ராமச்சந்திரகுகாவுடன் உரையாடல்

ராமச்சந்திர குகா 18 டிசம்பர் 2023 ல் கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவில் விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடனான சந்திப்பின்போது வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்.

தொகுப்பு, எழுத்துவடிவம்: சுனில் கிருஷ்ணன்

ராமச்சந்திர குகா: தமிழ் விக்கி

சுனில் கிருஷ்ணன் தமிழ் விக்கி

கே- காந்தி ஏன் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்தவர் ஆக  இருக்கிறார்? 

ப- காந்தி வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்தவராகவும் இருக்கிறார் அதே சமயம் அவரைப் பற்றி எழுதுவது நோகடிக்கின்ற, எரிச்சல் ஊட்டுகின்ற விஷயமும் கூட. ஏனெனில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் அவரைப் பற்றி ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன.

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் சுனில், எனினும் நான் இதை சொல்ல வேண்டும், நான் எழுதிய முதல் வாழ்க்கை வரலாற்று நூல் காந்தியை பற்றியது அல்ல. நான் பல ஆண்டுகளுக்கு முன், அலைந்து திரியும் நாடோடியான ஆங்கிலேயர் ஒருவரை பற்றி எழுதியிருக்கிறேன். அவர் பெயர் வெரியர் எல்வின். அவர் ஒரு ஆக்ஸ்போர்ட் பட்டதாரி. இந்தியாவுக்கு வந்தார், காந்தியுடன் சேர்ந்து கொண்டார், திருச்சபையை விட்டு வெளியேறி மத்திய இந்தியாவின் பழங்குடியினருடன் சேர்ந்து வாழச் சென்றார். மேலும் அவர் பழங்குடி வாழ்க்கை தொடர்பாக பல உணர்வுப்பூர்வமான பதிவுகளை எழுதினார். அவர் அடிப்படையில் ஒரு கவிஞர், அங்கிருந்து மானுடவியலாளராக ஆனவர். அவரது உரைநடை மிளிர்ந்தது. கல்வித்துறை சார்ந்தவர்களுடைய உரைநடையை போல் இன்றி இலகுவாகவும் இருந்தது. அவருடைய வாழ்க்கை அற்புதமானது. இந்தியராக ஆன ஒரு ஆங்கிலேயர், திருச்சபையை விட்டு வெளியேறிய பாதிரியார், பழங்குடியினருடன் சேர்ந்து வாழ்ந்த உயர் குடி மனிதர், விடுதலைக்குப் பிறகு அவர்  அருணாச்சலப் பிரதேச விவகாரங்கள் தொடர்பாக இந்திய அரசின் ஆலோசகராக திகழ்ந்தார். கவிஞர் புனைகதை ஆசிரியர், ஓரளவு என்னை போன்றே சர்ச்சைக்குரிய ஆளுமை. அவர் எழுதிய கட்டுரைகளால் சர்ச்சைகளுக்குள் உள்ளானார், மக்கள் அவருடன் தொடர்ந்து விவாதித்தபடியே இருந்தனர். அவரைப் பற்றி நான் ஒரு வாழ்க்கை வரலாறு எழுதினேன். அந்நூலை நான் மிகவும் ரசித்து எழுதினேன்.  ஆனால் அதற்கு முன்பு வரை எவருமே எல்வினை பற்றி வாழ்க்கை வரலாறு எழுதியதில்லை. இனியும் அவரது வாழ்க்கை வரலாறை எவரும் எழுதப்போவது இல்லை.

இதற்கு அடுத்து நான் எழுதிய வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தலித் கிரிக்கெட் வீரரை பற்றியது.  அவரது பெயர் பல்வாங்கர் பாலு. A corner in the foreign field என்று ஒரு புத்தகத்தை எழுதினேன். நூற்றாண்டின் இறுதியில், பம்பாயில் வாழ்ந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மகத்தான தலித் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நூல் அது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கொஞ்ச காலம் முன்னர், ரஞ்சி கிரிக்கெட்டிற்கும் முன்னர், ஐபிஎல்லுக்கு 100 ஆண்டுகளுக்கு முன், 1911 ஆம் ஆண்டு அனைத்திந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டது. அந்த சுற்றுப்பயணத்தினுடைய நட்சத்திரம் பல்வாங்கர் பாலு எனும் தலித் கிரிக்கெட் வீரர் தான். பம்பாயில் அவர் மிகப்பெரிய அளவில் சாதி பாகுபாட்டை எதிர்கொண்டார். கிரிக்கெட் போட்டியின் நடுவில் தேநீர் இடைவெளி உண்டு என்பது உங்களுக்கு தெரியும். இவரால் அவரது சக வீரர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்த முடியவில்லை. தேநீர் அருந்த அவரது அணியினர் எல்லோரும் பவிலியனுக்கு செல்லும் போது, இவருக்கு மட்டும் ‘ஒருமுறை பயன்படுத்தப்படும்’ கோப்பையில் வெளியே தேநீர் வழங்கப்படும். ஆகவே அவரது வாழ்க்கையும் போராட்டமாக தான் இருந்தது.

அவர்தான் அம்பேத்கரின் முதல் நாயகன். இன்னும் சொல்வதானால், 1911 ஆம் ஆண்டு வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் நட்சத்திர வீரராக திகழ்ந்த பாலு நாடு திரும்பிய பொழுது, அம்பேத்கர் ஒரு புத்திசாலி இளம் மாணவனாக பிரசிடென்சி கல்லூரியில் பயின்று வந்தார். அம்பேத்கர் முதன்முறையாக ஆற்றிய பொது மேடை உரை என்பது பாலுவை கௌரவிக்கும் நிகழ்வில் தான். பாலு எனும் அற்புதமான தலித் கிரிக்கெட் வீரர் என்ன விதமான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்பதை பற்றி நான் ஒரு வாழ்க்கை வரலாறு நூலை எழுதினேன். ஒரு வரலாற்று ஆசிரியர் பாலுவின் மீது கவனம் செலுத்தியது இதுதான் முதல் முறை. இங்கு அமர்ந்திருக்க கூடிய சில இளைஞர்கள் இந்திய கிரிக்கெட் ஐபிஎல்லில் இருந்து தொடங்கியது என்று எண்ணக்கூடும். வேறு சிலர் 1983 உலக கோப்பை வெற்றியில் இருந்து தொடங்கியதாக நம்ப கூடும். ஆனால் அது 19ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது, அதன் முதல் மகத்தான கிரிக்கெட் வீரர் ஒரு தலித்  என்பதை கண்டடைந்து சொன்னதில் நான் ஒரு முன்னோடி.

