விருது விழா 2023, இரண்டாம் நாள்

எத்தனை தாமதமாக தூங்கினாலும் விழாவன்று காலையிலேயே விழிப்பு வந்துவிடும். ராஜஸ்தானி அரங்குக்கு வெளியே பெருந்திரளாக கூடி பேசிக்கொண்டே இருக்கும் ஓசை எழுப்பிவிடும். அதன் பின் படுக்க முடியாது. அத்தனைபேரும் இலக்கியத்தில் திளைக்க நாம் மட்டும் தூங்கிக்கொண்டிருப்பதாக தோன்றிவிடும். உடனே எழுந்து பல்கூட தேய்க்காமல் முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே சென்றேன். அப்படியே நடந்து அணுக்கமான காபிக்கடைக்குச் சென்று காபி சாப்பிட்டு வந்தேன்.

செல்லும்போது பெரும்கும்பல் காபி குடித்து திரும்பி வந்துகொண்டிருந்தது. அவர்களை அப்படியே மடக்கி அடுத்த காபிக்கு திருப்பிக் கூட்டிச்சென்றோம். தன்னிச்சையாக விரியும் உரையாடல்கள் நையாண்டிகள் என ஓடும் அந்த சிறுநடை எங்களுக்கு நினைவலைகளை எழுப்புவதும் 2010 முதல் அந்த நடை ஆண்டுதோறும் நிகழ்கிறது.

மறுநாள் காலை 9 க்கு அர்வின்குமாரின் சந்திப்புடன் விழா தொடங்கியது. மலாய் இலக்கியம், மலாய் – தமிழ் உறவு குறித்த வினாக்களும் பல இருந்தன. அர்வின்குமார் மலாய் மொழி நன்கறிந்தவர். மலாய் பண்பாடு குறித்த ஏராளமான தமிழ்விக்கி பதிவுகளும் போட்டிருக்கிறார். மலாயாப்பழங்குடிகளைப் பற்றி தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்.

அர்வின்குமாருடனான வினாக்கள் அவருக்கும் மலாய் பண்பாட்டுக்குமான உறவு, அது அவர் எழுத்துக்களில் வெளிப்படும் விதம் ஆகியவை சார்ந்தே இருந்தன. அர்வின்குமார் அறிவியல் புனைகதைகளிலும் ஆர்வம் கொண்டவர். மலாய்ச்சூழலை பின்னணியாகக் கொண்டு அறிவியல் எழுதவேண்டும் என்னும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

அர்வின்குமார் அரங்கு. நடத்துபவர் ஜி,எஸ்,எஸ்,வி நவீன்அழ்

மலேசிய எழுத்தாளார் எஸ்.எம்.ஷாகீருடனான உரையாடல். அதை அர்வின்குமார் நடத்தினார். ஷாகிர் சில கேள்விகளுக்கு மலாயில் விளக்கம் அளித்தார். ஷாகிர் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசினார். சிலவற்றுக்கு மட்டுமே அவருக்கு மலாயில் விளக்கம் தேவைப்பட்டது. முந்தைய நாளே வந்து அரங்கை பார்வையிட்ட ஷாகீர் இங்கு நிகழ்வனவற்றைக் கண்டு மனநிறைவை அடைந்தவராக, தமிழிலக்கியச் சூழல் பற்றிய பெருமதிப்பு கொண்டவராக இருந்தார்.

ஷாகீரின் அரங்கின்போது மொத்த அரங்கமும் நிறைந்து பலர் வெளியே நிற்கும்படியாகியது. எல்லா வினாக்களையும் எதிர்கொள்ளக்கூடிய சூழல் இல்லை. ஐந்து மைக்குகள் எல்லா திசைகளிலும் சென்றாலும் ஒரு மணிநேரத்தில் அதிகபட்சம் பத்து வினாக்களுக்குமேல் இயல்வதாக இல்லை. ஆனால் அந்த கூட்டமும் நெரிசலுமே கூட ஒரு மகிழ்வளிக்கும் நிகழ்வுதான்.

