மாயங்களின் கதை சொல்லி – ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

1

மகாபாரதம், இராமாயணம் என இதிகாசங்கள் தொடங்கி நம் கதை சொல்லும் மரபுக்கு குறைந்த மூவாயிரம் வருட பாரம்பரியம் உள்ளது. வாய்மொழி கதை மரபு இந்த இதிகாசங்கள் தோன்றுவதற்கு முன்னால் பல நூறாயிரமாண்டுகள் செல்லும். இத்தகைய நெடிய கதை சொல்லும் மரபில் யதார்த்தவாத கதைகள் என்பது கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக சொல்லப்பட்டுவரும் ஒரு கதை வடிவம்.

நம் நவீனத்துவ எழுத்தாளர்கள் யதார்த்தவாதத்தை தங்கள் லட்சியமாக கொண்டனர். விதிவிலக்கு புதுமைப்பித்தன் மட்டுமே. புதுமைப்பித்தனுக்கு பின் ஐம்பது ஆண்டுகள் இறுக்கமான யதார்த்தவாத கதைகளின் காலகட்டம்.

அந்த இறுக்கமான கதை கூறல் முறையை தமிழ் இலக்கியம் 90 களில் மீறியது. அதன் பின் எழுத வந்த எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, இரா. முருகன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அந்த மீறலை நிகழ்த்தினர். அந்த புதிய அலை பல புதிய கதைகூறல் முறையை தமிழ் நவீன இலக்கியத்தில் தோற்றுவித்தது. ஜெயமோகனின் படுகை ஒரு மிகுபுனைவு (Fantasy) வகை கதையென்றால், மாடன் மோட்சம் நாட்டார் கூறுகளைக் கொண்ட ஒரு மாய யதார்த்த கதை, திசைகளின் நடுவே ஒரு தொன்ம/புராண மீளுருவாக்க கதை. இக்கதைகள் அனைத்தும் 1989, 90 களிலேயே எழுதப்பட்டுவிட்டன.

பின் நவீனத்துவ பாணியில் எழுத வந்த சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி நாவல் கதையை கலைத்து போட்டு மையமற்ற கதை கூறலை உருவாக்கியதில் ஒரு முன்னோடி முயற்சி (சாரு நிவேதிதாவின் கதை நம் நாட்டார் மரபு கதைக் கூறல் முறையிலிருந்து எவ்வண்ணம் எடுத்தாளப்பட்டது என போன வருட விஷ்ணுபுரம் விழாவிற்காக (2022) சாருவை பற்றி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். பார்க்க – பிறழ்வில் கம்பனும், கப்பல் பாட்டும், சாரு நிவேதிதாவும்).

சாரு நிவேதிதாவும், யுவன் சந்திரசேகரும் பின்நவீனத்துவ காலகட்டத்தின் எழுத்தாளர்கள். அவர்கள் தங்கள் கதை கூறல் முறையை பின் நவீனத்துவ பாணியில் வடிவமைத்துக் கொண்டவர்கள். (தொடர்ந்து அடுத்தடுத்த வருடம் இருவரும் விஷ்ணுபுரம் விருது பெறுவது தற்செயல் இல்லையென நினைக்கிறேன்)

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் எழுத்துலகம் மேலே சொன்ன ஜெயமோகன், சாரு நிவேதிதா இருவரின் எழுத்துலக பாணியும் சந்தித்துக் கொள்ளும் ஒரு புள்ளியில் நிகழ்வது எனப்படுகிறது. அது ஒரு வகையில் தொன்ம மனம், அதி நவயுக மனம் சந்தித்துக் கொள்ளும் புள்ளி எனச் சொல்லலாம். இவ்வகையில் யுவன் சந்திரசேகரின் குள்ளச் சித்தன் சரித்திரம் ஒரு முக்கியமான படைப்பு.

