நீண்ட பயணம்- ரம்யா

அன்பு ஜெ,

மூன்றாவது விஷ்ணுபுரம் விழா இது எனக்கு. ஒவ்வொரு வருடமும் விழாவிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை கூடி வருவதைக் கண்கூடாக காண முடிகிறது. நண்பர்களின் எண்ணிக்கையும். சிலரிடம் ஓரிரு வார்த்தைகள், பலரிடம் பார்வைகள் மட்டுமே பரிமாறிக் கொள்ளுமளவே நேரம் கிடைத்தது.  முதல் நாள் காலை சுனில், சீனு, ஆனந்த்குமார் என நண்பர்கள் சூழ நின்று கொண்டிருந்தனர்.

டீ வாங்கி வந்து சுனில் அருகில் உட்கார்ந்தபோது தான் அவர் சட்டையை கவனித்தேன். எப்போதும் போல அல்லாமல் வித்தியாசமாக இருந்தார். “பூப்போட்ட சட்டை நல்லா இருக்கே.” என்றேன். அவர் உடனே மகிழ்ந்து “சிங்கப்பூர் சட்டை. இந்த வாட்ச் பாத்தீங்களா சிங்கப்பூர் வாட்ச்”, காலை தூக்கி “ஷூ கூட சிங்கப்பூர் ஷூ தான்” என்றார். தெரியாமல் சொல்லிவிட்டோம் என்ற எண்ணத்தில் “நல்லாருக்கு நல்லாருக்கு” என்று கூறிவிட்டு ஒரு வாய் டீ வைக்கப் போனேன்.

“இது என்ன மாட்டுப்பால்ல போட்ட டீயா” என்றார்.

”பின்ன”

“நானெல்லாம் சிங்கப்பால்ல தான் டீ குடிக்கறது” என்றார்.

“சிங்கப்புர்ல சிங்கம் இல்லன்றாங்களே”

“அதெல்லாம் இப்ப எதுக்கு. சரி டிபன் என்ன? இந்த விஷ்ணுபுரம்ல எப்ப பாத்தாலும் அதே இட்லி, தோசை. உப்புமா.. சே..” என அலுத்துக் கொண்டார்.

“வேற என்ன வேணுமாம் உங்களுக்கு”

“ஒரு மீ கொராங் போடலாம். பீ…ஹுன் போடலாம். அட்லீஸ்ட் ஒரு கொய்தியா..”

“கொய்தியாவா.. அது எப்படி இருக்கும் சுனில்” என ஆர்வமாகக் கேட்டேன்.

“நான் கூட ஏதோ வித்தியாசமா இருக்கே பிஃப் ஃப்ரை மாதிரி ஏதாவது நல்லா இருக்கும்னு ஆர்டர் பண்ணேன். கடைசில பாத்தா சேமியாவதான் அப்படி சுத்தி சுத்தி வச்சிருந்தானுக. ரெண்டு நாள் பாத்தேன். விலையும் அதிகம். காசு குடுத்து இந்த சேமியாவ சாப்பிடனுமான்னு நானே சமைக்க ஆரம்பிச்சுட்டேன். ஒரு கரப்பான்பூச்சி ஃப்ரை கூட சாப்பிட முடில தெரியுமா” என்று சரணடைந்துவிட்டவரைச் சுற்றி நின்று சிரித்துக் கொண்டிருந்தோம்.

அநேகமாக ஆரம்பித்திருந்த நாவலை முடித்திருப்பார் என்று நினைத்தால் அவரே ஒரு மூன்று மாதம் நாவலில் தான் வாழ்ந்துவிட்டு வந்தார் என்பது போன்ற அனுபவங்கள். சுவாரசியமாக இருந்தது. அப்படியே பேச்சு அடுத்த நாள் அவரின் அமர்வு நோக்கி திரும்பியது. ராமச்சந்திர குகாவிடம் எங்களுக்கு இருக்கும் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய அவதானங்களையும் பகிர்ந்தார். இந்த ஆண்டின் முத்தாய்ப்பாக அமைந்த தெறிப்பான அமர்வை மிக அருமையாகக் கையாண்டார்.

