தனிமையின் புனைவுக் களியாட்டு கதைகள் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
சென்ற வாரம் எங்கள் தாவரவியல் துறையிலிருந்து ஒரு அறிவியல் கட்டுரை பிரபல மருத்துவ அறிவியல் பதிப்பகமான Elsevier’ன் சஞ்சிகைகளில் ஒன்றில் வெளியானது.
The Promising Epigenetic Regulators for Refractory Epilepsy:
An Adventurous Road Ahead
Berberis tinctoria என்னும் காட்டுப்புதர்ச்செடியின் உண்ணக்கூடிய கனிகளின் வேதிச்சேர்மங்களில், அச்செடி வளரும் சூழலின் தாக்கங்கள் குறித்தானது அக்கட்டுரை. தேசிய தரச்சான்றிதழ்களின் மதிப்புப்புள்ளிகளே கல்லூரிகளின் எதிர்காலத்தை தற்போது நிர்ணயிப்பதால் இப்படியான தரமான சஞ்சிகைகளில் வெளியாகும் கட்டுரைகள் அத்தியாவசியமாகி இருக்கின்றன. முக்கியமான சஞ்சிகைகளில் பிரசுரமாகும் இப்படியான கட்டுரைகள் பெரும் கவனம் பெறுகின்றன.
Elsevier’ யை போலவே சர்வதேச அறிவியல் சஞ்சிகையான ‘Springer’ம் மிக முக்கியமானது, பிரபலமானது. இதில் பொது ஆரோக்கியம் குறித்தான மருத்துவக்கட்டுரைகள் முதுமையியல் மற்றும் நரம்பியல் துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகி உலகெங்கிலும் கவனம் பெறும்.
சமீபத்தில் ‘Springer’ல் வெளியான ஒரு முக்கிய நரம்பியல் ஆய்வுக்கட்டுரையில் உங்களின் பெயரும் ’யா தேவி’ கதையின் சுட்டியும் பிரசுரமாகி இருப்பதை திரு அரங்கசாமி மூலமாக அறிந்து கட்டுரையின் இணைப்பை பெற்றேன்.
’’The Promising Epigenetic Regulators for Refractory Epilepsy: An Adventurous Road Ahead’’ என்னும் தலைப்பிலான அக்கட்டுரை உங்களின் நெடுங்கால வாசகரும் திருவனந்தபுரம் NIMS Medicity’யின் தலைமை விஞ்ஞானியுமான திரு.சுவேக் பாலாவும் அவர் குழுவினரும் ஈடுபட்டிருக்கும் ஒரு மிக முக்கியமான ஆய்வு குறித்தது.
உலகின் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருக்கும், மனிதனின் எந்த வயதிலும் தாக்கக்கூடும் ஆபத்துகொண்ட நரம்பு தொடர்பான தீவிரமான சீர்கேடான epilepsy எனப்படும் வலிப்புநோய்க்கான ஒரு புதிய சிகிச்சைக்கான ஆய்வு குறித்த கட்டுரை அது.
கால்-கைகளில் திடீரென காரணமேயில்லாமல் உண்டாகும் வலுவான, வலிப்புச் சிக்கல்தான் காக்காய் வலிப்பு என்று பேச்சு வழக்கில் பெயர் பெற்றிருக்கிறது. இந்த வலிப்பு மூளை நரம்புகளின் அசாதாரணமான மின்செயல்பாடுகளின் தொடர்நிகழ்வுகளால் உண்டாகின்றது. வலிப்பு நோய்க்கான சரியான காரணம் இன்னுமே கண்டறியப்படவில்லை.
இந்த ஆய்வுக்கட்டுரை refractory epilepsy எனப்படும் வலிப்பு எதிர்ப்பு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு வகையிலொன்றான Dravet Syndrome எனப்படும் குழந்தை பிறந்து ஒரு வயதிலிருந்து துவங்கும் அரிய வகை வலிப்பு சிக்கலுக்கான தீர்வை முன்வைக்கிறது.