ஆனால் நான் காந்திக்கு வந்த பொழுது, முழு  நூலகமே நிறையும் அளவிற்கு நிறைய புத்தகங்கள் உள்ளன என்பதைக் கண்டேன். ஆகவே புதிதாக நான் என்ன சொல்லி விட முடியும்? நான் காந்தியை பற்றி எழுதுவது என்பதில் தீர்மானமாக இருந்தேன். என்னிடம் சில சுவாரசியமான புதிய தகவல்கள் இருந்தன.  எனது பங்களிப்பாக காந்திய இலக்கியத்தில் அவற்றை சேர்த்திருக்கிறேன் என்று நம்புகிறேன். காந்தியை பற்றி எழுதுவது சவாலானது, கடினமானது. ஆனால் அதே நேரத்தில் நவீன இந்தியாவின் வரலாற்று ஆசிரியன் எனும் முறையில் அது முக்கியமானதும் தேவையானதும் கூட. ஏனெனில் காந்தி நவீன இந்தியாவின் மிக முக்கியமான, மிகுந்த செல்வாக்குடைய, மிகுந்த சர்ச்சைக்குரிய ஆளுமை  என்பதில் எனக்கு ஐயமே இல்லை. என்னைப் போன்ற ஒரு வரலாற்று ஆசிரியன் அவருடனான கணக்கை தீர்த்துக் கொள்ள வேண்டும். காந்தியைப் பற்றி எழுதாமல் இந்த உலகை விட்டு நீங்கி விடக்கூடாது. ஆகவே ஐந்தாயிரம் புத்தகங்கள் ஏற்கனவே காந்தியை பற்றி எழுதப்பட்டிருந்தாலும் நான் ஐந்தாயிரத்தி ஒன்றாவது புத்தகத்தை எழுதுவேன்.

கே- நீங்கள் அமித் வர்மாவுடன் நிகழ்த்திய உரையாடலை நான் கேட்டுக் கேட்டேன், அதில் நீங்கள் அவ்வளவாக புனைவு வாசிப்பதில்லை என கூறினீர்கள். ‘இந்தியா- காந்திக்கு பிறகு’ போன்ற நூலை வாசிக்கும் போது ஒரு வலுவான கதை சொல்லியின் இருப்பை உணர்கிறேன். நவீன இந்திய வரலாறு சார்ந்து நிறைய தகவல்கள் இருந்த போதிலும், அதிலிருந்து ஒரு சுவாரசியமான கதையை நீங்கள் உருவாக்குகிறீர்கள். சுனில் அவரது அறிமுகத்திலும் இதையே குறிப்பிட்டார் என எண்ணுகிறேன்.  இந்த இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்? 

இரண்டாவதாக, புனைவு வாசிப்பதில்லை என்பது ஒரு பிரக்ஞைப்பூர்வமான முடிவா? 

ப- அந்த பதில் முழுக்க நேர்மையான பதில் அல்ல. நான் அவ்வப்பொழுது புனைவிலக்கியம் வாசிக்கிறேன். இளம் வயதினனாக இருக்கும் பொழுது நிறைய வாசித்திருக்கிறேன். எனது உரைநடையின் ஒரு பகுதி நான் இளமையில் வாசித்தபோது நன்றாக எழுதிய ஆங்கில எழுத்தாளர்கள் வழி எனக்கு கிடைத்தது என்று நான் நம்புகிறேன். எனக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும் என்பதல்ல. சரளமாக ஆங்கிலம் பேச முடியும். இந்தியும் போதுமான அளவு தெரியும். வேறு எந்த மொழிகளும் முழுமையாக தெரியாது.  தமிழ் எனக்கு தெரியாது என்பதில் வருத்தம் தான். தமிழ் மட்டுமல்ல வேறு இந்திய மொழிகளும் தெரியாது.

இளமையில் நிறைய புனைவு வாசித்தேன். நான் வாசித்த எழுத்தாளர்களை பற்றி எண்ணிப் பார்க்கிறேன். உதாரணமாக எர்னெஸ்ட் ஹெமிங்வே, சோமர்செட் மோம் போன்றவர்கள், இன்னும் சிலர் அதிகம் அறியப்படாதவர்கள், துப்பறியும் கதைகளை எழுதியவர்கள்- ரெக்ஸ் ஸ்டவுட் (Rex Stout), ரேமண்ட் சேண்ட்லர் (Raymond Chandler)  போன்றவர்கள். இவர்களுடைய உரைநடைகள் கச்சிதமாகவும் துல்லியமாகவும் இருந்தன. உங்கள் கேள்வியின் இரண்டாம் பகுதிக்கான எனது பதில் என்பது, நான் எப்போதுமே இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றின் கிளையாகவே வரலாறை பார்க்கிறேன்.  வெறும் சமூக அறிவியல் மட்டுமல்ல. வெறும் இலக்கியம் மட்டுமல்ல. வரலாற்று ஆவணங்களை கொண்டு ஆய்வு செய்யும் வரலாற்று ஆசிரியர்கள் நமக்கு ஒரு கதையை மட்டும் சொல்கிறார்கள்.

