மேட்டிமைவாதமா?
மேட்டிமைவாதம் என்னும் சொல்…
தமிழ்ச்சூழலில் சில புனிதச் சொற்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மக்கள். அச்சொல்லுக்கு நிகராக காலப்போக்கில் உருவாக்கப்பட்ட இன்னொரு சொல் பாமரர். இங்கே கலை, கல்வி, அறிவு, தரம், மேன்மை என்று எதைச் சொன்னாலும் அதற்கு தானியங்கிப் பதிலாக வந்து நிற்பது ‘மக்கள்’ ‘பாமரர்’ என்னும் இரண்டு சொற்கள்தான்.
அவை முன்வைக்கப்பட்டுவிட்டால் அதன்பின் எதிர்ப்பேச்சே பேசக்கூடாது. பேசுபவர் மக்கள்விரோதி, சுரண்டல்காரர், ஆதிக்கவாதி என நூறு முத்திரைகளுக்கு ஆளாகிவிடுவார். எந்த துடிப்பான புதிய சிந்தனையாளனையும் அச்சொற்கள் பொதுவெளியில் பம்ம வைப்பதைப் பார்க்கிறோம். அச்சொற்களை பயன்படுத்தும் கும்பலுக்கு அவை வெறும் சொற்கள்தான் என்றும், அவர்களின் வாழ்க்கைக்கும் நம்பிக்கைகளுக்கும் அச்சொற்கள் அளிக்கும் பொருளுடன் தொடர்பே இல்லை என்றும் தெரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. அவை மந்திரவாதியின் கோல் போன்றவை.
அச்சொற்கள் உருவான வரலாற்றை, அவை அடைந்த பொருள்மாற்றங்களை சற்றேனும் உணர்ந்துகொள்ளாமல் அவற்றை பயன்படுத்துபவர்களை எதிர்கொள்ள முடியாது.
மக்கள் என்னும் சொல்லை முன்வைத்தவர்கள் தொடக்ககால ஜனநாயகவாதிகள். அதை புனிதப்படுத்தியவர்கள் இடதுசாரிகள். மக்கள் என்ற சொல்லை பாமரர் என்ற சொல்லுக்குச் சமானமானதாக இழுத்துச்சென்றவர்கள் தேர்தல்கள அரசியல்வாதிகள்.
*
ஜனநாயகவாதிகள் மக்கள் என்னும் சொல்லை உருவாக்கி, முதன்மைப்படுத்திய செயல் என்பது உலகச் சிந்தனைச் சூழலில் ஒரு முக்கியமான நிகழ்வு. அதுவே நவீன ஜனநாயகத்தின் தொடக்கம். இன்றைய விழுமியங்கள் அனைத்தும் அங்கே தொடங்கியவைதான். இதை நாம் பதினேழு- பதினெட்டாம் நூற்றாண்டின் அரசியல் வரலாற்றுப் பின்னணியிலேயே புரிந்துகொள்ள வேண்டும்.
அன்று உலகமெங்கும் மன்னராட்சி நிலவியது. மன்னரின் அதிகாரமென்பது இனம், ஆசாரம் ஆகிய இரண்டு அடிப்படைகளில் மரபு வழியாக நிறுவப்பட்டதாக இருந்தது. அரசருக்கு இணையாகவோ, அதைவிட மேலாகவோ மதத்தின் அதிகாரம் இருந்தது. அந்த அதிகாரம் நம்பிக்கைகளாலும், அந்நம்பிக்கைகளை உருவாக்கிய தொன்மங்களாலும் ஆனதாக இருந்தது. அந்த இரு அதிகாரங்களிலும் மக்களின் பங்களிப்பு ஏதுமில்லை. மக்கள் ஆளப்படுபவர்கள் மட்டுமே. உழைப்பவர்கள், வரிகொடுப்பவர்கள், சேவகம் செய்பவர்கள், ராணுவமாக போர்களில் ஈடுபட்டு கொல்பவர்கள், கொல்லப்படுபவர்கள்.
