விழா, வெங்கடரமணன் கடிதம்

அன்பின் ஜெ,

நான் கலந்துகொள்ளும் (என்றுதான் சொல்லவேண்டும், பங்கேற்கும் என்று சொல்லும் அளவிற்கு நான் ஏதும் செய்யாத குற்றவுணர்ச்சி உறுத்திக் கொண்டேயிருக்கிறது) நான்காவது விஷ்ணுபுரம் விழா இது. 2016இல் வண்ணதாசனுக்கு அறிவிகக்கப்பட்டபோது முன்னரே அகம்-புறம் & அவரது கவிதைகள்  தந்த உணர்வுகள் காரணமாக ரொம்பவும் நெருக்கமாக உணர்ந்தேன். அப்போது விழா மேடை மட்டுமே ராஜஸ்தானி ‘ஸங்’கில்; மற்ற கலந்துரையாடல்கள் அனைத்தும் குஜராத்தி சமாஜின் சிறிய அரங்குகளில். இன்றைய அரங்குகளைப் அதனுடன் ஒப்பிடவே முடியாது.

முத்தாய்ப்பான நிகழ்ச்சியை முதலில் சொல்லிவிடுகிறேன். பா.ரா. தன் கட்டுரையில் குறிப்பிட்டதுதான் – ரம்யா தனது முதல் கேள்வியிலேயே ‘அலை உறங்கும் கடல்’ நாவலில் வரும் பாட்டியை ‘யதி’யில் வரும் பாட்டியுடன் ஒப்பிட்டு கேள்வியுடன் துவக்கியதில் பா.ரா. சொன்ன முதல் வாக்கியம் – *செமையா படிச்சிருக்கீங்க நீங்க*. பின்னர் தனக்கே உரிய நிதானம், நகைச்சுவை (‘வலதுசாரி, இடதுசாரியை விடுங்க, நான் ஒரு ஷிஃபான்சாரி கூட இல்லை’) என்று எல்லா கேள்விகளுக்கும் பா.ரவின் பதில்கள் வாசகனை லகுவாக உணரச்செய்தன.

 

உண்மையில் எனக்கு ஒரு நப்பாசை கூட இருந்தது. பாரா குறித்தான அரங்கை நான் ஒருங்கிணைக்க முடியுமா என்று (‘எப்படி ஜெயித்தார்கள்’ தொடங்கி, ஜங்ஷன், கிழக்கு, மெட்ராஸ் பேப்பர் மோன்றவற்றைப் பற்றியெல்லாம் கேள்விபட்டிருக்கிறேன்; அவரை ஓரளவு படித்திருக்கிறேன்). ஆனால் ரம்யா போன்ற ஒருவரின் கூர்மையான உழைப்பையும், அவதானங்கள், ஒருங்கிணைக்கும் திறமை இதெல்லாம் பார்த்தபிறகு (முன்னரே பார்கவி ஒருமுறை அவரது breathneck schedule பற்றிக் குறிப்பிட்டிருந்தார்) இதிலெல்லாம் நான் பயணிக்கவேண்டிய தொலைவு மிக அதிகம் என்று உணர்ந்தேன்.

சுபத்ராவும், லதாஅருணாசலம் அவர்களும் பங்கேற்ற மொழிபெயர்ப்பு குறித்தான அரங்கில் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது சுபத்ராவின் உரையாடலில் தாராளமாக இழையோடிய சகஜத்தன்மை. பொதுவாகவே அறிவியக்கத்தில் நாம் சிறிது தூரம் சென்றவுடனேயே நாம் இழப்பது நம் சகஜத்தன்மையை (முக்கியமாக பேச்சில்) என்றே உணர்ந்திருக்கிறேன். ஆனால் சுபத்ராவும், அதற்கடுத்த அரங்கில் பங்கேற்ற தீபு ஹரியும் இதற்கு விதிவிலக்குகளாகவே பரிமளித்தனர் (சென்ற ஆண்டு கமலதேவியின் அரங்கில் இதை உணர்ந்தேன். அளவெடுத்த மாதிரி இல்லாமல், அவரும் முக்கியமான அவதானங்களை முன்வைக்கும்போதும் மிகவும் இயல்பாக உரையாடினார்).

