விஷ்ணுபுரம் விருது முதல்நாள், 2023

தாமரையின் பாடல்

இந்த ஆண்டு யுவன் சந்திரசேகருக்கு விருது என்னும் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். பின்னர் யுவனிடம் சொன்னபோது “என்னடா, யார்ட்ட சொன்னாலும் அதான் தெரியுமேன்னு சொல்றான்?” என்று கேட்டார். ”இதிலே எனக்கு பீதி என்னதுன்னா யார்லாம் விஷ்ணுபுரம் அமைப்பிலே இருக்காங்கன்னே தெரியலை…”

யுவன் விஷ்ணுபுரம் அமைப்புக்கு வேண்டியவர். விஷ்ணுபுரம் அமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரே அமைப்பு இன்றி நாங்கள் செயல்பட்டபோதே 2007 முதல் எங்கள் கவிதையரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறார். 2011 ல் யுவன் கவிதைகள் பற்றிய ஓரு கருத்தரங்கு கன்யாகுமரி விவேகானந்தர் மையத்தில் விஷ்ணுபுரம் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது. (யுவன் வாசிப்பரங்கு). 2011ல் பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டபோது அதில் கலந்துகொண்டார். அன்று முதல் எனக்கும் என் நண்பர்களுக்கும் அணுக்கமானவர்.

தீபு ஹரி அமர்வு . சுசீல்குமார் தொகுப்பாளர்

ஆகவே தொடக்கம் முதல் நண்பர்களிடையே ஓர் உற்சாகம் இருந்துகொண்டிருந்தது. தனிப்பட்ட நண்பர்களின் முன்னெடுப்பால் இந்த விருதுக்கான முன்பணிகள் ஓராண்டாகவே நடந்துகொண்டிருந்தன என்று சொல்லவேண்டும். யுவனுடனான இணைய உரையாடல்கள் நடைபெற்றன. நீண்ட உரையாடல் ஒன்று பதிவுசெய்யப்பட்டது. விருது அறிவிக்கப்பட்டதும் அனைத்தும் ‘முறையான’ செயல்பாடுகளாக ஆகிவிட்டன.

யுவனை ஆவணப்படம் எடுக்க கரட்டுப்பட்டிக்குக் கூட்டிச்சென்ற நண்பர் குயிஸ் செந்தில்குமார் சொன்னார். செல்லும்வழியெல்லாம் அவருக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன என்று. ஆஸ்திரேலியா முதல் கனடா வரை உலகமெங்கிலுமிருந்து. விஷ்ணுபுரம் விருது இன்று அவ்வளவு பேரால் கவனிக்கப்படுகிறது. அது நாங்கள் விருதளிக்கும் ஆளுமைகளால், அவ்விருதை நாங்கள் அளிக்கும் விதத்தால் அமைந்த மதிப்பு.

கனலி விக்னேஸ்வரன் அமர்வு. விஜயசாரதி தொகுப்பாளர்

கோவைக்கு நான் வெள்ளிக்கிழமை காலையிலேயே வந்துவிட்டேன். ஃபார்ச்சூன் சூட்ஸில் தங்கியிருந்தேன். அருண்மொழியும் சைதன்யாவும் அஜிதனும் கோவையில் ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் – கிருபாலட்சுமி இணையரின் இல்லத்தில் தங்கியிருந்தனர். அன்றுமுழுக்க விஷ்ணுபுரம் நண்பர்கள் செந்திலின் ‘ஆணைப்படி’ செயல்பட்டுக்கொண்டிருந்தனர். எனக்கு எதிலும் எவ்வகையிலும் தலையிடக்கூடாது, எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்று ஆணையிடப்பட்டிருந்தமையால் வெறுமே நகம்கடிப்பதை மட்டுமே செய்துகொண்டிருந்தேன்.

யுவன் சந்திரசேகரும் குடும்பமும் காலை கிளம்பி மாலை வந்தனர். பா.ராகவன் வெள்ளி மாலையில் வந்தார். எஸ்.எம்.ஷாகீர் மாலையில் சற்றுப்பிந்தி வந்தார். அவருடைய விமானம் சென்னையில் மூன்றுமணிநேரம் பிந்தியது. சென்னையில் மழையும் முகில்மூட்டமும் இருந்தன. நண்பர்கள் ஒவ்வொருவரையாக அழைத்துக்கொண்டுவந்து விடுதியில் சேர்த்தனர். நான் அவர்களைச் சந்தித்து முகமன் உரைத்து வரவேற்று அறைசேர்க்கும் பணியைச் செய்தேன்.

