விழா கடிதம், கடலூர் சீனு

இனிய ஜெயம்

இம்முறை விழாவுக்கு கிளம்பும்போதே ஜலபுலஜங் துவங்கி விட்டது. புதுச்சேரி தாமரைகண்ணன் ஒரு வருடமாக தயார் ஆகி எழுத வேண்டிய தேர்வு ஒன்று, புயல் காரணமாக அதன் தேதி விழா நாட்கள் அன்று தள்ளி வைக்கப்பட, புதுவை மணிமாறன் மருத்துவ பணி ஒன்றில் சென்னையில் சிக்கிக் கொள்ள, நெல்லையிலிருந்து கிளம்பி ஞாயிறு காலை விழாவில் இருக்க முடிவு செய்திருந்த சிவாத்மா அங்கு மழையில் காணாமல் போக, வெளிநாட்டு நண்பர்கள் திடீர் வரவால் ஹரி கிரிஷ்ணன் வர இயலாமல் போக, எஞ்சிய நண்பர்கள் சரவணன் காரில் புதுவை கிளம்பினோம்.

மணிமாறன் தாமரை இவர்களுடன் விழாவுக்கு வரவிருந்த எழுத்தாளர் ஹரிசங்கர் இவர்கள் வராததால் தயங்கி அவரும் வரவில்லை. அவர் வர இயலாததற்கு அவரது உடல் நிலை உள்ளிட்டு பிற காரணங்களும் உண்டு. புதுச்சேரி வெண்முரசு கூடுகைக்கு அவர் வந்த விஷயம் வெளியே கசிந்து விட, உடனடியாக அவரது இலக்கியக் கற்பு ஐயத்துக்கு உள்ளாகி, அதன்பொருட்டு அவர் தீக்குளித்து கரையேறிய பின்னரும் அது அவ்வாறே நீடிக்கும் நிலையால் அவர் தயங்கி நின்று விட்டது நியாயமே.  நிச்சயம் இன்று இந்த விழாவில் கலந்து கொள்ள வரும் சில புதிய எழுத்தாள விருந்தினர்கள் சில முகநூல் சுன்டெலிகளின் கீச் மூச் களை தாண்டியே இங்கே வந்திருப்பார்கள். அந்த சுண்டெலிகளின் கீச் மூச் ஒலிகளுக்கு எப்பொருளும் இல்லை என்பதை இங்கே வந்த பின்பே அறிந்திருப்பார்கள். தயக்கம் உடைத்து அடுத்த விழாவுக்கு ஹரி சங்கர் வருவார் என நினைக்கிறேன்.

இம்முறை விழா மண்டப வாசலில் இருந்த விழா அறிவிப்பு பதாகை, நண்பர்கள் நின்று தற்படம் எடுத்து சமூக வலை தளங்களில் பகிர வசதியாக இருந்தது என்பதை கண்டேன். அடுத்த முறை அதற்கும் வாகாக பதாகை வடிவமைக்கலாம். விழா நடந்த சனி ஞாயிறு இரண்டு நாட்களிலும் கோவையில் நாஞ்சில் சார், எஸ்ரா, இளங்கோ க்ரிஷ்ணன் இவர்களை மையமாக கொண்ட வேறு நான்கு விழாக்கள் இருந்தும், இங்கே விஷ்ணுபுரம் விழாவில் முதல் நாள் முதல் அமர்வில் இருந்தே அரங்கு நிறைந்த கூட்டம். நான் முன்னரே சொன்னது போல, யோக வகுப்புகள், ஆலயக் கலை வகுப்புகள் இன்ன பிற வழியே இன்றைய விழா மேலும் அதிக வாசகர்களை பார்வையாளர்களை ஈர்க்கும் ஒன்றாக மாறி இருக்குறது. பல வாசகர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். சிலர் குடும்பம் அலுவலக நட்பு சகிதம் வந்திருந்தனர். சில வாசகர் இங்கே வந்து காலை அமர்வு நிகழ்ச்சி பார்த்து விட்டு, மதிய உணவு முடித்து புத்தகங்கள் வாங்கிக்கொண்டு மாலை அடுத்த இலக்கிய கூடுகை செல்வதையும் கண்டேன். இம்முறை முதல் நான் பந்திக்கு முந்துவதை துவங்கிவிட்டேன்.

