பிரபந்த வகுப்பு, கடிதம்

நம் நாஞ்சில்நாட்டுப் பகுதியில் பாசுரங்கள் காதில் விழுதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை எனக்கு. மாதமொருமுறை திருக்குறுக்குடி  திவ்யதேசம் செல்வேன். பக்தியையும் தமிழின் அழகும் தாண்டி பாசுரங்களில் ஏதோ இருப்பதாகவேத் தோன்றும். தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் ஆலயத்தில்,

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி  தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே

புள்ளைக் கடாகின்ற ஆற்றைக்  காணீர்   என்சொல்லிச்  சொல்லுகேன்  அன்னைமீர்காள்,

வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும்,

பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும்  அறா  திருப்பேரெயில் சேர்வன் நானே!”

என்பதைக் கேட்டதிலிருந்தே பாசுரங்களின் மீது ஆர்வம் வந்தது. ஆனால் அவ்வேளையில் பாசுரங்களின் அர்த்தம், அது இட்டுச் செல்லும் இடம் பற்றி பெரிய அளவில் புரியவில்லை.

ஆனால் இம்மூன்று நாட்களில் ராஜகோபாலன் அவர்களின் வகுப்புகள் பாசுரங்களைப் புரிந்து கொள்வதில் புதிய வழிமுறைகலைக் காட்டின. தத்துவச் செறிவுடன் கூடிய எளிமையான விளக்கம், துணைத்தகவல்கள், கருத்துப் பரிமாற்றம் என சிறப்பாக  நடத்தினார். மேலும், அதிகம் கேள்விப்பட்டிராத பாசுரங்களின் தொகுப்பினைப் பாடத்திட்டத்தில் வைத்திருந்தார், அதுவே அனைவருக்கும் ஓர் ஆர்வத்தினைத் தூண்டியது. எவ்வித குறிப்பும் இல்லாமல் மாலோலன் அவர்கள் பாசுரங்களை அதற்குரிய முறையில் பாடியதும் சிறப்பு.

வழக்கம்போலவே நித்யவனத்தின் ரம்யமும் தனிமையும் பாசுரங்களில் லயிப்பதற்கு உதவியது. வைணவத்தின் பால் ஈடுபாடு இல்லாதோருக்கும்  பயனளிக்கும் நிகழ்வு இது,

ஈடுபாடுடைய என்போன்றோருக்கு மிகச்சிறந்த அனுபவம்.  உங்களுக்கும், ராஜகோபாலன், மாலோலன், அந்தியூர் மணி ஆகியோருக்கும் நன்றிகள்  பல. ஆலயக்கலை வகுப்பின் அறிவிப்பிற்காகக் காத்திருக்கிறேன்.

 

அன்புடன்,

Bala. R

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலமாயிருக்கிறீர்களா ?

டிசெம்பர் 8,9,10 ஈரோடு வெள்ளிமலையில் பிரபந்த வகுப்பு மற்றும் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டேன். நண்பர் ஜா.ராஜகோபாலனின் அளப்பரிய உழைப்பு தெளிவாகத் தெரிந்தது.

பிரபந்தத்தில் ஓரளவு பயிற்சி உடையவன் என்பதாலும், உபன்யா மரபில் வந்துள்ளதாலும்  என்னால் ஒரு விஷயத்தை உறுதியாகக் கூற முடியும். ஜாஜா நடத்திய பயிற்சிப் பட்டறை புதுமையானது. முன்முடிவுகள் எதுவும் இன்றி ஒரு இலக்கிய வாசகன் பிரபந்தத்திற்குள் நுழைய இந்தப் பட்டறை பெரியும் உதவும் என்று உறுதியாகக் கூறமுடியும்.

பட்டறையின் அமைப்பு சுவையானது. பெரிய சிந்தனையின் விளைவு என்பது புலனாகிறது.

முதலில் தத்துவம் பற்றிய பார்வை. அது சித்தாந்தமாக மாறும் தருணம். அத்வைத, விசிஷ்டாத்வைத சிந்தனை மரபுகள். பிரும்மம் பற்றிய பார்வைகள். பிரும்மம் பற்றி சைவ, வைணவப் பார்வைகள். அதன் பின்னர் வைணவத்தில் உள்ள தெய்வ நிலைகள். பரமபதம் முதற்கொண்டு அரச்சை வரையிலான பார்வைகள் என்று நல்ல துவக்கத்துடன் ஆரம்பமானது பட்டறை.

தொடர்ந்த நிகழ்வுகளில் சித்தாந்தத்தின் தொடர்புகள் ஆழ்வார் பாசுரங்களில் எவ்வாறு காட்டப்படுகின்றன என்பதைக் காட்டிச் சென்றது பட்டறை பங்கேற்பாளர்கள் தத்துவத்தில் இருந்து விடுபடாமல் இருக்க உதவியது.

தத்துவத்துடனான தொடர்பை மட்டும் காட்டாமல், பாசுரங்களில் உள்ள கவிதைத் தன்மையைச் சுட்டியதும் பங்கேற்பாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

நிகழ்ச்சிக்கு மேலும் சுவை ஊட்டிய நிகழ்வுகளில் முதன்மையானது, தற்காலத்தில் புழக்கத்தில் உள்ள சில பண்பாட்டுச் செயல்பாடுகள் பாசுரங்களில் எவ்வாறு காட்டப்பட்டுள்ளன என்பதை ஜாஜா சுட்டிய விதம்.

சைவத்தின் பார்வையாகப் பேராசிரியர் திருநாவுக்கரசு அவர்கள் அவ்வப்போது தொடர்ந்து சொல்லிவந்தது பக்தி இயக்கத்தில் உள்ள ஒற்றுமையைப் பறைசாற்றியது. மாலை உணவுக்குப் பின் நடைபெற்ற கலந்துரையாடலில் வைணவத்தின் பிரிவுகள் மற்றும் அதன் தத்துவார்த்தப் பின்புலம், அவை தற்காலத்தில் உள்ள நிலைமை, ஆசார்ய பரம்பரை குறித்து உடையாடும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. இது குறித்து என்னிடம் கேள்வி எழுப்பியவர்கள், அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருந்தது மனதிற்கு நிறைவளித்தது.

ஒரு பாசுரத்தைப் பார்க்கும் போது, அது தொடர்பாகப் பிறிதொரு ஆழ்வாரின் பாசுர வரிகளைச் சுட்டிச் சில முறைகள் குறுக்கிட்டேன் என்றாலும், ஜாஜா அதை ஒரு இடையூறாகக் கருதாமல் இரு பாசுரங்களிடையிலும் உள்ள ஒத்திசைவை அனைவரும் உணரும்படிப் பேசினார்.

அந்தியூர் மணியின் சைவ சித்தாந்தப் பற்று, மற்றும் அதில் அவர் கொண்டுள்ள நம்பிக்கை – ஆச்சரியம் அளிப்பவை.

சில மாறுதல்கள் செய்யலாம் என்று தோன்றுகிறது :

1. பிரபந்த உரையாசிரியர்களின் ( பெரியவாச்சான் பிள்ளை, அண்ணங்கராச்சாரியார் ) கிரந்தத் தமிழ் வியாக்கியானங்களையும் வாசிக்கலாம். பங்கேற்பாளர்களுக்கு இது ஒரு திறப்பாக இருக்கும்.
2. பாசுரங்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். ஒரே பொருளில் வரும் பல பாசுரங்கள் சற்று திகட்டியதாகப் பட்டறை நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டேன்.
3. வடகலை, தென்கலை பிரபந்தப் பிரயோக முறைகளில் இசையில் வேறுபாடு உள்ளது. இரண்டிலும் சுவைகள் உள்ளன.இரண்டு முறைகளிலும் பாடச் சொல்லலாம். இதுவும் பட்டறைப் பங்கேற்பாளர்களுக்கு நல்லதொரு அறிமுகத்தைத் தரும்.

நன்றி.
ஆமருவி தேவநாதன்
www.amaruvi.in

முந்தைய கட்டுரைஜப்பான் ஒரு கீற்றோவியம்- வாசிப்பு
அடுத்த கட்டுரைபொன்னூர்