தேன்நடனம்

(நடராஜ குரு நாராயண குருகுலத்தை தொடங்கி நூறாண்டு ஆனதை ஒட்டிய நூற்றாண்டு தொடக்கவிழா 20 ஆகஸ்ட் 2023ல் தொடங்கியது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார்.

23 டிசம்பர் 2023 அன்று வற்கலா நாராயண குருகுலத்தில் குருகுலத்தின் நூறாண்டு நிறைவு, நித்ய சைதன்ய யதி நூறாண்டு தொடக்கம் ஆகியவற்றுக்கான விழா நடைபெற்றது

அவ்விழாவின் தொடக்கநிகழ்வில் குருநித்யாவின் மாணவர்களான பீட்டர் மொரேஸ்,  எம்மா , ஆகியோருடன் நானும் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

என் உரையின் எழுத்துவடிவம்)

மேடையில் அமர்ந்திருக்கும் குருநாதர்களுக்கும் அவையில் அமர்ந்திருக்கும் பெரியோர்களுக்கும் வணக்கம்.

இந்த மேடையில் வேதாந்தம் சார்ந்தும் மெய்ஞானம் சார்ந்தும் நிறையவே பேசப்பட்டுவிட்டது. நான் ஓர் இலக்கியவாதியாக இங்கே நிற்கிறேன். இலக்கியவாதியாக நாராயண குருகுலம் பற்றியும் குரு நித்ய சைதன்ய யதி பற்றியும் நான் உணர்ந்தவற்றை மட்டுமே பேசவிருக்கிறேன். என் எல்லை அது. எந்த மேடையும் நான்கு எல்லைகள் கொண்டதே. அந்த எல்லையே அதன் வசதியும்கூட.

1923 ல் நடராஜ குரு ஊட்டி ஃபெர்ன்ஹில் பகுதியில் ஒரு முன்மாதிரி குருகுலப் பள்ளியை நிறுவும் எண்ணத்துடன் நாராயணகுருகுலம் என்னும் அமைப்பை உருவாக்கினார். சில மாதங்களுக்குப்பின் நித்ய சைதன்ய யதி 1924ல் பிறந்தார். நாம் குருகுலப்பிறப்பையும் குரு நித்யாவின் பிறப்பையும் இன்று கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

1920 கள் முதலுள்ள ஐந்தாண்டுக்காலம் இந்திய சிந்தனையில் மிகமிக முக்கியமானது. ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி 1920 ல் தொடங்கி அது சௌரிசௌரா வன்முறையில் முடிந்தமையால் ஒத்திவைத்தார். அது பெரும்சோர்வு ஒன்றை விடுதலைப்போரில் உருவாக்கியது. சுதந்திரவேகத்துடன் எழுந்த பலர் மெல்ல கலையிலக்கியம் நோக்கி திரும்பினர். இந்திய மொழிகளில் அவர்கள் புனைவிலக்கியங்களை எழுதினர். நாளிதழ்களையும் வார இதழ்களையும் மாத இதழ்களையும் வெளியிடலாயினர். இந்திய வட்டாரமொழிகளில் இலக்கிய மறுமலர்ச்சி அவ்வாறுதான் உருவானது.

1924 முதல் நவீன இலக்கியம் ஓர் அலையென இந்தியாவெங்கும் பரவியது. அதுவரை நமக்கிருந்த இலக்கியம் மரபார்ந்தது, அதன் உள்ளடக்கம் பக்தியும் நன்னெறியும். அது சான்றோர் பயில்வதற்குரியது. நவீன இலக்கியம் சமூகமாற்றம் என்னும் கனவை உள்ளடக்கமாகக் கொண்டது. அதன்பொருட்டு அது தனிமனிதர்களை நோக்கிப் பேசியது. மக்களை நோக்கிப் பேசியது.

காந்தி தன்னை தயாரித்துக்கொண்டிருந்தார். சேவாதள் என்னும் அமைப்பின் வழியாக பெருந்திரளாக தொண்டர்களை திரட்டி பயிற்சி அளித்தார். வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தி அதன் வழியாக சத்தியாக்கிரகப் போராட்டத்தின் நெறிகளை வகுத்தெடுத்தார். வைக்கம் போராட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவெங்கும் ஆலயநுழைவுப்போர் தொடங்கியது. விடுதலைப்போர் ஒரு மக்களியக்கமாக, சமூகமாற்றத்துக்கான இயக்கமாக உருமாறியது. அதில் இலக்கியம் பெரும்பங்கு வகித்தது.

அந்த காலகட்டத்தின் வீரியம் மிக்க விதைகளில் ஒன்று நாராயண குருகுலம். அதன் பங்களிப்பு என்ன? சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பரும் யோக ஆசிரியருமான சௌந்தர்ராஜன் ஹரித்வாரில் இந்திய தத்துவம் பயில்வதற்காகச் சென்றிருந்தார். அவர் சத்யானந்த யோக மையம் என்னும் பிகாரி அமைப்பைச் சேர்ந்தவர். அங்கே அவருக்குப் பாடநூல்களாக முன்வைக்கப்பட்டவற்றில் பெரும்பாலானவை நடராஜ குரு, நித்ய சைதன்ய யதி, முனி நாராயணப்பிரசாத் எழுதியவை.