எழுத்தாளர் ஜெயமோகன் இந்நாவல் பற்றிய தன் விமர்சன கட்டுரையில் நாவலை மீபொருண்மை மாய யதார்த்த படைப்பு என வகைப்படுத்துகிறார். மேலும் இவ்வகை எழுத்திற்கு புதுமைப்பித்தனின் ‘பிரம்ம ராட்சஸ்’ சிறுகதையை முன்னுதாரணமாக குறிப்பிடுகிறார். பிரம்ம ராட்சஸ் கதையின் முதல் பாகம் ‘அவன் தான் பிரம்ம ராட்சஸ்’ என முடிகிறது. தொடர்ந்து அடுத்த வரியே ‘சூரங்காடு ஒரு எழில் மிக்க அழகிய மலைப் பிரதேசம்’ எனத் தொடங்குகிறது. ஒரு வாசகன் யதார்த்தமும், மாயமும் அடுத்தடுத்து அமர்ந்திருக்கும் இவ்விரு வேறு உலகை சேர்ந்த வரியை வாசிக்க பழகும் போது யுவனின் குள்ளச்சித்தன் சரித்திரம் நாவலில் விரித்துக் காட்டும் யதார்த்த வாழ்க்கையும், அதனை ஆட்டிவைக்கும் நம் பிரக்ஞைக்கு அப்பால் உள்ள மாய உலகமும் நம்முள் விரிகிறது.

யுவனின் குள்ளச்சித்தன் சரித்திரத்தில் சித்தர் பற்றிய தொன்மங்கள் உருவாகி வந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் அவரை பற்றிய நினைவுக் குறிப்புகளும். இந்த மொத்த நாவலையும் ஹாலாஸ்யம் ஐயர் எழுதுகிறார். நாவலின் ஒரு கட்டத்தில் வாமன ஸ்வாமிகள் என்ற குள்ளச்சித்தன் சரித்திரம் நூலை நீலகண்டன் ஹாலாஸ்யம் அய்யருக்கு படிக்கக் கொடுக்கிறான். நூல் முன்னுரை குறிப்புகள் வருகின்றன. வேடிக்கையாக இந்நூலின் இரண்டாம் பதிப்பில் ஹாலாஸ்யம் ஐயரின் மகன் சப்தரிஷி முன்னுரை எழுதுகிறார். அதில் தன் தந்தையின் நூல் வெகு ஜெனத்தால் புறக்கணிப்பது பற்றிய புலம்பல் வருகிறது. பாரதி, பிச்சமூர்த்தியில் தொடங்கியது இந்த வெகுஜனப் புறக்கணிப்பு என்கிறது சப்தரிஷி மூலம் எழும் நாவலாசிரியரின் குரல்.

இப்படி எண்ணற்ற சாத்தியங்கள் நாவலில் ஒரு தளத்தில் நிகழ்ந்து கொண்டிருக்க மற்றொரு யதார்த்த தளத்தில்  வந்தமைகிறார்கள் பிள்ளையில்லாத ராம பழனியப்பன், சிகப்பி தம்பதியினர். கன்னி கழியாது கருவை சுமந்து வரும் பெண்ணின் விதவை தாயாக வரும் தாயாரம்மாள். முதலியார், முத்துசாமி ஐயர், பர்மா ஐயர் என எண்ணற்ற கதாபாத்திரங்களின் ஊடாக சித்தன் கதையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் யதார்த்த தளத்தின் கதைகள் பல கிளைகளாக பிரிகிறது.

இத்தனை கதைகள் விரியும் போது நாவலில் ஏற்படும் சிக்கல் என்பது அத்தனை கதைகளும் நாவலின் ஒற்றை சரடில் பொருந்த வேண்டும் என்பதே. குள்ளச்சித்தன் சரித்திரத்தில் வரும் பெயரில்லாத வாமன ஸ்வாமிகள் என்றழைக்கப்படும் குள்ளச்சித்த சுவாமிகள் இந்த அத்தனை வகை மாதிரிகளையும், அத்தனை வாழ்க்கையையும் ஒற்றைச் சரடில் இணைக்கிறார். அவரே வந்து பிள்ளையில்லாத பழனியப்ப செட்டியார், சிகப்பி தம்பதியருக்கு குழந்தையை வழங்கிச் செல்லும் போது தாயாரம்மாளின் கருவுற்றிருந்த பெண் மீண்டும் கன்னியாகிறாள்.