இத்தகைய சந்திப்புகளின்போது உருவாகி வரும் புரிதல்கள் பலவகையானவை. மலாய் மொழியிலேயே அவ்வளவு பெரிய வட்டார வழக்கு வேறுபாடுகள் இருப்பது ஓர் ஆச்சரியம். இந்தோனேசியாவில் மலாய்மொழி பேசுபவர்கள் பெரிய எண்ணிக்கையில் இருப்பதும், இன்னொரு தேசம் என ஆகிவிட்டமையாலேயே அவர்கள் வேறொரு கலாச்சார – இலக்கியச் சூழலாக ஆகிவிட்டதையும் அவர் சொன்னபோது இன்னும் ஆச்சரியம். அது அவ்வாறுதான் நிகழமுடியும். இந்திய உருது இலக்கியம் வேறு பாகிஸ்தானிய உருது இலக்கியம் வேறு. இந்திய வங்கமொழி இலக்கியம் வேறு, வங்காளதேச வங்கமொழி இலக்கியம் வேறு.

இது ஏனென்றால் தொகுத்துக்கொள்வது இலக்கியத்தின் வழி அல்ல. அது அரசியலின் வழி. பிரிந்து வளர்வதே இலக்கியத்தின் இயங்குமுறை. பிரிந்து பிரிந்து நுட்பங்களை கண்டடைந்து அவற்றை விரிவாக்கிக் கொள்வதையே உலகமெங்கும் இலக்கியம் செய்கிறது. “The USA and Briton are two countries divided by one language” என்ற பெர்னாட் ஷாவின் பகடிமொழி நினைவுக்கு வருகிறது.

எஸ்.எம்.ஷாகீருக்கு சற்று காய்ச்சல் இருந்துகொண்டிருந்தது. அவரை ஓய்வெடுத்துவிட்டு மாலை நிகழ்வுக்கு வரும்படிச் சொன்னோம். செந்தில்குமார் அந்த நெருக்கடியான சூழலிலும் ஷாகீருடன் உடனிருந்து அவரை பார்த்துக்கொண்டார். குன்னூரிலிருந்து ராமச்சந்திர குகா கிளம்பிவிட்ட செய்தி வந்தது. அவர் மதியம் வந்து சேர்ந்ததும் அவரை வரவேற்கச்ச் செல்லவேண்டும் என்று என்னிடம் செந்தில்குமார் சொன்னார்

இந்த விழாவுக்கு வந்ததை இங்கே பார்த்தவற்றை ஷாகீர் அவருடைய மலாய் மொழி இணையதளத்தில் அவ்வப்போது பதிவிட்டபடியே இருந்தார். அவற்றை நண்பர்கள் மொழியாக்கம் செய்து அளித்தனர். அவை ஒவ்வொன்றும் ஒரு பாராட்டு மடல்கள். உலகமெங்கும் இன்று இலக்கியத்துக்கு ஒரு சோர்வுநிலை உள்ளது. இலக்கியம் கல்வித்துறை சார்ந்தவர்களால், முதியோரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றால் மிகையல்ல. இங்கே தூய இலக்கியம் இத்தனை இளைஞர்களை ஈர்ப்பதுபோல இன்று உலகிலேயே குறைவாகத்தான் பார்க்கமுடியும்.

யுவன் சந்திரசேகர் அரங்கை நான் ஒருங்கிணைத்தேன். நான் செய்வதற்கொன்றுமில்லை. யுவனிடம் கேட்பதற்கு வாசகர்களுக்கு ஏராளமான கேள்விகள் இருந்தன. ஒரு மணிநேரம் அறுபடாத உரையாடல். யுவனுடைய இசையார்வம், அவர் நாவல்களின் மாற்றுமெய்மை என்னும்  மாயக்கூறு, அவர் வடிவச்சோதனைகள் செய்வதற்குப் பின்னாலிருக்கும் புரிதல் ஆகியவற்றைப் பற்றிய வினாக்கள் வந்தபடியே இருந்தன.

யுவன் நல்ல உரையாடற்காரர். வேடிக்கையுடனும், தன்னைத்தானே மெல்லிய பகடிக்கு ஆளாக்கியபடியும் பேசினார். அவையில் பெருங்கூட்டம். இடம் கிடைக்காமல் வெளியே நூறுபேர் நின்றிருந்தனர். வெளியே ஒலிப்பெருக்கி வைத்து உரையாடலை கேட்கச்செய்திருந்தோம். ஐந்து மைக்குகளுடன் யோகேஸ்வரன் ராமநாதன், அனங்கன், கதிர் முருகன், காளி நண்பர்கள் சுழன்றுகொண்டே இருந்தனர்.

