ராமச்சந்திரகுகாவுடன் உரையாடல் (தொடர்ச்சி)

சென்ற 18- டிசம்பர் 2023 ல் ராமச்சந்திர குகா விஷ்ணுபுரம் விருதுவிழாவில் கலந்துகொண்டார். அப்போது வாசகர்களுடன் அவர் விவாதித்தவற்றின் எழுத்துவடிவம்.

தொகுப்பு எழுத்து சுனில் கிருஷ்ணன்

ராமச்சந்திர குகா: தமிழ் விக்கி

சுனில் கிருஷ்ணன் தமிழ் விக்கி


முந்தைய பகுதி (தொடர்ச்சி)

 

கே- வணக்கம் ராம், நான் கண்ணன். உங்களுடன் நிகழ்ந்த தனிப்பட்ட கடித பரிமாற்றத்தை நினைவு கூர்ந்து இந்த உரையாடலை தொடங்கும் சுதந்திரத்தை எடுத்துக் கொள்கிறேன். உங்களது ‘ஆந்திரபாலாஜிஸ்ட் மார்க்சிஸ்ட்’ நூலில் நீங்கள் வினோபாவின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறீர்கள். அதற்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்து நான் அதை வாசித்து உங்கள் விமர்சனத்தின் மீது  கடுமையான விமர்சனம் எழுதி எனது வலைத்தளத்தில் ஏற்றினேன். நீங்கள் அந்த கட்டுரையை பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்து எனக்கு வினோபா குறித்த உங்களது நிலைப்பாட்டை  எழுதினீர்கள். அது மிகவும் பெருந்தன்மையான செயல் எனக்கூறி உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனுபவத்தை இங்குள்ள வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைந்தேன்.

எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளன. ஒன்று வினோபாவின் மீதான விமர்சனத்தை  எழுதி பல ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குறித்து நீங்கள் எழுதினீர்கள். அதன் பின்னர் வினோபா மீதான உங்களது பார்வை மாறி இருக்கிறதா? இரண்டாவதாக, இங்குள்ள பலர் தனிப்பட்ட முறையில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் பரிச்சயம் உள்ளவர்கள். ஜெயமோகனின் எழுத்து வழியாக எங்களில் பலர் அவரை அறிந்து கொண்டோம். நாங்கள் அவர்களை சந்தித்து இருக்கிறோம். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை தனிப்பட்ட முறையில் அறிந்த எங்களில் பலருக்கு கூட கைத்தானை பற்றி தெரியாது. நாங்கள் ஜெகந்நாதனுடைய நினைவிடத்திற்கு சென்று இருக்கிறோம். அதற்கு அருகிலேயே கைத்தானின் நினைவிடமும் உள்ளது. ஜெகந்நாதனும் கைத்தானும் ஆக்கபூர்வ செயல் திட்ட செயல்பாட்டாளர்களின் இல்லங்களை அருகிருக்கும் குன்றிலிருந்து தாங்களே சுமந்து வந்த கற்களால் கட்டினர். இவர்களெல்லாம் வினோபாவின் வழிவந்தவர்கள். இப்போதும் கூட கிருஷ்ணம்மாள் வினோபாவை பற்றி பேசுவார். தமிழ்நாட்டில் காந்திய வட்டத்தில் உள்ளவர்களுக்கு கூட அவ்வளவாக தெரியாத கைத்தானை எப்படி கண்டு பிடித்தீர்கள்? 

