வெள்ளம், விழா, பிரார்த்தனை- கொள்ளு நதீம் கடிதம்

அன்பின் ஜெ!

சென்னை பெருவெள்ளம் 2015-ல் நம் சமகால நினைவில் இருக்கக் கூடிய ஒன்று.  திரும்பவும் 2021-லும் இதேபோல் நடந்தது.இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மூன்றாவது முறையாக இரண்டு, மூன்றடிக்கு தண்ணீர் எங்கள் இடத்தில் உள்ளே சடாரென்று சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டது. ஏற்கனவே இருந்த படிப்பினையால் தண்ணீர் இறைக்கும் மோட்டாரை வைத்திருந்தோம். ஆனால் பயன்படுத்த இயலாதவாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. முழு நாளும் இருந்து கையால் வாளியில் தண்ணீரை இறைத்துக் கொட்டியும் தீரவில்லை.

prostate gland-ல் வீக்கமும், தொற்றும் ஏற்பட்டு உடலிலிருந்து சிறுநீரும் வெளியேறவில்லை. ஒரு வாரம் மருத்துவமனையிலும், நான்கு நாட்கள் கட்டாய ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டேன். உயிரின் அடிப்படை நீர், அது நமக்கு வெளியில் இருந்தாலும் தினசரி அலுவல்களை குலைத்து போட்டுவிடுகிறது, உரிய அளவு உள்ளிருந்து வெளியேறாமல் நின்றுவிட்டாலும் உடலுடன் மனமும் சமநிலையை இழந்துவிடுகிறது. Christophe Jacrot என்றொரு புகைப்படக் கலைஞர் இயற்கையின் முன்னே மனிதன் எவ்வளவு பலவீனமாக இருக்கிறான் என்பதை காட்சிப்படுத்தியிருப்பார்.

05-ந்தேதி எஸ்.ரா.-வின் பதிவை மருத்துவமனையிலிருந்து பார்த்தேன். பெரம்பூரில் பதிப்பகம் ஒன்றின் பெரிய கிடங்கிலும் வெள்ளநீர் ஏறிவிட்டிருந்தது. திருவல்லிக்கேணியில் எங்கள் அலுவலகம் இருக்கும் சாலையிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இரண்டு நாட்களுக்கு ஷட்டரை திறந்து என்ன நடந்திருக்கிறது என்று பார்க்க முடியாத தவிப்பு. இந்த முப்பதாண்டுகளில் கட்டிலிலும், அறையிலும், எல்லா இடங்களிலும் புத்தகங்கள் சூழ இருந்தே பழக்கமாகி விட்டது.

அதை மாற்றி வைக்க வேறிடமும் இல்லை, புத்தகங்களைத் தவிர எனக்கு வேறு ஒன்றுமே தெரியாது. திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனையருகில் பழைய புத்தகக் கடை வைத்திருக்கும் நண்பர் செந்திலிடம் பேசினேன். அவருக்கும் இதனால் பெருத்த சேதம். உள்ளபடியே சொன்னால் புத்தகங்கள் என்பது இதனுடன் தொடர்புடைய எவருக்கும் வெறும் அதொரு commodity என்பதல்ல, கலங்கி நிற்கிறேன் என்று எஸ்.ரா. சொல்வதை ஆமோதிக்கிறேன்.

விஷ்ணுபுர இயக்கம் என்பதும் டிசம்பர் மாத கூடுகையும் மானசீகமாக என் மனசுக்கு பிடித்த ஒன்று. விழா தேதி வெளியானதுமே ரயில் பயணச் சீட்டு பதிவை சென்னையிலிருந்து ஒன்றும், எங்கள் ஆம்பூரிலிருந்து ஒன்றும் செய்து வைப்பேன். ஒரு இடத்தில் தவறினாலும் மறு ஊரிலிருந்து வண்டி ஏறி – ஒரு ஆண்டு ஏதோ விபத்து ஏற்பட்டு ரயில் சேவையே நின்று போயிருந்தபோதும் கோவை வந்து சேர்ந்திருக்கிறேன். இந்த ஆண்டு அப்படி ஒன்றுமில்லை, ஆனால் மனமும், உடலும் துவண்டு போய்க் கிடக்கிறது. பல ஆண்டுகள் எடுத்த குறிப்புகள், அரிய நூல்கள், ஆவணங்கள் ஆகியவற்றை இழந்ததோடு தொற்று உடலில் ஏற்படுத்தியிருக்கும் சேதம் அதிகம். ஜனவரி புத்தகக் கண்காட்சி எப்படி எதிர்கொள்வது என கவலையாக இருக்கிறது.

