விழா- இரா. மகேஷ்

பேரன்பிற்குறிய ஜெ,

விஷ்ணுபுரம் விருது விழா சிறப்பாக நடந்தது என்று என் பங்கிற்கு நானும் சொல்ல வேண்டுமா என்ற எண்ணம் எழுந்த போது, ஆகச் சிறந்த நிகழ்வாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாகவும் மிகச் சிறப்பாகவும் நடைபெற்றதை நேரடியாக இரண்டு நாட்கள் கண்டு திளைத்து மீண்ட போது அகம் அடைந்த நிறைவை நிச்சயம் நான் உணர்ந்தவாரே உங்களுடன் பகிர வேண்டும் எனத் தோன்றியது. விளைவு இக்கடிதம் என் உள நிறைவின் வெளிப்பாடாக.

இது நான் பங்குபெறும் மூன்றாவது விழா, நண்பர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சூழலில் இருந்து இந்த இடத்தை தங்கள் வாழ்வில் வந்தடைந்துள்ளனர், என் முதல் வருகை இங்கு அமைந்தது உங்கள் மூலமாக. உங்களை முதன்முதலில் சந்தித்த தருணத்தில் நேரடியாக விஷ்ணுபுரம் விழாவிற்கு அழைக்கப் பட்டு இவ்விடத்தை வந்து அடைந்ததை என்னும் போது பேருவகை கொள்கிறேன்.

ஒவ்வோர் ஆண்டும் பல கற்றல் அனுபவம், வெவ்வேறு துறைகளில் இருந்து புதிய நண்பர்களின் அறிமுகங்கள், இளம் எழுத்தாளர்களுடனான நட்பு, மூத்த எழுத்தாளர்களுடனான அனுபவப் பகிர்வு, கலை, இலக்கியம் சார்ந்த ஆக்கபூர்வமான விவாதங்கள், பேராற்றலில் திளைத்தல், குக்கூ-தன்னறம், துவம், நித்திலம், நூர்பு, அதுலம் நண்பர்கள், வெவ்வேறு பதிப்பகங்களின் எண்ணற்ற கிளாசிக் நூல்களின் விற்பனை என இந்த ஆண்டும் பட்டியல் நீண்டது. (இந்த ஆண்டு குறிப்பாக அஜியின் வெட்கம் கலந்த காதல் வெளிப்பாட்டு தருணங்கள் பேரழகு).

விழா தொடங்கிய நாளாக நான் எண்ணுவது 16 டிசம்பர் அல்ல, பல மாதம் முன்பாகவே யுவன் தான் இந்த ஆண்டிற்கான நாயகன் என்று முடிவு செய்யப்பட்ட தருணம் தொடங்கி தளத்தில் அதன் செய்தி  அறிவிக்கப்பட்ட கணம் முதல்.

விழாவிற்கான ஒருங்கிணைப்பு பணி, இடையூறின்றி நிகழ்வு நடப்பதற்கான ஏற்பாடுகள், தேவைப்பட்டால் மாற்று ஏற்பாடுகள்,  எப்போதும் போல் அமர்வுகளின் நேரம் தவறாமை, நேர்மறை எண்ணங்கள் மட்டுமே அளிக்கும் நண்பர்கள். மிகவும் ரசிக்க வைத்த யுவனின் குறும்பான உடல் அசைவு மொழி, கபடமற்ற உளமார்ந்த சிரிப்பு, உங்கள் இருவருக்கும் இடையேயான அணுக்கமான நட்பு.

குறிப்பாக யுவனின் இலக்கியப் பயணத்தை விவரமாக சித்தரித்த ஆனந்த் குமார் அண்ணன் மற்றும் குழுவினரினரால் பதிவு செய்யப்பட்ட ஆவணப்படம் ஆகச் சிறந்த படைப்பாக இருந்தது.

நிகழ்வின் உச்சமாக மொத்த அரங்கும் நிறைந்த கணம் பெருந்திரளான மனங்களின் செயலாற்றல் பன்மடங்கு பெருகி பேராற்றலாக மாற்றம் கொண்டு சிறு துளிகளின் செயல்கள் கூடி பெருகி ஒன்றிணைந்து பெரு வெள்ளமாக மாறி பெருஞ்செயல்களின் எழுச்சியாக நாம் எல்லோரும் சங்கமித்த தருணத்தை நினைவு கூர்ந்து பேரானந்தத்தை நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

இக்கணப்பொழுதில், சம காலத்தில் வாழும் இரண்டு ஆளுமைகளை நினைவு கூற விரும்புகிறேன், பெருஞ்செயல்களில் ஒப்பற்ற ஈடுபாடுடன் தன்னை முழுதளித்துப் பறக்கும் – சிருஷ்டி சம்மான் விருது பெறும் பேரன்பிற்குறிய குக்கூ சிவராஜ் அண்ணன், மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அயராது தன் பங்களிப்பை சேர்க்கும் – சாகித்ய அகாதெமி விருது பெறும் பெருமதிப்பிற்குறிய தேவிபாரதி அய்யா, இருவருக்கும் என் அளவு கடந்த பிரியமும் பிரார்த்தனைகளையும் முன் வைத்து சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பேரன்புடன்,

இரா. மகேஷ்

முந்தைய கட்டுரைவாசிப்புப் பயிற்சியும் வகுப்புகளும்
அடுத்த கட்டுரைஆணல்ட் சதாசிவம் பிள்ளை