கல்விப்புல வரலாற்று ஆய்வாளர்கள் நுணுக்கமாக ஆராய்ந்து, நிறைய தகவல்களுடன், சுவாரசியமற்ற கடினமான துறை சொற்கள் மலிந்த மொழியில், வாசிக்கவே முடியாத புத்தகங்களை எழுதுவார்கள். ஆனால் உங்களுக்கு ஒரு ஆய்வுச் சட்டகம் வேண்டும்.  ஓரளவு சமூகவியல், ஓரளவு அரசியல், ஓரளவு பொருளியல் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். அதே சமயம் உங்களால் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் முடிய வேண்டும். ஆகவே வரலாறையும் நான் இலக்கியத்தின் பகுதி என்றே நம்புகிறேன். புனைவுடன் ஒப்பிடும் பொழுது அது சற்றே தாழ்ந்த கிளையாக இருக்கலாம். புனைவைத் தவிர இரண்டாவது சிறந்த பிரிவு என வரலாற்றை சொல்லலாம். உங்களது பாராட்டுதலுக்கு நன்றி.

என்னால் டால்ஸ்டாய் அளவிற்கு எழுத முடியாது தான், ஆனால் வேறு பல புனைவு எழுத்தாளர்களை விட நன்றாகவே எழுத முடியும். நான் புனைவுகளை வாசிக்கிறேன். இந்தியா குறித்தான புனைவுகளை தவிர்க்கிறேன். ஏனெனில் எனது மொத்த வாழ்வும் இந்தியா குறித்ததே, சில விதிவிலக்குகள் உண்டுதான். நோய் தொற்றுக் காலத்தில் நான் டால்ஸ்டாயை வாசித்தேன்- போரும் வாழ்வும் மற்றும் அன்னா கரீனினா. மிடில் மார்ச் (ஜார்ஜ் எலியாட்) நாவலையும் வாசித்தேன். எப்போதைக்குமான மிகச் சிறந்த மூன்று நாவல்கள் இவை. அவற்றை வாசித்ததற்காக நான் மகிழ்கிறேன். இந்திய புனைவை நான் வாசிப்பதாக இருந்தால் நேரடி ஆங்கிலத்தில் அல்ல, மொழியாக்க நூலையே வாசிக்கிறேன்.

நான் அண்மையில் வாசித்த மிக அற்புதமான  புனைவு ஒன்றை அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். இவரை இதுவரை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அழைக்கவில்லை என்றால் இனிமேல் அழைக்க வேண்டும் என கோருகிறேன். இவர் ஒரு ஹிந்தி எழுத்தாளர். கியான் சதுர்வேதி என்ற பெயர். அவரது அலிபுரம் எனும் நாவல் சலீம் யூசுபியால் மிக அற்புதமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வட இந்திய சிறுநகரத்தில் சாதியம்,  ஊழல் மற்றும் மத உணர்வு குறித்து மிகுந்த நுண் உணர்வுடன் சமரசம் இன்றி எழுதப்பட்ட புனைவாகும். ஏனெனில் என்னால் புக முடியாத உலகம் அது. இந்திய ஆங்கில எழுத்தாளரின் உலகம் என்பது என்னுடைய உலகம் தான்.

இப்பொழுது நான் பிறமொழி இந்தியா இலக்கியங்களை வாசிக்க தொடங்கி இருக்கிறேன். இது ஒரு இலக்கிய அவை என்பதால் இது  சார்ந்து கடைசியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் இளைஞனாக இருந்த பொழுது என் மீது தாக்கம் செலுத்திய எழுத்தாளர்களில் ஒருவர் ஜார்ஜ் ஆர்வல். அவர் புனைவும் புனைவல்லாதவையும் எழுதினார். எவரோ குறிப்பிட்டது போல அவரது உரைநடை கண்ணாடி சாளரம் போல் தெளிவாக இருக்கும். எனது இலக்கிய வாசிப்பின் வளர்ச்சிப் போக்கில் உள்ள மிக முக்கியமான குறைபாடு , கவிதையின் மீதான ருசியை நான் வளர்த்துக் கொள்ளவே இல்லை என்பதுதான். இது எனக்கு இழப்புதான். என்னால் ஏன் கவிதை மீதான ருசியை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்றால், நான் இளைஞனாக இருந்த பொழுது கிரிக்கெட் விளையாட்டில் மிக அதிக நேரத்தை செலவிட்டேன். நீங்கள் கிரிக்கெட் பயிற்சி முடித்துவிட்டு திரும்பும் போது மிகவும் சோர்வாக இருப்பீர்கள். உங்களால் நாவலை வாசிக்க முடியும், சிறுகதையை வாசிக்க முடியும். ஆனால் கவிதையை வாசிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு முழுமையான , தெளிவான , புத்துணர்ச்சியுடைய, ஆற்றல் மிகுந்த மனம் வேண்டும். எனது மனைவியை பாருங்கள், கவிதைகளை வரி வரியாக சொல்வார். புனைவு அதிகம் வாசிக்கவில்லை என்பதல்ல, ஆனால் இது ஒரு இழப்புதான். முன்பே இதற்கு கொஞ்சம் நேரம் கொடுத்திருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்.

கே- வணக்கம் சார் உங்களுடைய பெரும் வாசகன் நான். கல்விப்புல வரலாற்று ஆய்வாளர் போல இல்லாமல் நீங்கள் பல மகத்தான வாழ்க்கைகளை பதிவு செய்திருக்கிறீர்கள். நீங்கள் வெரியர் எல்வின், பல்வாங்கர் பாலு, காந்தி போன்றவர்களுடைய வாழ்க்கை வரலாறை எழுதியிருக்கிறீர்கள். இப்பொழுது ‘Rebels against the Raj’  வெளிவந்துள்ளது. ஆனால் இது அப்பொழுது வழக்கத்தில் இல்லை. அப்பொழுது இல்லை என ஏன் சொல்கிறேன் என்றால் இப்பொழுது இது மாதிரியான வரலாறுகள் இந்திய வெளியில் எழுதப்படுகின்றன. எனினும் கூட நீங்கள் சஞ்சய் சுப்பிரமணியம் போல வரலாற்று அமைப்புகளை கோட்பாட்டு ரீதியாக விளக்கி எழுதுபவர் அல்ல. வரலாற்றை இப்படி அணுகுவது பற்றிய உங்கள் பார்வை என்ன என்பது ஒரு கேள்வி. இரண்டாவதாக நீங்கள் யாரைப் பற்றி எழுதுகிறீர்களோ அவர்கள் சார்ந்த எல்லையை உணர்கிறீர்களா? வெரியர் எல்வின் போன்ற ஒரு ஆளுமையை பற்றி நீங்கள் எழுதும் பொழுது, அந்த காலகட்டத்தை முழுமையாக சித்தரிப்பதில் அவரது ஆளுமை உங்களுக்கு ஒரு எல்லையை வகுப்பதாக உணர்கிறீர்களா? 

