இன்று கோவையில் 2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இம்முறை வழக்கம்போல, இதுவரை இல்லாத அளவு, விழா பெரியதாகிவிட்டிருக்கிறது. 300 பேர் தங்குமிடத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். அரங்கம் நிறைந்த நிகழ்வுகளுடன் விழா ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
இன்று காலை 930 முதல் கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தமிழின் முக்கியமான மூத்தபடைப்பாளிகளையும் இளம்படைப்பாளிகளையும் வாசகர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. எழுத்தாளர்கள் பா.ராகவன், சந்திரா, வாசு முருகவேல், தீபு ஹரி அல்லது பொன்முகலி , மொழிபெயர்ப்பாளர்கள் லதா அருணாசலம் மற்றும், இல.சுபத்ரா, இதழாளர் கனலி விக்னேஸ்வரன் ஆகியோர் வாசகர்களுடன் உரையாடுகிறார்கள்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மதிய உணவும் மாலையுணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று நிகழும் மிகப்பெரிய இலக்கிய விழா இது. முற்றிலும் நேர்நிலை ஆற்றலை உருவாக்கும் இலக்கிய அரங்கு இது. நூல்வெளியீடுகள், இலக்கிய அரட்டைகள் , இலக்கியவாதிகளுடன் சந்திப்புகள் என இங்கே எந்நேரமும் இலக்கியம் திகழும்.
பல ஆண்டுகளாக இது ஒரு குட்டி இலக்கியநூல் விற்பனையகமாகவும் மாறியுள்ளது. விஷ்ணுபுரம் பதிப்பகம், தன்னறம் பதிப்பகம், யாவரும் பதிப்பகம் உட்பட பல நூல்வெளியீட்டகங்களின் நூல்கள் வாங்கக்கிடைக்கும்.
வழக்கம்போல இரு அரங்குகள். சிற்றரங்கில் எழுத்தாளர்களுடனான சந்திப்பு நிகழ்கிறது. நாளை மாலை பெரிய அரங்கில் விழா. ஏற்கனவே முந்நூறுபேர் வந்து தங்கியிருக்கின்றன. விழாவின் முதன்மையான நிகழ்வாகவே இன்று இந்த சந்திப்புகள் மாறியுள்ளன. தமிழகத்தில் இன்று நிகழும் ஒரே இலக்கிய விழா இதுதான். எந்தவிதமான வணிகநிறுவன ஆதரவும் இல்லாமல், வணிகத்தன்மையே இல்லாமல் முழுக்க முழுக்க இலக்கியவாசகர்களால் ஒருங்கிணைக்கப்படும் விழா இது.
இன்று தமிழகத்தின் மிகமுக்கியமான இலக்கியச் சந்திப்பு மையமாகவே இது உள்ளது. மூத்தபடைப்பாளிகள், இளையபடைப்பாளிகள் ஆகியோர் ஒன்றுகூடி ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கும் உரையாடுவதற்குமான மையம். ஓராண்டு முழுக்க நீடிக்கும் இலக்கிய ஊக்கம் நிகழும் இடம்.
வழக்கம்போல இம்முறையும் அரங்க அமைப்பும் உணவு உபசரிப்பும் நண்பர் விஜய் சூரியனால் ஏற்பாடு செய்யப்படுகிறது. வழக்கம்போல நான் பிந்தி வந்து நின்று நகம்கடிக்கப்போகிறேன்.