சிக்கலான நரம்புச்சீர்கேடு குறித்தான சிக்கலான ஆய்வொன்றின் விரிவான அறிவியல் கட்டுரை இது. முற்றிலும் நான் சார்ந்திருக்கும் துறையிலிருந்து வேறுபட்டது என்பதால் இதை மேலோட்டமாக புரிந்துகொள்ளவே எனக்கு சமயம் பிடித்தது.
கட்டுரையின் சாராம்சம்:
Dravet Syndrome மரபணுவில் உண்டாகும் திடீர் மாற்றத்தினால் உண்டாவது. இந்த வகை வலிப்பினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பொதுவாக பிறந்து 6 மாதங்கள் கழித்தே வலிப்பு வருகிறது. இதற்கு காரணமாக ஆறுமாதங்களும் வெறும் முலைப்பால் மட்டுமே உணவாக கொடுக்கப்படுவதாக இருக்கலாம்.
முலைப்பாலின் EGR (epigenetic regulators) எனப்படுவைகளின் அடர்த்தி முதல் 6 மாதங்களில் வலிப்புக்கான காரணிகளை செயல்பட விடாமல் தடுக்கிறது
இந்த ஆய்வில் முலைப்பாலுடன், நீர்பிரம்மி எனப்படும் மூலிகைச்செடியான Bacopa monnieri யின் வலிப்புக்கு எதிரான செயல்பாடுகளும் ஆராயப்பட்டிருக்கின்றது.
இவையிரண்டின் வலிப்பு எதிர்ப்பு இயல்புகளுக்கான தீவிரமான ஆய்வுகள் மேலும் நடைபெற வேண்டி இருக்கிறது என்றாலும் இயற்கையாக முலைப்பாலிலும் மூலிகைச்செடியிலும் கிடைக்கும் EGR களைக்கொண்டு இந்த அரிய வகை வலிப்பிற்கு சிகிச்சையளிக்கலாம் என்பதே இந்த நரம்பியல் சிக்கலுக்கான தீர்வுக்கான புதிய பாதையொன்றை திறந்து வைத்திருக்கிறது. கட்டுரையின் தலைப்பே இந்த சிக்கலை தீர்ப்பதற்கான ஒரு சாகசப்பாதை முன்னிருக்கிறது: ’’An Adventurous Road Ahead’’என்றுதான் சொல்லுகிறது.
இக்கட்டுரையில் உங்களின் முழுப்பெயரையும் குறிப்பிட்டு நன்றி சொல்லப்பட்டிருக்கிறது கூடவே ’யா தேவி’ கதையின் சுட்டியும் அளிக்கப்பட்டிருக்கிறது
Acknowledgements :
We thank the Chairman and Managing Director of Noorul Islam Centre for Higher Education and NIMS Medicity, respectively, for their generous support. We extend the gratitude to the authoritative Tamil author Jeyamohan Bhaguleyan Pillai for his narration about the brain (https://www.jeyamohan.in/129209/) that has been used in the last line of conclusion.
கட்டுரையின் கடைசி வரிகளான இவை யாதேவியை வாசித்த சுவேக்கின் அகமொழியில் எழுதப்பட்டிருக்கிறது
//EGR might open a new avenue to decipher the astonishingly regulated electrical activity of the billions of orchestrated neurons of the human brain, congruous to the sky encompassing millions of stars and galaxies.//
விரல்களால் அவள் நரம்புகளை தொட்டறிந்து கொண்டிருந்தேன். மிகமெல்லிய சிலந்தி வலை. ஆனால் பட்டாலானது. யானைகள் ஏறிநின்றாலும் அறாதது. மெல்லிய மூச்சுக்காற்றில் சிதறுண்டு பறப்பதும்கூட.
அவள் காலின் முதல் நரம்பில் என் சுட்டுவிரலை வைத்தேன். வீணையின் நரம்பை தொட்டு அதன் சுருதியை அறிவது அது.
என் சுட்டுவிரல் அவள் காலின் அடுத்த நரம்பை தொடாமல் அரைக்கண, அரையணு இடைவெளியில் நின்றது. பின்னர் அதை அழுத்தினேன். அவிழ்ந்த வீணைத்தந்தி என தளர்ந்திருந்தது.
நரம்புகளினூடாக ஓடுவது ஒரு மெல்லிய சுருதி. மிகமிக மெல்லியது. வீணைத் தந்திகளில் காற்றுபடும்போது உருவாவதுபோல.