ப- உங்களுடைய முதல் கேள்விக்கு சுருக்கமாக ஒரு பதிலை சொல்கிறேன் கண்ணன். வினோபா பற்றிய எனது கருத்து பெரிதாக மாற்றமடையவில்லை.. தனிப்பட்ட முறையில் அவரிடம் மிகுந்த துணிவிருந்தது, மகத்தான ஆன்மீக அறிவு இருந்தது. ஆனால் ஆக்கபூர்வ செயல் திட்டத்தை காந்தியின் நோக்கத்தின்படி எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில் அவருக்கு ஒரு தெளிவு இல்லை என்றே நான் எண்ணுகிறேன். காந்தி வேறொரு வகையில் முன்னெடுத்திருப்பார் என்று எண்ணுகிறேன். ஜே.சி குமரப்பா, மீரா பென் போன்ற அவரது சமகாலத்தவர்கள் கூட பூதான இயக்கத்தின் சில அம்சங்களை விமர்சித்தார்கள். விடுதலை அடைந்த பின் 30 ஆண்டுகள் அவர் வாழ்ந்திருந்தாலும், இந்து இஸ்லாமிய ஒற்றுமை அல்லது தீண்டாமை ஒழிப்பிற்காக அவர் எந்த இயக்கத்தையும் தொடங்கவில்லை என்பது இன்றும் கூட எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. ஆகவே வினோபாவை பொறுத்தவரை பெரும்பாலும் எனது கருத்தில் மாற்றம் இல்லை.

கைத்தான் பற்றி சில விஷயங்களை சொல்ல வேண்டும். அவர் ஒரு அமெரிக்கர். எனது Rebels against the Raj நூலில் அவரும் இடம் பெற்றுள்ளார். அவருடைய கடைசி காலத்தில் அவரும் வினோபா குறித்து விமர்சனங்களை முன் வைத்தார். அவற்றை எனது நூலில் மேற்கோள் காட்டி இருக்கிறேன். ஆனால் அவர் ஒரு அற்புதமான மனிதர். நவீன தமிழக வரலாறில் அவர் ஒரு முக்கியமான ஆளுமை என்பதால் இங்கு அவரைப் பற்றி பேசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  அவர் ஒரு மத போதகர். உப்பு சத்தியாகிரக காலத்தில் மதுரைக்கு வருகிறார். காந்தியால் ஈர்க்கப்பட்டு கதர் உடுத்த தொடங்குகிறார். அமெரிக்க மிஷன் அவரை வெளியேற்றுகிறது. மீண்டும் திரும்பி வருகிறார். பெங்களூரில் தலித் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து வேலை செய்கிறார். மீண்டும் ‘இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தின்’ போது அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்படுகிறார். பின்னர் 1947 ஆம் ஆண்டு ராஜாஜியின் அழைப்பின் பேரில் திரும்பி வருகிறார். காந்திகிராமை நிறுவியதில் பங்காற்றினார். கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகநாதன் மீது தாக்கம் செலுத்தினார். திண்டுக்கல்லுக்கும் ஒட்டன்சத்திரத்துக்கும் இடையிலான இடத்தில் குடியேறினார்.

அவரைப் பற்றி எப்படி அறிந்து கொண்டேன் என்று கேட்டதால் சொல்கிறேன், இங்கும் அங்குமாக, கொஞ்சம் கொஞ்சம் அவரைப் பற்றி எனக்கு தெரிந்திருந்தது. கைத்தான் குறித்து எனக்குள் உண்மையில் ஆர்வத்தை விதைத்தவர் பூமி ஜெகந்நாதன் தான். ஜெகந்நாதனின் மகன். அவர் கம்போடியாவில் உளவியல் மருத்துவராக இருக்கிறார். அவர் காந்திகிராமத்தில் காந்தியர்கள் சூழ கைத்தானுடன் சேர்ந்து வளர்ந்தவர். அவரால் ஈர்க்கப்பட்டவர். அவர் கைத்தான் குறித்தான தனது பாலிய கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அது எனக்கு அவர் மீதான ஆர்வத்தை தூண்டியது. பிறகு நான் ஒட்டன்சத்திரத்திற்கு சென்றேன். இரண்டு தமிழ் மருத்துவர்களுக்கு நான் கடன் பட்டுள்ளேன். ஒருவர் பூமி ஜெகந்நாதன் மற்றொருவர் டாக்டர் வினூ அறம். கோயம்புத்தூருக்கு வெளியே சாந்தி ஆசிரமம் என்று அழைக்கப்படும் நிறுவனத்தை நடத்தி வருபவர். அவர் என்னை ஒட்டன்சத்திரத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தி ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். கைத்தானுடன் பணியாற்றிய ஒரு தம்பதியினர் அங்கு இருந்தார்கள். கைத்தான் பணியாற்றிய அறையை எனக்கு காட்டினார்கள்.  அவரது புகைப்படம் அங்கு இருந்தது. அதை நான் எடுத்துக் கொள்ள அனுமதித்தனர். அங்கிருந்து இந்த கதையை நான் மறு உருவாக்கம் செய்து கொண்டேன். பூமி மற்றும் வினூ ஆகிய காந்திய பின்னணி கொண்டவர்களின் பிள்ளைகள், காந்திய பின்புலம் கொண்ட இரண்டு மருத்துவர்கள், கைத்தானின் கதையை மறு உருவாக்கம் செய்ய எனக்கு உதவினார்கள். இது குறிப்பிடத்தக்க ஒரு கதை.