மன்னர், மதம் என்னும் இரு அதிகார மரபுகளுக்கு எதிராக பொதுமக்களின் நலனை முன்வைத்தனர் ஜனநாயகத்துக்காகச் சிந்தனைசெய்த முன்னோடிகள். ஓர் அரசு நிலைகொள்வது மக்களின் நலனுக்காகவே இருக்கவேண்டும். ஒரு மதம் நிலைகொள்வது மக்களின் மீட்சிக்காகவே இருக்கவேண்டும். அதிகாரம் மக்களுக்கு எதிரானது என்றால் அது தேவையற்றது, அழிவுத்தன்மை கொண்டது, ஆகவே அழியவேண்டியது. மக்களுக்கு என்ன வகையான அரசு வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
அந்தச் சிந்தனை மிகமிக மெலிதாக முளைத்து ,பல்வேறு சிந்தனையாளர்கள் வழியாக வளர்ந்து, பல்வேறு அரசியல்போராட்டங்கள் வழியாக உருத்திரண்டு வந்த ஒன்று. அதன் தொடக்கம் Magna Carta போன்று அரசரின் வரம்பில்லா அதிகாரத்திற்கு எதிராக உருவான தொடக்ககால அரசியல் எதிர்ப்புகள். அதன்பின் பிரபுக்களின் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்புகள், மதகுருக்களின் ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்புகள் உருவாயின. போர்களும் பஞ்சங்களும் அந்த எதிர்ப்புணர்வை வளர்த்தன. அந்த சிறு கிளர்ச்சிகள் நிகழ்ந்து அவற்றின் வழியாக மக்கள் தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அடைந்தனர். அரசர், மதகுரு ஆகியவர்கள் மேலிருந்த அடிமைத்தனமான பற்றில் இருந்து வெளியே வந்தனர்.
மெல்ல மெல்ல மக்களுக்கே அதிகாரம் என்னும் அந்த புதியசிந்தனை ஒரு பேரலையாக ஐரோப்பாவை ஆட்கொண்டது. பிரிட்டனில் ஜனநாயகத்திற்கான பிரெஞ்சுப்புரட்சி, அமெரிக்கப்புரட்சி இரண்டும் அதன் முதன்மை விளைவுகள். அங்கிருந்து உலகம் முழுக்க ஜனநாயகம் என்னும் கருதுகோள் சென்று சேர்ந்தது. ஜனநாயகத்திற்கான போராட்டங்களில் இருந்தே மார்க்ஸிய சிந்தனை உருவானது. ருஷ்யப்புரட்சியாக உருத்திரண்டது. இடதுசாரி சிந்தனைகளாக உலகமெங்கும் பரவியது.
தொடக்ககாலத்தில் ஜனநாயகத்துக்கான குரல்கள் எழுந்தபோது அதை எதிர்த்த தரப்பினர் மூன்று வகைப்பட்டவர்கள். இனம், குலம் ஆகியவற்றை முன்வைத்தவர்கள் ஒரு பிரிவினர். அவர்கள் அதிகாரத்தைக் கையாள்வதற்கு அதற்கான குடிப்பிறப்பு மரபு இருந்தாகவேண்டும் என்று நம்பினர். ‘தூய குருதிமரபு’ என்னும் சொல்லாட்சி அவர்களுடையது.
மத அதிகாரத்தை முன்வைத்தவர்கள் இரண்டாம் வகையினர். அவர்கள் அதிகாரத்தைக் கையாள இறையருளும் அதற்கான தகுதியும் இருக்கவேண்டும் என்றனர். புனிதமான அதிகாரம் என்னும் சொல்லாட்சி அவர்களுடையது.
மூன்றாம்தரப்பினர் சிறுபான்மையினர். அவர்கள் அறிவதிகாரத்தை முன்வைத்தனர்.கற்றவர்கள், அறிவுத்தகுதி கொண்டவர்களே அதிகாரத்தைக் கையாள வல்லமைகொண்டவர்கள் என்று அவர்கள் வாதிட்டனர். ‘அறிவின் அதிகாரம்’ என்னும் சொல்லாட்சி அவர்களுடையது.
ஜனநாயகம் என்று நாம் சொல்லும் இன்றைய அமைப்பிலேயே இந்த மூன்று எதிர்த்தரப்புகளுக்கும் இடம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இம்மூன்று சக்திகளுடன் சமரசம் செய்துகொண்டுதான் ஜனநாயகம் உருவாகி வந்துள்ளது.
பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மன்னராட்சிக் காலத்தில் மன்னருக்கு ஆலோசனைசொல்லவும் கட்டுப்படுத்தவும் பிரபுக்களின் அவை ஒன்று அமைந்தது. மன்னரின் வரம்பில்லா அதிகாரம் அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டதே ஒருவகை ஜனநாயக முன்நகர்வுதான். அதன்பின் பிரபுக்கள் அவைக்கு ஒரு படி குறைவானதாக மக்களவை உருவாகி வந்தது. காலப்போக்கில் மக்களவையின் அதிகாரம் அதிகரித்தபடியே வந்தது. அதுதான் ஜனநாயகம் வளர்ந்த விதம்.
ஆனால் இன்றும்கூட நமது பாராளுமன்ற மேல்சபை என்பது மேலே சொன்ன மக்களதிகாரத்திற்கு எதிரான மூன்று தரப்பினருக்கும் ஆட்சியதிகாரத்தில் இடமளிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பதைக் காணலாம். முன்பு சட்டமன்றத்திலேயே மேல்சபைகள் இருந்தன. தேர்தலையே சந்திக்காமல் மேல்சபை வழியாகவே அமைச்சரானவர்கள், பிரதமரானவர்கள் நமக்கு எப்போதும் உண்டு.
அரசியலமைப்புச் சட்ட விவாதங்களில் பி.ஆர்.அம்பேத்கர் இந்த வினாக்களை விரிவாக எதிர்கொண்டிருக்கிறார். மேல்சபை இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையை முதன்மை அதிகாரம் கொண்டதாக அவர் தலைமையிலான அரசியல் சாசனக்குழு அமைத்தது. லோக் சபா அல்லது மக்கள் அவை என்னும் சொல்லே முக்கியமான ஒன்று.
மேலே சொன்ன மூன்று எதிர்தரப்பினருக்கும் தொடக்க கால ஜனநாயகவாதிகள் பதில் சொன்னபோதுதான் ‘மக்கள்’ என்னும் கருத்துருவை உறுதியாக நிலைநாட்டினர். plebeian என்ற சொல்லில் இருந்து public என்ற சொல் நோக்கிய நகர்வு என அதை சுருக்கமாகச் சொல்லலாம். பிளீபியன் என்ற சொல் பண்டைய கிரேக்கத்தில் அதிகாரத்தில் பங்கில்லாத சமூக உறுப்பினரைச் சொல்ல பயன்படுத்தப்பட்டது. பப்ளிக் என்ற சொல் அரசின்மேல் கூட்டாக அதிகாரம் கொண்ட மக்கள் திரளை சுட்ட பயன்படலாயிற்று.
பிறப்பின் வழியான அதிகாரம், மத அதிகாரம் ஆகியவற்றை மிக எளிதில் ஜனநாயகவாதிகள் விவாதத்தில் தோற்கடித்தனர். அறிவின் அதிகாரம் என்னும் கருத்துரு அத்தனை எளிதாக வெல்லப்படத்தக்கது அல்ல. அத்தரப்பு இன்றும் வலுவானதே. இன்றும்கூட உலகமெங்கும் ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் இயல்பான விசையாக இருப்பது அறிவதிகாரமே. வெவ்வேறு வகைகளில் அந்த அறிவதிகாரம் செயல்படுகிறது. உதாரணமாக தொழில்நுட்ப நிபுணர்களின் அதிகாரம், உயர்நிர்வாகிகளின் அதிகாரம், வணிகக்குழுக்களின் அதிகாரம், ஊடகங்களின் அதிகாரம். இவை ஒன்றாகத் திரண்டு இன்றைய மக்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்துகின்றன, பலசமயம் அவையே முன்னோங்கி நிற்கின்றன.
அறிவதிகாரம் உருவாக்கிய கேள்விகள் இந்திய அரசியலமைப்புச் சட்ட விவாதத்தின்போதும் எழுந்து வந்தன. படிப்பறிவே இல்லாத, பழங்குடி மனநிலைகள் கொண்ட, பிற்பட்ட நிலையில் தேங்கி நின்றிருக்கும் சாமானிய மக்களிடம் அரசதிகாரத்தை அளிக்கலாமா? நேரடியாகவே அம்பேத்கரிடம் கேட்கப்பட்டது, சாதிவெறி மிக்க இந்தியச் சமூகத்திடம் அதிகாரத்தை அளித்தால் இந்தியா என்றாவது சாதியை ஒழிக்கமுடியுமா?