இடைவேளைகளில் விழா அரங்கு இருந்த சாலை முழுக்க ஸ்மார்ட் சிட்டி காக மாற்றி அமைக்கப்பட்ட சாலை என்பதால், சாலை நெடுக ஆங்காங்கே இருக்கும் தேநீர் கடை, பாதையோர இருக்கைகள் எங்கும் எழுத்தாளர் வாசகர்கள் கூடுகை.  எங்கெங்கும் திகழ்ந்தது விழா மனநிலை. நாஞ்சில் சாரை பார்ப்பது எப்போதுமே எனக்கு காட்டுக்குள் வைத்து யானையை பார்ப்பது போல உவகை அளிக்கும் அனுபவம். இம்முறை மிக்க அமைதி கொண்டிருந்தார். கேட்டேன். சில துக்கங்கள், சில சந்தோஷங்கள், அது போக வயசாகுது இல்லியா என்றார் புன்னகைத்தபடி. அவர் உடன் அப்போது உரையாடிக்கொண்டிருந்தகவி லட்சுமி மணிவண்ணன் என்னிடம் திரும்பி குரோதம் கொண்டு தொட தொட பெரிதாக்கிக்கொண்டே போகும் அசுரன் ஒருவனை, அன்பு அரவணைப்பு வழியே சுருக்கி சுண்டெலி அளவு என்றாகி அவனை உள்ளங்கையில் எந்திக்கொள்ளும் கிருஷ்ணன் கதை ஒன்று சொன்னார். அவரும் குடும்பத்துடன் வந்திருந்தார் என்றே நினைக்கிறேன்.

என் தங்கங்கள் மீனம்மா ரம்யா இருவரையும் சந்திப்பது எப்போதுமே எனக்கு உவகையூட்டும் அனுபவம். மீனா நடக்கும் போது கீழே விழுந்த வகையிலும், ரம்யா கீழே விழுந்தபோது நடந்த வகையிலும் இருவருக்கும் நல்ல முதுகு வலி, உட்கார்ந்தால் எழ முடியவில்லை என்று விழா நெடுக மீனா நின்றுகொண்டே இருந்தார். எழுந்தால் உட்கார முடியவில்லை என்று ரம்யா விழா நெடுக உட்கார்ந்து கொண்டேயிருந்தார். விடை பெறுகையில் கையை ஊன்றாமல் ஒரு குட்டிக்கரணம் போடு சரியா போகும் என்று இருவருக்கும் பரிந்துரைத்துவிட்டு வந்தேன். நண்பர் அவிநாசி தாமரையின் மனைவி தெய்வா, புதிய வாசகி சரண்யா இருவரும் அவர்களின் கடிதங்களுக்கு பிறகு மிகுந்த அணுக்கமாக தெரிந்தார்கள். நீலி இதழில் மிக சிறந்த கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் சைதன்யா அவர்களுடன் அவரது கட்டுரைகள் குறித்து சில நிமிடங்கள் பேச முடிந்தது. அவரது கட்டுரைகளுக்கு இருக்கும் ஒரே ஒரு வாசகரை இந்த விழாவில் சந்தித்தது மகிழ்ச்சிதானே என்று கேட்டேன். ஆஆஆங் அதெல்லாம் இல்லை நிறைய பேர் படிச்சிருக்காங்க என்று குழந்தையாக மாறி சிணுங்கினார்.

விழாவில் கண்ட பாவண்ணன் அவர்கள் அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வழியே சிற்பி மொழியாக்கத்தில் சிவராம காரத் வாழ்க்கை குறிப்புகள் தொகுப்பான பித்தனின் பத்து முகங்கள் நூல் தமிழில் வந்திருக்கிறது என்று சொன்னார். அந்த பதிப்பகத்துக்கு, நூல்கள் விற்கப்பட்ட வேண்டியவை அதை வாங்கி வாசகர்கள் வாசிப்பார்கள் என்ற விவரத்தை இன்று வரை எவரும் எடுத்து சொல்லவில்லை  எனவே தேடி வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார். எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களின் நண்பர் ஜெயவேல் விழா முடிகையில் அந்த நூல் ஒன்றை எனக்கு பரிசளித்தார். வந்திருந்த வாழப்பாடி விசு உள்ளிட்ட வாசக நண்பர்கள் குழு சில புத்தகங்கள் பரிசளித்தார்கள். நாஞ்சில் சாரும் தேவதேவன் சாரும் தங்கள் புதிய நூலை கையெழுத்திட்டு தந்தார்கள்.