இரண்டாம் நாள் காலை நடை உங்களுடன் உற்சாகமாக ஆரம்பித்தது. பாதி வழியில் யுவனையும், பா.ரா -வையும் சந்தித்து இரு கூட்டங்கள் முட்டிக் கொண்டபோது மேலும் வெடிச்சிரிப்புகள். சாலையில் வண்டியில் செல்பவர்கள் “ஏதும் பிரச்சனையா” என ஓரத்தில் நின்றிருப்பவர்களிடம் நின்று கேட்டுச் செல்வதை பார்த்தேன். ”இன்னொரு காபி குடிக்கலாம் வா” என நீங்கள் யுவனைக் கேட்டபோது யுவன், “கட்டாயம் முடியாது. உன்னால தான் நான் கெட்டுப்போறேன்.” என்று சொல்லி ஒரு அடி முன் சென்றுவிட்டு உங்கள் தோளில் கை போட்டு “சரி போலாண்டா” என உற்சாகமாக சொன்னபோது சிரிப்பலை பரவியது. கூட்டம் அதிகமாகியது.

இரண்டு மூன்று சிறுவர்கள் சாலையில் விளையாடிக் கொண்டே செல்வது போன்ற மயக்கம். ஒரு கும்பல் நைஸாக நழுவி அருகிலுள்ள கடைக்குச் சென்றோம். மலேசியா நவீன்,  அரவின் குமார், சுரேஷ் பிரதீப், சுசித்ரா, பழனிஜோதி, கிருஷ்ணன் என ஒரு கும்பல். பயணம், இலக்கியம், நலம் விசாரிப்புகள் என ஒரு இனிய அனுபவம். திரும்பி வரும்போது போகனுடன் சிறு உரையாடல். முற்று பெறாத அவ்வாறான பல உரையாடல்கள் அங்காங்கே இருந்தன.

மீண்டும் அமர்வுகள், விழா என நிறைவாக இரண்டு நாட்கள் அமைந்தது. விழா முடியும்போது வரும் நிறைவென்பது இது போன்ற உரையாடல்களின் மகிழ்வான தருணங்கள் தான். அமர்வு நேரம் தவிர சிரிப்பும் பேச்சொலிகளும் நிறைந்திருப்பது தரும் ஒரு நேர்மறை எல்லோரிலும் குடியிருந்ததைக் காண முடிந்தது.

ராமச்சந்திர குஹா எனும் ஆளுமை இந்த ஆண்டு விழாவில் முக்கியமான அனுபவமாக அமைந்தார். பெரிய ஆற்றலை அரங்கத்துக்கு அளித்துச் சென்றதாகவே அவரின் அமர்வின் முடிவில் உணர்ந்தேன். ”சார்பின்மை, சமரசமின்மை, தான் எடுத்துக் கொண்ட ஒன்றுக்கு முழுமுற்றாக தன்னை ஒப்புக் கொடுத்தல்”  என யாவற்றையும் அந்த அமர்வின் வழியாக வெளிப்படுத்தினார். இந்த நேர்மை, உண்மைத்தன்மை வழியாக அவர் ஏற்றுக் கொள்ளும் கருத்துக்கள் மேல் மதிப்பும், மறுதளிப்பதன் மேல்  விமர்சனத்தன்மையும் இயல்பாக வந்தமைவதைப் பார்க்க முடிந்தது.

வெறும் அரங்குகளில் வெடிப்புற, சத்தமாக பேசுவதன் வழியாக மட்டும் இதை அடைந்து விட இயலாது. தான் கையாளும் துறை சார்ந்த ஆழமான அறிவு கொண்ட அறிவுஜீவிகளுக்கே உரிய ஒரு தொனியது. தரம்பால் பற்றிய கேள்விக்கு ”அவர் என் நல்ல நண்பர் தான். ஆனால் ஹிந்துத்துவா சாய்வுடையவர். ஒரு வரலாற்றாசிரியர் அப்படி எந்த சாய்வும் கொண்டவராக இருக்கக்கூடாது. வலதுசாரி, இடதுசாரி என எந்தச் சாய்வும் கொண்டவராக இருக்கக் கூடாது. டாக்டர் நாகராஜ், ஆஷிஷ் நந்தி போன்ற வரலாற்றாசிரியர்கள் அப்படி எந்தச்சாய்வும் அற்றவர்கள். என் நோக்கில் அவர்களே நல்ல வரலாற்றாசிரியர்கள். இலக்கியம், கலை, பண்பாடு ஆகிய துறைகளில் இயங்குபவர்கள் எந்தச் சாய்வும் இல்லாமல், அரசியல் சார்பும், நிறுவனச் சார்பும் கொண்டவர்களாக இருக்கக் கூடாது” என்றார்.

கேள்விகளும் நிறைவாக அமைந்தது. சில ஆளுமைகளுக்கு கேள்விகள் என்பது ஒரு உரையாடலுக்கான ஆரம்பப்புள்ளி மட்டுமே. எக்கேள்வியையும் தனக்கேயுரியதாக்கி தன் சிந்தனைகளை, தான் நம்பும் உண்மைகளை எதிரில் உள்ளவர்களிடம் கடத்திச் செல்லும் அனுபவமும் ஆற்றலும் கொண்ட ஒரு ஆளுமை குகா. புத்தகங்கள், காணொளி உரைகள் தாண்டி ஒரு ஆளுமையை நேரில் காண்பதும் உரையாடுவதும் தரும் அனுபவம் வேறு தான் என்பதை அந்த அமர்வில் உணர்ந்தேன். வேறுயாருக்கும் அல்ல, தனக்கு உண்மையாக வாழ்தல் என்பது எத்தனை நிறைவான வாழ்க்கையாக அமையும் என்றே பரவசமாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

யுவன் எனும் ஆளுமை இந்த விழாவின் இரண்டு நாட்களும் நண்பர்களின் பேச்சுக்களின் வழியாக, அமர்வு, விழாமேடை வரை நீக்கமற நிறைந்திருந்தது போன்ற உணர்வு. அவருடைய புனைவுகளுக்கு இணையாகவே இனி ஆனந்த்குமார் இயக்கிய ஆவணப்படமும், சுனில் எடுத்த நேர்காணலும் வைக்கப்படுமளவு அருமையாக அமைந்தது. உணர்வுப்பூர்வமான ஆவணப்படம்.

எனக்கு அருகில் அமர்ந்திருந்த சந்திரா தங்கராஜ் ஒரு இடத்தில் தொடையத் தட்டி உணர்ச்சிவசமாகி அழுதுவிட்டார். ஒரு சாய்வுக் கோணத்தில் யுவனின் முகம் தெரியும்படி உட்கார்ந்திருந்தேன். அவர் தலையை ஆட்டியபடி ஆங்காங்கே அழுது கொண்டிருந்தார். யுவனின் உணர்வுகளும், உள்ளமும் மட்டுமே வெளிப்பட்ட சிறப்பான ஆவணப்படம். இதன் வழி யுவனை இன்னும் அணுக்கமாக்கிக் கொள்ள முடிந்தது.

விக்ரமாதித்யன், சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர் என மூன்று ஆளுமைகளை நேரேயும் அவர்களின் படைப்புகள் வழியாக என இந்த விழாக்கள் வழியாக பார்த்திருக்கிறேன். தூரத்திலிருந்து  பார்த்தது முப்பது வருடங்களுக்கு மேலாக இலக்கியத்தில் தான் எடுத்துக் கொண்ட பாதைக்கு உண்மையாக  இவர்கள் பயணித்திருப்பதைத்தான். எந்த விருதும் அங்கீகாரமும் பெரும்பாலும் பெறாதவர்கள். ஆனால் இலக்கிய ஏற்பை, வாசக ஏற்பைப் பெற்றவர்கள். அதைக்கூட பெருமளவில் பொருட்படுத்தாமல் தங்கள் பாதையில் தொடர்ந்து பயணித்தவர்கள். ஒரு துறைக்கு தன்னை மிச்சமின்றி ஒப்புக் கொடுத்தவர்கள்.

புத்தக மதிப்புரைகளில் யுவனில் வெளிப்படும் நேர்மை, தெறிப்பு,  நேர்காணலில் வெளிப்படும் யுவன், ஆவணப்படத்தின் வழியான யுவன், இந்த ஏற்புரையின் வழியான யுவன் என அவர் படைப்புகளை அணுக ஏதுவாகவே யாவும் அமைந்துள்ளது. ஏனெனில் புனைவுகளைத் தவிர கட்டுரைகளையோ, விமர்சனங்களையோ அல்லது தன் படைப்புகளைப் பற்றியோ, தன் பார்வைகளையோ அவர் முன்வைப்பதில்லை.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தான் யுவனை வாசிக்க ஆரம்பித்தேன். முதல் கதை ”மர்மக்கதை”. மிக அருமையான சிறுகதை. சிரிப்பும், சுவாரசியமும், புத்துணர்வுடனும் கூடிய எழுத்தில் உந்தப்பட்டு அவருக்கு கடிதம் எழுதினேன். அதன்பிறகு அந்தத்தொகுப்பை வாசித்து முடித்தபோது சரியாக தொகுத்துக் கொள்ள முடியவில்லை. பின்னர் இந்த ஒன்றரை மாதங்கள் நாவல்களை முடித்தபின் நண்பர்களுடனான (நரேன், விக்னேஷ் ஹரிஹரன், சக்திவேல்) உரையாடல்கள், சொற்களின் பகடையாட்டம் என்ற உங்கள் உரை வழியாக என் புரிதல்களை தொகுத்துக் கொள்ள முடிந்தது.

