வணக்கம்.
முதன்முறையாக விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன். முதல் நாள் காலையில் இருந்து கலந்து கொள்ள வேண்டுமென அருகிருக்கும் ஹோட்டலில் அறை எடுத்திருந்தேன். ஆச்சரியமாக காலை உணவருந்தும் இடத்தில் விழா நாயகரும், பா.ரா, மலேசியாவில் இருந்து வந்திருந்த எழுத்தாளர் ஷாகீர், இதழாளர் கனலி விக்னேஷ்வரன் இருந்தனர். அப்போதே விழா தொடங்கியதாக எண்ணிக் கொண்டேன்.
பின் இராஜஸ்தானி சங் முன்பு வந்து சில நிமிடங்கள் நின்று அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தேன். ஒரு பெரிய தேன் கூட்டில் தேனீக்கள் மகரந்தம் சேர்ப்பதாக தோன்றியது. ஒருவர் இன்னொருவருடன் பேசி சிரித்து மகிழ்ந்து சந்தோஷத்தில் ததும்பி கொண்டு இருப்பதாகப்பட்டது.
பின் அரங்கிற்க்குள் நுழைந்து அமர்ந்து கொண்டேன். முதற் கூடுகை சிறப்பாக நடைப்பெற்றது. நான் எந்த முன்தயாரிப்பும் செய்து கொள்ளவில்லை ஆகவே கேள்வி கேட்கவில்லை.
இடைவெளியில் கைப்பேசி எடுத்து எக்ஸ் தளத்தை பார்த்தால் மொழிபெயர்ப்பாளர் ஐஸ்வர்யா அதற்க்குள் நிகழ்வை சுருக்கமாக மொழிப்பெயர்த்திருந்தார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு என நினைத்து கொண்டேன். அவர்கள் நேரலை வரும்வரை நிகழ்வை எக்ஸ் தளத்தில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொண்டு இருந்தார்கள்.
அடுத்து கனலி விக்னேஷ்வரன் நிகழ்விற்காக மேடையேறிய போது அவரை காலையில் பார்த்தவர் என அடையாளம் தெரிந்தது. ஒரு இதழாளரின் பொறுப்பும் சங்கடங்களும் அவர் பேச்சில் தெரிந்தது.
அடுத்து இல. சுபத்ரா மற்றும் லதா அருணாச்சலம் அவர்களின் அமர்வும் சிறப்பாக இருந்தது. மொழிபெயர்ப்பின் கடினங்களும், கதை தேர்ந்தெடுக்க மெனக்கெடுதல் என பல குறிப்பிட்டாலும் திருமதி இல.சுபத்ரா குறிப்பிட்டது போல கலையிலக்கிய படைப்பிலக்கிய கவனமுள்ளவரை அறிவியல், தொழில்நுட்பமென சிறக்கொடிக்கும் பெற்றோர். ஒரு தகப்பனாக என்னை அத்தராசில் வைத்து பார்த்து கொள்கிறேன்.
மதிய உணவு சிறப்பாக இருந்தது. உணவுண்டு அரங்கிற்குள் வருவதற்கு சற்றே பிந்தியதால் தீபுஹரியின் பேச்சை சற்று நேரம் நின்று கொண்டும் பின் இருக்கைகள் எடுத்திட்டு அமர்ந்து கேட்டோம். என்ன ஒரு குரல்! கவிஞர் மறுப்பேதும் சொல்லவியலாதப்படி பதில் சொல்லி கொண்டு இருந்தார். சிறப்பு.
அடுத்து வாசு.முருகவேல் அமர்வும் சிறப்பாக ஒருக்கிணைக்கப்பட்டது. அவர் கவனமாகவும் சொல்ல வேண்டியவற்றை சொன்னதாகவும் பட்டது.
அடுத்து பா.ரா அவர்களின் அரங்கு அவரின் அபுனைவு புத்தகங்களும், யதி நாவல் மட்டுமே படித்திருந்தேன். ஆனால் அவரின் தளம் உங்கள் தளத்தில் அறிமுகம் ஆகியிருந்தமையால் அவ்வப்போது அதில் படிப்பதுமுண்டு. அவர் தரங்கம்பாடியிலுள்ள முதல் அச்சு இயந்திரத்தின் அருகிலுள்ள புகைப்படம் அவரை மேலும் அணுக்கமானவராக உணர்த்தியிருந்தது. மொத்த அரங்கமும் அவர் பேச்சில் சிரித்தும், சிந்தித்தும் கட்டுண்டுருந்தது.
