புயல் ஓய்ந்ததுபோல இருக்கும். விஷ்ணுபுரம் விருது விழா சிறப்பாக முடிந்தது. என் நண்பர் ஒருவர் தொடர்ந்து எனக்கு செய்தியும் படங்களும் அனுப்பினார். உங்கள் உரை வழக்கம்போல சிறப்பாக இருந்தது. வாழ்க்கை சுவாரஸ்யமாக இருப்பதற்கு அடிக்கடி தெய்வத்திற்கும் ஒரு role கொடுக்கவேண்டும்.
விழா சிறப்பாக நேர்த்தியாக ஒருவித நேர ஒழுங்குடன் நடந்ததாக நண்பர் சிலாகித்தார். இப்படி ஓர் இலக்கிய விழா தமிழ்நாட்டில் நடப்பதே இல்லை என்றார். கேட்பத்கற்கே பெருமையாக இருந்தது. தொடர்ந்து செய்யுங்கள். இது உங்கள் கனவு என்பது தெரியும். உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும் யுவனுக்கும் என் பாராட்டுகள்.
அன்புடன்
அ. முத்துலிங்கம்
அன்புள்ள முத்துலிங்கம் சார்
மிகச்சிறப்பாக விழா நடைபெற்றது. வெவ்வேறு வகையான பங்கேற்பாளர்கள். மிகப்பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். புதியதாக வாசிக்கவந்திருப்பவர்களே சிலநூறுபேர். ஏராளமான பெண்கள். உண்மையில் இலக்கிய விழா என நான் உத்தேசிப்பதே இதைத்தான். ஆகவே ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அவருக்கான ஒரு வாசகர்கூட்டம் இங்கே அமைந்தது. மிக மகிழ்ச்சியான இரண்டு நாட்கள்.
ஜெ