விழா நினைவுகள் – சாந்தி சாந்தமூர்த்தி

அன்புள்ள ஆசிரியர் ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம். நான் சாந்தி சாந்தமூர்த்தி.இது என் முதல் கடிதம். விஷ்ணுபுர விருது விழாவுக்கு நான் முதல் முறையாக வந்தேன். மூன்று வருடங்களுக்கு  முன்னால் வந்திருந்தால் அது என் கணவருக்கு துணையாக, உதவியாக மட்டுமே வந்ததாக இருந்திருக்கும். ஆனால் இப்போது நான் ஒரு வாசகி. விழாவுக்கு வந்த பிறகுதான் நான் எதை எதை இழந்திருக்கிறேன் என்றும் புரிகிறது.

கொஞ்சம் நேரத்தைக்கூட வீணாக்காமல், அர்த்தமற்ற அரட்டைகள் இல்லாமல் கட்டுக்கோப்பாக விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இரண்டு நாட்கள் தொடர்ந்து உட்கார்ந்தே இருக்க வேண்டுமே நம்மால் முடியுமா, கால் வீங்கி விடும், தூக்கம் கண்ணை சுழட்டும் என்றெல்லாம் பயந்து கொண்டிருந்தேன். ஆனால் உரையாடல்கள் நன்றாக இருந்தன. கூர்ந்து கவனித்து ரசித்தேன். இரண்டு தடவை மட்டும் கொஞ்சம் கண் அயர்ந்தேன்.

அர்வின்குமார் இவ்வளவு சின்ன வயதிலேயே பகழ் பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது. பா.ராகவன், யுவன் சந்திரசேகர் அமர்வுகள் சுவாரசியமாக இருந்தன. என்னை ரொம்ப கவர்ந்தது தீபுவின் உரையாடல். இயல்பாக, கணக்கு பார்க்காமல்  யாராவது ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்று தடுமாறாமல் நினைத்ததை அப்படியே வெளிப்படையாக சொன்னார். கம்பீரமான அழகு.

நான் எதிர்பார்க்காத அளவுக்கு நிறைய பெண்கள் விழாவுக்கு வந்திருந்தனர். சின்ன வயசு பெண்கள்தான் ஏராளம். என்னுடையதுதான் வீணாய்ப் போன தலைமுறை என்று தோன்றியது. முதியவர்கள் மிகக் குறைவு. பொதுவாக பெண்கள் கோயிலுக்கு போவதற்குக் கூட ஆடம்பரமாக உடையணிந்து வருவார்கள். விழாவில் பெரும்பாலும் எளிமையாகவே தோன்றினர்.

திடீரென்று என் கணவர்,”அழகுநிலா வந்துருக்கு பார். சால்வை போத்துது”என்றார். “பச்சை பெல்ட் கதை எழுதுன பொண்ணா?’’ என்று மகிழ்ச்சியுடன் கேட்டேன். பின்பு இடைவேளையில்  அவரை சந்தித்து பேசினோம். என் மாமனாரின் சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்த பச்சை பெல்ட் இன்னும் வீட்டில் இருக்கிறது. எங்கள் பகுதியில் அதற்கு விசேஷ மதிப்பு உண்டு.

ஒரு நிகழ்ச்சி தொடங்குவதற்கு  முன்பே வந்து அமர்ந்திருந்தோம்.  திடீரென்று ஒரு குரல்.

”இவரை உங்களுக்குத் தெரியுதா, பாருங்க. உங்க ஊருதான்.”

பார்த்தால் நீங்கள் ஒரு பையனுடன். சட்டென்று எழுந்து நின்றோம்.

“மன்னார்குடியிலேருந்து நான் மட்டுந்தான் வந்துருக்கேன்னார். இல்லை,இன்னும் ரெண்டு பேரு வந்துருக்காங்கன்னேன். அப்படியான்னார். உடனே அழைச்சிட்டு வந்தேன். “

”தம்பி,நீங்க மன்னார்குடியா? எந்த தெரு?”

“பிருந்தாவன் நகர். நீங்க?”