அதற்கான பதிலாகவே ‘மக்கள்’ என்னும் திரள் அடையாளம் முன்வைக்கப்பட்டது. அதாவது தனிமனிதர்களாக மக்கள் படிப்பறிவற்றவர்களாக இருக்கலாம். சிந்தனைத்திறன் அற்றவர்களாக இருக்கலாம். சுயநலமிகளாகவும், பேராசைக்காரர்களாகவும் இருக்கலாம். மூடநம்பிக்கை கொண்டவர்களாகவும், தேங்கிப்போன வாழ்க்கைமுறை கொண்டவர்களாகவும் இருக்கலாம். ஆனால் ‘மக்கள்’ என்னும் கூட்டான சக்தி எப்போதும் வாழவும் முன்னேறவும்தான் விரும்புகிறது என்றனர் ஜனநாயகவாதிகள்.
மக்கள் தான் சமூகம், அவர்கள்தான் வரலாறு. சமூகம் தன்னை முன்னேற்றிக்கொள்ளவே துடிக்கிறது.வரலாறு முன்னேறவே முயல்கிறது. ஆகவே மக்களுக்கு எது வேண்டும் என அவர்கள்தான் முடிவுசெய்யவேண்டும். அந்த உரிமை அவர்களுக்குண்டு என ஜனநாயகவாதிகள் வாதிட்டனர். மக்களிடம் அவர்களின் தேவை என்ன என்பது உள்ளது. அவர்கள் எங்கே செல்லவேண்டும் என்பது உள்ளது. அதற்கு வாய்ப்பளிப்பதே ஜனநாயகம் செய்யவேண்டியது. அது எப்படியானாலும் முன்னோக்கிய நகர்வாகவே அமையும் என்றனர்.
மக்களிடம் வரலாற்றின் இயங்குவிசை உள்ளுறையாக உள்ளது என்று ஹெகல் முதலிய இலட்சியவாதிகள் நம்பினர். மார்க்ஸ் அந்நம்பிக்கையை ஹெகலிடமிருந்து பெற்றுக்கொண்டார். மக்களிடம் புனிதமான, மகத்தான ஏதோ ஒன்று உள்ளது என்ற நம்பிக்கையை மிகுந்த நெகிழ்வுடன் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு இலட்சியவாத எழுத்துக்கள் சித்தரித்தன. புரட்சியாளர்கள் அதை நம்பி உள்ளக்கிளர்ச்சி அடைந்தனர்.
ஆனால் மக்கள் என்றால் யார்? ஒருவர் கல்விகற்றார் என்றால், சிந்தனை செய்தார் என்றால் அவருக்கென ஒரு தனித்தன்மை உருவாகி வந்துவிடுகிறது. அவருடைய களங்கமின்மை இல்லாமலாகிவிடுகிறது. அப்படியென்றால் கல்வியும் சிந்தனையும் இல்லாத ஒருவரே மக்களின் சரியான பிரதிநிதியாக இருக்க முடியும். மக்கள் என்பது பாமரர்களின் ஒட்டுமொத்தம்தான் என்னும் எண்ணம் அவ்வாறாக உருவானது.
விளைவாக படித்தவர்கள், சிந்தனைசெய்பவர்களிடம் இல்லாத பல உயர்பண்புகள் பாமரரிடம் இருக்கின்றன என இலக்கியங்கள் பேச ஆரம்பித்தன. அந்த உயர்பண்புகள் என்பவை மக்கள் என்னும் பொதுவான கருத்துருவின் பண்புநலன்கள்தான். அவைதான் கலாச்சாரம் என்பதன் அடிப்படை அலகுகள். கருணை, அறவுணர்வு, தோழமை என பல உயர்விழுமியங்களாக அவை சித்தரிக்கப்பட்டன. தொடக்ககால மனிதாபிமான இலக்கியத்தின் முக்கியமான பேசுபொருள் என்பது ‘பாமரர்களில் வெளிப்படும் உயர்பண்புகள்’ தான்.
பாமரரை புனிதப்படுத்தும் இந்த கண்ணோட்டத்தை ஜனநாயகத்தை முன்வைத்த அரசியலாளர் ஒருவகை தத்துவக் கொள்கையாகவே முன்வைக்கலாயினர். பின்னர் மார்க்ஸியர்கள் அதை மறுக்கமுடியாத கோட்பாடாக நம்பிப் பேசலாயினர். அது ஒரு பார்வை மட்டுமே என சொல்பவர்கள் மக்கள் விரோதிகள் ஆயினர்.அவர்கள் மேல் மேட்டிமைவாதி என்னும் முத்திரை குத்தப்பட்டது.
மேட்டிமை முத்திரை ஒருதொடக்கம். அது கடைசியில் அழித்தொழிக்கப்படவேண்டிய சமூகவிரோதி என்ற எல்லைவரை சென்று சேரும். பத்தொன்பதாம் நூற்றாண்டு மார்க்ஸிய அரசுகளால் வதைமுகாம்களில் அடைக்கப்பட்ட, கொல்லப்பட்ட கலைஞர்கள் மற்று அறிஞர்கள் அத்தனைபேருக்கும் மேட்டிமைவாதி, மக்கள் விரோதி என்னும் முத்திரைகள்தான் குத்தப்பட்டன.
முந்தைய மன்னர் மற்றும் பிரபுக்களின் ஆட்சியிலும், மதகுருக்களின் ஆட்சியிலும் பாமரர் முழுமையாகவே புறக்கணிக்கப்பட்டு சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டனர். அவர்கள் வெறும் மானுடக்குப்பைகளாக போர்க்களங்களில் கொன்று ஒழிக்கப்பட்டனர். பஞ்சங்களில் செத்துக்குவிந்தனர். அவர்களை வரலாற்றில் கொண்டுவந்து நிறுத்தியவர்கள் ஜனநாயகவாதிகளும் பின்னர் மார்க்ஸியர்களும்தான். வரலாறு சாமானியர்களுக்குரியது என்றும் சமூகம் என்றால் அவர்களே என்றும் நிறுவியவர்கள் ஜனநாயகவாதிகளும் மார்க்ஸியர்களும்தான்.
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு வரை வரிகட்டாதவர்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை வந்தது மேலும் பல ஆண்டுகள் கழித்துத்தான்.இலக்கியத்தில் ஒரு பாமரன் கதைநாயகனாக ஆவது ஜனநாயக சிந்தனைகள் திரண்டு, அவற்றின் அடிப்படையில் நவீன இலக்கியம் உருவாகி வந்தபின்னர்தான். தகழி சிவசங்கரப்பிள்ளையின் தோட்டியின் மகன் நாவலில் ஒரு துப்புரவுத்தொழிலாளர் கதைநாயகன் என்பதை அறிந்து இடதுசாரிகளே திடுக்கிட்டதை, வியந்ததை அதை மொழியாக்கம் செய்த சுந்தர ராமசாமி பதிவுசெய்துள்ளார்.
அத்தகைய சூழலில் மக்கள் என்பது அனைத்துப் பாமரர்களையும் உள்ளடக்கியதுதான் என்னும் சிந்தனை மிகமிக முற்போக்கானது. ஒவ்வொரு பாமரனையும் கருத்தில்கொள்கையிலேயே ஓர் அரசு நலம்நாடும் அரசாக இருக்க முடியும் என்னும் எண்ணம் அரசியலில் ஒரு புரட்சி. பாமரனின் அதிகாரத்தை முன்வைத்த சிந்தனைகள் மிகமிக முற்போக்கானவை. மிகப்புரட்சிகரமானவை.
ஜனநாயகத்தில் மிகமிக ஆற்றல்கொண்ட கலைச்சொல்லாக மக்கள் என்பது ஆனது இவ்வாறுதான். மக்கள் என்ற அச்சொல்லை அதன்பின் இடதுசாரிகள் ஒரு ஆயுதமாக ஆக்கிக்கொண்டார்கள்.
(மேலும்)