நான் வாசித்த தமிழ் நாவல்களில் பின்நவீனத்துவ கதை கூறல் முறையின் உச்சபட்ச சாத்தியங்கள் இந்நாவலில் நிகழ்ந்துள்ளதாகவே படுகிறது.

இந்நாவலின் மற்றொரு ஆன்மீக பலம் என்பது இதில் வரும் கதாபாத்திரங்கள் லௌகீக பிரச்சனையில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால் எந்த கதாபாத்திரமும் தங்களை சுய பச்சாதாபம் கொண்டவர்களாக காட்டிக் கொள்ளவில்லை. தாயாரம்மாளின் மகள் அருந்தவம் தான் கருவுற்றதை அறிந்தவுடன் வீட்டிற்கு வந்து தாயிடம் நடந்ததைச் சொல்கிறாள். அம்மா அழுது புலம்பும் போது மகள், “விடும்மா. தப்பு என் மேல தான் அரளி விதையை அரைச்சுக் கொடு. சத்தமில்லாம போயிறேன்” என்கிறாள். அதே அத்தியாயத்தில் அவ்வூரில் மௌன சாமியாக வரும் ஒருவன் அவ்வீட்டின் வாசலில் வந்தமர்ந்து சிரிக்கிறான். வாழ்வில் என்றும் பீடியை புகைத்து முகத்தில் எவ்வித பாவமும் காட்டாத கிறுக்கனவன். அன்று அவர்கள் வீட்டின் வாசிலில் அமர்ந்து சிரித்துக் கொண்டேயிருக்கிறான். அவன் வயிறு வலிக்க குடல் மார்புக் கூட்டுக்கு மேல் ஏற அவன் விழுந்து புரண்டு சிரிப்பதைப் பார்த்த தாயாரம்மாள் தானும் அதே போல் சிரிக்கத் தொடங்குகிறாள்.

அதே போல் நாவலின் உச்ச கதாப்பாத்திரங்களில் ஒன்று சிகப்பியினுடையது. அவள் மனம் குழந்தையின்மைக்கும், அதை பரிகசிக்கும் சுற்றத்தாருக்கும் (குறிப்பாக அவளது சின்ன மாமியாருக்கும்) இடையே ஊடாடி வருகிறது. அவள் கையில் ஒரு குழந்தை தருவதென்பது, அவளை முழுவதும் வருத்தி உடலை மொத்தமாக முறுக்கிய பின் மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பும் நிகழ்வு

இப்படி நாவலின் வெவ்வேறு கதாபாத்திரங்களையும் அதன் இயல்புகளையும் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இந்நாவல் இவை எல்லாவற்றையும் தாண்டி உச்சமடைவது இந்த அத்தனை வாழ்க்கைக்கு மேலும் அவர்கள் அறியாத மீபொருண்மை தளத்தில் நின்று இணைக்கும் புள்ளியான சித்தரின் கதாபாத்திரம்.

இந்நாவலில் வரும் சித்தர் சித்துவிளையாட்டுகள் செய்பவராகவும், எளிய லௌகீக சிக்கல்களை தீர்ப்பவராகவும், தன் சிஷ்யனான முத்துசாமி ஐயருடன் மாய மந்திரங்கள் காட்டுபவராகவும் வருவது நாவலின் மிகப்பெரிய பலவீனம். நம் இந்திய மரபில் குறிப்பாக தமிழகத்தில் சித்தர் என்பதற்கு மேலதிகப் பொருள் உள்ளது. அகத்தியர் தொடங்கி பாம்பாட்டி சித்தர் வரை மாயமந்திரங்கள் அனைத்தும் கண்டு கற்று நிகழ்த்திக் காட்டியவர்கள் என்றாலும் கூட ஒவ்வொரு சித்தருக்கு லௌகீகத்திற்கு அப்பாலுள்ள ஆன்மீக கடமை இருந்தன. சித்தர்களின் ஆன்மீகம் என்பது இவ்வுலகின் அதன் இயக்கங்களின் மீது முழுதும் பற்றிலில்லாமல் இருப்பது.