“பக்கத்து தெருவுதான். திருமஞ்சனவீதி”

உடனே நீங்கள் இரண்டு பேர் எந்த ஊர்,எந்த தெரு,டோர் நம்பர் எல்லாம் விசாரித்த பின் கடைசியில் அவர்கள் அப்பா,மகன் என்று கண்டு மகிழும் ஜோக்கை  சொல்லி சிரிக்க வைத்தீர்கள்.

ஒரு ஞானியின் நிமிர்வும்,நிதானமும் ஒரு சிறுவனின் உற்சாகமும் கலந்த விநோத கலவை. இவ்வளவு அமளியிலும் நம் மூன்று பேருக்காக மட்டுமே அவர் நேரம் ஒதுக்கி நடத்திய பிரத்யேகமான சின்ன திருவிளையாடல் என்று என் கணவர் பின்னரும் சொல்லி வியந்து கொண்டேயிருந்தார்.

இடைவேளைகளில் நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேகர்,அருண்மொழி, பாவண்ணன்,சாம்ராஜ், சுரேஷ் ப்ரதீப்,சுபத்ரா,ரம்யா என்று நிறைய பேருடன் சில வார்த்தைகள் பேசினோம். தம்பி சக்திவேல் விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அஜிதன் –தன்யா ஜோடியை வாழ்த்தினோம். என் கணவர் மேலும் பலரை சந்தித்தார். இன்னும் நிறைய பேருடன் பேசவேயில்லை என்று சொன்னார்.

யுவன் சந்திரசேகர் பற்றிய ஆவணப்படம் அற்புதமாக இருந்தது. சிரிக்க மட்டுமல்ல , சீரியசான இடங்களும் அதில் உண்டு. கம்ப்யூட்டரில் சிக்கல் வந்து எழுதியவை அழிந்த போதும், பின்பு சரியானபோதும் அவர் துடித்து கண்ணீர் மல்கியது  மறக்க முடியாத இடம். என் வீட்டிலும் அந்த காட்சிகளைப் பார்த்திருக்கிறேன்.ஆவணப்படம் முழுவதும் என் கணவர் கண்ணீர் சிந்திக் கொண்டும் கச்சிப்பால் கண்களை துடைத்துக்கொண்டுமே இருந்தார். நல்லவேளையாக அரங்கத்தில் வெளிச்சம் இல்லை. ஸ்ட்ரோக் வந்த பிறகு மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்.

இப்படிப்பட்டவர் நிகழ்ச்சிகளின் வேறு ஒரு கட்டத்தில் என்ன செய்யப்போகிறாரோ என்று பயந்துகொண்டே இருந்தேன். உடைந்து விடுவார் என்றே நினைத்தேன். அவர் “ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” என்ற புத்தகத்தை மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே எழுதி முடித்துவிட்டார். விஷ்ணுபுர விருதுவழங்கும் விழாவில் நீங்கள் அதை வெளியிட வேண்டும் என்று ஆவலோடு இருந்தார். சென்னைமழை வெள்ளம் போன்ற பல காரணங்களால் அது தள்ளிப்போய் விட்டது. அதில் அவருக்கு ரொம்ப வருத்தம்.

விழாவின் முதல் நாள் மாலை புதிய நூல்களின் வெளியீடு நடந்தது. அப்போது நான் இவரை ஓரக்கண்ணால் பயத்தோடு கவனித்துக்கொண்டே இருந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. அவர் பாட்டுக்கு சாதாரணமாக கைதட்டிக் கொண்டிருந்தார். எனக்கு நிம்மதி வந்தது. ஏனோ கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது.

விழா நிர்வாகத்தின் நேர்த்தி, ஒழுங்கு,சுவையான உணவு,புதிய நண்பர்களின் அறிமுகம், தொடர்ந்து இலக்கியத்தில் திளைத்திருத்தல் போன்ற பல காரணங்கள் விஷ்ணுபுர விழாவை எதிர் நோக்கி ஏங்க வைக்கின்றன.

நன்றி.

சாந்தி சாந்தமூர்த்தி,

மன்னார்குடி

புகைப்படங்கள் அறிவழகன்

முந்தைய கட்டுரைஎரியாடல்
அடுத்த கட்டுரைA Fine Thread and Other Stories