இன்னும் ஒரு விஷயத்தை வினோபா சுதந்திர இந்தியாவில் செய்யவில்லை.  அவர் அரசுக்கு எதிராக சத்தியாகிரகத்தில் ஈடுபடவே இல்லை. ஆனால் கைத்தானும் ஜெகந்நாதனும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக சத்தியாகிரகங்களை முன்னெடுத்தனர் .  கோயில் நிலம் தொடர்பாக போராடி அதற்காக 60களில் சிறை சென்றனர். ஆகவே மிகவும் குறிப்பிடத்தக்க தம்பதியினர். கைத்தான் குறித்து என்னிடம் சொன்னதற்காக நான் பூமிக்கு நன்றி உடையவன் ஆகிறேன். கைத்தான் ஒர் அமெரிக்கர் , மார்ட்டின் லூத்தர் கிங் இந்தியாவிற்கு வந்த போது காந்திகிராமத்திற்கு வருகிறார்.  தன்னுடைய இறுதி கால எழுத்துக்களில் கைத்தான் தீண்டாமை மற்றும் அடிமைத்தனம் தொடர்பாக இனம் மற்றும் சாதி தொடர்பாக சுவாரசியமான ஒப்பீடு ஒன்றை நிகழ்த்துகிறார். அவர் அநீதிக்கு எதிராக உலகளாவிய அளவில் போராடக் கூடியவர் என சொல்ல முடியும்.

கே- டி.டி கோசாம்பி தொடங்கி டி.ஆர். நாகராஜ், ஆஷிஷ் நந்தி தொடங்கி நீங்கள் உட்பட இந்திய வரலாற்று ஆசிரியர்கள மார்க்ஸியர்கள் அல்லலு ஃபிராங்பர்ட் மார்க்ஸியர்கள். இதற்கு வெளியே வரலாற்று ஆசிரியர்கள் உள்ளார்களா. உதாரணமாக தரம்பாலை சொல்லலாம். அத்தகையவர்கள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

ப- கடந்த 40 ஆண்டுகளில் நான் எழுதியவற்றை கவனமாக படித்திருந்தால், இந்துத்துவத்தின் விமர்சனாக நான் இருந்ததை விட, நெடுங்காலமாக கம்யூனிசத்தின் விமர்சகனாக இருந்துள்ளேன் என்பதை புரிந்து கொள்வீர்கள். ஆகவே  இப்படி ஏன் அழைக்கப்படுகிறேன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்று என்னை

மார்க்சிஸ்ட் அல்லது இடதுசாரி என முத்திரை குத்துவது வழக்கமாகிவிட்டது. ஒரு கம்யூனிஸ்ட் ஏன் காந்தி குறித்து ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுத வேண்டும்? சூழலியல் என்பதே வர்க்கப் போராட்டத்தில் இருந்து ஒரு திசை திருப்பல் தான் என்று மார்க்சியர் கருதும் போது அதைப்பற்றி நான் ஏன் எழுத வேண்டும்? கிரிக்கெட் என்னும் பொழுதுபோக்கை பற்றி ஒரு கம்யூனிஸ்ட் ஏன் எழுத வேண்டும்?