யுவன் அவருடைய உருவாக்கத்தில் பங்களிப்பாற்றிய ஆளுமைகளைப் பற்றிச் சொன்னார். சுந்தர ராமசாமி, தேவதச்சன் மற்றும் நண்பர் தண்டபாணி. தன் எல்லாக்கதைகளுமே தண்டபாணி முதலில் வாசித்துக் கருத்து சொன்னபின் வெளியிடப்பட்டவை என்றும் அவர் வாசிக்காவிட்டால் ஒருவேளை எழுதியிருக்கவே மாட்டேன் என்றும் சொன்னார். அவையில் இருந்த அவரை எழுந்து நின்று அனைவரும் பார்க்கும்படிச் செய்தேன்

தண்டபாணி எனக்கும் நண்பர். இலக்கியத்தில் அவ்வாறு ஒரு நீண்டகால நண்பர் அமைவது மிக அரிதானது. ஆனால் இலக்கியவாதிக்கு அப்படி ஒரு நண்பர் எப்போதும் தேவைப்படுகிறார். தன்னைத்தானே கண்ணாடியில் என முகம் பார்த்துக்கொள்ள. அவர் எழுத்தாளராக இருக்கலாம், வாசகராக இருக்கலாம். பல சமயம் அந்த இலக்கியநண்பர் மேல் இலக்கியவாதியின் குடும்பத்தினர் விலக்கமும் ஒவ்வாமையும் கொள்வதையும் கண்டிருக்கிறேன். தண்டபாணி யுவன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் மிக அணுக்கமானவர்.

தண்டபாணி

யுவன் சந்திரசேகருக்கு நாஞ்சில்நாடன் சால்வை அளித்து வாழ்த்துகூறினார். நாஞ்சில்நாடனின் பாதம் பணிந்து அந்த வாழ்த்துக்களை யுவன் பெற்றுக்கொண்டார். யுவன் சந்திரசேகருக்கு நினைவுப்பரிசை சு.வேணுகோபால் வழங்கினார். இந்த நிகழ்வுகளில் எழுத்தாளர்களே எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் முகமாக ஒருங்கிணைத்துள்ளோம். ஏனென்றால் இது ஓர் அமைப்பின் விழா அல்ல.சிற்றிதழ் சார்ந்த, தீவிர இலக்கிய ஆர்வலர்கள் ஒருவர் இன்னொருவரை கௌரவிக்கும் விழா. அந்த வகையில்தான் எல்லா நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

யுவன் சந்திரசேகர் மேல் அபிமானம் கொண்டவர் கார்திக் பாலசுப்ரமணியன். 16 ஆம் தேதி அவர் வந்தபோது அவருடைய நெருக்கமான உறவினரின் சாவுச்செய்தி கிடைத்தது. யுவனிடம் விடைபெற்று கிளம்பியவர் அச்சடங்குகள் முடிந்து மறுநாள் யுவன் விழாவுக்கு வந்துவிட்டார். அந்த அர்ப்பணிப்புதான் இலக்கியம் என்னும் அமைப்பை நிலைநிறுத்தும் விசை.

மதியம் ராமச்சந்திர குகாவுடனான உரையாடல். குகாவை நாங்கள் ஐந்தாண்டுகளாக அழைத்துக்கொண்டிருக்கிறோம். இங்குள்ள எவரோ எங்களைப் பற்றி தொடர்ச்சியாக மிக அவதூறான சித்திரத்தை அவரிடம் உருவாக்கிக் கொண்டிருந்தனர். அவ்வாறு ஒரு சித்திரம் நீண்டநாள் நீடிக்காதென்றும், அது உடைபடும்போது அவர்களுக்கே அதன் இழிவு என்றும் ஏன் அவர்கள் உணரவில்லை என்பது வியப்புதான்.

ஜெய்ராம் ரமேஷ் எங்கள் விருந்தினராக வந்தது ஒரு தொடக்கம். அவருக்கு தடைகள் போட்டவர்கள் பற்றி அவரே மேடையில் சொன்னார். அண்மையில் என் கட்டுரைகள் சில ஆங்கிலத்தில் ஃப்ரண்ட்லைன் இதழில் வெளிவந்தன. அவற்றை குகா கவனப்படுத்தியிருந்தார். அதன்பின்னரே அவருடைய இவ்வருகை இயல்வதாகியது.

