ஓவியம் பிரேம் டாவின்ஸி
விஷ்ணுபுரம் விருது நிகழ்வில் பங்கெடுத்துவிட்டு சென்னை திரும்பினோம். இன்னும் பிரமிப்பு அடங்கவில்லை. ஒரு படைப்பாளிக்கு முழுமையான மனநிறைவை தரும் தருணங்கள் எப்போதும் படைப்புகளுடன் தொடர்புடையனவாகவே இருக்கும். கடந்த 16 / 17 ஆகிய இரண்டு நாட்களும் என்னுடைய கணக்கில் முழுமையாக சேர்ந்து கொண்டன.
விஷ்ணுபுரம் விருந்தினராக கலந்து கொண்டு வாசகர்களுடன் உரையாடுவது என்பது நம்மை நாமே ஒரு மதிப்பீடு செய்து கொள்வதற்கான மிகப்பெரிய ஒரு சந்தர்ப்பம் என்பதில் சந்தேகம் இல்லை. இது போன்ற மிகவும் காத்திரமான உரையாடல் அரங்கை தமிழ்ச்சூழலில் வேறெங்கும் காணமுடியாது. இவ்வாறான ஒரு பரந்த வாசகர் பரப்புடன் நேரடியாக உரையாடுதல் என்பது பலருக்கும் ஒரு சிறு பதட்டத்தையாவது தரும் என்றே எண்ணுகிறேன். அதற்கு நானும் விதிவிலக்கில்லை!. நிகழ்விற்கு முன்தினம் இருந்த ஒரு உள்ளார்ந்த பதட்டம் அடுத்த நாள் சற்று அடங்கியது போல இருந்தது. அதற்கு நான் எடுத்துக் கொண்ட வழக்கமான முடிவே காரணமாக இருக்கலாம். மனதில் தோன்றுவதை முடிந்தவரை தெளிவாக கூறிவிடவேண்டும், தற்காப்பு முயற்சிகளை எடுக்கவே கூடாது என்பதுதான் அந்த மிகப்பழைய உத்தி. இயல்பானவை எல்லாம் இப்போது உத்தியாகவே கருதப்படுகின்றது!.
அரசியல் கேள்விகளை தவிர்க்கவும் என்று பொதுவாக கூறப்பட்டாலும் அது அவ்வளவு சாத்தியமானதில்லை. ஈழத்தில் இருந்து அரசியலை பிரிப்பது சாத்தியமில்லை!. அதற்கு என்னளவில் பதில் தரவும் தயங்கவில்லை. நான் ஒரு எழுத்தாளனேயன்றி ஒரு அரசியல்வாதியோ அல்லது போராளியோ அல்லது என்பது குறித்த தெளிவு உண்டு!. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்க போதிய அவகாசமும், பதில்களை பொறுமையாக உள்வாங்கிக் கொள்ளும் பண்பும் அந்த மாபெரும் சபைக்கு இருந்தது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
என் வாழ்வின் கடந்த ஆறு வருடங்களை முழுமையாக இலக்கியத்திற்கு ஒப்புக்கொடுத்தது சரியான முடிவுதான். அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்!
– வாசு முருகவேல்
ஓவியம் பிரகாஷ் காரைக்குடி
ஷாகிர் அவர்களுக்கு உங்களைச் சந்தித்ததில் வெகு சந்தோசம். இந்தியாவில் பல இலக்கியவாதிகள் ஆங்கிலம் வழி அறிமுகமாகிறார்கள். அவர்களை பதிப்பகங்கள், அமைப்புகள், அரசியல் சார்புகள் முன்னிறுத்துகின்றன. ஆனால் ஜெயமோகன் போன்றவர்களைச் சந்திக்கும்போது அவரது சில சிறுகதைகளை ஆங்கிலத்தில் வாசித்தபோது அவர் இந்தியாவில் எத்தனை உயர்வான இலக்கியவாதியாக உள்ளார் எனப் புரிந்தது என்றார்.
“ஜெயமோகனிடம் இயல்பாகவே ஓர் ஈர்ப்புண்டு. அது அவரிடம் உள்ள அன்பினால் உருவாகிறது. படம் பிடிக்கும்போது என் கைகளைத் தொட்டவர், எனக்குக் காய்ச்சல் அடிப்பதை உணர்ந்துக்கொண்டார். உடனே என்னை ஓய்வெடுக்கச் சொல்லி கைகளை வருடிக்கொடுத்தார். அந்த வருடலில் அத்தனை கனிவிருந்தது” என்றார்.
“அவர் பேசும்போது யாரும் இடையூறு செய்வதில்லை. அவ்வளவு உள்ளடக்கத்துடன் அவர் பேசுகிறார் எனப் புரிந்தது. நான் அவரது யானை டாக்டர் உள்ளிட்ட சில சிறுகதைகளை வாசித்தேன். பிரியம்வதா என்ன அருமையாக மொழிப்பெயர்த்துள்ளார். நான் அதில் சில கதைகளை மலாயில் மொழிபெயர்த்து நூலாக்க நினைக்கிறேன். அறிமுகம் என்பதால் 200 நூல்கள் அச்சடித்தால் போதும். ஆனால் எங்கள் பதிப்பகம் அதிகபட்சம் 500 நூல்களை அச்சிடுவதால் அதற்கான ராயல்டியை கொடுத்துவிடுவேன். எனக்கு அறம் சிறுகதையில் வரும் எழுத்தாளன் அறம் பாடுவது ஞாபகம் உண்டு. எனவே கவனமாக இருக்கவேண்டும்” எனக்கூறி சிரித்தார்.
அவர் வழியாக நீங்களும் உங்கள் படைப்புகளும் விஷ்ணுபுரம் அமைப்பும் மலாய் இலக்கியவாதிகள் மத்தியில் விரிவான தளத்துக்குச் செல்லும் என நம்புகிறேன். அதை உறுதி செய்வேன்.
“அவரை மலாய் வாசகர்கள், எழுத்தாளர் மத்தியில் அழைத்து பேச வைக்கும் வேண்டும்” என்றபோது நீங்கள் மலேசியா வரும் நாளை மனதில் நினைத்துக்கொண்டேன்.
இன்னும் என்னவெல்லாம் நினைத்துக்கொண்டேன் என இனிதான் தொகுத்துப்பார்க்க வேண்டும்.
ம.நவீன்