விழாவில் வெளியிடப்பட்ட நூல்கள்

wareen
ரேன் எழுதிய கிருமி. மொழியாக்கக் கதைகள்.

விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் இயல்பாக ஆங்காங்கே சிலர் நூல்களை கொடுக்க மூத்த படைப்பாளிகள் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு சென்ற ஆண்டுகளில் நிகழ்ந்தது. பின்னர் அதை சென்ற ஆண்டுமுதல் முறைப்படுத்தினோம். முன்னரே வெளியிடப்படும் நூல்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு மேடையில் அவற்றை ஒரு சிறுநிகழ்வு வழியாக வெளியிட ஆரம்பித்தோம்.

முறையான நூல்வெளியீட்டு விழா என இதைச் சொல்லமுடியாது. ஏனென்றால் நூல்களைப் பற்றிய அறிமுகம். உரைகள் எவையும் இல்லை. வெளியீடு மட்டுமே. மொத்தமே பதினைந்து நிமிடங்களில் முடியும் ஒரு நிகழ்வு. ஆனால் இதன் சிறப்பம்சம் அரங்கு நிறைந்து அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள் நடுவே, தமிழின் முக்கியமான படைப்பாளிகள் ஏறத்தாழ அனைவருமே பங்கேற்கும் நிகழ்வில் நூல்கள் வெளியிடப்படுகின்றன என்பதுதான். இளம்படைப்பாளிக்கு அது சிறந்த ஏற்பு.

ஜெயன் கோபாலகிருஷ்ணனின் நின்றெரியும் சுடர் வெளியீடு.

விழாவில் வெளியிடப்படும் நூல்கள் மீது ஓர் எண்ணிக்கைக் கட்டுப்பாடு தேவை என்ற எண்ணம் சென்றமுறை உருவானது. இல்லையேல் நூல்களுக்குக் கவனம் கிடைக்காமலாகிவிடும். வெளியிடப்படும் நூல்கள் மேல் விஷ்ணுபுரம் நண்பர்களின் பரிந்துரை ஒன்று உள்ளது. அதை கீழிறக்கிவிடலாகாது.

இந்த ஆண்டு 3 நூல்கள் வெளியிடப்பட்டன. நண்பர் நரேன் விஷ்ணுபுரம் அமைப்புடன் அணுக்கமானவர். அவர் மொழியாக்கம் செய்த கதைகள் இன்றைய சமகால உலக இலக்கியத்தை அறிந்துகொள்வதற்கான சிறந்த பலகணிகள். மிக இயல்பான நடையில் நேர்த்தியாகச் செய்யபபட்ட மொழியாக்கங்கள் அவை. கிருமி அவருடைய கதைகளின் தொகுப்பு. ஏற்கனவே ‘இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்’ என்னும் தொகுப்பு வெளிவந்துள்ளது.  நூலை எம்.கோபாலகிருஷ்ணன் வெளியிட கடலூர் சீனு பெற்றுக்கொண்டார்.

குமரிமாவட்டத்தில் முருங்கவிளை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவரான ஜெயன் கோபாலகிருஷ்ணனின் முதல் கதை இந்த இணையதளத்தில் புதியவர்களின் கதைகள் என்னும் வரிசையில் 2013ல் வெளியாகியது. (அப்பாவின் குரல் ஜெயன் கோபாலகிருஷ்ணன்) மேடையில் அவருடைய முதல் சிறுகதைத் தொகுதி நின்றெரியும் சுடர் வெளியாகியது  லக்ஷ்மி மணிவண்ணன் வெளியிட இளம் எழுத்தாளர் லெ.ரா.வைரவன் பெற்றுக்கொண்டார்.

சிறுகதையாசிரியராகக் கவனிக்கப்படும் படைப்பாளியாகத் திகழும் சுஷீல்குமார் எழுதிய சுந்தரவனம் என்னும் முதல் நாவல்.யுவன் சந்திரசேகர் வெளியிடஆனந்த்குமார்பெற்றுக்கொண்டார்.

சுந்தர வனம் வாங்க

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா, யுவன் உரை
அடுத்த கட்டுரைவிழா, கடிதம்