ப- எனது படைப்பு பற்றிய உங்கள் பார்வையை நான் சற்று மறுக்கிறேன். எனது வாழ்க்கை வரலாறு எழுத்து குறித்து சொல்வதானால், காந்தி மகத்தான மனிதர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் வேறு எவருமே எவ்வினை பற்றி நான் எழுதியதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை. பல்வாங்கர் பாலு குறித்து நான் எழுதுவதற்கு முன் எவரும் கேள்விப்பட்டதில்லை. Rebels against the Raj நூலில் கூட அன்னிபெசன்ட் என்னும் விதிவிலக்கை தவிர்த்து பிற அனைவருமே அவ்வளவாக வெளியே தெரியாதவர்கள். இவர்கள் எல்லாம் இடைநிலை ஆளுமைகள் என சொல்லலாம்.

எனது  வரலாற்று எழுத்துக்களில் காந்தி மட்டுமே ஒரே விதிவிலக்கு. உங்களுடைய கேள்வியின் இன்னொரு பகுதியை இன்னும் ஒரு நிமிடத்தில் எதிர்கொள்கிறேன். அதற்கு முன் வாழ்க்கை வரலாறு எழுதுவதில் மூன்று முக்கியமான விஷயங்கள் உள்ளன என்பதை சொல்ல விரும்புகிறேன். முதலாவதாக, யாரைப் பற்றி எழுதுகிறீர்களோ அவரைப் பற்றி அவர் எழுதிய கோணத்தில் இருந்து மட்டுமே சொல்லிச் செல்லக்கூடாது. காந்தியைப் பற்றிய இதற்கு முந்தைய எல்லா வாழ்க்கை வரலாறுகளும் 97 தொகுதிகள் கொண்ட அவரது தொகை நூல் தொகுப்பில் இருந்து  உருவாகி வந்தவைதான்.  நான் வேறு வேறு ஆதாரங்களை தேடிச் சென்றேன். காந்திக்கு வந்த கடிதங்கள், காந்தியை பற்றிய கடிதங்கள், உளவுத்துறை குறிப்புகள், நாளிதழ் கட்டுரைகள்  என பல பக்கங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு நாடகம் அல்லது ஒரு திரைப்படம் போல பெரும் எண்ணிக்கையிலான கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். அவர்கள் தங்களுக்கான வெளியை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என நம்புகிறேன்.

இரண்டாவதாக நீங்கள் யாரைப் பற்றி எழுதுகிறீர்களோ அவருடைய தோல்வியை சமரசம் இன்றி அணுக வேண்டும். ஒட்டுமொத்தமாக அவர் மீது உங்களுக்கு பரிவு இருக்கலாம், காந்தியை பொதுவாக எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் ஏன் பத்து வருடங்களை அவருக்காக செலவழிக்க வேண்டும்? ஆனால் அவரை குருட்டுத்தனமாக அணுகுவதில்லை. மூன்றாவதாக வாழ்க்கை வரலாறு என்பது வாழ்க்கையை காலத்துடன் பொருத்திப் பார்ப்பதாகும். ஆகவே காலம் என்னும் பெரிய திரையில் வாழ்க்கையை வரைந்து காட்டுவதாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு இளைஞர், ஆகவே எனது அண்மையகால நூல்களைப் பற்றியே அதிகம் அறிந்திருப்பீர்கள் என்பது உங்கள் குற்றம் அல்ல. உங்களுக்கு எத்தனை வயது என்று நான் கேட்கலாமா?

கேள்வி: இருபத்துநான்கு

ப:  சரி. எனது முதல் புத்தகம் நீங்கள் பிறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பதிப்பிக்கப்பட்டது. சரியா? அது இமாலயத்தின் வேளாண் இயக்கங்கள் பற்றி பேசியது. அதன் பின்னர் சூழலியல் தொடர்பாக எழுதினேன். அதன் பின்னர் அடித்தளத்தில் இருந்து சமூக வரலாறை எழுதி இருக்கிறேன். நான் மீண்டும் அங்கு திரும்பி செல்லக்கூடும். ஒரு வரலாற்று ஆசிரியனாக நான் கிரிக்கெட் குறித்து, சூழலியல் குறித்து மற்றும் வேறு சின்ன சின்ன விஷயங்கள் குறித்தும் எழுதியிருக்கிறேன்.

எனினும் தனி மனிதர்களின் சித்தரிப்பை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளேன் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் மாபெரும் ஆளுமைகளாக தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. அவ்வளவாக அறியப்படாத ஆளுமைகளாகவும் இருக்கலாம். நீங்கள் என்னுடைய பத்திகளை வாசித்து இருந்தால் தெரிந்திருக்கும், உதாரணமாக அண்மையில் இறந்து போன இரண்டு தொண்ணூற்றி ஐந்து வயதினரை பற்றி நான் எழுதினேன். அவர்கள் இருவருமே பொறியாளர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள நேர்ந்தது. இருவருமே கற்பதற்காக இங்கிலாந்துக்கு சென்று திரும்பியவர்கள். இருவருமே தனியார் பெரு நிறுவனங்களில் பணிக்கு சேரவில்லை. அரசு வேலையில் சேர்ந்தார்கள். ஒருவர் ரயில்வே துறையில் வேலைக்கு சேர்ந்து பரோடா பாம்பே இருப்புப் பாதையை மின்மயம் ஆக்கினார். இன்னொருவர் ஹச் ஏ எல் நிறுவனத்தில் சேர்ந்து சொந்த நாட்டில் விமானங்களை உருவாக்க உதவினார். பொது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் உடைய இரு பொறியாளர்கள். இந்தியாவில் பணி செய்தார்கள். யாருக்குமே அவர்களை தெரியாது. ஆனால் அவர்களுடைய வாழ்க்கையின் வழியாக ஒரு பெரிய கதையை சொல்ல முடியும்.