மறுநாள் காலையில் நான் ஐந்தரைக்கே எழுந்துவிட்டேன். ஆனால் எந்தப்பணியிலும் எனக்கான எழுத்துப்பணியை நிறுத்தலாகாது என்பது எனக்கு நான் இட்ட நெறி. மறுநாள் எனக்கு பொழுதிருக்காது என்பதனால் ஒருநாள் பணியை கூடுதலாகவும் செய்யவேண்டும். அதை முடித்து குளித்து ராஜஸ்தானிசங் அரங்குக்குச் செல்வதற்கு எட்டு மணியாகிவிட்டது. அதற்குள் அங்கே அரங்கும் முகப்பும் ஒருங்கிவிட்டிருந்தன. ஏராளமான நண்பர்கள் வந்து அப்பகுதியெங்கும் நிறைந்து நின்றிருந்தார்கள்.

இம்முறை தங்குமிடம் பதிவுசெய்துகொண்டவர்கள் 320 பேர். கூடுதலாக விஷ்ணுபுரம் நண்பர்களாக ஐம்பதுபேர். குஜராத்தி சங் மண்டபம், ராஜஸ்தானிபவன், ராஜஸ்தானி சங்க் அரங்கு உட்பட பல இடங்களில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தோம். இந்த தங்குதல்கள்தான் விஷ்ணுபுரம் நிகழ்வின் மிகச்சிறந்த பகுதி என நினைக்கும் பலர் உள்ளனர்.

வாசு முருகவேல் அமர்வு. விக்னேஷ் ஹரிஹரன் தொகுப்பாளர்

நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.இளம் வாசகர்களாக தயக்கத்துடன் வருபவர்கள் பலர் சட்டென்று எழுத்தாளுமைகளுடன் நட்புகொள்கிறார்கள். தங்களைப்போன்ற இளைஞர்களுடன் நட்பாகிறார்கள். ஒரு தீவிர உரையாடல் தொடங்குகிறது. அவ்வாறு வந்த பலருக்கு விஷ்ணுபுரம் அரங்கு அடுத்த ஆண்டு அவர்களின் சொந்த நிகழ்வு போல் ஆகிவிட்டிருப்பதைக் காண்கிறேன்.

செய்யக்கூடாத ஒன்றுண்டு. சிற்றிதழாளர் பலர் அதைச்செய்வதுண்டு. ஒரு சிறுகுழுவாக வந்து குழுவாகவே அங்கே இருப்பார்கள். தங்களுக்குள் பேசிச்சிரித்துக்கொள்வார்கள். அது களிப்பூட்டுவதுதான். ஆனால் ஆண்டு முழுக்க எவரிடம் பேசுகிறோமோ, எச்சூழலில் இருக்கிறோமோ அதையே அங்கேயும் கொண்டுவந்து அதற்குள் புழங்கும் அசட்டுத்தனம் அது.

தனியாக வருவதே உகந்தது. அமர்வுகளில் உண்மையான ஈடுபாட்டுடன் உள்நுழைகையில் உருவாகும் புதிய திறப்புகள் பலருக்கு அவர்கள் எத்தனை பின் தங்கியிருக்கிறார்கள் என்பதை முகத்திலறைவதுபோலக் காட்டும். இலக்கியம் அரட்டை இன்றி வளராது, மகிழ்வூட்டாது. ஆனால் திரும்பத் திரும்ப ஒரே கூட்டத்துடன் அரட்டை அடிப்பது தேங்கவைக்கும்.

விஷ்ணுபுரம் விழா போன்ற ஒன்றில்தான் அத்தனை புத்தம்புதிய வாசகர்களைக் கண்டடைய முடியும். எழுதுபவர்கள் அவர்களைத்தான் சந்திக்கவேண்டும். அவர்களுடன் பழகவேண்டும். வாசகர்கள்கூட தங்களைப்போன்ற, தங்களைவிட இளைய புதிய வாசகர்களுடன் அங்கே ஓர் அறிமுகத்திறப்பை உருவாக்கிக்கொள்ளவேண்டும். கலவையாக அனைவருக்கும் ஒரே இடத்தில் தங்குமிடம் அமைப்பது அதனால்தான். நான் எப்போதுமே அப்படி பொது இடத்திலேயே தங்குகிறேன்.

விஷ்ணுபுரம் விழாவைப் பற்றி ஷாகீர் ஓர் அவதானிப்பைச் சொன்னார். அத்தனை இளம் வாசகர்களை மலேசியாவிலோ வேறெங்குமோ ஓர் இலக்கியநிகழ்வில் பார்ப்பது இயல்வதாக இல்லை– அவர்கள் மாணவர்களாக இருந்தாலொழிய. ராமச்சந்திர குகா நிகழ்வில் அத்தனை பெண்கள் பங்கெடுப்பதை வியப்புடன் சொன்னார். இவ்விரு அம்சங்களும்தான் விஷ்ணுபுரம் ஓரு மெய்யான இலக்கிய இயக்கம் என்பதற்கான சான்றுகள்.

இலக்கியநிகழ்வுகள் மையநோக்கமே அற்ற அரட்டைகளாக, பூசல்களாக, குடிக்கேளிக்கைகளாக சிறுமைகொண்டிருந்த வேளையில் விஷ்ணுபுரம் நிகழ்வுகள் ஒருங்கமைக்கப்பட்டன. மிகக்கறாரான நெறிகள் பேணப்படுவனவாக இவற்றை அமைத்தோம். ஒவ்வாதவர்களை விலக்கினோம். அன்று கடும் வசைகளும் விமர்சனங்களும் ஏளனங்களும் இதன்பொருட்டு எங்கள்மேல் உருவாயின.

அவ்வாறு பேசியவர்களால் ஏதும் எவ்வகையிலும் செய்யமுடியவில்லை. ஆனால் அந்த ஒழுங்கே விஷ்ணுபுரம் அமைப்பை ஓர் இலக்கிய இயக்கமாக ஆக்கியது. இத்தனை படைப்பாளிகள் இங்கிருந்து உருவாக வைத்தது. இன்று எந்த எழுத்தாளரும் தங்கள் சரியான வாசகர்களை இங்கேதான் கண்டடைய முடியும். அதை ஏறத்தாழ அனைவருமே கூறியுள்ளனர். எங்கள் சாதனை என்பது பெண்களின் பங்களிப்பே என இன்று நினைக்கிறோம்.

இலக்கிய நட்புக்கூடல் என்பதன் தேவையை நிறுவிக்கொண்டே இருக்கின்றன இத்தகைய சந்திப்புகள். தொழிற்சங்கங்கள் முதல் அரசியல்கட்சிகள் வரை எல்லா அமைப்புகளுக்கும் இது அவசியமானது. அந்த அமைப்பை ஒரு திரள் என கண்கூடாகக் காண்பது. வீட்டிலிருந்து வேலைமுறை வெற்றிகரமாக நிகழத்தொடங்கி, அது லாபகரமானதாக உணரப்பட்டபின்னர் கண்டடையப்பட்ட குறை என்பது இதுவே. மக்கள் கண்கூடாக ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை என்றால் அந்நிறுவனமே அவர்களின் உள்ளங்களில் இல்லாததாக ஆகிவிடுகிறது.

சக்திவேல் கேள்வி

நவீனத்தமிழிலக்கியம் என்பதை இத்தகைய திரள்நிகழ்வுகள் வழியாக நாம் கண்கூடாகக் காண்கிறோம். அங்கே நம்மை ஒரு துளியாக உணர்கிறோம். வாசகர்கள் எழுத்தாளர்கள் மூத்த படைப்பாளிகள் அனைவரும் கலந்த ஒரு களம் அது. அதன் விதிகளும் செயல்முறைகளும் தன்னிச்சையானவை. நம் ஆணவத்தை கொஞ்சம் ரத்துசெய்து அந்தத் திரளில் இரண்டுநாட்கள் இருப்பதென்பது ஒரு பேருணர்வு. அந்த உணர்வின் பயனை உணர்ந்தமையால்தான் உலகமெங்கும் இலக்கியவிழாக்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

நம் ஆணவம்தான் உண்மையில் சிக்கல் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்போம். இந்த திரளில் நாம் யார் என்பது ஒவ்வொரு அறிவியக்கவாதிக்கும் உரிய கேள்விதான். நம்மை எங்கே வைக்கிறார்கள், நாம் கவனிக்கப்படுகிறோமா என்னும் அலைச்சல் அகத்தே இருந்துகொண்டே இருக்கும். நாம் இங்கே இதில் ஒன்றாக இருக்கிறோம் என்ற தன்னுணர்வுக்காக மட்டுமே இங்கே வந்திருக்கிறோம் என்பது மட்டுமே அதற்கான பதில்.

தேவதேவன், ஜெயராம்

விஷ்ணுபுரம் விருதுவிழாவின் முதல்நாள் மிக இயல்பான சந்திப்புகள்தான் நடைபெற்று வந்தன. பின்னர் அவற்றை முறைப்படுத்தாத கூடுகைகளாக நடத்தினோம். 2016ல் எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கலந்துகொண்டபோது கூட்டம் நிறைய இருந்தமையால் முறையாக ஆசிரியருடனான உரையாடலாக ஆக்கினோம். அவ்வாண்டே பாவண்ணன் உள்ளிட்ட படைப்பாளிகளும் வாசகர்களைச் சந்தித்தனர்.

ஏழாண்டுகளாக இந்த எழுத்தாளர்- வாசகர் உரையாடல் நிகழ்கிறது. தமிழகத்தின் முன்னோடி எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இளைய படைப்பாளிகளுக்கும் பாதியளவே அரங்கு அளிக்கப்படுகிறது.மூத்த படைப்பாளிகளைப் புரிந்துகொள்ளுதல், இளைய படைப்பாளிகளை அறிமுகம் செய்துகொள்ளுதல் இவ்வரங்கின் நோக்கம். இதே போன்ற அறிமுகநிகழ்வுகளை குமரகுருபரன் விழாவிலும்,தமிழ் விக்கி- தூரன் விழாவிலும் இளைய படைப்பாளிகள் மற்றும் ஆய்வாளர்களுக்கான மேடையை அமைக்கிறோம்.

மொழியாக்க அரங்கு. இல.சுபத்ரா, லதா அருணாசலம். தொகுப்பாளார் டி.ஏ.பாரி (மொழிபெயர்ப்பாளர்)

இம்முறையும் விஷ்ணுபுரம் விருந்தினர் கலவையான அளவில் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். பா.ராகவன், சந்திரா ஆகிய எழுத்தாளர்கள். தீபு ஹரி, வாசு முருகவேல் போன்று இளம்படைப்பாளிகள். கனலி இதழின் ஆசிரியர் விக்னேஸ்வரன். இல.சுபத்ரா, லதா அருணாசலம் ஆகிய இரு மொழிபெயர்ப்பாளர்கள். மலேசிய இளம்படைப்பாளி அர்வின்குமார். மலேசிய நண்பர்கள் விமானம் தாமதமானதனால் சனி மாலையில்தான் வந்தனர். ஆகவே அர்வின்குமார் தவிர பிறருடைய அமர்வுகள் சனி காலைமுதல் நடைபெற்றன.

வாசகர்களை எதிர்கொள்வதில் ஆசிரியர்கள் வெவ்வேறுவகை இயல்புகளை வெளிப்படுத்துகின்றனர். சிலர் பலமேடைகளிலும் உரையாடல்களிலும் தங்களை வெளிப்படுத்தி ஏறத்தாழ எல்லா கேள்விகளையும் முன்னரே சந்தித்தவர்களாக இருப்பார்கள். சிலர் அந்தக் கேள்விகளை அத்தருணத்தில் எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள். சிந்தித்து தெளிவுறுத்திக்கொண்ட பதில்கள் முதல்சாராரிடமிருந்தும் அக்கணம் மனதில் தோன்றிய பதில்கள் இரண்டாம் சாராரிடமிருந்தும் வரும். இரண்டுமே அவ்வகையில் முக்கியமானவை.

சந்திரா அரங்கு. தொகுப்பாளர் பார்கவி

ஆகவே எழுத்தாளரின் தயக்கங்கள், யோசனைகள் கூட முக்கியமானவை. நாம் ஓர் ஆளுமையை நேருக்குநேர் சந்திப்பதற்காகவே அங்கிருக்கிறோம். இந்த அமர்வுகளில் தீபு ஹரி கேள்விகளை அந்தந்த தருணத்தில் எதிர்கொண்டார். பா.ராகவனுக்கு அனைத்துக்குமே பதில்கள் இருந்தன. நான் அவதானித்த ஒன்று, பெண்களுக்குப் பொதுவாக அவைநடுக்கமே இல்லை என்பதுதான். அருண்மொழியிடமும் அவைக்கூச்சம் என்பது அறவே இல்லை. லதா அருணாசலம், இல.சுபத்ரா இருவருமே சரளமாகவும் கூர்மையாகவும் அவையை எதிர்கொண்டனர்.

இந்த உரையாடல்கள் இயல்பாக நிகழவேண்டும் என்பதனால் இவற்றை பதிவுசெய்வதில்லை. இவற்றின்மேல் இணையத்தில் விவாதம் நிகழுமென்றாலே ஒரு கவனம் உருவாகிவிடுகிறது. தன்னிச்சையாக எழுத்தாளர்கள் வெளிப்படவேண்டும் என்பதே எங்கள் திட்டம். ஆகவே இணையக்காணொளிகள் இல்லை. ஆர்வமிருப்பவர்கள் நேரில்தான் வந்தாகவேண்டும்.

தொடர்ச்சியாக காலை 10 மணிமுதல் இரவு 8 வரை எழுத்தாளர்களுடனான உரையாடல்கள் நிகழ்ந்தன. முன்பெல்லாம் மாலை விருதுவழங்கும் விழாவுக்குத்தான் அரங்கு நிறைந்திருக்கும். இப்போது எல்லா எழுத்தாளர் சந்திப்பு அரங்குகளுக்கும் அரங்கு நிறைந்து நின்றுகொண்டே இருந்தனர். முதலில் 600 இருக்கைகள் போட்டோம். அவற்றை நெருக்கி, இடைவெளிகளில் நாற்காலிகள் போட்டு 800 வரை கொண்டுசென்றோம். எந்த அரங்குக்கும் எவரும் பிந்தி வரவில்லை. தேநீர் இடைவேளைக்குப்பின் அடுத்த அரங்கு அறிவிக்கப்படும்போது மிகச்சில நிமிடங்களில் அரங்கு நிறைந்தது.

இந்த அரங்கு பற்றிய என் உளச்சித்திரம் ஒன்றுண்டு. பல இளைஞர்கள் என்னிடம் வந்து அவர்கள் எழுதப்போகும் நூல்களைப் பற்றிப் பேசினர். அந்த மேடையில் ஒருநாள் அமர்ந்து எழுத்தாளராக வாசகர்களைச் சந்திக்கவேண்டும் என்னும் கனவு அங்கே அமர்ந்திருக்கும் ஒவ்வொரு இளைஞரிலும் எழும் என நினைக்கிறேன். நான் அந்தக் கனவுகளுடன்தான் இலக்கிய விழாக்களில் கலந்துகொண்டேன்.

நினைவுப்பரிசு வழங்குதல். பிரியம்வதா ராம்குமார்

இந்த உரையாடல்களை கவனிக்கையில் இவற்றிலுள்ள ஒருவகை கலவையான தன்மை, எதிர்பார்க்கமுடியாத இயல்பே இவற்றின் அழகு என்னும் எண்ணம் உருவானது. எந்தவகையான கேள்விகள் எழும் என்று சொல்ல முடியாது. ஓர் எழுத்தாளரை உண்மையில் வாசகர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பது இந்தவகையான ஒரு மேடை வழியாகவே வெளிப்படும்.

பலசமயம் அது எழுத்தாளர் தன்னை முன்வைக்கும் விதத்தில் இருந்து வேறுபட்டதாகவும் இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் அது எழுத்தாளருக்கு ஓர் இனிய அறிதலாகவே அமைகிறது. குறிப்பாக அத்தனைபேர் வாசித்திருக்கிறார்கள் என்பது. வாசகர்கள் எதைக் கவனிக்கிறார்கள் என்பதை எழுதுபவன் சொல்லிவிடவே முடியாது. வாசகவெளி என்பது ஒரு வகையில் முதல்முடிவில்லாத காலத்தின் இன்னொரு வடிவம்

பா.ராகவன் அரங்கு. தொகுப்பாளர் ரம்யா (நீலி இணைய இதழ் ஆசிரியர்)