கார்த்திக் பாலசுப்ரமணியன்

குகா எங்களுக்கு பலவகையிலும் முக்கியமானவர். இந்தியாவில் சமகால வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் மார்க்ஸிய நோக்கு கொண்டவர்கள். மார்க்ஸிய இலட்சியவாதம் நன்னோக்கம் கொண்டதாயினும் வரலாற்றைப்பற்றி எதிர்மறையான, சோர்வூட்டும் ஒரு சித்திரத்தையே அவர்கள் உருவாக்கினர். குகா நம்பிக்கையை, செயலூக்கத்தை அளிக்கும் வரலாற்றாசிரியர். காந்தியைப் பற்றிய அவருடைய நூல்கள் எல்லாமே ‘மண்ணில் நிலைகொள்பவை’ கூடவே அவை ஊக்கமூட்டும் சித்திரங்களும்தான்

குகாவுடனான அரங்கு மிகத்தீவிரமானதாக இருந்தது. குகா நூற்றுக்கணக்கான சர்வதேச மேடைகளில் பேசியவர். ஆகவே அவருடைய மொழியும் வெளிப்பாடும் மிகத்தேர்ச்சியடைந்தவை. விரிவான வாசிப்பு கொண்ட ஓர் அரங்கைச் சந்தித்ததாக குகா பின்னர் சொன்னார். அரசியல், கிரிக்கெட் என குகா எழுதிய வெவ்வேறு களங்களைச் சேர்ந்த வினாக்கள் எழுந்து வந்தன. குகா கொஞ்சம் உடல்நலம் குன்றியிருந்தார். ஆகவே நேருக்குநேர் வாசகர்கள் அவரைச் சந்தித்து நூல்களில் கையெழுத்து வாங்கும் நிகழ்வை விரிவாக ஒருங்கிணைக்க இயலவில்லை.

குகா அரங்கு. சுனில் கிருஷ்ணன் நடத்துகிறார்

18 டிசம்பர் மாலை கோவையில் ஐந்து இலக்கிய நிகழ்வுகள் இருந்தன என்று சொன்னார்கள். ஒன்று நாஞ்சில்நாடனுக்கு விருது வழங்கும் விழா. ஆனால் எங்கள் பங்கேற்பாளர்கள் தமிழகம் முழுக்க இருந்து வருபவர்கள். ஆண்டு முழுக்க நாங்கள் நிகழ்த்திவரும் இலக்கியச் செயல்பாட்டின் உறுப்பினர்கள். பலர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சிலர் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் வந்தவர்கள்.

ஆகவே நிகழ்வு தொடங்குவதற்கு முன்னரே அரங்கு முழுமையாக நிறைந்தது. முதல்முறையாக ஓர் இலக்கியக்கூட்டத்தில் நாற்காலிகளில் பைகளும் புத்தகங்களும் போட்டு இடம்பிடித்து வைத்திருப்பதைக் கண்டோம். நாற்காலிகளை நெருக்கிப்போட்டோம். எல்லா இடைவெளிகளிலும் நாற்காலிகளைப் போட்டோம். 600 இருக்கைதான் அங்கே வசதியானது. 800 இருக்கைகளுக்குமேல் போட்ட பின்னரும் நூறுபேர் வரை நின்றுகொண்டிருந்தார்கள். வெளியே நூறுபேர் நின்றிருந்தனர். அடுத்த ஆண்டு கொடீஷியா போன்று பெரிய அரங்குக்கு இடம் மாறவேண்டுமா என்னும் விவாதம் எங்களிடையே தொடங்கிவிட்டது.

ஆனந்த்குமார், எம்.கோபாலகிருஷ்ணன்

கவிஞர் ஆனந்த்குமார் எடுத்த , யுவன் சந்திரசேகர் பற்றிய ஆவணப்படமான ‘சுழற்பாதை யாத்ரிகன்’ திரையிடப்பட்டது. யுவன் குடும்பத்தினர் முன்னிருக்கையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு அது ஓர் வாழ்நாள் அனுபவம். அவர்களின் உணர்வுகளை சுருதிடிவி காணொளியில் பார்க்கையில் எனக்கும் நிறைவாக இருந்தது.