நரம்புகளைப் பொறுத்தவரை நம்மால் எந்த முடிச்சையும் அவிழ்க்க முடியாது. அடையாளம் காணவே முடியாது. மொத்த நரம்புகளையும் எளிதாக்கலாம். உடல் உயிர்வாழ விரும்பினால் நரம்புகளின் முடிச்சுகளை அதுவே அவிழ்த்துக் கொள்ளும்.
“மூளை என்பது வானம்போல. எத்தனைகோடி நட்சத்திரங்கள். எத்தனை பிரபஞ்சங்கள். யார் அதை முழுக்க விளக்கமுடியும்? விளக்கவேண்டுமென்றால் பராசக்தியையே விளக்கவேண்டும்?”
இந்த வரிகளையெல்லாம் ஆழ்ந்து உணர்ந்து வாசித்த நரம்பியல் நிபுணரும் விஞ்ஞானியுமான சுவேக் அவற்றை தன் துறையின் முக்கிய ஆய்வில் பொருத்திப் பார்த்துக்கொண்ட அக்கணம் எனக்கு பெரு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
அக்கட்டுரையின் தொடக்கத்தில் பங்களித்திருப்போரின் சுயவிவரங்கள் ஒரு சொடுக்கில் கிடைக்கும் வசதி இருக்கிறது. நான் ஒவ்வொருவராக சென்று பார்த்துக் கொண்டிருந்தேன் எத்தனை அறிஞர்கள், எத்தனை பட்டங்கள், எத்தனையெத்தனை ஆய்வுகள் செய்தவர்கள்! அத்தனை பேரும் சேர்ந்து செய்த ஒரு ஆய்வின் முக்கிய பேசுபொருளான நரம்பு சிக்கலை நரம்புகளின் இயல்புகளை குறித்து ஒரு சிறுகதையில் நீங்கள் சொல்லிவிட்டிருக்கிறீர்கள். யாதேவி இப்போது மருத்துவ அறிஞர்கள் மத்தியில் சர்வதேச கவனம் பெற்றிருக்கிறது
சுவேக்கின் கட்டுரைகளை சொல்வனத்தில் முன்பே வாசித்திருக்கிறேன் அவர் முதலில் மிக நல்ல மனிதர் பின்னரே விஞ்ஞானி என்று எப்போதும் எண்ணிக்கொள்வேன். உங்களை ஆழ்ந்து வாசிக்கும், அறிவியலில் இருக்கும் ஒருவர் வேறெப்படியும் இருக்க முடியாது. இப்படி வாசிப்,பு இலக்கியம் என்னும் உலகில் இருப்பவர்கள் தங்கள் சார்ந்த துறையிலும் அவற்றின் சாரத்தை இணைத்துக்கொள்கையில் இரு தளங்களுமே அவர்களுக்கு வெகு சுவாரஸ்யமானவைகளாகவும் வெற்றிகரமானதாகவும் ஆகிவிடுகிறது.
உங்களின் சில வரிகள் சுவேக்கை போன்றோருக்கு மாபெரும் செயல்களுக்கான முதலடியை எடுத்துவைக்க உதவுகிறது.
1950ல் Bernhard Springer ஆல் துவங்கப்பட்ட இந்த பதிப்பகத்தின் இத்தனை ஆண்டுகால வரலற்றில் முதன் முதலாக ஒரு நரம்பியல் ஆராய்ச்சிக் கட்டுரையில் தமிழ்சிறுகதையின்றின் சுட்டி அளிக்கப்பட்டு அக்கதையை எழுதியவரின் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உங்களின் வாசகியாக நான் இதுகுறித்து பெரும் பரவசமும் பெருமிதமும் கொண்டிருக்கிறேன்
யா தேவி சர்வஃபூதேஷு சக்திரூபேண சம்ஸ்திதா!
அன்புடன்
லோகமாதேவி
கட்டுரையின் இணைப்பு:
https://www.jeyamohan.in/wp-content/uploads/2023/12/Breast-milk-paper_Suvek-2.pdf
சுவேக்கின் பிற கட்டுரைகளின் இணைப்பு: