முன்தொடர்ச்சிகள்
மக்கள், பாமரர் எனும் சொற்கள்- முன்தொடர்ச்சி…
இன்று என்னை வந்து சந்திக்கும் இளைஞர்களில் பாதிப்பேர் புலம்புவது புத்தகம் வாசிப்பவர்களாக, சிந்திப்பவர்களாக அவர்கள் இருப்பதனாலேயே சந்திக்கநேரும் இழிவுபடுத்தல்கள், கேலிகிண்டல்கள், புறக்கணிப்புகள் பற்றி. எல்லா புதியவாசகர் சந்திப்புகளிலும் குறைந்தது ஒரு மணிநேரம் இந்த கேள்விக்கான பதிலாக நீண்ட பதில் சொல்லியிருக்கிறேன்.
புத்தகம் வாசிக்கும் ஓர் இளைஞர் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட நண்பர்களிடம் பேசாதவராக இருக்கலாம். நண்பர்கள் சொல்லும் எதையுமே மறுத்து விவாதிக்காதவராக இருக்கலாம். நண்பர்கள் விரும்புவது போலவே இருப்பவராக இருக்கலாம். ஆனாலும் கேலி கிண்டல்களில் இருந்து தப்ப முடியாது. நட்பான கேலி கிண்டல் அல்ல. வஞ்சமும் காழ்ப்பும் கொண்டவை. நேரடியான இழிவுபடுத்தல்கள். பொதுவெளிச்சிறுமைகள். இந்த இழிவுபடுத்தல்களில் சேர்ந்துகொண்டு மிகமிக மகிழ்ந்து கொண்டாடுபவர்கள் இளம்பெண்கள்.
நான் அந்த அறிவியக்க இளைஞரிடம் அவருடைய ஆளுமையை வடிவமைத்துக் கொள்வது பற்றித்தான் பேசுவேன். ஒருவன் நாள் முழுக்க பரோட்டா பற்றிப் பேசினால் அது கேலிக்குரியதாவதில்லை. அதற்கு ரசிகர்கள் உருவாவார்கள். அரைமணி நேரம் வாசித்த புத்தகம் பற்றிப் பேசினால் காழ்ப்பும் கீழ்மைப்படுத்தலும் வருகிறது. எனில் பிரச்சினை எங்குள்ளது? நம் சமூகத்தின் பாமரத்தனமே பிரச்சினை.
அப்பிரச்சினையை எப்படி ஒரு தனிமனிதர் தீர்க்கமுடியும்? அப்பாமரர்களை எதிர்கொள்வது, அவர்கள் நடுவே தன் ஆளுமையை பாதுகாத்துக்கொள்வது பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். அவர் தன்னை பாமரர்களில் ஒருவராக ஆக்கிக்கொள்ளவே முடியாது. அவர் என்ன நடித்தாலும் அவர் பாமரர் அல்ல என்று பாமரர்களுக்கு தெரியும். அவர் தன்னை வரையறைசெய்துகொள்ளவேண்டும். தன் இடத்தை தானே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
பரோட்டாவை பற்றி இரவுபகலாகப் பேசுபவனுக்கு வெட்கமில்லை, புத்தகம் படிப்பவனுக்கு புத்தகத்தை வெளியே காட்ட வெட்கமாக இருக்கிறது என்றால் பிரச்சினை அவனிடமே. அவன் அறிவியக்கம் என்றால் என்ன என்று அறிந்துகொள்ளவேண்டும். அதன் ஒரு பகுதியாக இருப்பதன் பெருமிதத்தை அடையவேண்டும். அவனுக்கு அந்த நிமிர்வு இருக்குமென்றால் பாமரர்களின் கேலியும் கிண்டலும் அவனைச் சீண்டாது. அவர்கள்மேல் பரிதாபமே உருவாகும். பலநாடுகளில் அறிவியக்கவாதியை முச்சந்திகளில் அடிக்கிறார்கள். இங்கே வசைபாடி கிண்டல்செய்கிறார்கள், அவ்வளவுதானே? மிக வசதியான இடத்தில் அல்லவா நாம் இருந்துகொண்டிருக்கிறோம்?