பெரும்பாலும் யுவனுடைய இல்லத்து இயல்பான நிகழ்வுகள் வழியாக ஓடிய ஆவணப்படம் ஒரு குறும்படம்போன்ற புனைவுக்குரிய ஒழுக்கும் கொண்டிருந்தது. பல தருணங்களில் பார்வையாளர்களின் கைதட்டலும், சிரிப்பும் ஒலித்துக்கொண்டிருந்தது. தான் பார்த்த எழுத்தாளர் ஆவணப்படங்களில் மிகச்சிறப்பானவற்றில் ஒன்று அது என என் அருகே அமர்ந்திருந்த குகா சொன்னார். மேடையிலும் சொன்னார்.

சுருதி டிவி கபிலனுக்கு மீனாம்பிகை

மேடை திரைவிலக யுவன் சந்திரசேகரின் மிகப்பெரிய ஓவியமுகம். வழக்கம்போல சண்முகவேல் வரைந்தது. நான் யுவனிடம் அதைப்பற்றி பின்னர் பேசும்போது ஒன்று குறிப்பிட்டேன். எழுத்தாளர்களுக்கு, குறிப்பாக அரசியலமைப்புகளைச் சாராமல் இயங்கும் சிற்றிதழ் சார்ந்த இலக்கியவாதிகளுக்கு, இப்படியெல்லாம் செய்யும் வழக்கம் தமிழகத்தில் இல்லை. ஏற்கனவே விஐபி என கருதப்படும் ஆளுமைகளுக்கே இதெல்லாம் செய்யப்படும்

எழுத்தாளர்களுக்கும் இவ்வாறு ஒன்றின்மேல் ஒரு கூச்சம் உண்டு. எழுத்தாளர்களின் புகைப்படங்களை இதழ்களிலும், நூல்களிலும் போடுவதே சரியல்ல என்னும் எண்ணம் இருந்தது. அதில் மாறுதலை கொண்டுவந்தது சுபமங்களா. எழுத்தாளர்களின் பேட்டிகளுடன் பெரிய படங்களை போட்டார்கல். நாங்கள் நடத்திய சொல்புதிது அட்டையில் மிகப்பெரிய வண்ணப்படமாக எழுத்தாளர் படங்களை போட்டோம். அதெல்லாம் அன்று பெரிய கலாச்சார அதிர்ச்சிகள்.

எழுத்தாளர்களின் படங்களுக்கு எதிராக கடுமையான கருத்து சொன்னவர் சுந்தர ராமசாமி. அது பற்றி அவரிடம் ஓர் விவாதம் நடத்தியதை நினைவுகூர்கிறேன். அந்தவகையான தனிப்பட்ட புகைப்படங்கள், தனிப்பட்ட செய்திகள் எல்லாம் வணிகக்கேளிக்கை எழுத்துக்குரியவை, இலக்கியத்திற்குத் தேவையில்லை என்றார் சுந்தர ராமசாமி.

அந்த மனநிலை இருந்தமையால் சென்ற தலைமுறை அறிஞர்கள் பற்றிய படங்கள் மிக அரிது. சி.சு.செல்லப்பா அவரே புகைப்படக் கலைஞராக இருந்தாலும் எழுத்தாளர்களை புகைப்படம் எடுக்கவில்லை. எம்.எஸ்.கல்யாணாசுந்தரம் படங்களை இப்போதுதான் அகழ்ந்து தேடி எடுத்து தமிழ் விக்கியில் ஆவணப்படுத்துகிறோம். ஆ.முத்துசிவன் படம் இன்றுவரை கிடைக்கவில்லை.

ஷாகுல் ஹமீது எம்.கோபாலகிருஷ்ணனுக்கு

நான் கேட்டேன். “உலகம் முழுக்க வணிகக்கேளிக்கை எழுத்தாளர்களுக்குத்தான் புகைப்படங்கள் வெளியாவதில்லை. அவர்களின் தனிப்பட்ட செய்திகள் வெளியாவதும் மிகக்குறைவு. ஆனால் இலக்கியவாதிகளின் ஏராளமான புகைப்படங்கள் வெளியாகின்றன. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முழுமையாக ஆவணப்படுத்தப்படுகிறது. அவர்கள் மறைந்தபின்னரும்கூட ஆய்வுகள் தொடர்கின்றன.”

