வெள்ளம், கடிதம்

வெள்ளம், விழா, பிரார்த்தனை- கொள்ளு நதீம் கடிதம்

அன்புள்ள ஜெ..

திரு.கொள்ளு நதீம் அவர்களின் கடிதமும் உங்கள் பதிலும் படித்தேன்.

2015 க்குப் பிறகு ஒவ்வொரு மழையிலும் தப்பிப் பிழைத்து வரும் முடிச்சூர் பகுதியை சார்ந்தவன் என்கிற வகையில் நானும் சிலவற்றை சொல்ல விழைகிறேன்.

1990 ல் தெற்கிலிருந்து சென்னை வந்தவன். 2014 வரை சிறுதுளியாய் சேர்த்தவை அனைத்தும் 2015ல் ஒருநாளின் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இரண்டாவது தவணை கட்ட வேண்டிய கார், டூ வீலர், கணினி என அனைத்தும் முழுகிப் போக , 10 வதும் 12 வதும் பப்ளிக் எக்ஸாம் எழுத வேண்டிய குழந்தைகளுடன் மாற்றுடை கூட இல்லாமல் , வீடின்றி ஏதிலிகளாக , உறவென்று நினைத்தவர் இடத்தில் சென்று ,   “ஊருஞ் சதமல்ல உற்றாரும் சதமல்ல” என கசந்து திரும்பியவன்.

அந்த வலிகளில் எல்லாம் தலையாயது பலகாலமாக சேர்த்து வைத்த புத்தகங்கள் அனைத்தையும் தண்ணீருக்கு தாரை வார்த்தது. திருமணத்திற்கு முன் உள்ள வாழ்க்கையில்,  சாப்பாட்டை தியாகம் செய்து தேநீரில் மட்டும் வாழ்க்கையை ஓட்டி பலகாலமாய் சிறுக சேமித்த பலநூறு புத்தகங்கள் சாக்கடையும் மலக்கழிவும் கலந்த நீரில் ஊறி நைந்தும்  கிழிந்தும் காணக்கிடைக்கயில் உண்மையிலேயே நெஞ்சு வெடிக்க அழுதேன்.

இன்னொன்று..  பணி நிமித்தம் வெளியூர் செல்லும் போது அந்தந்த ஊர்களின் கோவில்களிலிருந்து, சொந்தமாக  வீடு கட்டுவது வரை சேகரித்த  தெய்வத் திருவுருவங்கள். ..பூஜை அறையில் ,கொஞ்சலிலும் கெஞ்சலிலும், மன்றாட்டிலும் கண்ணீரெனும் தூநீரில் மூழ்கி, நின்றுவிளி கேட்ட தெய்வங்கள்.. அன்று சாக்கடை பீநீரீல் ஊறி மிதந்தது கண்டபோது மீண்டும் அழுதேன்.

இந்த வருடம் மீண்டும் 2015 திரும்பியது. சீலிங் பேன் தண்ணீரில் நனையும் போது ,  பையனுக்கு வாங்கிய  புது பைக்,  நாலாவது தவணையே முடியவில்லை  என்பதற்காக  முழுகாமல் இருக்குமா என்ன? திக்கற்றவனுக்கு துணையாய் இருந்த (மீண்டும் சேகரித்து சட்டமிடப்பட்ட)தெய்வத்திருப்படங்கள் மீண்டும் கழிவுநீரில் ஊறி மிதந்தன.

இம்முறை அழுகை வரவில்லை ஆத்திரம் தான் வந்தது.போய்த்தொலையுங்கள் என்று வாய்விட்டு கத்தியபடி தான் அனைத்து படங்களையும் தூர வீசினேன்.மனக்குமுறல் அடங்கவே இல்லை. ஏன் எனக்கு மட்டும்?..நீண்ட போராட்டத்தின் பின் , ஒரு படி ஏறினால் ,  நொடியில் பல படிகள் பின்னோக்கிச் செல்லும் இந்த வாழ்க்கை பரமபதம் ஏற்கனவே வகுக்கப்பட்டதுதானா.

சூழ இருப்பவர் துயரின்றி வாழ்வது காணக்கிடைக்கும் போது எனக்கு மட்டும் ஊழின் நெறி ஏன் இப்படி?என்று , தினமும் எடுத்துக்கொள்கிற  இரத்தக் கொதிப்புக்கான மாத்திரையை மீறிய பல்வேறு மனக்கொந்தளிப்புகள்.

2015 லிருந்து மீள வருடங்களாகியது.ஆனால் இம்முறை ஆச்சரியம்.இரவு, தூக்கமும் விழிப்பும் அற்ற நிலையில் கேள்விகள் ஊறி எழ எழ அதன் பதிலும் உடனேயே எழுந்து வந்தது.எனக்கு மட்டும் ஏன் என இன்பம் நேர்கையில் கேட்டாயா என்ன.தந்தை (கடவுள்) அளித்தது புகழாயினும் பழியாயினும் கொள்வதுதான் கடனேயன்றி கேள்வி கேட்பதல்ல.

படைப்பழிவின் ஊடாக , நன்மை தீமையின் ஊடாக திரண்டு வருவது, “விளங்குக , வாழ்க , வெல்க” என்பதே எனவே “செயலில் அமைக செயலால் எழுக” என அழுத்தம் திருத்தமாக பதில்கள் நனவிலி  மனதில் இருந்து எழுந்து வந்தபடியே இருந்தது.

அனைத்தும் மீள மீள வாசித்த வெண்முரசின் வரிகள்..காலையிலும் வீட்டைச்சுற்றி குறையாத நீர்மாடிப்படிகளில் அலையடித்துக் கொண்டுதான் இருந்தது  . ஆனால் BP மாத்திரை போடும் முன்பே மனது  சூழலை ஏற்றுக்கொண்டு அமைதியாகி விட்டது.

சென்ற மாதம் குருவாயூர் சென்றிருந்தபோது யாருக்கேனும் பரிசளிக்கலாம் என வாங்கி மாடியில் வைத்திருந்த ஒரு குருவாயூரப்பன் படத்தை வைத்து அன்றைய தினத்தை ஆரம்பித்து விட்டேன். நீரிலிருந்து உலர்ந்து வாழ்க்கை மெல்ல‌ இயல்பாகிக் கொண்டிருக்கிறது.

அந்த நீலனுக்கு நன்றி!என்னை மீட்டுத்தந்த வெண்முரசுக்கு நன்றி !ஜெ..உங்களுக்கும் நன்றிகளும் வணக்கங்களும்.

பிரியங்களுடன்

நாகராஜன்.

முடிச்சூர்.

முந்தைய கட்டுரைவற்கலாவில் ஒரு பெருநிகழ்வு
அடுத்த கட்டுரைஎழுத்தாளரைத் துரத்துதல்