மேலும் 2014க்கு முன்பு இந்தியாவில் நிறைய மகத்தான மனிதர்கள், மகத்தான செயல்களை செய்து கொண்டிருந்தார்கள் என்பதை வாசகர்களுக்கு நினைவுறுத்த வேண்டும். காந்தியைத் தவிர நான் எழுதிய பிறர் அவ்வளவாக அறியப்படாதவர்கள். காந்தி மட்டுமே ஒரே விதிவிலக்கு. நீங்கள் சஞ்சய் சுப்பிரமணியத்தை பற்றி குறிப்பிட்டீர்கள், அவரது சிறந்த புத்தகம் என்பது வாஸ்கோடகாமா பற்றிய வாழ்க்கை வரலாறு. நல்ல வரலாற்று ஆசிரியர்கள், சஞ்சய் சுப்பிரமணியத்தை போல, அவர்கள் ஒரே வகையாக வகைப்படுத்துவதை விரும்புவதில்லை. ஒரே ராகத்தை மீள மீள பாட விரும்புவதில்லை.

கே- நான் என் பங்கிற்கு உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் அவ்வளவாக அறியப்படாத ஆளுமைகள் குறித்து எழுதுவதாக சொன்னீர்கள் காந்தியின் வாழ்க்கை வரலாறை நான் வாசிக்கும் பொழுது, எனக்கு ஆச்சரியம் ஏற்படுத்திய ஒரு ஆளுமை, ஷேக் மேத்தாப். காந்தி எழுதிய சுய சரிதையில் அவருக்கு புலால் உணவை அறிமுகப்படுத்திய அதே நபர்தான் பின்னர் அவரோடு தென் ஆப்பிரிக்காவில் சேர்ந்து வாழ்ந்து மீண்டும் தீய நடத்தையால் வெளியேற்றப்படுகிறார் என அறிந்து கொண்டேன். அத்துடன் முடியவில்லை. பின்னர் அவர் இந்தியன் ஒப்பினியினில் போராட்டம் குறித்து தொடர்ந்து கவிதைகளை எழுதி வருகிறார். இது ஒரு அற்புதமான கதை. அதே போல் சோனியா ஷெல்சின் ஒரு மகத்தான ஆளுமையாக வெளிப்படுகிறார். அவரைப்பற்றி நமக்கு இதற்கு முன் எதுவும் தெரியாது.  

ப- நான் எழுதிய காந்தியின் வாழ்க்கை வரலாறை எடுத்துக் கொண்டால், பொதுவாக காந்தியின் வாழ்க்கை வரலாறை அவரது பார்வையில் இருந்து, பார்வையில் இருந்து, ஹரிலாலினுடைய பார்வையில் இருந்து, அல்லது நேரு அல்லது பட்டேல் அல்லது சரோஜினி நாயுடுவின் பார்வையில் இருந்து எழுதுவது வழக்கம். அவ்வளவுதான். நியூயார்க்கில் வசிக்கும் எனது எடிட்டர் சன்னி மேத்தா உங்கள் நூலில் குறைந்தபட்சம் 150 சுவாரஸ்யமான கதை மாந்தர்கள் உள்ளார்கள் என்றார். அதை ஒரு மகத்தான பாராட்டாக நான் கருதுகிறேன். அவர்கள் சிறிய கதை மாந்தர்கள் என்பதல்ல, நாம் பிற கதை மாந்தர்களுடன் கொண்டுள்ள உறவின் படி வகுக்கப்படுகிறோம். நண்பர்கள் குடும்பத்தினர், எதிர் தரப்பினர், காதலர்கள், சகாக்கள் இப்படி பலர் மீது தாக்கம் செலுத்திய படி வாழ்கிறோம். சோனியா ஷெல்சின் அவரது செயலர். காந்தியை எதிர்த்து விவாதம் புரியக்கூடிய அளவுக்கு குறிப்பிடத்தக்க ஆளுமை கொண்ட  யூத பெண்மணி. அவரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஹென்றி மற்றும் மில்லி போலக்கும் அப்படித்தான். காந்தியை மட்டும் மையமாகக் கொண்ட ஒரு வாழ்க்கை வரலாறை எழுத நான் முயற்சிக்கவில்லை. முன்னரே குறிப்பிட்டது போல், ஒரு நாடகம் அல்லது திரைப்படத்தை போல காந்தி தான் மையக்கதாபாத்திரம், ஆனாலும் வெவ்வேறு சுவாரசியமான அசாதாரணமான மனிதர்கள் அதில் இருக்கிறார்கள்.