யுவனின் படைப்புகள் மேல் மிகவும் மதிப்பு கொண்ட  பாலாஜி பிருத்விராஜுடனான  உரையாடல் வழியாகவே நான் எத்தளத்தில் நின்று தொகுத்துக் கொண்டிருக்கிறேன் என சட்டென ஒரு புள்ளியை உணர்ந்து கட்டுரை எழுதினேன். யுவன் படைப்புகள் பற்றிய அவருடைய உரையும் முக்கியமானது. எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் உரை அவரை அணுகுவதற்கான மிகப்பெரிய சித்திரத்தை அளித்தது.

தமிழ்விக்கி வழியாக உணர்ந்த ஒன்று அப்படி தாங்கள் படித்து தங்கள் அழகியல் தரப்பின் வழியாக உண்மையாக தொகுத்துக் கொண்டவர்களை வைத்து மட்டுமே ஒரு எழுத்தாளரின் இலக்கிய இடத்தை நிரப்பிக் கொள்ள முடிகிறது என்பது. சம்பிரதாய வியந்தோதல்கள்,  ஏற்கனவே சூழலில் முன்னோடிகள் சொல்லிய ஒன்றை அப்படியே சொல்லுதல் உண்மையான தரப்பு அல்ல.  வாசிப்பின் வழியாக எழுதுவதன் வழியாக மெல்ல தொகுத்துக் கொள்ள முடிகிறது ஜெ. பயணத்தின் தொலைவு அதிகம் என்பதை உணர்கிறேன்.

எப்போதும்போல இந்தமுறையும் உங்கள் உரையே முதன்மையாக இவ்விழாவை மட்டுமல்ல, இந்த வருடத்தின் பயணத்தைத் தொகுத்துக் கொள்ளும் விதமாக அமைந்தது. இவ்வருடம் உங்களின் பெருங்கை என்ற சிறுகதையுடன் ஆரம்பித்தது. அதன் நீட்சியாக காதலின் கணங்களைச் சொல்லும் மலர்த்துளி தொகுப்பு. தொடர்ந்து சுவாரசியமான துப்பறியும் நாவலான ஆலம். ஓர் இனிமையின் எச்சமாக என்னைத் தொடரும் இச்சாமதி சிறுகதை என யாவற்றையும் தொகுத்துக் கொள்ளும் விதமான உரை. இக்கோட்டை அஜிதனின் ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும், போர்க் ரோஸ்ட், விஷால் ராஜாவின் திருவருட்செல்வி, கிரேஸ் இல்லம் சிறுகதை வரை நீட்டிக் கொள்ள முடிந்தது. சந்திரா தங்கராஜின் அறைக்குள் புகுந்த தனிமை, துயரமெனும் சிறுபுள்ளி, தீபு ஹரியின் மித்ரா ஆகிய சிறுகதையும் இந்த வரிசையில் வைக்கலாம்.

“ஏன் நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஒரு பேய்க்கதை இல்லை. காதல் கதைகள், துப்பறியும் கதைகள் எழுதப்படவில்லை” என்று நீங்கள் கேட்ட இடம் உச்சமானதாக அமைந்தது. “காமம், கள்ளம், வன்மம், குரூரம், மனித மனத்தின் கீழ்மைகள், வன்முறை” என யாவும் சலிக்க சலிக்க பேசப்பட்டு வந்த இலக்கியத்தின் வழியாக ஒரு தடித்த மனநிலை உருவாகிவிட்ட பரப்பின் முன் கேட்கப்பட்ட கேள்வியாகவே இதைப் பார்த்தேன்.

பெண் எழுத்து என்று ஆரம்பித்து ”பெண்மைத் தன்மை எழுத்து” என்று வந்தமைந்த தேடலின் இறுதியில் எப்பேசுபொருளாயினும் இலக்கியமாக, கலையாக ஆனதா என்ற  அளவுகோளைத் தவிர வேறு ஒன்றும் பொருட்டில்லை என்று மீள மீள அழுத்திச் சொல்லும் ஒரு குரலை அளித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அறைக்குள் புகுந்த தனிமை உள்ளிட்ட கதைகளை பிரசுரிக்கும் முன் தயங்கியதை சந்திரா அமர்வின் போது சொன்னபோது ஆச்சர்யமளிக்கவில்லை. பத்துவருடங்களுக்கு முன் அவர் எழுதியதை வசந்தகுமார், நீங்கள், தேவதச்சன் ஆகியோர் ஊக்கப்படுத்தியிருப்பதை கட்டுரைகள் வழியாகவே அறிந்து கொள்ள முடிந்தது. அதுபோன்ற பேசுபொருள் திரைப்படமாக பத்து வருடங்கள் ஆகியிருக்கிறது.