சுபத்ரா சொன்ன ஒரு விஷயம் எனக்கு மிகவும் உவப்பாதனாயிருந்தது – *obsession* என்ற சொல்லுக்கு அவர் பரிதவிப்பு என்ற பதத்தை ஒரு நீண்ட அவஸ்தைக்கு  பின் கண்டடைந்த தருணம் – ‘இது மாதிரியான சவால்களே தன்னை இது போன்ற செயற்கரிய செயல்களைச் செய்வதற்கு ஊக்குகின்றன’ என்ற அவரது கூற்று. பங்கேற்ற எவரும் செறிவும் அடர்த்தியும் குறையாமல் உரையாடினர். உரையாடல் எங்கும் தரைதட்டவோ, ஒரு வம்பாகவோ, பிலாக்கணமாகவோ இல்லை.

பெண் எழுத்தாளர் பங்கேற்ற அரங்குகளும்  நீங்கள் வலியுறுத்தும் காத்திரதன்மைக்கு சான்றாகவே அமைந்திருந்தன. தனிப்பட்ட முறையில் எனக்கு இவை உணர்த்திய செய்தி – அன்றாடம் எவ்வளவு சலிப்பூட்டினாலும் நம்மால் ஒரு கனவை, அறிவியக்கத்தின் ஒரு சிறிய முனையைப் பற்றிக்கொண்டு வெகுதூரம்  பயணிக்கமுடியும்  என்பது. தேவை சலிப்பில்லாத வைராக்கியம், நாம் சிரமேற்கொண்ட மகத்தான பணியின் மீதான காதல்.

செந்தில் அவர்களின் க்விஸ் வருடாவருடம் சுவாரசியமேறிக்கொண்டே செல்கிறது, கடினமாகவே இருந்தாலும். அவரும் என்ன செய்வார், முதலில் இதை well left விட்டுக்கொண்டிருந்த பெரும்பாலான வாசகர்கள் ‘இதையும் ஒரு கை பார்த்துடனும்‘ என்றஉத்வேகத்தில் பங்கேற்பதாகவே உணர்கிறேன். எனக்குப் மிகவும் பிடித்த கதையான ஜெயகாந்தனின்  ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ குறித்த பதிலை ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் சொல்லி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொன்டார்’.

சிறுபத்திரிகை குறித்தான ஒரு கேள்விக்கு கையுயர்த்திய பிறகு ஏதோ முடிவெடுத்து ‘சி.சு.செல்லப்பா’ என்றேன். அஜிதன் ‘க.நா.சு’ என்று சரியான பதிலைச் சொல்லி பரிசு பெற்றான். தமிழ் இலக்கியம் மட்டுமல்லாமல், பிற மொழி இலக்கியங்கள், திரைப்படங்கள் என்று மிகுந்த மெனக்கெடலுடன் அமைந்திருந்தன கேள்விகள். நிச்சயமாகத் தவறவிட்டிருகக்கூடாத நிகழ்ச்சி.

நிகழ்ச்சி முடிந்தபின் செந்திலிடம் கேள்விகளின் சுவாரசியத்தைப் பாராட்டுகையில்,  பரிசளிக்கப்படாமல் மீதமான புத்தகங்களை வெளியில் விற்பனையரங்கில்  கொண்டு வைக்க்ச் சொன்னார். நான் செந்திலைப் பார்த்து கேட்ட கேள்வி – “நான் இதிலே எதையாவது ஆட்டையைப் போட்டால் எப்படிக் கண்டுபிடிப்பீங்க”? (நம்ம புத்தி அப்படி!) ஒரு வினாடி கூட தாமதிக்காமல் என்னைப் பார்த்து ‘இதிலே உனக்கு எந்த புக் பிடிச்சிருக்கோ எடுத்துக்கோ” என்றுஆச்சரியப்படுத்தியதில் நான் நாணும் அவரது நன்னயம் வெளிப்பட்டது. செல்வேந்திரனின் “வாசிப்பது எப்படி” புத்தகத்தில் அடுத்த நாள் கையெழுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று பத்திரப்படுத்திக்கொண்டேன். ஆனால் கடவுள் அதைவிடவும் ஒரு பெரிய சந்தோஷத்தைப் பரிசளித்து செல்வாவின் வருகையைத் தடை செய்துவிட்டார்!