ஆகவே நான் மார்க்சியன் அல்ல. நான் மார்க்சை வாசித்து இருக்கிறேன். அவரிடம் இருந்து சிலவற்றை எனக்குள் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். பிராங்க்ஃபர்ட் பள்ளி சார்ந்து எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் நவீன மானுடவியலை படித்து இருக்கிறேன். தாராளவாத அறிஞர்களை படித்திருக்கிறேன். நான் ஒரு ‘இந்திய தாராளவாதி’ இப்படித்தான் என்னை பற்றி நான் கூறிக்கொள்வேன். ஆஷிஷ் நந்தியும் மார்க்சியர் அல்ல. அவரும் மார்க்சியத்தை விமர்சன பூர்வமாகவே அணுகுகிறார். இந்துத்துவத்தை பிடிக்காது என்கிற ஒரே ஒரு பொதுத்தன்மை கொண்ட, பரந்துபட்ட வகையிலான சிந்தனையாளர்கள் பலரையும் மார்க்சியர்கள் என கருதுவது சற்று வினோதமாக தான் இருக்கிறது. டிடி கோசாம்பி, டி ஆர் நாகராஜ் ,ஆஷிஷ் நந்தி மற்றும் நான்- நாங்கள் இந்துக்கள் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் கொல்வதை விரும்புவதில்லை. அவ்வளவுதான். அது மட்டுமே எங்களிடம் உள்ள பொதுத்தன்மை. ஆனால் எங்களுடைய அறிவுத்தளம் வெவ்வேறானது.

நீங்கள் தரம்பால் குறித்து குறிப்பிட்டீர்கள். அவரை தனிப்பட்ட முறையில் நான் அறிவேன். எனக்கு நல்ல நண்பரும் கூட. எனக்கு ஆவண காப்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்பதில் சில பயனுள்ள யோசனைகளை கூறியிருக்கிறார். அவர் காந்தி மற்றும் மீரா பென்னின் வழி வந்தவர். பிற்காலத்தில் அவர் இந்துத்துவத்தை தழுவினார். இதற்கு என்ன உளவியல் காரணம் இருக்க முடியும்? காந்தியையும் மீரா பென்னையும் தொடர்ந்து வந்தவர் எப்படி பாபர் மசூதி இடிப்பை கொண்டாட முடியும்? இது குறித்து எல்லாம் என்னிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை. அவருடன் மாறுபாடுகள் இருந்தாலும் கூட அவர் மீது எனக்கு பிரியம் இருந்தது.

வரலாறு என்பது ஆவண காப்பகத்தில் நமக்கு கிடைப்பவற்றை அடிப்படையாக கொண்ட நிரூபணவாத துறை. நீங்கள் மார்க்சிய வரலாற்று ஆசிரியராகவோ இந்துத்துவ வரலாற்று ஆசிரியராகவோ இருக்க முடியாது. அறிவு ஜீவிகள் குறித்து சொன்னதைத்தான் இங்கும் சொல்ல வேண்டும். வரலாற்று ஆசிரியருக்கு கருத்தியல் பிடிப்பு இருக்கக் கூடாது. ஆவணத்தில் என்ன உள்ளதோ அதைத்தான் அவன் எடுத்துக் கூற வேண்டும். நீங்கள் மார்க்சிய வரலாற்று ஆசிரியராக இருந்தால், உங்களது தரவுகளை எப்படி வாசிக்க விரும்புவீர்கள் என்றால், எப்போதும் இஸ்லாமியர்கள் தவறானவர்கள் இந்துக்கள் சரியானவர்கள் என காட்ட விரும்புவீர்கள். நீங்கள் மார்க்சிய வரலாற்று ஆய்வாளர் என்றால் முதலாளிகள் தவறானவர்கள் தொழிலாளர்கள் சரியானவர்கள் என காட்ட விரும்புவீர்கள். வரலாறு இவற்றை விட மிகவும் சிக்கலானது.