 

தீபுஹரிக்கும் அந்த தயக்கங்கள் இருப்பதை அமர்வு, தனிப்பேச்சுக்கள் வழியாக அறிய முடிந்தது. அவரின் மித்ரா கதை பல வழியில் உமா மகேஸ்வரியின் தொடர்ச்சியாகவே இருந்தது. கதையின் இறுதியில் தென்படும் பிறழ்வின் படிமங்கள் வழியாக இலக்கியத்தன்மையை அடையும் உமாவின் சிறுகதைகளின் நீட்சியாக பிறழ்வையே முழுமையாக பல அடுக்குகளில் சொல்லி அதற்கு இணையாக அறிவின் தேடலில் அவர் சமன் செய்வதைக் காண முடிந்தது. உமா ஒருவகையில் பிறழ்வின் அப்பட்டத்தையும், தீபுஹரி சற்று தயங்கி அறிவின் துணையைத் தேடுவதையும் காண முடிந்தது.

பா.ராகவனிடம் இந்த எழுத்தின் வழியாக உங்கள் தேடல் என்ன என்று கேட்டபோது “மனிதனின் அடிப்படை குணம் வன்முறை, குரூரம் தான். அதைப்பற்றிய தேடல் உள்ளது. அன்பு இயல்பானது அல்ல” என்றார். எனக்கு இவான் கார்த்திக்-கமலதேவி சட்டென நினைவுக்கு வந்தனர். இந்த முரண் இருந்து கொண்டே தான் உள்ளது. செவ்வியல் படைப்புகளில், செவ்வியல் இலக்கியவாதிகளில் இந்த முரண்களுக்கிடையே ஒரு சமநிலையைக் காண முடிகிறது.

ஆனால் நவீன இலக்கியத்தில் மனிதனின் கீழ்மைகளை விசாரணை செய்தவர்கள் அதிகமானோர். அத்தேடலில் வெளிவந்த இலக்கியத்தரம்வாய்ந்த படைப்புகளும் அதிகம். எளிமை, மென்மை, அன்பு, காதல், உணர்வு, உளநுட்பங்கள் சார்ந்த படைப்புகள் குறைவு அல்லது அது அடையச் சாத்தியமான உச்சத்தை அடைந்தவர்கள் குறைவு. இனி தயக்கமின்றி அவைகள் எழுந்து வருவதற்கான உரையாடலை தொடர்ச்சியாக எடுத்து வந்திருக்கிறீர்கள் ஜெ. சந்திரா தங்கராஜின் கதையைப் பற்றிய தேவதச்சனுடனான உங்கள் உரையாடலைப் படித்தபோது உணர்ச்சிவசமடைந்தேன்.

முதல் விஷ்ணுபுரம் விழா பரவசத்துடன் புதிய அறிதல், புதிய நண்பர்கள், பாசம், பிரிவு, ஏக்கம் என குழந்தைத்தனமாக சுற்றிக் கொண்டிருந்தேன். சென்ற விழாவின் இறுதியில் ஒரு வகையான அலைக்கழிதலும், நிறைய கேள்விகளுமே எஞ்சின. மூன்றாம் நாள் நீங்கள் இல்லாமல் அனைவரிலுமே ஒரு வெறுமை இருந்தது.  இவ்விழாவின் இறுதியில் சில பதில்களும், கேட்டுக் கொள்ளாத வினாக்களுக்கான பதிலும், செல்ல வேண்டிய பயணமும் செயல்களுமே கண்முன் நிற்கிறது. அனைத்திற்கும் நன்றி ஜெ.

விஷ்ணுபுரம் விழாவின் இறுதியில் ஆண்டு எப்போதும் நிறைவு பெறும். இம்முறை தற்செயலாக இரண்டாவது தத்துவ வகுப்பில் உங்களுடனான நீண்ட மூன்று நாட்களின் முடிவில் ஆண்டு நிறைவுறுவது நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. எதிர்வரும் ஆண்டுக்கான இனிய துவக்கமாக இதைவிடவும் வேறெது அமைந்துவிட முடியும் எனக்கு!

பிரேமையுடன்

ரம்யா

முந்தைய கட்டுரைஆயுர்வேத அறிமுக வகுப்புகள், அறிவிப்பு
அடுத்த கட்டுரைஆலயக்கலை, கடிதம்