(நான் இந்த ‘க்விஸ்’ நிகழ்ச்சிக்கு முன்னரே பாலக்காடு செல்வதாகத் திட்டமிட்டிருந்தேன். நல்லவேளை அப்படிச் செய்யவில்லை)

அடுத்த் நாள் மதியம் குஹாவின் உரையாடல்; சுனில் கிருஷ்ணனின்  மொழிபெயர்ப்பில்; (2016இல் ஹெச்.எஸ்.சிவபிரகாஷின் பேச்சையும் சுனில்தான் மொழிபெயர்த்த நினைவு) சென்ற ஆண்டுகளில் ஜெய்ராம் ரமேஷின் பேச்சை ராம்குமார் மொழிபெயர்த்தது, ஒரு பதிப்பாளுமையின் பேச்சை ‘க்விஸ்’ செந்தில் மொழிபெயர்த்தது அனைத்திலும் நான் கவனித்தது அந்த கூர்மையான மேதமை, ஒருங்கிணைக்கும் ஆளுமை, தடுமாறவோ திணறவோ அல்லாத மொழிபெயர்ப்பாளர்களின் திறமை. மாபெரும் பொருட்செலவில் நடைபெறும் கருத்தரங்குகளில் கூட இவ்வளவு நேர்த்தியாக உரையாடல்கள் மொழிபெயர்க்கபடுகின்றனவா என்பது எனக்குத் தெரியவில்லை.

மதியம் நீங்களும் யுவனும் பங்கேற்ற உரையாடல். எனக்கு இன்றளவும் மிகவும் பிடித்த நகைச்சுவைக் கட்டுரை https://www.jeyamohan.in/167/ . யுவனின் மேதமை விஸ்தாரமாகப் பேசப்பட்ட இந்த அரங்கிற்குப் பின் அதை நினைவுகூர்ந்து வாசிக்கையில் அவரது அத்துணை குணநலன்களையும் நீங்கள் பதின்மூன்று வருடங்களுக்கு முன்னரே நகைச்சுவையைப் பின்புலமாகக் கொண்டு பட்டியலிட்டிருக்கிறீர்கள்.

உரையாடலில் யுவன் அவரது வழக்கப்படி அபாரமாக வெளிப்பட்டார். என்னை யுவனிடம் வசீகரிப்பது – அவரது நகைச்சுவை, (வாசகன் என்றல்ல) சக மனிதன் மீதான் வாஞ்சையுடன் கூடிய அக்கறை, தன் மேதமையைப் பறைசாற்றாமல் காலத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டு குறும்பு கொப்பளிக்கும் கண்களுடன் ஆர்வத்துடன் அமர்ந்து எதிர்காலத்தை கவனிக்கும் விசேஷ கவனம் என்று எளிதில் அறிமுகமாககூடிய ஒரு சஹிருதயன். உரையாடல் சிரிப்பும் கொண்டாட்டமுமாக  அரங்கை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

ஜாஜா  ஐந்தேகாலுக்கு வரச்சொல்லி கறாராக அறிவித்தும் 5.23க்கே வரமுடிந்தது. ஆவணப்படத் திரையிடலுக்கு முன்னரே ஐம்பது பேர் ‘ஸ்டான்டிங்’. ஆனந்த்குமாரின் இயக்கத்தின் அற்புதமான படம். (பார்க்கும்போதே இதை என் குடும்பத்தினருக்குக் காட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஏனோ இன்னும் யூடியூபில் காணோம்)

யுவனின் குடும்பத்தினரின் பகிர்தல்கள் – மகள் திருமணமாகிச் சென்ற மூன்று வருடங்களில் சுசீலா-ஜானகி இணைந்து பாடிய பாடலை பதினோரு முறையும் ஒரு முறைகூட அழாமல் கேட்கவியலாத அப்பா, அதைக் வைராக்கியமாகக் கேட்வே கேட்காத மகள், ‘எனக்காக சகலமும் செய்து கொடுக்கும் என் அப்பாவாக என் மாமனார்’ என்று மாட்டுபெண் சொன்னவுடன் அடுத்த காட்சி யுவன் ஆவி பறக்க ஃபில்டர் காபி கலந்து கொண்டுவந்து தருவது! கரட்டுப்பட்டி அருகிலிருக்கும் அவரது ஊர்க்காரர்களுடன் “நான் ஐயரோட மகன் தான்;யே அப்பா, அவரோட பையனா நீங்க” என்று சகஜமாக உரையாடுவதாகட்டும், அவரது மனைவி உஷாவிடம் “இங்க வா. பக்கத்துல உக்காந்துக்க; என்னை உன் ‘ஹஸ்பென்டா’ நினைச்சுக்கோ”… அவரைக் குறித்து உரையாடும் நீங்கள், தண்டபாணி, தேவதச்சன், அவரது கல்லூரி நண்பர்கள் முத்தாய்ப்பாக யுவன் அவர் பேரனை அலைபேசியில் கொஞ்சும் காட்சி…

