குக்கூ சிவராஜ் 2023 ஆம் ஆண்டுக்கான சிருஷ்டி விருது பெற்றுள்ளார். சென்ற பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக சிவராஜ் சமூகப்பணியை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்து வருகிறார். கிராமப்புறக் கல்வி, சூழியல் என வெவ்வேறு களங்களில் வெவ்வேறு அமைப்புகள் வழியாக நிகழும் பல்வேறு பணிகள் சிவராஜால் முன்னெடுக்கப்படுபவை. நம் தலைமுறை இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக, அரவணைக்கும் ஆளுமையாக திகழ்ந்துவருகிறார். இந்தியாவின் பெருமைமிக்க விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
சிவராஜுக்கு வாழ்த்துக்கள்
சிருஷ்டி அமைப்பானது இந்தியக் கல்வியாளர் அனில் குப்தா அவர்களால் 1993ல் உருவாக்கப்பட்ட ஓர் சேவை அமைப்பு. அடிமட்ட சமூகத்தினர் மற்றும் தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்களின் படைப்பூக்கத் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தன்னார்வ அமைப்பே ‘சிருஷ்டி’. இதன் துணையமைப்பாக இவர்கள் உருவாக்கிய ‘ஹனி பீ நெட்வொர்க்’ அமைப்பு மூலமாக, கிராமத்து மனிதர்களால் உருவாக்கும் அறிவியல்முறை தீர்வுகளின் வடிவமைப்புக்காக அரசிடம் காப்புரிமை பெற்றுத்தருகிறார்கள். மரபுரீதியான மக்கள் ஞானத்தையும் அறிவியல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி எளிய தீர்வுகளையும் முன்வைக்கும் விளிம்புநிலை படைப்பூக்க மனிதர்களைத் தேடிக் கண்டடைந்து அவர்களை ஆவணப்படுத்தும் பெரும்பணியையும் இவர்கள் கடந்த 33 ஆண்டுகளாகச் செய்துவருகிறார்கள்.
நம் தேசத்தின் பல்லுயிர்கள், பொதுவான இயற்கை வளங்கள், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் கல்விசார் கண்டுபிடிப்புகளை பாதுகாப்பதில் இவ்வமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு இத்தேசத்தின் கடைக்கோடி கிராமங்களிலுள்ள அறிவியல் தீர்வுமுறை கண்டுபிடிப்பு மனிதர்களைத் தேடிக்கண்டடைய ஆண்டுதோறும் ‘ஷோத்யாத்ரா’ எனும் நடைபயணத்தையும் நிகழ்த்துகிறார்கள். தோராயமாக 250 கி.மீ அளவுள்ள தூரத்தை ஏழெட்டு நாட்களில் நடந்து கடக்கும் யாத்திரை இது. விவசாயிகள், கலைஞர்கள், கிராமத்தினர் என அனைத்து மக்களையும் அவர்களின் வாழ்விடத்துக்கே சென்று அவர்களின் வாழ்வியல் ஞானத்தையும் கதையையும் ஆவணப்படுத்துகிறார்கள்.
‘சிருஷ்டி சம்மான் விருது’ எனும் விருதானது சிருஷ்டி அமைப்பால் 1995லிருந்து வழங்கப்படுகிறது. மனிதகுல வளர்ச்சிக்காக களப்பணியாற்றும் அடிமட்ட மனிதர்களை இந்திய அளவில் அடையாளப்படுத்தும் பொதுவிருது இது. செயல்மனிதர்கள் ஆற்றிய செயல்களின் களவிளைவுகள், அதன் சமூகத் தாக்கத்தின் அடிப்படையில் இவ்விருதுக்கான ஆளுமைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எதிர்கால நலனில் அச்செயல்கள் எவ்வாறு பங்கெடுக்கின்றன என்பதையும் இவ்வமைப்பு கருத்தில்கொள்கிறது. அறிவியல், கலை, பாமர ஞானம், சூழியல், கல்வி, வேளாண்மை, மீட்பு என அந்தந்த துறைகளில் மாற்றுத்தடத்தை உருவாக்கும் எளிய மனிதர்களைக் கண்டறிந்து வெளிச்சப்படுத்துவதே தன்னலமில்லா இவ்வமைப்பின் முதன்மைநோக்கு.
சிருஷ்டி சம்மான் விருதுபெற்ற இருபதுக்கும் மேற்பட்ட ஆளுமைகள் பின்னாளில் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இந்த தேசத்தின் எந்தவொரு கடைக்கோடியில் மாற்றத்தின் மனிதர்கள் வசித்தாலும், அவர்களை எப்படியாவது தேடிக் கண்டடைந்து அவர்களது வாழ்வையும் அனுபவ ஞானத்தையும் ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்தளிக்கும் பெருஞ்செயலை தொடர்ச்சியாக நிகழ்த்துகிறது சிருஷ்டி சம்மான் விருது.