உதாரணமாக சொல்லவேண்டும் மறுபடியும் புதுமைப்பித்தனுக்கே திரும்பி செல்ல வேண்டியதாக இருக்கிறது. புதுமைப்பித்தனின் ’சித்தி’ சிறுகதையின் மைய கதாபாத்திரமான செண்பகராமன் பிள்ளை ஒரு மாட்டு வண்டி குடை சாய்ந்து விழுந்து தீப்பற்றி எரிவதைப் பார்ப்பார், அருகே கோவிலில் ஒரு சாமியார் அதனைப் பார்த்து பீடி இழுத்துக் கொண்டிருப்பார். செண்பகராமன் பிள்ளை அவர் மேல் கோபம் எழும் சித்தர், ‘சும்மா மாட்டுவண்டிய சுத்தி வாரதுல்ல ஒரு புண்ணியமும் இல்லை’ என்கிறார். பிள்ளை நெஞ்சில் அறைந்து அழுவது கிழட்டு சாமிக்கு வேடிக்கையாக இருக்கிறது. கிழட்டு சாமிக்கு அனைத்தும் வேடிக்கை தான். படிக்க தெரியாத கிழட்டு சாமி திருவாசக புத்தகத்தை சுமந்து கொண்டு திரிகிறது. பிள்ளை சாமியிடம் பேசுகிறார். அவருடன் கைலாயத்திற்கு கிளம்பிச் சென்றுவிடுகிறார். செண்பகராமன் பிள்ளை கிழட்டு சாமியின் சீடன் சாமியாகிவிடுகிறார்.

கதை இங்கே முடியவில்லை செண்பகராமன் பிள்ளை லௌகீகத்தில் முழுமுனைப்பாக ஈடுபடத் தொடங்கிய நாளில் (அதாவது அவரது திருமண நாளில் சாந்திமுகூர்த்தத்தின் போது) ‘அப்பா செண்பகராமா’ எனக் குரல் கேட்கிறது. அந்த குரல் அவரை எல்லாத் தருணத்திலும் துரத்திக் கொண்டே இருக்கிறது. இறுதியில் பிள்ளை தான் ஒருபோதும் இந்த லௌகீகத்தை விட்டு அகல முடியாது என உணரும் தருணத்தில் மீண்டும் அந்த குரல் கேட்கிறது.

குள்ளச்சித்தன் சரித்தரம் இப்படி சித்தர் என்னும் தொன்மத்தின் சாத்தியங்களை உசாவி பார்த்திருக்க வேண்டும் என்பது அதன் குறையாக இருந்தாலும் கூட. இதில் வரும் சித்தர் என்ற அம்சமே இதன் பலமாகவும் உள்ளது. இறுக்கமான யதார்த்தவாத அழகியல் கொண்ட எழுத்தாளர் எல்லோரும் நம் சமூகத்தின் மையத்திலிருக்கும் கதை மாந்தர்கள் பற்றி மட்டுமே கதைகள் புனைந்தனர். மைய சமூகத்திற்கு அப்பால் வாழும் பிற உலகம் உள்ளது என்பதை அவர்கள் தங்கள் புனைவில் சிந்தித்துப் பார்க்கவில்லை. விதிவிலக்குகள் சில இருக்கலாம். உதாரணமாக ஜெயகாந்தனின் ஓங்கூர் சுவாமிகள் (விழுதுகள்), ரிஷி மூலம், அசோகமித்திரனின் மானசரோவர் கதைகளை குறிப்பிடலாம். ஆனால் நான் சொல்ல வருவது அந்த ஒட்டுமொத்த காலத்தின் மனநிலையை பற்றி.

நாகர்கோவிலில் வாழ்ந்த சுந்தர ராமசாமி கன்னியாகுமரி கோவிலோ, மருத்துவாள் மலை சித்தரோ எந்த பொருளும் அளிக்கவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று. ஆனால் யுவன் சந்திரசேகரின் மனம் இந்த கண்ணுக்கு தெரியாத உலகின் மேல் ஒரு பெரும் பற்றோடு பார்க்கிறது. இந்நாவலில் திருவண்ணாமலை பற்றிய குறிப்புகளும் அதிலுள்ள வாமன ஸ்வாமிகள் மடம் குறித்தும் வருவதை நாம் கவனிக்கலாம்.