“ஏனென்றால் வணிக எழுத்து என்பது ஓர் உற்பத்தி. அதில் பலருடைய பங்களிப்பு உண்டு. அந்த நுகர்பொருளே முக்கியம், அது எப்படி உற்பத்தி செய்யப்பட்டது என்பது நுகர்வோனுக்கு முக்கியம் அல்ல. விளம்பரத்திற்ககாக, ஒரு பிராண்ட் ஆக, அந்த எழுத்தாளரின் பெயர் அல்லது அடையாளாம் முன்வைக்கப்படலாம். ஆனால் இலக்கியம் அப்படி அல்ல. இலக்கியவாதியை தவிர்த்து இலக்கியம் இல்லை. அவனுடைய ஆளுமையின் ஒரு பகுதியே இலக்கியம். வாசகன் அந்த எழுத்தாளனுடன் மானசீக உரையாடலில் இருக்கிறான். ஆகவே அவன் முகம் முக்கியம் . அவன் வாழ்க்கை முக்கியம்”

இலக்கியவாதியை ஓர் ஆளுமையாக நினைக்காத நிலப்பிரபுத்துவ மனநிலை நிலவும் சமூகம் இது. அவனை பரிசில்வாழ்க்கை வாழும் இரவலனாகவே பொதுப்புத்தி இங்கே அணுகுகிறது. பெரியமனிதர்கள் பலரின் பார்வை எப்போதும் அதுவே. இங்குள்ள பாமர உள்ளம் அதிகாரம், பணம் இரண்டையே போற்றுகிறது. இச்சூழலில் இலக்கியவாதி தன்னை நிமிர்வுடன் முன்வைக்கவேண்டும். அது அவன் முன்வைக்கும் அறிவின், இலக்கியத்தின்மேல் அவன் கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளம். பணிவு, தணிவு, குழைவு போன்றவை இச்சூழலில் பாமரர் கொண்டுள்ள அந்த இளக்காரத்தை தானும் ஏற்றுக்கொள்வது மட்டுமே. அதைச்செய்யும் எழுத்தாளன் எனக்கு அருவருப்பூட்டுகிறான்.”

விஜய் சூரியன்

“என் தெய்வம் இலக்கியம். இத்தெய்வத்தின் அடியவன் நான். எனக்கு என் தெய்வம் மேல் மெய்யான பற்று இருந்தால் நாமார்க்கும் குடியல்லோம் என்னும் நிமிர்வே என்னிடம் எஞ்சவேண்டும். நான் எந்நிலையிலும் எழுத்தாளுமைகளையே தலைக்குடிமகன்களாக முன்வைப்பேன்” என்று சுந்தர ராமசாமிக்குச் சொன்னேன். ராமசாமி நான் சொல்லி முழுமையாக ஏற்றுக்கொண்ட விஷயங்களில் ஒன்று இது. அதன்பின் அவரே ஆவணப்படங்களில் ஈடுபட்டார். புகைப்படங்கள் வெளியாயின.

1999ல் சொல்புதிது இதழில் யுவன் சந்திரசேகரின் பேட்டி ஒன்று வெளியானபோது அவன் முகத்தை அட்டையில் வெளியிட விரும்பினேன். கடுமையாக எதிர்த்தார். ஒருவாறாகச் சமரசம் ஆகி கால் பங்கு படமாக அவருடைய புகைப்படம் வெளியாகியது. இன்று அவர் முகத்தை மேடையில் பிரம்மாண்டமாகப் பார்த்தபோது புன்னகை வந்தது.

விழா முறைப்படி குறித்த பொழுதில் தொடங்கியது. ராஜகோபாலன் ஒவ்வொருவரையாக மேடைக்கு அழைக்க விருந்தினர்கள் மேடையேறினர். பின்னர் யுவன் சந்திரசேகர் மேடைக்கு வந்தார். அரங்கசாமி விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் அறிக்கையை சுருக்கமாக வாசித்தார்.

விழாவில் ஒவ்வொருவரையாகச் சிறப்பிப்பதும் விழாவின் ஓர் அம்சம். அது ஒருவகை கடன். இவர்கள் பலர் இந்த விழாவுக்காகப் பணியாற்றுபவர்கள் அல்ல. ஆண்டு முழுக்க நிகழ்வுகளில் பங்காற்றிக்கொண்டிருப்பவர்கள். ஒவ்வொருவரையும் மேடையில் காண்கையில் எங்களை நாங்களே பாராட்டிக்கொள்கிறோம்.