இவை அனைத்தையும் கைவிட்டு புதிதாக வேறொன்றிலிருந்து ஆரம்பிக்கச் சொல்லி மனைவி கூறுகிறாள். 1997-ல் விஷ்ணுபுரம் நாவலை வாங்கிக் கொண்டு வெளிநாடு புறப்பட்டபோது எனக்கு 25 வயது. அப்பொழுது எடுத்த புகைப்படமொன்றில் – என் மேசையில் “விஷ்ணுபுரத்தின்” முதல் பதிப்பு அப்படியே காலம் உறைந்து போய்கிடக்கிறது. கால இயந்திரத்தில் திரும்ப அங்கு போக முடிந்தால் புதிதாக ஏதும் தொடங்கிவிடலாம். ஆனால் வாழ்க்கையின் எதார்த்தம் அப்படியான ஒன்றுக்கு இந்த மத்திம வயதில் தயாராகுமா என்பது தெரியவில்லை.

குற்றமும் தண்டனையும்  நாவலில் தஸ்தவ்ஸ்கியாகட்டும், வெண்ணிறக் கோட்டையில் ஓரான் பாமுக் ஆகட்டும்.– பொதுவாகவே பேரிலக்கியம் என்பதே விதியின் விளையாட்டு என்று தொகுக்கலாம். சர்வதேச பண்பாடு, உலக மதங்கள் அனைத்துமே இதன் புதிரை அவிழ்த்துப் பார்க்கும் முயற்சிதானே? இந்த முறை கோவை விஷ்ணுபுரம் நிகழ்வில் பங்கெடுக்கும் கொடுப்பினை எனக்கு இல்லை, அவ்வளவுதான் என்று தேற்றிக் கொள்கிறேன். இந்த திடீர் புயல் வருவதற்கு ஒருநாள் முன்பு கவிஞர் சாம்ராஜ் தன்னுடைய கொடைமடம் நாவலை கோவைக்கு எடுத்துச் சென்று வழக்கமாக நான் போடும் ஸ்டாலில் வைக்க கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி இருந்தார். சம்மதித்திருந்த அந்த பணியையும் மேற்கொள்ள வழியின்றி தவித்து நிற்கிறேன்.

Loosing the books, losing the books – என்றால் இரண்டுவிதமாகவும் சொல்லிக் கொள்ளலாம். இந்த திடீர் மழை வெள்ளம் இப்பொழுதெல்லாம் உலகம் முழுக்கவே பதிப்பாளர்களுக்கு, நூல்களை சேகரித்து வைத்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு பெரும் இழப்பை அளித்துக் கொண்டிருப்பதாக கடந்த பத்தாண்டுகளாகவே பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மழையில் நனையாத, அழியாத நூல்களை நவீன கண்டுபிடிப்பு பதிலீடு செய்யுமா என்று இனி வருங்காலம் சொல்லக் கூடும். சீனாவில், ருஷ்யாவில் மகாராஷ்டிராவிலுள்ள சாங்லி சிற்றரசர்கள் புரவலர்களாக இருக்கும் 150 ஆண்டுகால பழைய நூலகம் ஒன்றுகூட அண்மையில் கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகளின் அசலை பறிகொடுத்ததை எப்படி மீட்டெடுக்க முடியும்.

விழா சிறக்க உழைத்துக் கொண்டிருக்கும் சக தோழர்கள் அனைருக்கும் என் அன்பும் யுவன் சந்திரசேகருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு கூடி இருக்கும் சக இதயங்களுடன் மானசீகமாக இருப்பேன்.
கொள்ளு நதீம், ஆம்பூர்

அன்புள்ள கொள்ளு நதீம்,

நூல்கள் பாதிக்கப்பட்ட செய்தி வந்த அன்றே எஸ்.ராமகிருஷ்ணனிடம் பேசினேன். எந்த இழப்பானாலும் சேர்ந்து எதிர்கொள்வோம் என்றேன். அவர் பல உதவிகள் வருவதாகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் சொன்னார்.

ஒன்று நிகழும்போது அதனால் உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்டு நம்பிக்கையிழப்பு உருவாகிறது. ஆனால் நம் உடல் தன்னைத்தானே மீட்டுக்கொள்ளும் தன்மை கொண்டது. உள்ளமும் அது போலவே. மீண்டெழலாம். நம்பிக்கைகொள்ளுங்கள்.

வரும் புத்தகக் கண்காட்சியில் உறுதியாக சந்திக்கிறோம். உற்சாகமாக சந்திக்கிறோம்

ஜெ

 

 

 

முந்தைய கட்டுரைஓராண்டுப் பயணம் – சரண்யா
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் உரைகள்