மக்கள், பாமரர் என்னும் கருத்துருவின் இரண்டு நிலைகள் வரலாற்றில் உள்ளதை கண்டோம். மன்னராட்சிக்காலங்களில் சாமானியர்கள் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படாத சூழலில் ஜனநாயகக் கொள்கைகளை உருவாக்கிய முன்னோடிகள் மக்கள் என்னும் கருத்துருவை உருவாக்கி நிலைநாட்டினர். மக்களில் மிகமிக அடிநிலையினர்கூட உட்படுவார்கள் என்னும் பொருளில் பாமரர்களும் மக்களே என்றனர்.அதை மிகைப்படுத்திக்கொண்ட இடதுசாரிகள் மக்கள் என்றால் பாமரர் மட்டுமே என்று வரையறை செய்தனர்.பாமரர்களை போற்றித்துதிக்கும் சிந்தனைகள் உருவாயின.
ஜனநாயகம் உருவாகி, மக்கள் அதிகாரத்தை அளிக்கும் சக்தியாக ஆனபோது மக்களை துதிபாடலாயினர் அரசியல்வாதிகள். மக்களின் விருப்பப்படி எல்லாமே நடைபெறவேண்டும் என்று பேசலாயினர். மக்கள் என்பது ஒரு தெய்வம் போல ஆக்கப்பட்டது. பின்னர் மெல்லமெல்ல மக்களை தங்கள் விருப்பப்படி வடிவமைக்கலாயினர். மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதிகாரங்களை அடைந்தனர். வரலாற்றில் நிகழ்ந்த பேரழிவுகளுக்கெல்லாம் மக்கள் என்னும் பெருந்திரளில் இருந்து உருவான ஆதரவு காரணமாக அமைந்தது.
இந்த இருநிலைகளுக்குப் பின் உருவானது இன்றைய சூழல். இன்று மக்கள் என நாம் சொல்வது எவரை? அரசியல், நுகர்வு, கேளிக்கை ஆகிய மூன்று மாபெரும் அமைப்புகளின் பிரம்மாண்டமான பிரச்சார வல்லமையால் கட்டமைக்கப்பட்ட கூட்டான ஒரு தொகுப்புமனத்தைத்தான் நாம் மக்கள் என்கிறோம். அது தானாக ஒன்று திரண்டது அல்ல. அதிகார நோக்குடன், வணிக நோக்குடன் ஒன்று திரட்டப்பட்டது. சென்றகால ஜனநாயகச் சிந்தனையாளர்கள் மக்கள் எனும்போது அடைந்த நெகிழ்வுக்கெல்லாம் இன்று பொருளே இல்லை.
இன்று முன்பிலாத ஒன்று உருவாகியுள்ளது. இருபதாண்டுகளுக்கு முன்புகூட ‘சாமானியர்’ எனப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கு தங்களை நேரடியாக வெளிப்படுத்த ஊடகம் இருக்கவில்லை. ஏதாவது கணக்கெடுப்பில், கருத்துப்பதிவில் அவர்களின் குரல் தற்செயலாக பதிவானால்தான் உண்டு. இன்று மின்னூடகம், சமூகவலைத்தளம் அவர்களுக்கு ஊடகத்தை அளிக்கிறது. இது உண்மையில் ஒரு பெரும்புரட்சி.
இது நிகழ்ந்தபோது இதை ‘மாபெரும் ஜனநாயக வெளி’ என்றும் ‘சாமானிய மக்களுக்கு வரலாற்றில் முதல்முறையாகக் குரல் கிடைத்துள்ளது’ என்றும் புளகாங்கிதம் கொண்டவர்கள் உண்டு. அவர்கள் பெரும்பாலும் இடதுசாரிகள். அப்போதே அதற்கு எதிராக நான் என் அவநம்பிக்கையை எழுதினேன். ஏனென்றால் ஏற்கனவே எது ‘மக்கள்’நடுவே பேசப்பட்டதோ அதுவே அந்த ஊடகங்களிலும் திரண்டு வரும் என நான் நினைத்தேன். அன்றே மக்கள் எதிர்மறைவிசைகளால் இயக்கப்படுவது கண்கூடாக இருந்தது.