தரம்பால் தன்னை சுதந்திரமான வரலாற்று ஆய்வாளர் என சொல்லிக் கொண்டார். ஆனால் அவரும் இந்திய தரவுகளை தான் பயன்படுத்தினார். டி ஆர் நாகராஜ் அப்படியல்ல. அவருக்கு கன்னடம், தெலுங்கு, ஹிந்தி எல்லாம் தெரியும். தரம்பால் ஒரு சுவாரசியமான மனிதர். ஆனால் எவருமே அவரை முக்கியமான வரலாற்று ஆசிரியராக கவனத்தில் கொள்ள மாட்டார்கள். அவர் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை கொண்டவன் என்ற வகையில் இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

கே- ஜனநாயகத்தின் மீதான அழுத்தம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல அமேரிக்கா ஐரோப்பா, இஸ்ரேல் உட்பட பல இடங்களிலும் காண்கிறோம். ஒருபக்கம் மக்கள் புதிய தொழில்நுட்பத்தை வளர்த்தேடுக்கிறார்கள், கல்வியறிவு பெருகுகிறது. ஆரோக்கிய நிலை உயர்கிறது. மறுபக்கம் பழமைவாத சிந்தனைகள் பெருகுகிறது. தங்களது கொள்கைகளில் சுருண்டு கொள்கிறார்கள். இந்த முரணை எப்படி காண்கிறீர்கள்?

இரண்டாவதாக, உங்களது முந்தைய பதிலின் தொடர்ச்சியாக கேட்க எண்ணுகிறேன். இன்றைய அரசியல் சூழலில் ஒருவர் சுதந்திரமான சிந்தனையாளராக அறிவுஜீவியாக இருக்க முனைகிறார் எனில் அவர் மீது பல்வேறு விதமான முத்திரைக்குத்தல்கள் விழுகின்றன. நீங்கள் மார்க்சியர், இந்துத்துவர், இப்படி. இதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? இதற்கு எதிர்வினை ஆற்றுவீர்களா அல்லது பொது இடத்தில் செயல்படுவதன் ஒரு பகுதி என கடந்து செல்வீர்களா?

ப- கார்த்திக்,  கேள்விக்கு பதில் அளிக்கும் தகுதி எனக்கு இல்லை. ஏனெனில் எனக்கு தொழில்நுட்பம் புரிவதில்லை. வேறொருவர் புனைவு குறித்து கேட்டார். சில பேசுபொருட்கள் உள்ளன- அவை எனக்கு புரியாதவை அல்லது சுமாராக புரிபவை. அவை குறித்து ஆழ கற்றவனுக்கு இல்லை. ஆகவே எனது எழுத்தில் தொழில்நுட்பம் குறித்து எவ்வித விவாதமும் இடம்பெறாது. பொருளியல் அல்லது திரைப்படம் குறித்து எதுவும் இருக்காது. இவையாவும் முக்கியமான பேசுபொருட்கள் தான். ஆனால் இவற்றில் எனக்கு நிபுணத்துவம் இல்லை. அரசியல், சமூகம், பண்பாடு, இவையே எனது துறைகள். ஆகவே உங்களது முதல் கேள்விக்கு என்னால் விடையளிக்க இயலாது.

உங்கள் இரண்டாம் கேள்வியைப்பொறுத்த வரை, இத்தகைய முத்திரைகுத்துதல் தவிர்க்க முடியாதது. நான் ராகுல் காந்தியை விமர்சிப்பவன் என்பதால் காங்கிரஸ் ஆதரவாளர்களால் இதேயளவு ட்ரோல் செய்யப்படுகிறேன். சுதந்திர சிந்தனை கொண்ட மகத்தான ஆளுமைகள் சிலரை சந்தித்த நற்பேறு எனக்கு வாய்த்தது. டி.ஆர்.நாகராஜ் ஒரு உதாரணம். டி.ஆர்.நாகராஜ் ஒரு மகத்தான இரு மொழி அறிஞர், கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் இயங்கினார், எனக்கு நெருங்கிய நண்பர். சரியாக 45 ஆவது வயதில் இறந்து போனார். அவர் மரணமடைவதற்கு முந்தைய நாள் மாலை அவருடன் காபி அருந்திக்கொண்டிருந்தேன். அவர் இன்னமும் என்னுடன் இருக்கிறார், என்னுள்ளே இருக்கிறார், என் மீது தாக்கம் செலுத்துகிறார். நேர்மையாக இருக்கும்படி என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