இரவு குளிர்பதனம் கொண்ட வசதியான அறை. நல்ல உறக்கம். நள்ளிரவு 12.30 மணி. ஓவியர் ஜெயராம் கதவு திறந்து வந்து எழுப்பினார். 10 ஆம் நூற்றாண்டு சோழர் ஓவியங்கள் சார்ந்த உரையாடல். நண்பர் சரவணன் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்து மலங்க மலங்க விழிக்க, ஒரு மணி நேரம் நீண்ட அந்த உரையாடல் முடிந்து ஜெயராம் உறங்க போக, சரவணன் அப்பாடா சாமிகளா என்று மீண்டும் படுக்கையில் சரிய, சரியாக அதே நேரம் கதவு திறந்து அனங்கன் உள்ளே வந்து “அண்ணா நம்ம குருகு இதழ்ல….” என்று துவங்க, சரவணன் அடக் கொலகாரப் பாவிகளா என மனதுக்குள் கூவியது மருதமலையில் எதிரொலித்தது.

விழாவில் நாஞ்சில் நாடன் உள்ளிட்டு பெரும்பாலான நண்பர்கள் ராதா பாட்டி மரணம் குறித்து கிட்டத்தட்ட அவர் பேரன் வசம் துக்கம் விசாரிப்பதை போலவே என் வசம் விசாரித்தார்கள். சில நாள் முன்புதான் சகோதரரும் எழுத்தாளருமான s j சிவசங்கர் அந்த கடிதங்களை அடிப்படையாக கொண்டு ஒரு சிறுகதை எழுதி அதை எனக்கும் அண்ணன் சுகாவுக்கும் அனுப்பி இருந்தார். அவர் வாழ்வு இத்தனை பேரை தொட்டிருப்பது ஆச்சர்யமாக இருந்தது.

விழாவில் மேலும் இனிமை நண்பர்கள் இலக்கிய வாசகர்கள் இயக்குனர் வசந்த் சாய் மற்றும் ரத்த சாட்சி ரபீக் இருவரையும் கண்டு தழுவிக்கொண்டது. லதா, அழகு நிலா, அரவின் குமார், நவீன் (வராத கோ புண்ணியவான், சுவாமிஜி)  என மலேஷிய எழுத்தாளர்கள் அனைவரும் அங்கே இருக்கும் என் குடும்ப உறவுகள் போலவே உணர்வை அளிப்பவர்கள். அவர்களை சந்தித்து எப்போதும் போல மகிழ்ச்சி. கவி ச.துரை பின்னிருந்து நண்பா என்றபடி அணைத்தார். ஆள் சினிமாவுக்கு சென்றதும் ‘திரண்டு’ விட்டார். பழைய தயக்கங்கள் இல்லை. கண்ணில் கூர்மையும் கை குலுக்கலில் திடமும் கூடி விட்டது. தீடை என்ற சிறுகதை தொகுப்பை இந்த ஆண்டு துவக்கத்தில் கொண்டு வந்திருக்குறார். அதை குறித்தும் எழுத வேண்டும்.

வெளியே செல்கையில் கண்டேன். எழுத்தாளர்கள் சந்திரா, லதா அருணாச்சம், இல சுபத்ரா, கவி தீபு நால்வரும் தோளணைத்து ஏதோ பேசி சிரித்துக்கொண்டு இருந்தார்கள். முதன் முதலாக ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் கொள்கிறார்கள் என நினைக்கிறேன். நீண்ட நாள் நட்பு போல ஆகி இருந்தார்கள். இப்படி ஒன்று நிகழ்ந்து விடுமே என்பதுதான் முக நூல் சுண்டெலிகளின் பயமாக இருக்குறது. யாரும் ஒருவரை ஒருவர் சந்தித்து விட கூடாது, தங்கள் வாசகர் இருக்கும் இடத்துக்கு சென்று விட கூடாது, அப்படி சந்தித்தால் சென்றால் அதற்கு ஒருங்கு செய்த நண்பர்களை ஜெயமோகன் பெயரை சொல்லி அரசியல், இன்ன பிற என்றெல்லாம் முத்திரை குத்துவது. இந்த நால்வரின்  இவர்களின் உடல் மொழியே சொல்லியது எங்கள் பாதையை நாங்கள் உருவாக்கிக் கொள்கிறோம் என்ற தெளிவு.நால்வருமே அழகிகள். படைப்புத் தொழில் அளிக்கும் உவகையும் உடல் மொழியும் கூடிய அழகு. என்றும் என் பிரியத்துக்கு உரிய சந்திரா அக்கா, இப்போது அறிமுகம் ஆகும்  சுபத்ரா, தீபு எல்லோர் வசமும் ஓரிரு சொற்கள் பேசி அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது. விடை பெறுகையில் கவி தீபு வசம் “அழகா இருக்கீங்க … (சற்று தயங்கி) அக்கா” என்றேன், அவரும் “தேங்க்ஸ்… (என்னை இமிடெட் செய்து சற்று தயங்கி ) தம்பி” என்ரார்கள். குசும்பு.