முத்துசாமி ஐயர் ஜோசியம் பார்க்கிறார், குறி சொல்கிறார், சோழி உருட்டி வருவதை சொல்கிறார். இதெல்லாம் அறிவியல் தர்க்கத்தால் நிறைந்த ஒரு நவீன மனம் வெறும் அசட்டு நம்பிக்கைகள் என உதாசீனம் செய்திருக்கிறது. யுவன் சந்திரசேகர் தன் எழுத்தில் இவை அனைத்தின் மேலும் பெரும் பற்றோடு நம்பிக்கை கொள்கிறார். அதே தருணத்தில் அதனை மறுக்கும் நிராகரிக்கும், கேலி செய்யும் மனநிலையும் அவருடையது தான்.

முத்துசாமி ஐயரின் அப்பா சொல்கிறார், “ஒரு ஜோசியன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஜோசியம் பார்க்க கூடாது” என்கிறார். ஆனால் அவர் ஒரு நாள் ஏதோ தோன்ற தன் ஜாதகத்தை எடுத்து பார்த்துவிடுகிறார். அதன் பின் சீக்கிரத்திலேயே அவர் காலமாகிவிடுகிறார். இதிலிருப்பது ஒரு மூடநம்பிக்கை என அறிவியல் அறிந்த வாசகன் எண்ணலாம். ஆனால் அந்த நம்பிக்கைகளுள் ஒளிந்திருக்கும் தற்செயல்கள் மனித மனம் அறியாத விளையாட்டு. அதனையே நாம் ஊழ் என்றும் விதி என்றும் சொல்கிறோம்.

யுவனுள் இந்த அதீத நம்பிக்கைகள் ஒரு அத்தியாயத்தில் வெளிப்பட்டால் அடுத்த அத்தியாயத்தில் அதனை மறுத்து தர்க்க ரீதியாக (வாழ்க்கை நிகழ்வுகளைக் கூட) சொல்லும் ஒரு தர்க்க மனம் எழுவதை நாம் பார்க்கலாம். அதனாலே நான் முன்னர் ஜெயமோகனும், சாருவும் சந்திக்கும் ஒரு புள்ளி என யுவனை குறிப்பிட்டேன்.

தாயம்மாப் பாட்டியின் நாற்பத்தியோரு கதைகளில் வரும் ஒரு உபகதை பாட்டி பேரனிடம் சொல்லிகிறாள் சின்னமனூர் போகும் வழியில் ஒரு மோடி வித்தைக்காரன், ‘யாராவது படுங்கன்றான்’ உங்க தாத்தா நேரா போய் படுத்திட்டார். அவன் போர்வையால் தாத்தாவை மூடி அங்கு சுற்றியிருப்பவர்களின் யார் யார் பையில் எவ்வளவு பணம் இருக்கிறது எனக் கேட்கிறான். தாத்தா பதில் சொல்கிறார். சகலத்திற்கும் நெற்றியில் அறைந்த மாதிரி பதில். இறுதியில் வித்தைக்காரன் தாத்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து தாத்தாவின் கழுத்தை அறுத்து ரத்தத்தைக் காட்டுகிறான்.

பாட்டி பதறி பரிதவிக்கிறாள். அழத் தொடங்கிவிடுகிறாள். வித்தைக்காரன் பெரிய மனசு செய்து தாத்தாவை எழுப்பிவிடுகிறான். வீடு திரும்பும் போது பாட்டி கேட்கிறாள், “எப்படி உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சது” என. ”நான் ஒண்ணும் சொல்லலையேடி படுத்ததும் தூங்கிட்டேன்” தாத்தாவின் பதிலாக வந்தது.

யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் போல் பிற நாவல்களிலும் நான் மேலே சொன்ன அனைத்து அம்சங்களும் இருப்பதைக் காணலாம். யுவன் இதே கோட்பாட்டை தன் சிறுகதைகளிலும் போட்டு பார்க்கிறார். உதாரணங்கள், ‘தாயம்மாப் பாட்டியின் நாற்பதோரு கதைகள்’, ‘மூன்று சாமங்கள் கொண்ட இரவு’.

