எளிமையெனும் விடுதலை

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வீரான்குட்டி ஊட்டியில் நாங்கள் நடத்திய தமிழ்- மலையாளக் கவிதையரங்குக்கு வந்திருந்தார். பலவகையான கவிஞர்கள் பங்கெடுத்த அந்த அரங்கிற்கு வந்திருந்த ஒரு கவிஞர் வீரான்குட்டியைப் பற்றி என்னிடம் சொன்னார். “அவரை ஏன் அழைத்தீர்கள்? அவர் நவீனக்கவிஞர் அல்ல”

அந்தக் கவிஞர் முழுக்க முழுக்க அரசியலை எழுதிக்கொண்டிருந்தவர். நான் அவரிடம் “நான் வீரான்குட்டியின் இரண்டு கவிதைகளை வாசித்தேன். எனக்கு பிடித்திருந்தது” என்றேன்

“அவர் நவீன கவிஞர் அல்ல” என்று இவர் மீண்டும் சொன்னார்

“ஏன்?” என்றேன்

“அவர் குழந்தைகளுக்கான கவிதைகளை எழுதுபவர்”

நான் “அதுதான் எனக்கு முதன்மைத் தகுதியாகத் தெரிகிறது” என்றேன்

அதை பொய்யாகச் சொல்லவில்லை, மெய்யாகவே அன்று நான் நவீன கவிஞர்களின் சிலவகை பாவனைகளால் அலுத்துப்போயிருந்தேன். தங்களை இரண்டே வகைகளில் அவர்கள் புனைந்து முன்வைத்தனர். ஒன்று, அதீதத்தனிமையில், கைவிடப்பட்ட நிலையில், இருத்தலியல் சிக்கல்களில் உழல்பவர்கள். இரண்டு, தீவிரமான அரசியல்நிலைபாடுகளால் தங்களை கலகக்காரர்களாகவோ புரட்சியாளர்களாகவோ ஆக்கிக்கொண்டவர்கள்.

இரண்டுமே பொய் என நன்கறிந்திருந்தேன். அந்த பாவனைகள் சூழலில் முன்னரே விளைந்து கனிந்து கிளையொடியும்படி தொங்கிக்கிடந்தன. எழுதவரும்போதே அவற்றை உண்டு அச்சுவைக்கு பழகிவிட்டிருக்கிறார்கள். பெரும்பாலான கவிஞர்கள் அவர்கள் எழுதும் கருத்துக்களை கவிதைகளிலிருந்து பெறவில்லை, பிற கவிதைகளிலிருந்தே பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் எழுதுவதென்ன என அவர்களுக்குத் தெரியாது. பக்தியே இல்லாதநிலையிலும் கர்நாடக சங்கீத வித்வான் பாட ஆரம்பிக்கும்போது பக்தியால் உருகிவழிவதைப்போல அது ஒரு புனைவுநிலை மட்டுமே.

சங்கீதக்காரர்களுக்கு சரிகைச்சட்டை, குங்குமப்பொட்டு போல நவீனக்கவிஞர்களுக்கும் தாடி, குடிகாரமுகம், நையாண்டி என பல தோற்றங்கள் வகுக்கப்பட்டிருந்தன. எனக்கு பளிச்சென்ற முகமும், சிரிக்கும் கண்களும், ஒரு கல்லூரி பேராசிரியருக்குரிய சீரான ஆடையும் கொண்டிருந்த வீரான்குட்டி புத்தம்புதியவராகத் தோன்றினார். அவருடையது ஒரு சிறுவனைப்போல உலகை அணுகும் தெளிந்த கண்கள் என்று பட்டது.

அந்த கவிதை அரங்குக்குப்பின் வீரான்குட்டியின் கவிதையில் மிகப்பெரிய மாற்றம் வந்தது. கேரளச்சூழல் அவரிடம் அரசியலை எழுதும்படி, அரசியலோ இருத்தலியலோ எழுதாதவன் கவிஞன் அல்ல என்று, சொல்லிக்கொண்டே இருந்தது. அவருக்கு அதெல்லாம் பிடிபடவில்லை. அவர் இயல்பு அதுவல்ல. அவர் இனிய, உற்சாகமான குழந்தைப்பார்வை கொண்டிருந்தார்.

தமிழ் நவீனக்கவிதைகள் வீரான்குட்டிக்கு ஒன்றைக் கற்பித்தன. கவிதைக்கு அரசியலோ தத்துவமோ ஒன்றும் இன்றியமையாதவை அல்ல. கவிஞன் அறிஞனாக இருக்கவேண்டியதில்லை. போராளியோ கலகக்காரனோ அன்னியனோ ஆக அவன் இருந்தேயாகவேண்டும் என்பதில்லை. அவன் கவிதையை உருவாக்கினால்போதும்.

கவிதை என்பது முதன்மையாக ஒரு கலை என்று வீரான்குட்டி புரிந்துகொண்டார். எந்தக் கலையும் கற்பனையின் அடிப்படை அலகான படிமங்களால் ஆனது. ஒலிப்படிமம், காட்சிப்படிமம் , அல்லது மொழிப்படிமம். படிமங்களை விளக்கும் சுமை கலைஞனுக்குரியது அல்ல. தன் அகத்தை காட்டும் படிமங்களை அவன் முன்வைத்தால் மட்டும்போதும். படிமச்சமையல் செய்யலாகாது. படிமங்கள் முளைக்கும் நிலமெனத் திகழ்ந்தால்போதும்.

வீரான்குட்டியின் கவிதைகள் அதன்பின் புதிய ஒளியுடன் வெளிவந்தன. என்ன வியப்பென்றால் சகக்கவிஞர்கள், விமர்சகர்கள் உருவாக்கிய வட்டத்தைக் கடந்து அவை மிகச்சிறந்த வாசகர்களைக் கண்டடைந்தன. சமகால மலையாளக் கவிஞர்களில் அதிக வாசகர்களைக்கொண்ட ஒருவராக அவர் மாறினார். இன்னும் வியப்பு என்னவென்றால் அவர் கவிதைகளில் தன்னிச்சையாக உருவான அரசியல் இருந்தது. அதை வாசகர்கள் கண்டடைந்து முன்வைக்க கேரளத்தின் மிக வலுவான அரசியல் கவிதைகளை எழுதுபவர் என்றும் வீரான்குட்டி அறியப்படலானார்.

வீரான்குட்டியின் படிப்பு என்னும் கவிதை கேரளத்தின் சமூக அரசியலின் அடிப்படையை வலுவாக முன்வைக்கும் கவிதை என்று கருதப்படுகிறது.

புரியவேயில்லை

அவளுக்கு

பட்டாம்பூச்சியின்

படத்தைக் காட்டி

சித்ரசலபம் என்று

டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

முடிவில்

வருத்தத்துடன்தான் என்றாலும்

அவளும்

சித்ரசலபம் என்று

சொல்லத் தொடங்கினாள்.

பட்டாம்பூச்சி என்பது

அதனை

அதன் வீட்டில்

அழைக்கும் பெயர்

என்று

சமாதானம் செய்துகொண்டு.

கேரளத்தின் மக்கள்மொழியில் இருந்து ஒவ்வொருவரும் ஓர் உயர்குடி- சம்ஸ்கிருத மொழிக்கு பிடுங்கிநடப்படுவதை, அதன் வன்முறையையும் இழப்பையும் சொல்லும் கவிதை இது.

ஆனால் வீரான்குட்டி ‘கருத்துக்களுக்காக’ தேடுவதில்லை. எதையும் எண்ணங்களாகக்கூட ஆக்கிக்கொள்வதில்லை. சொல்லப்போனால் சிந்திப்பதே இல்லை. அவர் குழந்தையாகவே நீடிக்கும் கவிஞர். காட்சிகளிலிருந்து அக்காட்சியாகத் திரண்ட பிறிதொன்றை நோக்கிச் செல்லும் ஒரு பயணம் அவரில் நிகழ்கிறது. அதுவே அவருடைய படிம வெளிப்பாடாகிறது

உறைந்து கட்டியாகிய தண்ணீரில் இருந்த

மீன்குட்டியை

சூரியன் வந்து திறந்துவிட்டது.

என்னும் அவருடைய வரியை தன் நூல் ஒன்றின் முகப்பில் எழுதிவைத்திருக்கிறேன் என்று சொன்ன ஒரு வாசகியை எனக்குத்தெரியும். எதில் வாழ்கிறதோ அந்த வெளியே உறைந்து கல்லென்றாகிவிடுவதன் அனுபவத்தை அவள் அறிவாள். அச்சிறையில் இருந்து விடுவிக்கும் சூரியனுக்கான தவத்தையும் அவள் அறிவாள். அந்த ஒளிமிக்க விடுதலையை அக்கவிதை அவளுக்குச் சொல்கிறது. அக்கவிதையில் இருந்து அவள் செல்லும் தொலைவை வீரான்குட்டி அறியவேண்டும் என்பதில்லை.

ஒவ்வோர் இலையும்

அதனதன் அதீத தனிமையில்,

உதிரும்போதுதான்

நாமதைத் தெரிந்துகொள்கிறோம்

என மிக எளிமையாக நிகழும் வீரான்குட்டிக் கவிதைகளில் அந்த எளிமை ஒரு காலம்கடந்த தன்மையை அளிக்கிறது.ஒரு தொல்நூலில், ஓரு நீதியுரையாக அமையும் வாய்ப்புகொண்ட ஒரு வரி இயல்பாக நவீனக்கவிதையாகி மேலும் பல சுட்டுதல்களுடன், மேலும் பல அனுபவத்தளங்களுடன் விரிகிறது.

பாவியல்பு (Lyricism) கவிதை என ஒன்று மானுடனில் உருவானபோதே நிகழ்ந்த ஒன்று. இசையிலிருந்து மொழியை எந்நிலையிலும் பிரிக்க முடியாது. பிரிக்க முயன்ற எஸ்ரா பவுண்டின் நவீத்துவம் அதை அடக்கி ஒடுக்கவே முடிந்தது. கவிதை பாடலின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது. எக்கணமும் அதுவாகி மீள்வதுபோல. நல்ல கவிதைகள் மயில்கழுத்துபோல பாடலா கவிதையா என மாயம்காட்டுபவை. நவீனத்துவத்தை வீரான்குட்டி எளிதில் கடந்துசெல்வது அவருடைய பாவியல்பினூடாகத்தான்.

உன்னிடம் சொல்ல வைத்திருந்த ரகசியத்தை

நேற்று காற்று கொண்டுபோனது

அது எந்தக் கிளையில் வைத்திருக்கும்?

என்னும் வரி ஒரு ரூமி கவிதையில், ஒரு கஸல் பாடலில் எளிதில் அமைந்திருக்கக்கூடிய ஒன்று. தமிழில் தேவதேவன் எழுதக்கூடியது. தன் எளிமையினூடாக, கண்விரித்து காட்சியுலகைக் கொண்டாடும் தீரா இளமையினூடாக வீரான் குட்டி அடைவது அந்த மொழிக்களியாட்டை.

அந்த மொழிவெளிப்பாட்டை, கவிதைமொழியாக்கத்தில் எப்போதும் நிகழும் சிறு குறைவுகளுடன், நேர்த்தியாக தமிழாக்கம் செய்திருக்கிறார் சுஜா. தமிழ் நவீனக்கவிதையை அணுகியறிந்த ஒருவரின் எழுத்துக்கள் இவை என்பதை

பிரபஞ்சத்தில்

வேறு சொற்கள் இல்லை

அந்த ஒரு சொல்லைத் தவிர.

என கச்சிதமாக வெளிப்படும் வரிகள் காட்டுகின்றன

பள்ளிவிட்டு வந்ததுமே புத்தகத்தை தூக்கிவீசி சீருடையை கழற்றி எறிந்து காற்றுமேவும் வெற்றுடலுடன் விளையாடச்செல்லும் பள்ளிச்சிறுவனின் விடுதலை கொண்டவை வீரான்குட்டியின் கவிதைகள்.

ஜெயமோகன்

 

தன்னறம் வெளியீடாக வெளிவந்துள்ள வீரான்குட்டி கவிதைகளுக்கு எழுதிய முன்னுரை 

முந்தைய கட்டுரைஆர்.பி.எஸ்.ராஜூ
அடுத்த கட்டுரைஅஞ்சலி: கோவர்தனன் மணியன்