இன்று குருகுல நூல் விற்பனையகத்தில் பலநூறு நூல்கள் உள்ளன. ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இந்திய மெய்ஞானம் பற்றிய எல்லா தலைப்புகளிலும் நூல்கள் உள்ளன. இவை ஒரு மாபெரும் அறிவியக்கமாக இன்று வெளிப்பட்டுள்ளன. இந்த மரத்தின் மலர்கள் இவை. இக்குருகுலத்தில் இருந்து கிளம்பியவர்கள் பலர். தத்துவ அறிஞர்கள், இலக்கியவாதிகள், துறவிகள். அவர்கள் இதன் கனிகள்.

அவையோரே, நாராயண குரு ஒரு கவிஞர். மலையாளத்தின் மிகச்சிறந்த கவிஞர் என குமாரன் ஆசான் சொல்லப்படுவதுண்டு. நான் நாராயணகுருவையும் சேர்த்துக்கொள்வேன். நாராயண குருவின் சமூகவியல் பங்களிப்பு முதல் ஆன்மிகப்பங்களிப்பு வரை விரிவாகப் பேசப்படுவதுண்டு. இணையாகவே சொல்லப்படவேண்டியது அவருடைய இலக்கியப் பங்களிப்பு. நான்கு தலைமுறைகளாக அவரிலிருந்து பெரும் படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். குமாரன் ஆசான், சி.வி.குஞ்ஞுராமன் முதல் தலைமுறை. எம்.கே.சானு, பி.கே.பாலகிருஷ்ணன், ஓ.வி.விஜயன் போன்றவர்கள் இரண்டாம் தலைமுறை. நான் மூன்றாம் தலைமுறை.

நாராயணகுருகுலத்தின் பங்களிப்பு அதுதான். தத்துவம், வேதாந்த மெய்ஞானம் பயில நூல்கள் பல உள்ளன. ஆனால் ஒருவர் இலக்கியரசனை கொண்டவர் என்றால் அவர் குரு நித்ய சைதன்ய யதியை கண்டடைவார். நான் மெய்யியல் தேடலுடன் பல ஆண்டுக்காலம் அலைந்தவன். துறவியாக அலைந்திருக்கிறேன். பிச்சை எடுத்திருக்கிறேன்.அப்போது சக பிச்சைக்காரராக இருந்த யோகி ராம்சுரத்குமாரை பல ஆண்டுகளுக்குப்பின் சந்தித்தேன். எனக்கு துறவிகள் மேல் ஒரு விலக்கம் வந்துவிட்டிருந்த காலம் அது. நான் சந்தித்த பலர் ஞானிகளே. ஆனால் எனக்குரியவர்கள் அல்ல. எனக்கு இலக்கியம் வழியாகவே ஞானம் வந்தமைய முடியும்.  யோகியிடம் நான் பல கேள்விகளைச் சீண்டலாகவே கேட்டேன். அதிலொரு கேள்வி “எனக்கு குரு அமைவாரா?” அவர் “என் தந்தை அருள்வார்… விரைவில்” என்றார்

சில மாதங்கள் கழித்து என் நண்பர் நிர்மால்யா (மணி) என்னை நித்ய சைதன்ய யதியிடம் அழைத்துச் சென்றார். நான் என் குருவை கண்டடைந்தேன். குரு நித்யாவிடம் நான் ஆன்மிகம் பேசியதில்லை. பேசியதெல்லாம் இலக்கியம் பற்றி மட்டுமே. அல்லது, நான் பேசிய ஆன்மிகமெல்லாம் இலக்கியம் வழியாகவே.

நான் டி.எஸ்.எலியட் பற்றி ஒரு கேள்வி கேட்டபோது டி.எஸ்.எலியட்டை படித்து நீண்டநாட்களாகியிருந்த நித்யா விடியற்காலையில் டார்ச் ஒளியில் நூலகத்தில் தேடி எலியட்டின் நூலை எடுப்பதை நான் அரைத்துயிலில் கண்டேன். அன்று மதியம் என்னிடம் அவர் டி.எஸ்.எலியட் பற்றிப் பேசினார். நான் நித்யாவிடம் எனக்கு யோகமுறைகளை கற்பிக்கும்படி கோரினேன். நித்யா என்னிடம் சொன்னார். “இலக்கியம் உன்னுடைய யோகம்…அது உன் தேவதை” என்று

தேவதை என்றல்ல, நன்றாக நினைவுள்ளது, பியாட்ரீஸ் என்று சொன்னார். தாந்தேயை நரகத்திலிருந்து சொற்கத்திற்கு அழைத்துச்செல்லும் தேவதை. அது எனக்கு இலக்கியம். அது என் யோகம். அதையே நான் பற்றிக்கொண்டேன்

அவையோரே, அந்தக் கனவையும் உள்ளடக்கி ஆன்மிகத்தை முன்வைப்பதனால்தான் நாராயண குருகுலம் தனித்துவம் கொண்டதாக உள்ளது. நடராஜ குரு ஒருங்கிணைந்த அறிவியல் (Iintegrated Science) என்றும் குரு நித்ய சைதன்ய யதி விழுமியங்களின் இசைக்கோலம் (Symphony of Values )என்றும் சொல்வது அதையே. கலைகளும் இலக்கியமும் தத்துவமும் மெய்யியலும் ஒன்றாகும் ஓர் இடம். ஞானமும் ஞானியும் ஒன்றேயாகும் ஒரு புள்ளி.