உதாரணமாக, பா.ராகவன் அவருடைய படைப்புகளில் யதி முதன்மையாக விவாதிக்கப்பட்டதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. நிலமெல்லாம் ரத்தம் போன்ற நூல்கள் சார்ந்து வினாக்கள் எழுந்தது எதிர்பார்த்திருக்கக்கூடியதே. அவருடய திரைத்தொடர் எழுத்தை அவரே தான் சொல்லிக்கொண்டார், எவரும் அதை பொருட்படுத்தவில்லை. வாசு முருகவேலின் யாழ்ப்பாண நடை அவருடைய பின்னாளைய நூல்களில் பொதுவாசிப்புக்காகச் சமரசம் செய்யப்பட்டதன் மீது எதிர்விமர்சனம் எழும் என்பதை அவர் நினைத்திருக்க மாட்டார்.

மாலை குவிஸ் செந்திலின் இலக்கிய வினாடிவினா. ஒவ்வொரு ஆண்டும் அந்த நிகழ்வு உருவாக்கும் திகைப்பும் மகிழ்ச்சியும் அற்புதமானவை. யுவன் என் அருகே அமர்ந்து அதைச் சொல்லிக்கொண்டே இருந்தார். இலக்கியம் சார்ந்த நுட்பமான, அரிய கேள்விகளுக்கு இளைஞர்கள் பதிலளித்துக்கொண்டே இருந்தனர். ஒரு திரைப்படத்தின் ஒரு காட்சியை காட்டி அந்த படத்திற்கு ஆதாரமான நூலின் ஆசிரியரின் இன்னொரு நூல் பற்றிய கேள்வி என்பது அற்புதமான ஒரு மூளைநடனம். இலக்கியம் வாழ்கிறது என்னும் நம்பிக்கையை அளிப்பது அது.

மாலையில் இரண்டு மணிநேரம் இடைவெளி. பலர் ராஜஸ்தானி பவன் இருந்த ஆர்.எஸ்.புரம் முழுக்கவே பரவியிருந்தனர். தேநீர் ஏற்பாடாகியிருந்தது. ஆனால் பலர் வெளியே ஒரு குட்டிநடை சென்று தேநீர் அருந்த விரும்பியதைக் காணமுடிந்தது. தெருவெங்கும் விஷ்ணுபுரம் விழாவின் முகங்கள். இப்பகுதி டீக்கடைகளுக்கெல்லாம் ஆண்டுதோறும் நிகழும் இந்த விழாவைப் பற்றி இன்று தெரியும்.

இரவில் நான் நல்ல தூக்கக் கலக்கத்தில் இருந்தேன். முந்தையநாள் இரவு நான்குமணிநேரம் மட்டுமே தூங்கியிருந்தேன். ஆகவே விடைபெற்று தூங்கச் சென்றேன். ஆனால் ஏறத்தாழ ஐம்பதுபேர் என்னை தொடர்ந்து வந்து அறைக்குள் அமர்ந்தனர். ஆகவே வேறுவழியே இல்லை. அரங்கு கூடிவிட்டது. இரவு பன்னிரண்டு மணிவரை வரை.

வசந்த் ராகவனை கௌரவிக்கிறார்

சோமசுந்தரம் முறையான பண்ணிசைப் பயிற்சி, மரபிசைப் பயிற்சி கொண்டவர். கே.வி.நாராயணசாமியின் மாணவர். கே.வி.மகாதேவனின் உதவியாளராகவும் பணியாற்றியவர். அவர் பாடினார். சுசித்ரா ராமச்சந்திரன், விஜய்ரங்கன், தாமரை ஆகியோரும் பாடினார்கள். நான் இரண்டு பேய்க்கதைகள் சொன்னேன். வசந்த் ஒரு பேய்க்கதை சொன்னார். வீணை எஸ்.பாலசந்தர் எழுதிய ஒரு பேய்க்கதையின் கதை.

இரவு நெடுநேரம் மீண்டும் தூங்காமலிருந்தேன். சொற்கள், முகங்கள்

(மேலும்)

புகைப்படம் மோகன் தனிஷ்க்

நித்திலம் – ஒரு முயற்சி

முந்தைய கட்டுரைஎஸ்.ரமேசன் நாயர்
அடுத்த கட்டுரைதத்துவ முகாம், புத்தாண்டு கொண்டாட்டம்