உளக்குவிப்பு, தியானப் பயிற்சி

நித்யசைதன்ய யதியின் Symphony of Values என்னும் புகழ்மிக்க கட்டுரை பின்னர் அவரால் ஓர் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது. அறிவியல், தத்துவம், கலைகள், இலக்கியம் ஆகியவற்றுடன் யோகம், தியானம் ஆகியவற்றை இணைத்துக்கொண்டு ஓர் ஒருங்கிணைந்த பயில்முறையாக நிகழ்வது அது. அதுவே இந்நூற்றாண்டுக்குரிய மெய்யியல்கல்வி என அவர் கருதினார்.

அதையொட்டியே இலக்கியம், தத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சார்ந்த பயிற்சிகளுடன் உளக்குவிப்பு, தியானப் பயிற்சியையும் இணைக்கிறோம். கூர்ந்து ஒன்றை செய்யமுடியவில்லை என்றால் இந்த துறைகள் எதிலும் மெய்யான கல்வி நிகழாது. கூர்ந்து ஈடுபடாவிட்டால் கற்பவை உதிரி அறிதல்களாக, துளித்துளிச்செய்திகளாக நினைவில் நீடிக்கும். அவை அறிவு அல்ல, வெறும் மூளைச்சுமை. ஓர் உதிரி அறிதல் இன்னொரு உதிரி அறிதலை மறுக்கும். ஓர் அறிதலை மற்ற உதிரி அறிதல்கள் இணைந்து மறிக்கும்.

ஒருங்கிணைந்த அறிதலின்மையின் விளைவாக வெறும் வாதத்தன்மை மட்டும் உருவாகும். அந்த இயல்பு மிக விளைவாக எதிர்மறை மனநிலையையும், இறுதியாக உளச்சோர்வையும் உருவாக்கும். அந்த உளச்சோர்வு இன்றைய தலைமுறையில் மிகப்பரவலாகக் காணக்கிடைக்கிறது. அதை தீர்த்துக்கொள்ளாமல் இலக்கியத்தை மட்டுமல்ல தொழில்சார் பயிற்சிகளையோ போட்டித்தேர்வுகளையோகூட எதிர்கொள்ள முடியாது.

கவனம்குவித்தலுக்கு தியானம் ஒரு முறையான வழி. அதற்குரிய முறையான பயிற்சியை இருபத்தைந்தாண்டுகள் அதில் அனுபவம் உடைய தில்லை செந்தில் பிரபு வழங்குகிறார். ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் ஜனவரி 5,6 மற்றும் 7 (வெள்ளி சனி ஞாயிறு)  தேதிகளில் அப்பயிற்சி நிகழும். ஆர்வமுள்ளோர் எழுதலாம்

[email protected]

முந்தைய கட்டுரைசுதந்திர சினிமா
அடுத்த கட்டுரைவிழா கடிதம், கடலூர் சீனு