சுந்தரவனம், வாசிப்பு

அன்பிற்குரிய ஜெ அவர்களுக்கு ,

விஷ்ணுபுரம் விழாவில் வெளியான ஒரு நாவலை சுடச் சுட வாங்கி படிக்க வேண்டுமென்றஆர்வம் என்னுள் தொற்றிக் கொண்டது . ஏற்கனவே சுஷில் குமாரின் சிறுகதைகளை படித்திருக்கிறேன், அதனால் 'சுந்தரவனம் ' நாவலை கையில் எடுத்தேன். இதோ என் வாசிப்பனுபவம் .

நான் இப்பொழுது எதை பற்றி எழுதப்போகிறேன் ? சுஷிலை பற்றியா ? இல்லை கதையின்கதை சொல்லி எம் சி முகுந்த் சித்திரன் பற்றியா ? அல்லது சுயம்பு லிங்க வைத்தியரை பற்றியா ?நான் ஏன் இப்படி அனுபவத்தை எழுதாமல் கேள்விகளையே கேட்டுக்கொண்டிருக்கிறேன் !ஏனென்றால் இந்நாவலின் கதை சொல்லி எம் .சி நம்மிடம் கேட்கும் கேள்விகள் ஏராளம்.

வானில் நீலமேக கூட்டங்கள் ஒன்றிணைவது போல கடைசி பக்கம் வரை வாசகர்கள்தங்களுக்குள் எழும் கேள்விகளுக்கு சிந்திப்பதின் மூலமே விடை கிடைக்கும். எ ம் . சி எதார்த்தஉலகத்தில் கால் ஊன்றியவாறு நமக்கு மாய லோகத்தை காட்டியுள்ளார். இதை மாய மந்திரக்கதை , உளவியல் சம்மந்தமான கதை அல்லது அறிவியல் கதை என்று பல பெட்டிகளில் aடைக்கலாம். சிவப்பு பெட்டி தானே இதில் உள்ள சுவாரஸ்யமான ஒரு விஷயம்.

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் என்று முன்னுரையின் முடிவில் தனது சுந்தரவனத்தின் முதல் அத்தியாயத்தை துவக்குகிறார் சுஷில் . மகாகவியின் வரிகளல்லவா, அதனால் சிறிது ஈர்ப்பு.எம் சி ஒரு எழுத்தாளன், ஆவணப்பட இயக்குனர் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர். சுயம்பு லிங்க வைத்தியர் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தனக்குள்ளும் தனது குடும்பத்திற்குள்ளும் நடக்கும் போராட்டமே இதன் மையம் . கதையின் முக்கிய அம்சம்

அதன் பூடகத்தன்மை. சிந்தனை செல்லும் வீச்சிற்கு கதையை நீட்டிச் செல்ல முடியும். ஓர் அல்லது இரு அமர்வில் முடிக்கக்கூடியது. ஆனால் சிறிது படித்து பின்பு சிந்தையில் ஊற வைத்து விட்டு அன்றாடத்திற்குள் நுழைந்தேன். ஒரு மணி நேர வாசிப்பிற்கு பின்பு பெருத்த இடைவேளையில் விரிந்தது கற்பனை மொட்டு. மின்னலை போல ஆங்காங்கே சில கவித்துவ வரிகளுக்குள் சுழன்ற இடங்களும் உண்டு.

இம்மண்ணில் ஒவ்வொரு ஜனனமும் ஓர் அதிசய நிகழ்வு. அந்த நிகழ்வை இம்மண்ணில்பதித்துச் சென்று விட ஒவ்வொரு உயிருக்கும் ஓர் போராட்டம் உண்டு. அந்த போராட்டத்தைவைத்தே நமது சுயத்தை நாம் கண்டுகொள்கிறோம்.

படிக்கப் படிக்க சக்ரவியூகத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளதை அறிவோம். மையத்தின் நடுவில்சென்ற பின் நாம் அபிமன்யுவா அல்லது அர்ஜுனனா என்ற முடிவு நம் கைகளில் உள்ளது.

நன்றிகள்

பவித்ரா சக்திவேல்

சுந்தரவனம் வாங்க

முந்தைய கட்டுரைபனிமனிதனின் தடம்
அடுத்த கட்டுரைஅரிசங்கர்