இரவுணவு முடிந்து க்விஸ் போட்டிக்கு இத்தனை பேர் வருவார்கள் என நினைத்ததில்லை. கேள்விகள் ஒவ்வொன்றும் தரமானவை எனக்கு முன்று கேள்விக்கு மட்டுமே பதில் தெரிந்திருந்தது.
இரவு எங்கு செயற்குழு கூடும் என்பது தெரியதாதையால் மீண்டும் அறைக்கு சென்று விட்டேன். அறையில் எக்ஸ் தளத்தில் அஜி இரவு கச்சேரி என பதிவிட்ட பொழுது அதை தவறவிட்டது தெரிந்தது.
காலையில் அரங்கிற்கு கிளம்பி வரும்பொழுது இரு இளைஞர்கள் லிப்டில் இணைந்து வந்தனர். யாராக இருக்குமென யோசித்து கொண்டே சாலையில் வரும்பொழுது எழுத்தாளர் பாவண்ணன் எதிர்ப்பட்டு அவரில் ஒருவரை தழுவி நலம் விசாரித்தார் அப்போது அவர் இவர்தான் அர்வின்குமார் முதலரங்கு இவரோடது என்றார். சற்று நேரம் பிந்தி தெரிந்தது உடன் வந்தவர் ம.நவீன் என்று.
உண்மையில் எதற்கு வெளிநாட்டு தமிழ் எழுத்தாளர் கூடுகை என்று யோசித்து இருந்தேன். முதலரங்கில் அர்வின்குமார் ஒரு புள்ளி தொட்டு பேசி கொண்டு இருந்தார். நானும் அவர் குறிப்பிட்ட சரவா இனக்குழுவினருடன் பணிபுரிந்திருந்திருக்கிறேன். அதே போல் பினாங்கிலுள்ள மலேஷிய தமிழர், மற்ற மலேசிய மற்றும் இந்தோனேசியர்களுடனும். அதை தொட்டு அவர் பேசிய பொழுது பொதுபுரிதலுள்ள எனக்கு அதன் மற்ற நுண்விவரங்களும் விவரணைகளும் தெரிய ஆரம்பித்தது. அவ்வகையில் அந்த அரங்கின் முக்கியத்துவம் புலப்படலாயிற்று.
மிக முக்கியமானது அதன் பின்னான அரங்கில் அர்வின்குமார் மட்டுறுத்த திரு.ஷாகிர் அவர்களுடனான அரங்கு. பெரிய எதிர்ப்பார்ப்பில்லாமல் தான் இருந்தேன். ஆனால் முடியும் போது ஒரு திறப்பு ஏற்ப்பட்டு இருந்தது. பழைய மலாயாவில் இருந்த தளர்வும் அனுக்கமும் இப்போது இல்லாதிருப்பது குறித்த உரையாடல் முக்கியமானதாகப்பட்டது.
இது இங்கு நம் நாட்டில் உள்ள சூழ்நிலை குறித்து பக்கம் பக்கமாக நீங்கள் எழுதி இருந்தும் நான் வாசித்திருந்தும் அதில் மனம் ஒரு விலகல் அல்லது எதிர்ப்பு இருந்ததாக இப்போதுபடுகிறது. ஆனால் அந்நாட்டிலுள்ள பெரும்பான்மையின் மனதுடன் சிறுபான்மையினர் நேரடியா உசாவி தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது ஒரு பார்வையாளனாக சட்டென்று ஒன்று திறந்து கொண்டது. ஆம், அதை அவ்வளவே சொல்ல முடிகிறது.
பின் நிகழ்வு உச்சநிலை அடைந்திருந்தது. திரு. இராமசந்திர குஹா அவர்கள் கலந்துரையாடல் திரு.சுனில் திற்மபட மட்டுறுத்தினார்.
கவிஞர். அனந்த்குமாரின் இயக்கிய திரு. யுவன் சந்திரசேகர் அவர்களின் ஆவணப்படம் எத்தனை இயல்பாக படம் ஆகி இருந்தார். அங்கு விழாவில் பார்த்தப்பின்பு வீட்டிற்கு வந்து ஒரு முறை பார்த்துவிட்டேன். சிறப்பாக இருக்கிறது.
அதன்பின் விழா சிறப்புற நடைப்பெற்றதை பார்த்து கொண்டிருந்தேன்.
இதை ஏற்பாடு செய்த விஷ்ணுபுரம் விழாக்குழுவினருக்கும், தாங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இப்படிக்கு,
கார்த்திக் குமார்.