இன்று ஐயமற நிரூபிக்கப்பட்ட ஒன்று உண்டென்றால் அவ்வாறு மின்னூடகம் வழியாக உருவாகிவந்த சாமானியனுக்கான இடம் எந்தவகையிலும் ஜனநாயகத்துக்கு உதவவில்லை என்பதே. அது பாமரத்தனம் ஒருங்குதிரண்டு ஒரு பெரும்வல்லமையாக ஆகவே வழியமைத்தது. இன்று அறிவுச்செயல்பாடுகளின் மிகப்பெரிய எதிர்விசையாக அது உலகமெங்கும் மாறியுள்ளது. அதைப்பற்றி மிகமிக விரிவான ஆய்வுகள் வந்துள்ளன.
இரு முனைகளில் இது நிகழ்ந்தது. ஒருமுனையில் சாமானியர்கள் தங்கள் அறிவை அந்த ஊடகம் வழியாக பகிர்ந்து கொண்டதை விட, தங்கள் உரிமைக்குரல்களை பதிவு செய்ததை விட, பலநூறு மடங்கு கூடுதலாக தங்கள் காழ்ப்புகளையும் அச்சங்களையும் பேராசைகளையும்தான் பதிவுசெய்தனர். அவை மிகப்பெரிய அளவில் ஒருங்கு திரண்டன.ஒற்றைப் பேரமைப்பாக ஆகி ராட்சத வல்லமை கொண்டன.
இன்னொரு முனையில் சாமானியர்களின் அந்த வெளிப்பாடுகளை கண்காணிக்கவும், திரட்டவும் அதிகார அமைப்புகளுக்கும் வணிக அமைப்புகளுக்கும் வாய்ப்பு அமைந்தது.அவற்றின் வழியாக அவர்கள் மிக எளிதாக சாமானியர்களை கட்டுப்படுத்தினர். அவர்களின் கருத்துக்களையும் ரசனையையும் வடிவமைத்தனர்.
உலகமெங்கும் மின்னணு- சமூகவலைத்தள ஊடகங்கள் வலுப்பெற்ற பின்னர் உரிமைப்போர்கள் வலுப்பெறவில்லை. மாறாக இனவாத, மொழிவாத, மதவாத, தேசியவாத வெறிகள்தான் வலுப்பெற்றன. அவற்றை முன்வைக்கும் கட்சிகள் ஆட்சிகளைப் பிடித்தன. அந்தப்போக்கு மேலும் வலுப்பெற்று வருகிறது. இன்று ஓரு வெறிக்கு மாற்றாக இன்னொரு வெறியைத்தான் முன்வைக்கவேண்டும் என்னும் அளவுக்கே உலக அரசியல் உள்ளது. மதவெறிக்குப் பதிலாக இனவெறி. தேசியவெறிக்குப் பதிலாக வட்டாரவெறி.
எந்த ஒரு புதிய ஊடகவடிவம் வந்தாலும் அதில் ‘மக்கள்’ எதை வெளிப்படுத்துகிறார்கள் என்று பாருங்கள். தங்கள் காம-குரோத-மோகங்ங்களைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். அரசியல், நுகர்வு, கேளிக்கை ஆகியவை அவர்கள் மண்டைக்குள் எதை செலுத்துகின்றனவோ அவற்றையே இன்னும் கீழிறங்கி திரும்ப வெளிப்படுத்துகிறார்கள்.