கே- வணக்கம் சார் நான் உங்கள் ‘கார்னர் இன் த ஃபாரின் பீல்ட்’ புத்தகம் வாசித்திருக்கிறேன். அதில் நீங்கள் மும்முனை நான்கு முனை 5 முனை கிரிக்கெட் போட்டிகளை பற்றி விவரிக்கிறீர்கள். ஒருவகையில் ஐபிஎல்லுக்கான முன்மாதிரி எனக் கொள்ளலாம். உங்களுடைய ஒரு பத்தியில், காந்தி எப்படி இந்த ஐந்து முனை போட்டியை வெறுத்தார் என எழுதி இருக்கிறீர்கள். ஏனெனில் அது மத ரீதியான பிளவுத்தன்மை ஏற்படுத்தி, ஆங்கிலேயர்கள் பிரித்தாளுவதற்கு ஏது செய்கிறது எனக்கருதினார். என் கேள்வி என்னவென்றால், இப்பொழுது காந்தி உயிருடன் இருந்தார் எனில், ஐபிஎல் குறித்து காந்தி என்ன நினைத்திருப்பார்? ஐபிஎல் என்பது இந்திய முதலாளித்துவ கிரிக்கெட் அமைப்பின் லாபம் குவிக்கும் போட்டி என்று கருதி இருப்பாரா? அல்லது இந்திய கிரிக்கெட்டை ஜனநாயகப் படுத்தி இருக்கிறது என கருதுவாரா? உதாரணமாக டெஸ்ட் போட்டி என்பது ஐந்து நாட்கள் நடைபெறுவது. பொருளாதார ரீதியாக வளமுள்ளவர்களே தங்களுடைய வாழ்நாளில் ஐந்து நாட்களை கொடுத்து டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும். ஆனால் 20 20 கிரிக்கெட் அதனுடைய முதலாளித்துவ கோர முகத்தை மீறி கிரிக்கெட்டை ஜனநாயகப் படுத்தி உள்ளது. வேறு வேலை செய்பவர்கள் கூட ஒரு நான்கு மணி நேரம் செலவழித்து கிரிக்கெட் விளையாடலாம் என்பதால் காந்தி இதை பாராட்டி இருக்க கூடுமா? 

ப- மிக நல்ல கேள்வி. காந்தியின் சார்பாக என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால் என் தரப்பாக ஒரு பதிலை சொல்ல முடியும். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட பொழுது நான் ஒரு பத்தி எழுதினேன், அதில் இப்படி குறிப்பிட்டு இருந்தேன் டெஸ்ட் போட்டி என்பது சிங்கிள் மால்ட் விஸ்கியை போன்றது, நீங்கள் ஒவ்வொரு மிடறையும் ரசித்திருப்பீர்கள், எல்லாவற்றையும் நினைவில் கொண்டிருப்பீர்கள்.  நல்ல கேட்ச் நல்ல விக்கெட் நல்ல பேட்டிங். 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பது இந்தியாவில் தயாரான வெளிநாட்டு மதுபானம் போல.

உங்களுக்கு ஓரளவு நினைவிருக்கும். ஏதோ ஒரு பேட்டிங் , ஒரு கேட்ச் இப்படி. 20 20 என்பது சாராயம் போல. குடி அடிமை ஒருவனுக்கு சிங்கிள் மால்ட் அல்லது இந்தியாவில் தயாரான வெளிநாட்டு மதுபானம் ஆகியவை கிடைக்காத பொழுது, வேறு வழியின்றி சாராயத்திற்கு செல்வது போல் ஐபிஎல்லுக்கு செல்வான். கிரிக்கெட்டை நேசிப்பவனாக அதனுடைய அழகியல் கோணத்திலிருந்து நான் இதை கூறுகிறேன். வேறொரு உவமையை பயன்படுத்துவதாக இருந்தால்,  நான் இந்துஸ்தானி சங்கீதத்தை விரும்பி கேட்பவன், கர்நாடக சங்கீதம் அவ்வளவாக கேட்பதில்லை எனினும் உங்களுக்கு இது புரியும், கர்நாடக சங்கீதம் பற்றிய எனது புரிதல் தவறு என்றால் என்னை திருத்தவும், ஒரு டெஸ்ட் போட்டி என்பது ராகம் தானம் பல்லவி போல, ஒரு முழு ராகத்தின் விஸ்தீரனம். ஹிந்துஸ்தானி இசையில் கயால் என சொல்வோமே அது போல். ஒரு நாள் போட்டி என்பது தும்பரி அல்லது ஜாவேரி போல. 20 20 என்பது சினிமா பாட்டு போல.  அது அதற்கு உரிய இடம் உண்டு.

இதையெல்லாம் சொன்ன பிறகும், ஒன்று சொல்ல வேண்டும், ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னர் முகுல் கேசவன் எனும் முக்கியமான எழுத்தாளர், அரசியல் மற்றும் கிரிக்கெட் பற்றி எழுதி வருபவர், உங்களில் சிலர் அவரை படித்திருக்க கூடும், அவர் தெற்காசிய அளவில் கிரிக்கேட் போட்டி இருக்க வேண்டும் என எழுதினார். லாகூர் லயன்ஸ் அணியின் கேப்டனாக வீரேந்திர சேவாக், ஜாப்னா டைகர்ஸ் கேப்டனாக வசிம் அக்ரம், தாக்கா அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கர், இப்படி ஒன்று நடந்திருந்தால் அது பல்வேறு பிராந்தியங்களை ஒன்றிணைத்திருக்க கூடும். காந்தி இதை ஏற்றுக் கொண்டிருக்க கூடும்.

தெற்காசிய அளவில் நடந்தால் இந்திய அணியினர் பாகிஸ்தான் அணியில் விளையாடக் கூடும். பாகிஸ்தான் அணியினர் வங்காளதேச அணியில் விளையாடக்கூடும். ஆனால் ஐபிஎல் என்பது இந்தியாவிற்குள் மட்டும் தான். பிசிசிஐயினுடைய அதிகாரத்தை குவிக்க ஏதுவாக இருக்கிறது. வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடலாம் ஆனால் இந்திய வீரர்கள் வெளிநாட்டு போட்டிகளில் விளையாட கூடாது. இது மிகவும் தவறானது. ஐபிஎல்லின் இந்த வடிவை காந்தி நிச்சயம் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். முகுல் கேசவன் எதை முன் வைத்தாரோ அதை அவர் ஏற்றிருக்கக் கூடும். மொத்த தெற்காசிய அளவிலான ஒரு போட்டி அதில் பல்வேறு தேசத்தவர்கள் இணைந்து விளையாடி இருந்தால் அங்கீகரித்திருப்பார்.