இப்படியான குறிப்பிடத்தக்க ஆளுமைகள் பலரை சந்தித்துள்ளேன், அதுவே என்னை தொடர்ந்து இயக்குகிறது. ஆண்களும் பெண்களும், இந்தியர்களும் அல்லாதவர்களும் என பல முன்னுதாரணங்கள் உண்டு. ஆகவே முத்திரை குத்துதல் பற்றி எல்லாம் நான் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் உரையாடலில் ஈடுபடுவது முக்கியம் என கருதுகிறேன். எனது மின் அஞ்சல் பொதுவெளியில் உள்ளது. நான் அவற்றுக்கு மட்டுமே பதில் அளிப்பேன். கண்ணன் கூட குறிப்பிட்டார்.

நான் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். பல சுவாரசியமான மனிதர்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறேன். இந்துத்துவர்கள் பலரிடமிருந்து கூட எனக்கு மின் அஞ்சல்கள் வரும். இப்போது அவை நின்றுவிட்டன. ட்விட்டரின் வருகைக்கு பிறகு வசையெல்லாம் பொது இணையவெளிக்கு மாறிவிட்டது. நான் அவற்றை காண்பது கூட கிடையாது. எனது மின் அஞ்சல் பொதுவில் உள்ளது, எனக்கு நேரடியாக விமர்சித்து எழுதலாம், சுனில் ஒரு காந்திய அறிஞர் , கன்னட காந்திய அறிஞர் டி.எஸ். நாகபூஷணத்துடன் சுவாரசியமான உரையாடல் ஒன்று நிகழ்ந்தது. கண்ணன் எப்படி வினோபாவை நேசிப்பதால் அவருக்கே உரிய காரணங்களை முன்வைத்து முறையிட்டாரோ, அவருக்கு அதற்கு எல்லாவித நியாயங்களும் உண்டு, அதேபோல் டி.எஸ். நாகபூஷணம்  லோகியா வழி வந்தவர். நான் லோகியாவிற்கு நியாயம் செய்யவில்லை என கருதினார். எனக்கு மின் அஞ்சல் செய்தார், ஆறு மாதங்களுக்கு மேல் நாங்கள் மின் அஞ்சலில் உரையாடினோம். அவை 25 பக்கங்களுக்கு மேலாக நீண்டன, தனிப்பட்ட மின் அஞ்சல்கள் தான். ஆனால் அதை அவரது இணையதளத்தில் வெளியிட்டுக்கொண்டார். எனக்கு அதில் மறுப்பேதும் இல்லை. நான் அவருக்கு பதில் அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். எவருடனும் உரையாட நான் மகிழ்ச்சியுடன் தயாராகவே இருக்கிறேன். ஆகவே தொடர்ந்து செயல்படவும். உரையாடல் அதீத வசையாக மாறும் என்றால் உரையாடலை நிறுத்திக்கொள்ளலாம்.

பல்வேறு விதமான மனிதர்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறேன். இளைஞகர்கள், முதியவர்கள், என இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுடன் உரையாடியிருக்கிறேன். அதற்காக நன்றியுடையவனாக இருக்கிறேன். நான் அறிந்த, என்னை விட துணிவு கொண்ட மனிதர்களின் நினைவுகளை கொண்டு எனது சுதந்திரத்தை நிலைநிறுத்திக்கொள்கிறேன். அவர்கள் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. சிலர் இன்னும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கிறார்கள். வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த, வெவ்வேறு மதங்களை சேர்ந்த, வெவ்வேறு சாதிகளை சேர்ந்த, வெவ்வேறு மெய்யியல் பார்வைகளை கொண்ட எழுத்தாளர்களையும் செயல்பாட்டார்களையும் நான் அறிந்து கொண்டேன் என்பது என் நற்பேறு. அவர்கள் சுதந்திரத்தன்மையை பேணிக்கொள்கிறார்கள். அது எனக்கு தெம்பூட்டுவதாக இருக்கிறது.