மக்கள் நேரடியாக தெரிவுசெய்யும்போது எதை விரும்பி ஆதரிக்கிறார்கள்? இன்றைய சமூக ஊடகங்களில், மின்னூடகங்களில் கெட்டவார்த்தைகளாகப் பொழியும் ஒருவருக்கு இருக்கும் கவனத்தில் நூறில் ஒரு பங்கு ஒரு மக்கள் பணியாளருக்கு இல்லை என நாம் அறிவோம். அபத்தமான சதிக்கோட்பாடுகளையும் வெறுப்புகளையும் கக்கும் ஒரு அரைவேக்காடுக்கு இருக்கும் வரவேற்புக்கு ஆயிரத்தில் ஒரு பங்கு ஓரு மெய்யான அறிஞனுக்கு அமைவதில்லை.
ஆர்வமூட்டும் ஒன்று இன்று உருவாகியுள்ளது. ஏதேனும் ஒருவகையில் கவனத்தை ஈர்த்துவிட்டால் அக்கவன ஈர்ப்பே ஒருவருக்கு முக்கியத்துவத்தை உருவாக்கி அவருடைய சொற்களுக்கு மதிப்பை உருவாக்குகிறது. ஆகவேதான் வசைபாடிகள் புகழ்பெறுகிறார்கள். கோமாளிகள் மேலும் புகழ்பெறுகிறார்கள். அவர்கள் ‘செல்வாக்குநர்’ (இன்ஃப்ளூயன்ஸர்) எனப்படுகிறார்கள். அவர்கள் உண்மையாகவே சமூகத்தின்மேல் செல்வாக்கு செலுத்துகிறார்கள்
இன்றும் ஒருவர் ‘மக்களுக்குத் தெரியும்’ ‘மக்களின் எண்ணம் புனிதமானது’ ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் என்றால் ஒன்று அவர் சென்றகாலத்திலேயே நின்றுவிட்ட பித்துக்குளி. அல்லது மிகச்சாமர்த்தியமான அயோக்கியர்.
இன்று மக்கள் மீதான கடுமையான விமர்சனத்தில் இருந்தே எந்த அறிவுஜீவியும் தொடங்க முடியும். முதலில் இங்கே ‘அரசியல்- நுகர்வு – கேளிக்கை’ ஆகிய மூன்றும் உருவாக்கும் பிரச்சாரங்களை நிராகரித்து தனக்கான சிந்தனையை தன் வாசிப்பின் வழியாக, விவாதங்கள் வழியாக ஓர் அறிவுச்செயல்பாட்டாளன் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அந்த நிராகரிப்பு வழியாகவே அவன் மக்களிடமிருந்து விலகிவிடுவான். மக்கள் பேசும் எதையும் பேசாதவனாகவும் மக்கள் விரும்பும் எதையும் விரும்பாதவனாகவும் ஆகிவிடுவான். தன்னை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வான். அதன்பொருட்டு மக்களால் இகழவும் வெறுக்கவும்படுவான்.
அடுத்தபடியாக அவன் மக்களை விமர்சனம் செய்தே ஆக்வேண்டும். இன்று எந்த ஒரு உண்மையான சிந்தனையும் மக்களின் மீதான விமர்சனமாகவே இருக்க முடியும். மக்களின் ரசனையை, அவர்களின் பொதுவான புரிதல்களை விரிவாக நிராகரிதேயாகவேண்டும். அவற்றை ஏற்றுக்கொள்பவன் ‘அரசியல்- நுகர்வு- கேளிக்கை’ ஆகிய அமைப்புகளுடன் இணைந்திருப்பவன் மட்டுமே. அவனுக்கு அதில் லாபங்கள் இருக்கலாம். அவன் சிந்தனையாளன் அல்ல, வணிகன்.
இன்று மக்களை அணுகவேண்டிய முறை என்பது பழைய மார்க்ஸியர்கள் போல பக்தனாக இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு கைகூப்பி கண்ணீர்மல்கி நிற்பது அல்ல.மக்கள் என நம் முன் நிற்பது ‘கள்ளம் கபடமற்ற மக்கள் தன்னியல்பாக திரண்டு உருவான அமைப்பு’ அல்ல. அது அதிகார சக்திகளாலும் வணிக சக்திகளாலும் கட்டமைக்கப்பட்டதும், காழ்ப்புகள் பேராசைகள் ஆகியவற்றாலானதுமான ஓர் அமைப்பு என்னும் புரிதல் நமக்கு வேண்டும்.