கே- எனக்கு இன்னொரு கேள்வி தோன்றியது இந்த கிரிக்கெட் நூலை வாசித்த பொழுது ஆங்கிலேயர்கள் கிரிக்கெட்டை தொடர்ந்து ஆண்மை மிக்க விளையாட்டு என விவரிப்பதை பார்க்க முடிந்தது. இந்த விவரனை எனக்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் கால்பந்து ரக்பி போன்றவற்றைத்தானே நாம் அப்படி தொடர்புபடுத்திக் கொள்வோம்.  

ப- நீங்கள் சொல்வது புரிகிறது. ஒழுங்கு நேர்மை போன்ற இயல்புகள் வழியாக ஆண்மை தன்மை என்று இது சுட்டப்படுகிறது.

கே- எனது பெயர் மோகன். எனது கேள்வி, ‘இந்தியா- காந்திக்கு பிறகு’ நூலை பற்றியது. அதன் இரண்டாவது பகுதியில்,, நேருவின் மரணம், அவசர நிலை,  என ஏதாவது ஒரு எதிர்பாராத விஷயம் நிகழ்ந்தால், வெளிநாட்டு ஊடகங்கள் ஜனநாயகம் மரணித்து விடும், இந்தியா துண்டாகிவிடும் என கணிக்கிறது. ஆனால் இந்த கணிப்பு ஒவ்வொரு முறையும் பொய்த்து தானே போயிருக்கிறது. ஏன் இந்தியாவின் உண்மை நிலையை இத்தனை துல்லியமற்ற முறையில் கணிக்கிறார்கள்? 

ப- நான் வெளிநாட்டு ஊடகங்களின் கணிப்பை பரிவோடு புரிந்து கொள்கிறேன். காந்திக்கு பிறகான இந்தியா நூலில் நான் முன்வைத்தது போல், நமது தேசம் என்பது அரசியல் வரலாற்றிலேயே மிகவும் கவனக் குறைவுடன் செய்யப்பட்ட ஒரு பரிசோதனை முயற்சியாகும். இத்தனை வேறுபாடுகள் உடைய இத்தனை பரந்த நிலப்பரப்பு இதற்கு முன் ஒரு தேசமாக உருவானதே இல்லை. பெரும் அளவிலான கல்வியறிவற்றவர்கள் வாழும் தேசம் ஜனநாயகமாக அதற்கு முன் திகழ்ந்தது இல்லை.

சோவியத் யூனியன் உடைந்தது. ஆஸ்திரியா ஹங்கேறியா பேரரசுகள் உடைந்தன. நிறைய தேசிய இனங்கள் உள்ள பெரிய நாடுகள் உடைய கூடும். ஆகவே நேரு தான் அதை இறுக பிடித்து இருக்கிறார் என எண்ணினார்கள். ஆகவே அடித்தளம் குறித்து இந்த சந்தேகங்கள் இருக்கவே செய்தன. இதன் அடித்தளம் எத்தனை வலுவானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பெரும்பாலான தேசங்கள் ஒற்றை மொழி அல்லது ஒற்றை மதத்தின் அடிப்படையில் உருவானவை என்பதால் அப்படி கருதினார்கள். சில இந்தியர்கள் இப்பொழுது இந்தியா ஒற்றை மொழியில் , ஒற்றை மதத்தின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களுடைய ஐயம் எங்கிருந்து வந்தது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

கே- திரு குகா அவர்களுக்கு, நீங்கள் பெங்களூர் இலக்கிய விழாவில் ஜனநாயகத்தில் ஆளுமை வழிபாடு குறித்து உரையாற்றியதை கேட்டேன். ஒரு ஜனநாயகத்தில் தனி மனிதனைச் சுற்றி எப்படி ஆளுமை வழிபாடு நிகழ்கிறது என்பதைக் குறித்து நீங்கள் பேசினீர்கள், தனி மனிதனின் இயல்புகள் எப்படி அவரைச் சுற்றி ஒரு வழிபாட்டை உருவாக்குகிறது என்றும் கூறினீர்கள். இதன் தாக்கம் எப்படி பத்திரிக்கை துறை, நீதித்துறை, ஆட்சிப் பணி உட்பட வெவ்வேறு அமைப்புகளில் உணரப்படுகிறது என்பதையும் சொன்னீர்கள். நீங்கள் குறிப்பிடாமல் விட்ட ஒரு பிரிவு என்பது அறிவு சமூகம். ஆளுமை வழிபாட்டை முன்னிறுத்துவதில் அறிவு சமூகத்திற்கு ஒரு பங்கு உள்ளது என்று நான் உணர்கிறேன். நாம் இப்பொழுது அறிவு சமூகத்தின் இடத்தை காணும் கோணமே மாறி இருக்கிறது. ஆளுமை வழிபாடு என்பதை அறிவு சமூகத்தின் ஒரு பிரிவினரால்தான் முன்னெடுக்கப்படுகிறது. மறுபக்கம் ஆளுமை வழிபாடு என்பது அறிவு சமூகத்தின் மீது கவிந்து அதன் உரையாடல் முறையை மாற்றி அமைக்கிறது. ஆகவே இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு அறிவு ஜீவியின் பங்களிப்பு என்பது எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்?

ப- இது மிக நல்ல கேள்வி. முதலில் உங்கள் கேள்வியின் இரண்டாவது பகுதிக்கு பதில் அளிக்கிறேன். அரசு தன் பங்கிற்கு அறிவு சமூகத்தை திசை மாற்றுகிறது என நீங்கள் சொல்வது மிகவும் தெளிவாக தெரிகிறது. அதில் எந்த குழப்பமும் இல்லை. டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை உதாரணமாக சொல்லலாம்.

எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சில உதாரணங்களை அளிக்க முடியும். அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் காந்தி குறித்து பாடம் எடுக்கும் ஒரு இருக்கைக்கு நான் தேர்வு செய்யப்பட்டேன். அது காந்தியின் நகரம். அதன் நிர்வாக அமைப்பிற்கு, இந்தியாவின் இரண்டு சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது, இருவருமே குஜராத்திகள், நீங்கள் யார் என ஊகிக்கலாம். நீங்கள் இவரை பணியமர்த்தக் கூடாது என்று சொன்னார்கள். உங்கள் மாநிலத்தில் உள்ள சென்னை ஐஐடியில் என்னை உரையாற்ற அழைத்தார்கள். ஆனால் நீங்கள் நேருவைப் பற்றி உரையாற்றக்கூடாது என்றார்கள். ஐஐடியை தொடங்கி வைத்தது நேரு தான்.

இவையெல்லாம் இருக்கிறது தான். ஆனால் அறிவு சமூகம் அவர்களை ஆதரிக்கிறது, முன் வைக்கிறது, அவர்களை பயன்படுத்திக் கொள்கிறது. சரிதான். ஆனால் ஏன் இதை செய்கிறார்கள்? ஏனெனில் பிற அறிவுச் சமூகத்தினர் அவர்களுடைய கட்சிகள் அதிகாரத்தில் இருந்தபோது இதையே செய்தார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தங்களது புத்தகங்களை மன்மோகன்சிங் கொண்டு வெளியிட்டவர்கள் இருந்தார்கள். திமுக ஆட்சியிலும்  இப்படி உண்டு. என்னைப் பொறுத்தவரை, அறிவு சமூகம் மட்டும் அல்ல எழுத்தாளர் இயக்குனர் கலைஞர் என படைப்பூக்க வெளியில் பணியாற்றும் எவராக இருந்தாலும், அவருடைய கடமை என்பது அரசியல் கட்சி மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து முழுமையாக தனித்து செயல்படுவது தான். இதன் பொருள் உங்களுக்கு அரசியல் பார்வைகள் இருக்கக் கூடாது என்பது அல்ல.  உங்களுடைய பத்திகளில் நீங்கள் தாராள சந்தையை ஆதரித்தோ, எதிர்த்தோ, இந்துத்துவாவை ஆதரித்தோ- எதிர்த்தோ, சூழலியலை ஆதரித்தோ- எதிர்த்தோ எழுதலாம். ஆனால் உங்கள் பொதுவாழ்விலோ, பணியிலோ ஒருபோதும் ஒரு தனி மனிதருடன் உங்களை பிணைத்து கொள்ள கூடாது. நான் இதை தொடர்ச்சியாக பின்பற்றுகிறேன்.

எனது தனி வாழ்வில் இருந்து இரு உதாரணங்களை கொடுக்க முடியும். ராகுல் காந்தி தனது யாத்திரையில் என்னை இணைந்து கொள்ள அழைத்தார். அது ஒரு நல்ல பரந்த சமிக்ஞை தான். நீங்கள் என்னை விமர்சிக்கிறீர்கள் என்பது தெரியும் எனினும் நீங்கள் இங்கு வரவும் என்றார்.  அவருக்கு பதில் எழுதினேன். நன்றி, உங்களது பெருந்தன்மையை மெச்சுகிறேன். ஆனால் நான் அங்கு வருவது சரியல்ல என்று நம்புகிறேன்.  உங்களுடன் ஒரு புகைப்படத்தில் இருக்கிறேன் என்றால் உங்களை நான் ஆதரிக்கிறேன் என்பதாகவே பொருள்படும். ஆனால் பிற மோதி எதிர்ப்பு அறிவுஜீவிகள் பலரும் சென்றார்கள். ராகுல் காந்தியுடன் இருந்தார்கள். அவர்கள் மகிழ்ந்தார்கள். ஏன் மகிழ்ந்தார்கள்? அவர்கள் இழிந்து விட்டார்கள் என்பதாலோ தன் முனைப்புடன் இருக்கிறார்கள் என்பதாலோ அல்ல. ஏனெனில் அவர்கள் அறிவு ஜீவியின் பணி என்ன என்பது குறித்து பிழையான பார்வையை கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மோதியை தோற்கடிக்க வேண்டும் என்றால் உங்கள் செவிகளில் நாங்கள் கிசுகிசுப்பதை கேளுங்கள் என்பார்கள். ஆலோசகரின் பங்கு என்ன என்பது குறித்து அவர்களுக்கு ஊதிப் பெருக்கப்பட்ட எண்ணம் உள்ளது.

இன்னும் அண்மையில், உங்கள் முதலமைச்சர், உங்கள் முதலமைச்சர் அல்ல தமிழ்நாட்டின் முதலமைச்சர், என்னை சர்வதேச புத்தக திருவிழாவிற்கு அழைத்தார். முதலமைச்சருடன் நான் அரங்கை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். நான் முடியாது என சொல்லி விட்டேன். அதே நேரம் நான் எந்த அரசியல்வாதியையும் தனிப்பட்ட முறையில் நேரடியாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பெங்களூரில் வசிக்கும் இடத்தில் என்னை சந்திக்க வேண்டும் என்றால் அவர்கள் தாராளமாக வரலாம். அவர்களுடைய எண்ணம் என்னவாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  அவர்களுடன் உரையாட நான் தயாராக இருப்பேன். வலது சாரி அறிவுஜீவிகள் மோதிக்கு அளிக்கும் அங்கீகாரம் என்பது பிழை. ஆனால் இந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது, இப்போதும் வழங்கிக் கொண்டிருப்பது மத பாகுபாடை எதிர்க்கும், முற்போக்கு தரப்பை முன்வைக்கும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் திமுக சார்புடைய அறிவு ஜீவிகள்தான். அறிவுஜீவிகள் முழுமையாக கட்சி மற்றும் அரசியல்வாதிகளுடைய சார்பற்ற்று இருக்க வேண்டும். உறுதியாக.

(மேலும்)

புகைப்படம் மோகன் தனிஷ்க்

நித்திலம் – ஒரு முயற்சி

முந்தைய கட்டுரைஎஸ்.பி. உதயசங்கர்
அடுத்த கட்டுரைவிழாவில் வளர்தல்