சாகும் தருவாயில் இருக்கும் தாயம்மா பாட்டி துயரம் நிறைந்த தன் வாழ்க்கையை நாற்பது கதையாக தன் பேரனுக்குச் சொல்லி செல்கிறாள். அத்தனை துயரங்களையும் கதையாக மாற்றிய பின் பாட்டிக்கு ஓர் ஆசுவாசம், விடுதலை நிகழ்கிறது எழுத்தில் சொல்லப்படாத அந்த கதை நாற்பத்தியோராவது கதையாக வாசக மனதில் வந்தமர்கிறது. தாயம்மா பாட்டி வாழ்வில் கண்ட அனைத்தும் கதைகளும் தனித்தனி கதாபாத்திரங்கள். ஆனால் அவை ஒன்றை ஒன்று நிறைப்பவை. ஒரு வாசகன் அக்கதைகளுக்குள் வராத தாயம்மாப் பாட்டியைக் கொண்டு அத்தனை கதையையும் ஒன்றாக இணைக்க முடியும். இந்த நூலில் பூ கோர்க்கும் விளையாட்டை தான் யுவன் தன் வாசகர்களுடன் விளையாடிப் பார்க்கிறார்.

பாட்டி சொன்ன கதைகள், சித்தனின் சித்து கதைகள், மூன்று சாமம் கொண்ட ஒரே  இரவின் கதை என யுவனின் பெரும்பாலான கதைகள் நம் மரபார்ந்த கதை கூறல் முறையிலிருந்து பெற்றவை. யுவனின் உள் வாழ்வது நவீன எழுத்தாளன் அல்ல. நம் நெடிய மரபில் இருக்கும் ’கதை சொல்லி’ என்றே யுவனைக் குறிப்பிடலாம். இதனை எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவர் தமிழின் நவீன கதை சொல்லி மரபில் வரும் கி. ராஜநாராயணன், நாஞ்சில் நாடன் வரிசையில் யுவனை குறிப்பிடுகிறார். அதுவே யுவனை பற்றிய மிகச் சரியான வரையறை.

2

தனிப்பேச்சிலோ அல்லது ஒரு பொது விவாதத்திலோ யுவன் சந்திரசேகர் பேசுவதை நம்மில் பலர் கவனித்திருக்கலாம். யுவன் தானே முனைந்து சொல்லி சொல்லி ஒரு கருத்தை உருவாக்குவார். அந்த கருத்தை அவர் அடைந்த மறுகணம் சொல்லி தெளிந்த அடுத்த நொடி அதனை மறுத்து பேச ஆரம்பித்திருப்பார். “இல்ல அத அப்படி நான் சொல்லல… அத அப்படி அறுதியா சொல்லிற முடியாது… குறைஞ்ச பட்சம் நான் அப்படி நினைக்கல…” என்பன அவர் சொற்சொடரில் எளிதல் கேட்கும் வாக்கியங்கள். ஒன்றை அவரே கட்டு உருவாக்கி அவரே அதனை கலைத்து விடுவார். சீட்டுக்கட்டை கோபுரம் போல் அடுக்கி அதன் மேல் தாவி விழும் குழந்தையின் இயல்பு யுவனுடையது.

யுவனின் புனைவுலகிற்கு ஆதாரமான பல நிகழ்வுகளை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் புனைவில் வரும் முக்கிய கதாபாத்திரம் அவரது அப்பா எனப்படுகிறது. யுவன் தன் சிறு வயதிலேயே குடலில் ஏற்பட்ட ஒரு நோயால் தந்தையை இழந்தவர். அந்த சிறு வயது ஏக்கமோ, இல்லை தந்தையை பற்றிய நினைவுகளோ அவர் புனைவில் திரும்ப திரும்ப வந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். உதாரணமாக மூன்று சாமங்கள் கொண்ட இரவு கதையில் தன் சித்தியின் கொடுமை வீட்டை விட்டு ஓடி போன சுகவனம் ஹோட்டலில் வேலை செய்து ஒரு வருடம் கழித்து திரும்பி வருகிறான். திரும்பி வந்தவன் திண்ணையில் அமர்ந்திருக்கிறான். வீட்டுக்கு வந்த அப்பா ஒன்றும் நடக்காதது போல், “உள்ளே வாயேண்டா, ஏன் திண்ணையிலேயே உக்காந்திருக்க” எனச் சொல்லிக் கொண்டே உள்ளே செல்கிறார்.