அந்த அமைப்புக்குள் ஓர் அறிவியக்கவாதி ஏற்பவை, மதிப்பவை ஏராளமாக உண்டு. நீண்ட வாழ்க்கைத்தொடர்ச்சி வழியாக கற்கப்பட்ட அனுப அறிதல்கள் முதன்மையாக முக்கியமானவை. மொழியினூடாகவும் கலை வழியாகவும் திரண்டு வந்த ஆழ்படிமங்கள் மேலும் முக்கியமானவை. அவை மக்களே அறியாமல் மக்கள் அறிந்த மெய்மைகள். தங்கம் மண்ணுடன் கலந்திருப்பதுபோல அவை ஆசாரங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளுடன் கலந்தே காணப்படும். அவற்றை பிரித்தறியும் நுண்ணுணர்வு அறிவியக்கவாதிக்கு இருந்தாகவேண்டும்.
எந்த இலக்கியத்திற்கும் வேர்நிலம் என்பது மக்கள்தான். ஆகவே இலக்கியவாதி மக்கள்மேல் பெரும்காதல் கொண்டவனாகவே இருப்பான். மக்களை அவன் கவனித்துக்கொண்டே இருப்பான். மக்களிடமிருந்து வாழ்க்கைக்கூறுகளையும் ஆழ்படிமங்களையும் எடுத்து இலக்கியமாக்குவான். மக்களிடமிருந்து எடுத்தவற்றை மறு ஆக்கம் செய்து மக்களுக்கே அளிப்பதுதான் கலை, இலக்கியம், சிந்தனை எல்லாமே.
அதாவது மக்கள் என்றால் இரண்டு அடுக்குகள் கொண்ட ஓர் அமைப்பு. திரண்டு நம் முன் நின்றிருக்கும் மக்கள் என்னும் கூட்டம் வெறும் கூச்சல்களால் ஆனது. அரசியல்வாதிகளாலும் வணிகர்களாலும் உருவாக்கப்பட்ட வெற்றுத்திரள். அதனிடம் நாம் உரையாட ஒன்றுமில்லை, அறியவும் ஒன்றுமில்லை. அதன் குரல்களுக்கு நம் வகையில் எந்த மதிப்பும் இல்லை. அதேசமயம் அதன் அடியில், அதுவே அறியாத ஓர் அடுக்கில் ஒவ்வொரு துளியிலும் நாம் அறியும் அறிவு, கலை என சில உள்ளது. அந்த வேறுபடுத்தும் பார்வை நமக்குத்தேவை.
ஓர் இலக்கியவாதி, ஓர் அறிவியக்கவாதி பேசுவதும் மக்களின் அந்த அறியப்படாத நுண்வடிவை நோக்கியே. நான் பல்லாயிரம் பக்கங்கள் எழுதியுள்ளேன். இங்கே சமூகவலைத்தளங்களிலும் மின்னூடகங்களிலும் கூச்சலிடும் பெருங்கும்பல் அவற்றை வாசிக்கும் என எந்த எண்ணமும் எனக்கில்லை. வாசிக்கவே கூடாது என்னும் எண்ணமே உள்ளது. ஆனால் மக்கள் என்னும் அத்திரளுக்குள்தான் என் வாசகர்களும் உள்ளனர். அவர்களைத்தான் நான் அறிவியக்கம் நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கிறேன்.