நித்யா எனக்கு முன்னரே இரண்டு தமிழ் கவிஞர்களை அழைத்து தன் கனவை அவர்களிடம் பகிர்ந்திருந்தார். அவர்களால் அதில் ஆர்வம்கொள்ள முடியவில்லை. ஆனால் நான் அதை என் வாழ்நாள் பணியாக எடுத்துக் கொண்டேன். இன்று அதை ஓர் இயக்கமாக வளர்த்துக்கொள்ளவும் அவர் அருளால் எனக்கு இயன்றுள்ளது. யோகமும், கலையும், இலக்கியமும், தத்துவமும் இணைந்து மெய்ஞானம் நோக்கி நகரும் ஒரு பயணம். அதை இந்த மேடையில் சொல்வதில் பெருமை கொள்கிறேன்,

அவையினரே, ஏன் கலைகளும் இலக்கியமும் தேவை? உண்மை, மெய்ஞானம் உயர்ந்தது. தத்துவமும் உயர்ந்ததே. அவை தலைபோல. விழிகள் போல. அவை மண்ணை அறிபவை, மண்ணை தொடுவதில்லை. வாழ்க்கை அவற்றுக்கு பேசுபொருள் மட்டுமே, வாழ்க்கையில் அவை ஊடாடுவதில்லை.

ஆனால் கலையிலக்கியம் ஒருபோதும் நேரடி வாழ்க்கையில் இருந்து வேறுபடுவதில்லை. ஆகவே காம குரோத மோகம் இலக்கியத்தின் பிரிக்கமுடியாத பகுதி. கலைஞனிலும் அவை என்றுமிருக்கும். இப்பிறவியில் எனக்கும் அவற்றிலிருந்து விடுதலை இல்லை.

தன் மகன் சுகப்பிரம்ம ரிஷியுடன் வியாசர் ஒர் ஆற்றைக் கடந்து சென்றார். சுகன் முதலில் ஆற்றை அடைந்தான். இளைஞனான அவனைக் கண்டு அரைநிர்வாணமாகக் குளித்த பெண்கள் உடலை மறைக்கவில்லை. அடுத்து முதியவரான வியாசர் ஆற்றை அடைந்தபோது அவர்கள் உடலை மறைத்துக்கொண்டார்கள்.

குழம்பிப்போன வியாசர் அதை கிருஷ்ணனிடம் கேட்டார். கிருஷ்ணன் சொன்னார். “அவன் யோகி. காமகுரோதமோகங்களை கடந்தவன். அவன் கண்களில் காமம் இல்லை. நீ கவிஞன். கவிஞனுக்கு காமகுரோதமோகங்களில் இருந்து விடுதலை இல்லை. உன் கண்களில் வேட்கை இருந்தது”

ஆனால் இலக்கியவாதியாக நான் முன்வைப்பதும் ஞானமே. மண்டயம் ஸ்ரீனிவாஸ் என்னும் ஆஸ்திரேலிய உயிரியலாளரின் ஆய்வு தேனீக்களைப் பற்றியது. ஒரு தேனீக்கூட்டில் இருந்து ஒற்றர்த்தேனீக்கள் தனித்தனியாக நான்குபக்கமும் செல்கின்றன. தேன் இருக்குமிடத்தை கண்டடைகின்றன. திரும்ப வருகின்றன. கூடுவந்து சேர்ந்து தேன் இருக்கும் இடத்தின் திசை, தேனின் அளவு, காற்றின் விசை உட்பட எல்லா செய்திகளையும் பிற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் தேனீக்கள் படையாகக் கிளம்பிச் செல்கின்றன

அவையோரே, தேனீ அந்தச்செய்திகளை மொழியாக தெரிவிப்பதில்லை. நடனமாகத் தெரிவிக்கிறது. அத்தனை சிக்கலான, நுட்பமான நடனம் அது. அத்தனை முடிவின்மை கொண்டது. கலைஞர்களும் தேனீக்கள்தான். தேன் இருக்குமிடம் தெரியும். செல்லும் வழியும் தெரியும். அதை ஒரு நடனமாகவே எங்களால் வெளிப்படுத்த முடியும்

நன்றி

முந்தைய கட்டுரைஎம்.பி.டி.ஆச்சாரியா
அடுத்த கட்டுரைஆயுர்வேத அறிமுக வகுப்புகள், அறிவிப்பு