ஜெயமோகன் அவர்களின் ஓரிரு புத்தகங்களை வாசித்து இருந்தாலும் பயணம் சார்ந்த அனுபவங்கள் பற்றிய அவரின் இந்த புத்தகம் ஒரு வித்தியாசமான உணர்வைத் தந்தது.
ஒரு இடத்துக்கு சாதாரண ஒரு மனிதன் பயணம் செய்வதற்கும், ஒரு எழுத்தாளர் பயணம் செய்வதற்கும் உள்ள வேறுபாடு தாம் இந்த புத்தகம்.
ஜப்பான் எப்போதும் என்னை வியக்க வைக்கும் ஒரு நாடு. அங்கு இருக்கும் மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். உழைப்புக்கு அஞ்சாதவர்கள் என நான் அறிந்து கொண்டவை. அது தவிர வேறு எதுவும் பரிச்சயம் இல்லை.
ஆனால் இந்த புத்தகம் படித்த போது ஜப்பானை பற்றி நிறைய தெரிந்து கொண்ட உணர்வு.
7 நாள் ஜப்பானில் அவர் சென்ற இடங்கள் அதன் பண்பாடு தொல் எச்சங்கள் பற்றி அவர் அறிந்து கொண்டதன் தொகுப்பே இந்த புத்தகம்.
முதலில் ஜப்பானில் சுற்றுலாத் தளங்கள் என்றாலே கோவில்களே முக்கியப் பங்கு வகிக்கிறது.
குறிப்பிடத் தக்க ஆலயம் இட்சுகுஷிமா ஆலயம். மற்றொன்று ஹோகுஷிஜி ஆலயம். அதன் மூங்கில் தோட்டம் அங்கு தரப்பட்ட தேநீர் என அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
புத்தர் சிலைகள் அங்கு பெரும்பாலும் காணலாம். பௌத்த மதம் அங்கு வெகு காலமாக நிலைத்து வருகிறது.
ஷிண்டோ மதம் எப்படி ஜென் தத்துவங்களை உள்வாங்கி தன்னை உறுமாற்றிக் கொண்டது என்பதை அழகாக விளக்கியுள்ளார்.
ஜப்பானில் இன்னொரு முக்கியமானது உணவு வகைகள். ஜப்பான் கடல் சூழ்ந்த நாடு என்பதால் அங்கு கடல் உணவுகளே அதிகம்.
ஷோபா (fried noodles) ராமென் (soup noodles), சுஷி (Raw fish dishes), உதோன் (noodles), தெம்புறா (Tempura) போன்ற உணவுகள் பற்றி விரிவாக சொல்லி இருக்கிறார்.
அதோடு சீனா உணவுகளின் சுவையிலிருந்து இவை எவ்வாறு வேறுபட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
சாமுராய் வீரர்கள் வாழ்க்கை, மூங்கில் ஓவியங்கள், ஜப்பானிய தோட்டக் கலை, மூங்கில்கள் கொண்டு வரையப்படும் கீற்றோவியங்கள் என்று நிறைய தகவல்களை சொல்லி இருக்கிறார்.
நம்மூரில் குழந்தைகள் பெற வேண்டி மரத்தில் தொட்டில் கட்டுதல் போல அங்கு Nizo-do சிலைகள் வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.
இந்திய கதக்களி போன்றே ஜப்பானில் நோ (Nou) நாடகம் இருக்கிறது.
ஜப்பான் பற்றி அறிந்து கொள்ள இந்த புத்தகம் உதவுவதோடு அங்கு செல்ல ஆர்வத்தையும் தூண்டும் ஒரு புத்தகம்.
கோகுல்ப்பிரியா
வாசிப்பை நேசிப்போம் குழுமம்