நுண்ணுயிர்களின் ஆடல் – கடிதம்

அன்புள்ள ஜெ

நரேன் மொழியாக்கம் செய்த கிருமி கதைகள் வாசித்தேன். இவை பெருந்தொற்றுக் காலகட்ட நினைவுகளை எழுப்பும் கதைகள். பெருந்தொற்றுக் காலககட்டம் இப்போது ஒரு பழைய நினைவாக ஆகிவிட்டது. அன்றைய பயங்களை எல்லாம் இப்போது கொஞ்சம் விலகி நின்று பார்க்கமுடிகிறது. அவற்றை ஒரு வகையான நுணுக்கமான அனுபவமாக ஆக்கிக்கொள்ள முடிகிறது. அந்த அனுபவங்களை மேலும் நுட்பமாக ஆக்கும் கதைகள் இவை. நரேன் எளிதில் வாசிக்கும் நடையில் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆகவே ஒரே மூச்சில் வாசித்தேன்.

கனவுக் காய்ச்சல் – ரே பிராட்பரி ஒரு விசித்திரமான கதை. உடலை கிருமிகள் தாக்குவது உயிரியல் உண்மை. உடலில் உள்ள செல்களை அவை இடமாற்றம் செய்து அந்த உடலே ஆக மாறினால் என்ன ஆகும்? ஓர் உடலே கிருமியாலானதாக ஆகிவிடும். அதீதக் கற்பனை. ஆனால் திகைக்கவைப்பது.

எனக்கு உங்கள் உடையாள் நாவல் ஞாபகம் வந்தது. அதில் பாக்டீரியாக்கள் இதேபோல செல்களாக இணைந்து மனிதர்களின் உடலை நகல்செய்து உடல்களை உருவாக்கி ஓர் உலகமே உருவாகி வந்துவிடுகிறது. ஆனால் இந்தக்கதையிலுள்ள eeriness அதில் இல்லை. அது ஒரு கவித்துவமான கற்பனை.

உடையாள் நாவல் குழந்தைக்கதையாக எழுதப்பட்டதாலேயே அதிலுள்ள அந்த பெரிய கவித்துவ தரிசனம் பலரால் கவனிக்கப்படாமலேயே ஆகியது. அது சக்தியாக,பிரபஞ்சப்படைப்புசக்தியான தேவியாக ஒரு குழந்தை மாறுவது பற்றிய கதை. ஒரு பேரன்னை உருவாவது பற்றிய கதை. அந்தக் கதையின் அற்புதமான அறிவியல் ஊகங்களும் பரவலாக புரிந்துகொள்ளப்படவில்லை. ஆனால் அடுத்த தலைமுறை வாசகர்களால் அதை வாசிக்கமுடியுமென நினைக்கிறேன்.

வெண்முரசு வாசிப்புக்குப்பின் ஒரு நீண்ட இடைவெளி. எதுவும் வாசிக்கவில்லை. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கிறேன்

சாரங்கன்
கிருமி கதைகள் வாங்க

உடையாள் வாங்க

விசும்பு வாங்க

முந்தைய கட்டுரைஒளியின் வழி, கடிதம்
அடுத்த கட்டுரைரமணிகுளம், வாசிப்பு- எம்.முத்துக்குமார்