யுவன் அத்தனை துயரையும் ஒரு சிரிப்புடனே அணுகுகிறார் எனப்படுகிறது. ஆனால் கள்ளமற்ற குழந்தையின் சிரிப்பு அது. இதை எழுதும் போது யுவன் பேச்சுக்கு நடுவே எழும் அவரது சிரிப்பை நினைவு கூர்கிறேன்.

அந்த கள்ளமின்மையே யுவனின் புனைவுலகை அத்தனை கசப்புகளுக்கு மேலும் ஒரு புன்னகையுடன் வாசிக்கக் கோருகிறது.

யுவன் சந்திரசேகரின் சிறு வயதில் நிகழ்ந்த ஒரு சம்பவம். ஜெயமோகன் சார் சொன்னது எனவே நிகழ்வில் புனைவேற்றப்பட்டிருக்கும். யுவன் சந்திரசேகரை அவரது அண்ணன் அழைத்து, “சேகர் இந்தா பிடி ரூபா, நீ நேரா ரயில்வே ஸ்டேஷன் போ அங்கே ஸ்டேஷனுக்கு எதித்தாப்பல விலாசம் காபி இருக்கும் அங்கே காபி குடிச்சிட்டு டிரெயின் ஏறி கோவில்பட்டி போ. போற வழியில டிரெயின்லயே சாப்டுக்கோ, கோவில்பட்டி போய் எறங்குனதும் இந்த வீட்ல இன்னார போய் பாரு அவரு காசு கொடுப்பாரு. அத வாங்கிட்டு மதிய டிரெயின் பிடிச்சு மதுரை வந்து சேரு” என்கிறார்.

யுவன் அனைத்தையும் கேட்டு தெளிந்து காசை பெற்றுக் கொண்டு கிளம்புகிறார். அடுத்த அரை மணி நேரத்தில் வீடு திரும்பி விடுகிறார். அண்ணா யுவனிடம், “என்னடா திரும்பி வந்துட்டே…” என பதறிபோய் கேட்கிறார்.

யுவன் பதிலுக்கு, “அண்ணா, நீங்க ஸ்டேஷன் போய் காபி குடிக்க சொன்னீங்களே”

“ஆமா, சொன்னேன் அங்கெ எதுவும் பிரச்சனையா?”

“இல்ல, அங்க விசாலம் காபில காபி பொடி தீந்துச்சு டீ தான் இருக்குன்றான். இப்ப என்ன பண்றது.” என திக்கி திணறி குழப்பத்துடன் நிற்கும் தம்பியை பார்த்து அண்ணனுக்கு அதற்கு மேல் பேச இயலவில்லை. தம்பி மேல் கோபமும் வரவில்லை.

யுவனின் புனைவுலகை அவரது இந்த மனநிலையோடு நாம் ஒப்பிட்டு பார்க்கலாம். யுவனின் கதாபாத்திரங்கள் அனைத்தும் தனக்கான நியாய தர்க்கங்களுடன் எழுந்து வீறு கொண்டு நிற்கும். அதே நேரத்தில் அதற்கு அடுத்த கணத்தில் அது தன்னை குழப்பிக் கொண்டு அமர்ந்திருக்கும். உதாரணம் யுவனின் கதைகளிலிருந்து பல நூறு இடங்களைச் சுட்டலாம்.

யுவனின் புனைவுலகைத்தை வரையறுக்க வேண்டுமென்றால் மணல் வீடு கட்டி அதன் மேல் அதே பரவசத்துடன் சாடும் குழந்தையின் இயல்பு யுவன் சந்திரசேகரின் புனைவுலகு. அவருள் இருக்கும் அந்த குழந்தை அம்சமே அவரை சுவாரஸ்யமான கதை சொல்லியாக ஆக்குகிறது. அதுவே யுவனை நம் மரபார்ந்த கதை சொல்லியில் ஒருவராக அமர்த்துகிறது.

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு என் வாழ்த்துக்கள்.

***

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது ஏற்புரைகள்
அடுத்த கட்டுரைபா.ரா,சுபத்ரா- கடிதங்கள்