இலக்கியம், கலை, சிந்தனை ஆகியவை மக்கள் என்ற ஒட்டுமொத்த திரளிடம் பேசுவதில்லை. தனித்தனியாக மனிதர்களிடம்தான் பேசுகின்றன. அந்த தனிமனிதர்களும் மக்கள் எனும் திரளில் உறுப்புதான். ஆனால் வாசிக்க, கலையை ரசிக்க, சிந்திக்க ஆரம்பித்ததுமே அவர் தனித்துவிடுகிறார். அந்த உரையாடல் நிகழ்வது அவருக்குள் உள்ள ஆழ்மனதுக்கும் கலைஞனின், எழுத்தாளனின் ஆழ்மனதுக்கும்தான். ஒருவகையில் அது மக்களில் ஒரு துளி மக்களில் இன்னொரு துளியுடன் உரையாடுவதுதான். மக்களின் ஆழ்மனம் தனக்குள் உரையாடிக்கொள்வதுதான்.
இன்று ஒரு சமூகப்பணியாளன் மக்களைப் பார்க்கவேண்டிய கோணமும் இதுவே. அவன் மக்கள் என இன்று திரண்டிருக்கும் இந்த அமைப்பின் ஒரு பகுதி அல்ல. அந்த அமைப்பின் ஏற்புக்காக அவன் பணியாற்ற முடியாது. மக்கள் என்னும் அந்த அமைப்பின் சுயநலமும் ஏமாற்றுத்தனமும் அவனுக்கு முன் வந்து நின்றுகொண்டேதான் இருக்கும். அவன் பணியாற்றவேண்டியது அந்த மக்களில் இருக்கும் தனிமனிதர்களுக்காக. அந்த மக்களில் உறையும் ஒரு தொடர்ச்சியின் நலனுக்காக.
ஆகவே கலைஞனும் எழுத்தாளனும் மக்கள்பணியாளனும் மக்கள் பற்றிய எந்த கற்பனாவாத நெகிழ்வையும் கொண்டிருக்க முடியாது. பொதுவாக அத்தகைய நெகிழ்வுகளை கொண்டிருப்பவர்கள் எந்த வகையிலும் களப்பணி ஆற்றாத , மக்களை சந்திக்கவே வாய்ப்பற்ற போலி இலட்சியவாதிகள் மட்டுமே. அதேசமயம் அவன் மக்கள் மேல் கசப்பையும் கொண்டிருக்க மாட்டான். ஏனென்றால் மக்கள் எனும் அந்த திரள்தான் அவன் செயல்பாட்டுக்கே அடிப்படை. அவனுக்கு ஞானத்தையும் கற்பனையையும் அள்ளி தருபவர்கள்.
மக்கள்மேல் பெரும் பற்றுடன் மட்டுமே இலக்கியவாதி எழுத முடியும். சமூகப்பணியாளன் செயல்பட முடியும். ஆனால் மக்களின் விருப்பப்படி எழுத்தாளன் எழுத கூடாது. மக்கள் சொன்னபடி செயல்பட்டால் சமூகப்பணியாளன் ஊழலை மட்டுமே செய்ய முடியும். நோயாளியை கேட்டு, அவன் விருப்பப்படி மருத்துவன் செயல்பட முடியாது. எல்லாமே மக்கள் விருப்படி செய்பவன் மக்களை பயன்படுத்திக்கொள்ளும் அரசியலாளனும் வணிகனும் மட்டுமே. மக்களின் நலனுக்காக எழுதுபவன்
இன்று ஒரு அறிவியக்கவாதி அல்லது சமூகப்பணியாளன் மக்களைப் பற்றி விமர்சனம் செய்தால் உடனே எதிரில் வந்து சவால்விடுவது அரசியல்வாதிகளாலும் வணிகர்களாலும் திரட்டப்பட்ட கும்பல்தான். ‘மக்களைக் குறை சொல்கிறாயா?” என கூச்சலிடுவார்கள். அவர்களை திரட்டி வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் கூடவே வந்து தொடைதட்டுவார்கள். அந்த சலம்பல்களை நாம் செவிகொடுக்கலாகாது. “டேய், போடா. எனக்கு உண்மையான மக்கள் என்றால் யார் என்று தெரியும்’ என்று நாம் பதிலுரைக்கவேண்டும்.
(மேலும்)