கே- வணக்கம், எனக்கு இரண்டு கேள்விகள், இந்தியா போன்ற ஒரு தேசத்தில் தொடர்ந்து வரலாறு மறு ஆக்கம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது, உதாரணமாக ஓரியண்டல் வரலாற்று எழுத்து, விளிம்பு நிலை வரலாற்று எழுத்து, இந்துத்துவ வரலாற்று எழுத்து இப்படி ஏதோ ஒன்று வருகிறது. இந்நிலையில் வரலாற்று ஆசிரியனின் பங்கு என்ன? அரசியல் கொள்கைகளின் சார்பற்று இருக்க வேண்டியது எத்தனை முக்கியம்?

ப- இது ஒரு முக்கியமான கேள்வி. வேறெந்த எழுத்துத் துறை மாதிரிதான் இதுவும். இதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது அல்லது குறைவான முக்கியத்துவம் தான் உள்ளது என்று ஏதுமில்லை. அரசியல் விமர்சகர், கவிஞர், புனைவு எழுத்தாளர் என்பது ஒரு உள்ளார்ந்த அழைப்பு, ஒரு தொழில், ஒரு திறன், நீங்கள் தொடர்ந்து உங்களை முன்னேற்றிக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும், உங்களது வழிகளை பாணியை மேம்படுத்திக்கொள்ள உழைக்க வேண்டும். நான் இப்படி சொல்கிறேன், என்னை வெறும் தொடர்புறுத்துபவன், சாட்சி, ஆவணப்படுத்துபவனாக மட்டுமே காண்கிறேன்.

நான் மாற்றங்களை உருவாக்குபவன் அல்ல.  சமூகத்தை மாற்றப்போகிறேன் எனும்  போலித்தனமான நம்பிக்கைகள் ஏதும் எனக்கில்லை. எப்படி நிகழ்வுகள் உண்மையில் நடந்தன என்பதை நம்பகமாக சித்தரிக்க முயல்கிறேன். தாக்கம் செலுத்திய பல்வேறு காரணிகளை ஆவணபப்டுத்துகிறேன். நீங்கள் அதை வாசிப்பதன் வழி கடந்தகாலத்திலிருந்து கொஞ்சம் பாடம் கற்க முடியலாம். உண்மையில் சமூகத்திற்கு யார் முக்கியமானவர்கள் என்றால், வரலாற்று ஆசிரியர்கள் சமூகத்திற்கு கொஞ்சம் கூட முக்கியமானவர்கள் அல்ல. மருத்துவர்களும் ஆசிரியர்களும் தான் முக்கியமானவர்கள். ஆனால் என்னால் என்ன செய்ய முடியும், என்னால் மருத்துவராக இருக்க முடியாது, ஆசிரியராக இருக்க முடியாது, இசை கலைஞராக இருந்திருக்க முடியும், ஆனால் அப்படியும் ஆகவில்லை. வேறெந்த திறனைப்போலத்தான் இதுவும், நேர்மையுடன், முனைப்புடன், முழுதளித்து செய்யுங்கள், தனிப்பட்ட முன்னேற்றம் குறித்து அக்கறையின்றி செயல்படுங்கள், மில்லியன் டாலர் ஈட்ட முடியும் என்பதற்காக ஒரு புத்தகத்தை எழுதாதீர்கள். அல்லது சாகித்திய அகாதமி விருது கிடைக்கும் என்பதற்காக எழுதாதீர்கள். இலக்கிய ரீதியான அல்லது அறிவார்ந்த சவாலை அளிக்கிறது என்பதற்காக ஒரு புத்தகத்தை எழுதுங்கள். இதைத்தான் சொல்ல விரும்புகிறேன்.

 

புகைப்படம் மோகன் தனிஷ்க்

நித்திலம் – ஒரு முயற்சி

முந்தைய கட்டுரைராணிமைந்தன்
அடுத்த கட்டுரைபைபிள் அறிமுக வகுப்புகள்- அறிவிப்பு