங்க. ஆனா உங்கள ஒருத்தன் அடிச்சப்ப புளிச்சமாவுன்னு சொல்லி இளிப்பான் போட்டுட்டு இருந்தாங்க. இப்பவும் எங்க போனாலும் அதைச் சொல்லி ஒரு இளிப்பான் போடுறாங்க…இவங்களை எப்டிசார் எடுத்துக்கிடுறது?’ அதேதான் இங்கும் பிரச்சினை. பாமரர்கள், அறிவியக்கத் தொடர்பே அற்றவர்கள். ஆனால் கூடவே இங்கே மூன்று களங்களில் பிரச்சாரம் செய்யப்படும் பொதுவான கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைத்தான் படித்த பாமரர் என வரையறை செய்கிறோம்

இதை எழுதும் இன்று இரண்டுபேரை சந்தித்தேன். பிராமணச் சாதியில், மிக உயர்ந்த பொருளியல் சூழல் கொண்ட குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் மிகப்பெரிய கல்வி கற்று மிகமிக வெற்றிகரமாகத் தொழில் செய்து வருபவர் ஒருவர். ஒரு மணி நேரம் அவர் பேசினார். நூறாண்டுகளுக்கு முன் ஓர் அக்ரஹாரத்தில் கல்வியறிவே அற்ற ஒருவர் என்னென்ன பேசுவாரோ அதையேதான் நிறைய ஆங்கிலம் கலந்து ஒருவகை மழலையில் சொல்லிக்கொண்டிருந்தார். ஆசாரமூடத்தனம், மதமூடத்தனம், சாதிப்பெருமிதம், அதன் விளைவான அரசியல் மூர்க்கம். கூடவே எல்லாவற்றுக்கும் அபத்தமான அறிவியல் விளக்கம்.

நான் ஒரு வார்த்தை பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். புன்னகையுடன் கைகுலுக்கி நான் அவருக்கு அளிக்கவேண்டிய செக்கை அளித்துக்கொண்டு கிளம்பினேன். திரும்பும் வழியில் என்னுடன் வந்த இன்னொருவர் ‘என்ன சார் பேசாமலிருக்கீங்க?’ என்றார். அவரும் மிகச்செல்வந்த குடியில் பிறந்தவர். நிர்வாகவியலில் உயர்கல்வி கற்றவர், தொழிலதிபர். அவர் பேச ஆரம்பித்தார். பிராமணர்கள் பற்றி இங்கே சொல்லப்படும் எல்லா அபத்தமான காழ்ப்புக் கருத்துக்களையும் வரிசையாகச் சொன்னார். அவரும் எல்லாவற்றுக்கும் அறிவியல் விளக்கமும் சொன்னார். பெரியார், அண்ணா பற்றிய எல்லா பொய்க்கதைகளையும் வரிசையாகச் சொன்னார். இன்னொரு வகை பாமரர். இங்கும் நான் புன்னகையுடன் அமர்ந்திருந்தேன். இவர் எனக்கு பெரிய தொகையை தந்தவர். ஆகவே இரண்டு மடங்கு புன்னகை புரிந்தேன்.

இந்தவகைப் பாமரர்கள் சூழ வாழும் சூழல் இன்று அறிவியக்கவாதிக்கு அமைகிறது. நண்பர்கள், தொழிலில் உடனிருப்பவர்கள், ரயிலில் சந்திப்பவர்கள். இவர்களை கடந்துசெல்லும் பொறுமை இன்றியமையாதது. சமூகவலைத்தளங்களில் இவர்களே திரண்டு ‘கருத்துத்தூண்’ மாறியிருக்கையில் நாம் இவர்களின்மேல் சென்று முட்டிக்கொள்ளக்கூடாது. ‘கருத்துமூட்டம்’ ஆக இவர்கள் திரண்டிருக்கையில் நாம் மூச்சுத்திணறலாகாது. இவர்களை கடந்து நம் சிந்தனையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பாமரரை கையாளத் தெரியாமல் இந்நூற்றாண்டில் இனி எவரும் சிந்தனைக் களத்தில் செயல்பட முடியாது. அவர்களை எவ்வகையிலும் பொருட்படுத்தவேண்டியதில்லை. ஆனால் தேவையானபோது சொல்லியே ஆகவேண்டும், பாமரர் என்பவர் பாமரரே. பாமரராக இருப்பதில் பெருமை ஏதுமில்லை. பாமரர் என்பது புனிதமான ஒரு நிலை அல்ல. பாமரரை எந்த வகையிலும அறிவியக்கவாதி நிறைவுசெய்யவேண்டிய தேவை இல்லை.

அறிவியக்கவாதி பாமரரை நிமிர்வால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். தன்னுடைய அறிவுத்தகுதி பற்றியும் அறிவியக்கத்தில் தன் பங்களிப்பு பற்றியும் மானுடச் சிந்தனை வரலாற்றில் ஒரு துளியாகவேனும் தனக்கு ஒரு இருப்பு உண்டு என்பது குறித்தும் அவன் பெருமிதம் கொண்டிருக்கவேண்டும். அதை பாமரர் மேட்டிமைவாதம் என்பார்கள். அப்படியென்றால் அப்படியே வைத்துக்கொள், நீ பாமரன், என்றேனும் நீ மேலெழுந்து வந்தாலொழிய உன்னிடம் எனக்கு உரையாடல் இல்லை என்றே அறிவியக்கவாதி பதில் சொல்லவேண்டும்.

அந்த நிமிர்வால் பாமரர் சீண்டப்படுவார்கள். கூச்சலிடுவார்கள். கூட்டாக சூழ்ந்துகொண்டு ஏளனமும் வசையும் பொழிவார்கள். ஆனால் அவர்களில் மிகச்சிலருக்கு தாங்கள் மெய்யாகவே பாமரர் என்று தெரியவரக்கூடும். அந்த தன்னுணர்வால் அவர்கள் அறிவியக்கம் நோக்கி வரக்கூடும். அந்த மிகச்சிலருக்காக பாமரரை நோக்கி நீ பாமரன் என்று சொல்லிக்கொண்டேதான் இருக்கவேண்டும்.

(நிறைவு)

 

 

முந்தைய கட்டுரைகா அப்பாசாமி ஐயர்
அடுத்த கட்டுரைஎரியாடல்