2023ம் ஆண்டுக்கான சிருஷ்டி சம்மான் விருதுக்கு குக்கூ சிவராஜ் அவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். களச்செயல்களின் மூலமும், கலைச்செயல்பாடுகள் மூலமும் நிறைய இளம் மனங்களை சமூகச் செயல்பாடுகளை நோக்கி வழிப்படுத்தும் செயலுக்காக இவ்விருது வழங்கப்படுவதாக அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக குக்கூ சிவராஜ் அவர்களும் உடன்பயணிக்கும் நல்லுள்ளத் தோழமைகளும் இணைந்து உருவாக்கிய சமூகச் செயல்பாடுகளின் நீட்சியே இவ்விருதுக்கான சிறுவெளிச்சத்தை நிகழ்த்தியுள்ளது. இந்திய தேசத்தின் பல்வேறு பின்தங்கிய பகுதிகளுக்கும் இனி இச்செயல்விசை விரிந்துபரவும்.
குக்கூ காட்டுப்பள்ளி, தும்பி சிறார் இதழ், தரும வைத்தியசாலை, தன்னறம் பதிப்பகம், ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம், நியதி இளையோர் கூடுகை, மீள் சூழலிய ஆவணப்படம், அகர்மா கட்டிடக்கலை இயக்கம், யாதும் தற்சார்பு வெளி, நூற்பு கைத்தறிக்கூடம், தாய்வழி கருப்பட்டி கடலைமிட்டாய், துவம் தையல்பள்ளி எனப் பல செயலசைவுகள் ‘குக்கூ குழந்தைகள் வெளி’ எனும் தாயமைப்பிலிருந்து விதையாகி எழுந்தவை. தன் விருப்பத் துறைகளில் செயல்படத்தவிக்கும் பலநூறு இளைஞர்களை உரிய தடத்தில் பயணிப்பதற்கான அத்தனை சாதகச்சூழலையும் சிவராஜ் அவர்கள் உருவாக்கி அளித்துவருகிறார். சமூகத்தின் மீது வெறுப்புணர்ச்சி இன்றி அனைத்துத் தளங்களுடனும் ஆக்கப்பூர்வமாக ஒன்றுபட்டு செயலாற்றி, மாறுதல்களை உருவாக்க முயலும் காந்தியத்தின் சாராம்சத்தை தனது ஒவ்வொரு முன்னெடுப்பிலும் பின்பற்றிவருகிறார்.
இவை அனைத்துக்கும் பின்னிருப்பாக சிவராஜ் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் உள்ளடங்கியுள்ளது. சிருஷ்டி சம்மான் விருது நிகழ்த்தும் சிறுவெளிச்சம் மூலம் இந்த தேசத்தின் இன்னும் பலநூறு இருதயங்களுக்கு இவர் வழிப்படுத்திய செயல்களும் கனவுகளும் பரவியெழும். ஒருமித்த கருத்துள்ள பல்லாயிரம் இருதயங்களைக் கண்டடைந்து எஞ்சிய செயல்களைத் தொடர இவ்விருது வழிதிறக்கப் பிரார்த்திக்கிறோம். உடன்பயணித்த நண்பர்களையும் அவர்களது பற்றுக்கரத்தையும் இக்கணம் நன்றியோடு நினைத்துக்கொள்கிறோம். சிறுகச்சிறுக ஆற்றிய செயல்களின் அனுபவத்தாலும், அவைகள் தந்திட்ட அகநிம்மதியாலும் அடுத்தகட்ட பெருஞ்செயல்களை நோக்கி கூடுதல் பொறுப்புடன் நகர்வதற்கான திசைச்சுட்டல் என்றே இவ்விருதைக் கருதுகிறோம்.
“அடுத்த வாய்ப்பை கடவுள் வழங்கும்போது தயக்கமின்றி முன்னகருங்கள். முடங்கிப் பின்தங்க ஆயிரம் காரணம் இருந்தாலும்கூட, முன்செல்ல எது தூண்டுமோ அந்த ஒற்றை நம்பிக்கையை விடாமல் பற்றிக்கொள்ளுங்கள். எதிர்மறைப் பேச்சுகளுக்கு செவிடாகுங்கள்; இயலாமைக் காட்சிகளுக்கு குருடாகுங்கள்; அவநம்பிக்கைச் சொற்களுக்கு ஊமையாகுங்கள்; நெஞ்சுறுதியை வீழ்த்தும் நஞ்சு எதுவாயினும் மறுதலியுங்கள். ‘இதுதான் என் திசை’ என எண்ணத்தில் தீர்க்கம் அடையுங்கள். ‘இதில்வரும் துயரனைத்தும் வெல்லத்தக்கதே’ என நூறாயிரம்முறை உள்ளுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். அடுத்த வாய்ப்பை கடவுள் வழங்கும்போது அதில் தயக்கமின்றி முன்னகருங்கள்…” என்கிற கிறித்தவப் பிரார்த்தனையை இக்கணம் அகமேந்தி எல்லாம்வல்ல பேரிறையை வணங்குகிறோம்.
(இவ்விருதளிப்பு நிகழ்வு வருகிற டிசம்பர் 25 அன்று மாலை 5 மணிக்கு, அகமதாபாத்தில் உள்ள IIM வளாகத்தில் நிகழ்கிறது)
~
நன்றியுடன்,
குக்கூ குழந்தைகள் வெளி