உண்மையில் எனக்கு யுவனது குடும்பத்தை நினைத்து மிகவும் பெருமையாயிருந்தது. ஆனந்த்குமாரின் (  விக்கிரமாதித்யன் படமும் இவருடையதே) திரைப்படங்களில் அந்தந்த ஆளுமயின் முழு விஸ்தீரணமும் கச்சிதமாக, நுட்பமாக வெளிப்படுகின்றன. இதற்காகவே அவரது ‘டிப்.டிப்.டிப்’ கவிதைத் தொகுப்பை வாசிக்கவேண்டும் என்றெண்ணிக் கொண்டேன்.

பின்னர் மேடைப்பேச்சுகளில் சுவாரசியங்கள் – ராமச்சந்திர குஹாவிற்கு நகுலனும் சாந்தாவும் (திரிசடை) இரு பக்கத்திலும் நெருங்கிய உறவு, கே.சுவாமிநாதனும் அவ்வாறே (‘ஆனாலும் நான் தமிழ் படிக்காதது என் துரதிர்ஷ்டமே’ / ஒவ்வொரு முறையும் சுவாமிநாதன் இவருக்கு எழுதும் கடிதங்களில் பின்குறிப்பாக தமிழின் அவசியத்தை வலியுறுத்துவாராம்).

யுவனது சம காலத்தவரான எம்.கோபாலகிருஷ்ணன் உரையை நிறைவு செய்கையில் கேட்ட கேள்விகளுக்கு – மேடையில் அமர்ந்திருப்பது யுவனா, இல்லை சுகவனம்-இஸ்மாயில்-கிருஷ்ணன் மூவரும் கலந்த ஆளுமையா? யுவனின் கனவில் நடக்கும் இவ்விழாவை நாமும் பார்த்துக்கொண்டிருக்கிறோமா? அல்லது நம் அனைவரின் கனவிலும் நடக்கும் விழாவை பார்வையாளனாக நுழைந்து யுவன் பார்த்துக்கொண்டிருக்கிறாரா? – யுவன் தன் உரையில் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தேன். வழக்கம்போல் எதிர்பார்ப்பை தலைகீழாக்கிவிட்டார்

முன்னர் சாரு தன் ஏற்புரையில் சொன்னதுதான் நான் சொல்வதும் – அரசாங்கங்களும், பல்கலைக்கழகங்களும் எடுத்துச் செய்யவேண்டிய பல மகத்தான பணிகளை (தமிழ்விக்கி உட்பட) விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் மூலமாக தாங்களும் நண்பர்களும் தொடர்ச்சியாக ஒவ்வொரு முறையும் புதுமெருகுடன் ஒருங்கிணைத்து வருகிறீர்கள். ஒரு சமூகமாக இதன் முக்கியத்துவங்களை உணர்ந்து இன்னும் மிகுந்த பொறுப்புடன் செயலாற்றவேண்டிய பெருங்கடமை தமிழ்ச்சமூகத்திற்கு உள்ளதாகவே உணர்கிறேன். ஒருங்கிணைத்த அனைத்து நண்பர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள். வருங்காலங்களில் என்னைப் போன்ற பலரும் இயன்றவற்றைச் செய்ய இறைவன் அருள் புரியட்டும். நன்றி

அன்புடன்
வெங்கட்ரமணன்

bit.ly/pingvenkat | bit.ly/WhatsAppVenkat | twitter | blog

முந்தைய கட்டுரைமல்லசத்திரம் கல்திட்டைகள்
அடுத்த கட்டுரைபார்த்தசாரதி பங்காரு