விழாவை சிறப்புற ஒருங்கிணைத்து நடத்துபவர் செந்தில்குமார். கோவையின் புகழ்மிக்க குவிஸ் மாஸ்டர். ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்கிறார். விளையாட்டு வீரராக இருந்தவர். ஒவ்வொரு சிறு விஷயங்களையும் கவனித்து நிர்வாகம் செய்வது எப்படி என அவர் கற்றுத்தந்தார். விஷ்ணுபுரம் விழாவில் விருந்தினர் வரவேற்பு, அறை, பயணம் அனைத்துக்குமே இரண்டாவது திட்டம் ஒன்று இருக்கும். ஒவ்வொருவருக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்னொருவர் தேவையானால் அவருக்கு மாற்றாக அமைக்கப்பட்டிருப்பார்.

மீனாம்பிகை (விஷ்ணுபுரம் பிரசுரம்) வருகைகளையும் அரங்கையும் நெறிப்படுத்தினார். செல்வேந்திரன் ஊடகத்தொடர்பை கவனித்துக்கொண்டார். பயணம், அறைகளை சுதா ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்று நடத்தினார். உணவு, அரங்க அமைப்பு எப்போதும் போல விஜய் சூரியன். விருந்தினர்களை அழைப்பது முதல் ஒருங்கிணைப்பு வரை ராம்குமார் பங்களிப்பாற்றினார். டைனமிக் நடராஜன் எல்லாவற்றிலுமே பங்களிப்பாற்றி அனைவரையும் வழிநடத்தினார். ராஜகோபாலன் அரங்க நிகழ்வுகளை நடத்தினார். நரேன், சுசீல்குமார், ஆனந்த்குமார், ஷாகுல் ஹமீது, யோகேஸ்வரன் என நிகழ்வு முழுக்க இருந்து நடத்திய இளைஞர்களின் அணி பெரியது.

விஷ்ணுபுரம் அமைப்பு சார்பில் விருது அறிவிக்கையை செந்தில்குமார் வாசித்து அளிக்க செந்தில்குமாரும் அரங்கசாமியும் அமைப்பின் சார்பில் அதை யுவனுக்கு அளித்தனர். ஷாகிர் யுவனுக்கு மரியாதை செய்ய குகா விருதை அளித்தார். யுவனின் துணைவி உஷாவுக்கு சுதா ஸ்ரீனிவாசன் மரியாதை செய்தார்.

விருதுவிழா இப்போதெல்லாம் விரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டு காணொளிகளாக உள்ளது. சிறந்த உரைகள். உணர்ச்சிகரமான ஏற்புரை. விருதுபெறுபவர் வாழ்க்கையில் இது ஓரு முக்கியமான தருணம் என்பதனால் அவர் அதை தன் எழுத்துவாழ்க்கையில் உடன்நின்றவர்களுக்கு நன்றியுரைக்க பயன்படுத்திக் கொள்வதே வழக்கம்.

ஒவ்வொரு விஷ்ணுபுரம் விழா முடிவிலும் நிகழும் ஒன்றுண்டு. ஒரு கூட்டப்புகைப்படம். விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவரும் வருக என அறிவித்ததும் மேடைக்கு வரும் அனைவருமே விஷ்ணுபுரம் நண்பர்களே. நாங்கள் ஒரே திரள்.

அன்றும் தூங்க நீண்டநேரம் ஆகியது. பாடல்கள்தான் நெடுநேரம். பின்னர் தூங்கும்போது உருவாகும் விந்தையான மனநிலை விஷ்ணுபுரம் விழா முடிவில் ஒவ்வொரு முறையும் உருவாகிறது. இது முற்றிலும் என்னை தவிர்த்துவிட்டு முன்னகர்ந்து செயல்படுவதாக ஆகவேண்டும் என்னும் கனவு.

புகைப்படம் மோகன் தனிஷ்க்

நித்திலம் – ஒரு முயற்சி

முந்தைய கட்டுரைபார்த்தசாரதி பங்காரு
அடுத்த கட்டுரைகோவை சொல்முகம் இலக்கியக்கூடுகை டிசம்பர்