‘எனது?’ வாசகர்கள் சிலரையும் விழாவில் சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. பெங்களூர் நண்பர் கவிதைகள் இதழில் வந்திருந்த விட்டகலா குருதிக்கறை கட்டுரை வாசித்து விட்டு, ஏங்க இப்படி என்று அவரே ஏதோ கை தவறி கொலை செய்து விட்டவரை போல புலம்பினார். கோயம்பேடு இல் இருந்து வந்த தம்பதியர் எனது ஒவ்வொரு பதிவையும் தனி தனியாக குறிப்பிட்டு கேள்விகள் கேட்டனர். பொதுவாக எல்லோருக்கும் நான் செய்யும் ‘அறிமுகங்கள்’ பயன் அளித்ததை காண முடிந்தது. கேட்ஜெட் முத்து க்ரிஷ்ணன் அவரது நண்பர் ஆகிய மற்றொரு ஸ்ரீனிவாசன் அவரும் எனது வாசகர் என்னை கண்ட கணம் முதல் பரவசத்தில் ததும்பி கொண்டே இருந்தார். என்னுடன் செல்பி எடுத்து இப்போ கடலூர்சீனு கூட இருககேன் என்ற பரவச எமோஜி உடன் கேட்ஜட் முத்து க்ரிஷ்ணன் வசம் பகிர்ந்து கொண்டார். அவரே வக்கீலாக, அவரே காவல் துறை ஊழியராக, அவரே ஜெயிலராக, அவரே அகியூஸ்ட் ஆகவும் இருக்கும் சக்தி கிருஷ்ணனை சந்தித்து சில சொற்கள் பேச முடிந்தது. அவர் இப்போது கல்வித் தந்தை ஆக முயன்று கொண்டிருக்கிறேன் என்றார். நாளையே அவர் ருவாண்டா அதிபர் ஆனாலும் ஆச்சர்யம் கொள்ள ஏதும் இல்லை.

விழா நாளின் உச்ச மகிழ்வு அஜிதனின் காதல் தோழி தன்யாவை அறிமுகம் செய்து கொண்டது. கண்ட முதல் கணமே இது இனி வாழ்நாள் நெடுக துணை வரும் நட்பு என்று தெரிந்து விட்டது. விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல பேசத் துவங்கி விட்டோம். இப்போது பஷீர் கதைகள் படித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். பெருந்தேன் நட்பு பாகம் இரண்டை உடனடியாக எழுதி மாமியார் எழுத்தாளர் திருமதி அருண்மொழி நங்கை அவர்கள் கொட்டத்தை அடக்கும்படி கேட்டுக்கொண்டேன். கண்டிப்பா என்று உறுதி அளித்தார் தன்யா. அஜிதனை கண்டேன். இந்த உறவு அமையும் வரை அவரது உளக்கொதிப்பு அனைத்தையும் அறிவேன். கழுதை இங்க இருக்க புக் பேருக்கு போய் அங்கே இருக்க பொண்ண இங்க கூட்டிட்டு வர்றதுகுள்ள என்னா அலப்பறை என்று நினைத்துக் கொண்டேன். கூடவே நல்ல வேளை அஜி முதல் கதையாக காதல் கதை எழுத போய் அவருக்கு காதலி கிடைத்ததாள். பேய் கதை எழுதி இருந்தால்? என்ற நினைப்பும் ஊடாடியது.

காதல் வந்தால் அது அஜிதனையும் கட்டம் போட்ட சட்டை போட வைக்கும் என்பதை அறிந்து கொண்டேன். கட்டி அணைத்துக் கொண்டேன். தம்பதியருக்கு என்னால் மட்டுமே தர இயன்ற, அசோகமித்ரனின் ஆசி போன்ற பரிசினை அளித்தேன்.

வழக்கமாக விழா முடிந்து அடுத்தநாள் காலை வரை இருந்துவிட்டே கிளம்புவேன். இம்முறை அப்படிக் கிளம்ப முடியும் என்ற மன உறுதி இல்லை. ஆகவே சட் என கிளம்பி விட்டேன். வழியில் கண்டேன். வாட்சாப் முழுக்க நண்பர்களின் தழுவலும் பிரியமும் நிறைந்து கிடந்தது. மெல்லிய ஏக்கம் எழுந்தது. என்னைப்போன்ற எங்கும் எதிலும் செட்டில் ஆகாத உதிரி ஆக நின்று பார்த்தால் மட்டுமே இந்த ஏக்கம் புரியும். சரிதான்…

இதோ வரப்போகிறது அடுத்த கொண்டாட்ட தினம்

 

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஉளக்குவிப்பு, தியானப் பயிற்சி
அடுத்த கட்டுரைஅன்னையுடன் ஒரு நாள்