பொன்முகலி கவிதைகள் – கடலூர் சீனு

இனிய ஜெயம்

நண்பர்களுடன் உரையாடுகையில் அவ்வப்போது என்னை நோக்கி வரும் கேள்விகளில்  ஒன்று பின்நவீனத்துவம் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பை கொண்டிருக்கிறீர்கள் என்பது.

அது வெறுப்பு அல்ல. நம்பிய ஒன்று அது அவ்வாறு அல்ல என்று தெரியவரும் போது எழும் கரிப்பு. என் இளமையில் துவங்கி இப்போது நினைத்தாலும் என்னைக் கரிக்கச் செய்பவை  இரண்டு விஷயங்கள். ஒன்று ஆத்மீகம், மற்றது சமூக அரசியல். இந்தியாவில் சாமியார்களில் தெருவில் திரிவோர் முதல் கார்ப்பரேட் ஆசாமிகள் வரை மயிர் வளர்த்த மயிராண்டிகளில் நூற்றுக்கு நூற்று பத்து பேர் போலிகள். தான் இன்னததுதான் செய்கிறோம் என்பதை செய்யும் தானே அறியாதவர்கள். அவர்களை நம்பி இன்றளவும் சீர் செய்ய இயலா உடல் கோணலும் உள்ளக் கோணலும் கொண்டு திரிப்பவன் நான்.

இரண்டாவது பெரியார் பேசிய சமூக அரசியல். அது என்ன என்று தெரிந்து கொள்ள என் வாழ்வின் கணிசமான வருடங்களை இழந்தேன். அப்படி இழந்தே இது மயிரை சுட்டு கரியை அள்ளும் வெட்டி வேலை என்பதை அறிந்தேன்.

இந்த இரண்டுக்கும் இணையாக என் இலக்கியப் பயணத்தில் என்னை இடைமறித்து இம்சை செய்தது பின்நவீனத்துவம். தான் இன்னதுதான் செய்கிறோம் என்பதை தானே அறியாத கூட்டம் ஒன்று 80 முதல் 90 வரை தமிழ் தீவிர இலக்கிய சூழலை ஆட்டிப் படைத்தது. 2000 ஆண்டில் முழுக்க முழுக்க என்னை அதன் பொருட்டு ஒப்பு கொடுத்து அது கோரும் முறையியலை பயின்று அவற்றை வாசித்தேன். கணிசமான காலத்தை அதில் இழந்த பிறகே அதுவும் மயிரை சுட்டு கரியை அள்ள முயன்ற கதை என்பதை அறிந்தேன். பின்நவீனத்துவம் முன் வைக்கும் அழகியலுக்கு நேராக கலாபூர்வமாக புனைவுகள் புரிந்த சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர், இரா முருகன், உள்ளிட்ட வெகு  சில இலக்கியப் புனைவாளர்களையன்றி, இந்த அழகியல் ஓடைக்கு தமிழில் பெண்ணியம் சமூக அரசியல் என  பிற எங்கும் இன்று அதற்கு எந்த இடமும் இல்லை.

இலக்கணத்தில் இருந்து தலைகீழாக இலக்கியத்தை பிதுக்கி எடுக்கும் இந்த போக்கில் இன்றும் புனைவுகள் எழுதப்படுகின்றன. அதை கூட ஒரு மாதிரி சமாளித்து விடுவேன் அனால் இதே வகைமையில் வரும் கவிதை தொகுப்புகள் என் எதிர்வரும்போது மட்டும், சசோபாவுக்கு கீழ் ஒளிந்து கொள்ள ஓடும் தீபாவளி நாள் டாபர்மேன் கணக்காக ஆகிவிடுவேன்.

நுகர்வு கலாச்சாரம் வழியே யாவையும் சீர்கெட்டுப் போன பின்காலநீய நாட்டின் உதிரி குறித்த பாடுகளை பிழியும் கவிதைகள், நிதம்ப நீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் மானுடம், யோனிப் பிளவே மஹா இருட்துளை என்றாகி அதில் சென்று மறையும் பிரபஞ்சம் என விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் பெண்மையின் பேராற்றலை எடுத்து இயம்பும் கவிதைகள், ஆக்டிவிஸ்ட் கவிதாயினிக்களின் இந்த சமூகத்துக்கு ஒரு சட்டயடி தோழர் கவிதைகள், அதெல்லாம் பழசு, இதுதான் புச்சு, நிக்கோனார் பார்ப்பரா இப்புடித்தான் எழுதராஹோ என்று முழங்கி வரும் எதிர் கவிதைகள், என இந்த வகைமாதிரியில் கவிதை கலையை போட்டு மிதி மிதி என மிதித்து  சாணியை பிதுக்கும் தொகுப்புகள் பல. அந்த வரிசையில் வரும் மற்றொரு தொகுப்போ என்றே பொன் முகலியின் முதல் தொகுப்பு என்னைத் தேடி வரும் போது நினைத்தேன்.

என்னுடைய வழக்கப்படி முன் முடிவுகளை தூக்கி பின்னால் போட்டு விட்டு அன்று வாசித்தேன். இந்த விழாபொழுதுக்காக மீண்டும் வாசிக்கும் போது பொன் முகலியின் _ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்பும் பொழுது_ எனும் தலைப்பிட்ட அவரது இரண்டாம் தொகுதியை முக்கிய தொகுதி என்று சொல்வேன்.

இந்த தொகுப்பின் முதல் முக்கிய அம்சம், இது ஒரு கவிஞரால் மட்டுமே, தனது ஆயுதமான கவிதை கொண்டு மட்டுமே தொட்டெடுக்க முடிந்த வாழ்வு தருணத்தை அவ்விதமே தொட்டெடுத்த, ப்ரயத்தனமற்று உருவான வடிவம் கொண்டு, உண்மையான உந்துதல் வழியே எழுந்த சில நல்ல கவிதைகளை கொண்டிருக்கிறது என்பதே.

ஒரு பெண் கவிஞராக (படைப்பில் ஆண் பெண் பேதம் இல்லை. எனினும் ஒரு புரிதலின் பொருட்டு இச்சொல் இங்கே) இந்த தொகுப்பில் இவரது அக்கறை தனித்துவமானது. குறிப்பாக பிரபஞ்சம் × மனிதன் எனும் முரண் இயக்க புள்ளியில் இயங்கும் கவிதைகளை சொல்வேன்.

படித்த கணமே அட என்று வியந்து ரசிக்க வைத்தது இந்த தொகுப்பில் ( எந்த கவிதைக்கும் தலைப்பு கிடையாது) உள்ள ஏழாவது கவிதை. பின்நவீனம் தமிழில் நவீன கவிதைகளுக்கு கொண்டு வந்து சேர்ந்த இடர்களில் ஒன்று, கவிதையில் சொல்லழகு தொடுத்து எழும் சந்தம் எனும் குறிப்பிட்ட அழகுக்கு முற்றலும் எதிராக கவி மொழியை கையாண்ட நிலை. சந்தம் உள்ளிட்ட இன்ன பிற விஷயங்கள் எல்லாம் வாசகனை மயக்கி, அவன் அபோதத்தை மேலாதிக்கம் செய்து, அதன் வழியே அதிகாரத்துக்கு துணை நின்று, இத்தியாதி இத்யாதி வரிசை வழியே மொத்த மானுடத்தையும் பூட்ட கேஸ் ஆக்கி விடுகிறது ஆகவே என்று துவங்கி நீளும் அந்த பிலாக்கணம், படைப்பு என்று ஒன்று இல்லை உள்ளதெல்லாம் பிரதி மட்டுமே என்று தொடரும்.

மாறாக ஒரு ‘படைப்பு’ என்பது ஒரு சொல் கொக்கி போட்டு அடுத்த சொல்லை இழுத்து வரும் மாயம் வழியே நிகழ்வது. மொழி வழியே மொழி கடந்த ஒன்றை சுட்டி விடும் தொட்டு விடும் உன்மத்தம் அடங்கியது.  அதன் உதாரணமே இந்த கவிதை.

பித்தேறிப் பெருங்காமம் கொண்டு,

நித்தந் தவங்கிடந்து

நாச் சிவக்க நாமமுரைத்து அகம் முற்றி இகம் மறந்து நினைவழிந்து மனங்குழற பின்னும் போதாது

பேயுருக் கொண்டு

பெரும் பாதம் பற்றினேன் என் இம்மையில் ஆடும் கடலே

நெருப்பே

துயரே.

2020 க்கு வந்திறங்கிய காரைக்கால் அம்மையாரின் உணர்வு நிலை. நவீன பதிகம் போலும் ஒரு கவிதை. சொல்லி சொல்லி உள்ளே கவிதை சுழன்று அது எழுப்பும் பித்தை அனுபவிக்கலாம்.

இம்மை என்பது உவர்க்கும் கடல்.

கடல் போலும் நெருப்பு.

கடல் போலும் துயரம்.

இதே போல மற்றொரு அழகிய கவிதை இது

ரங்கராட்டினத்தில் ஏறி அமர்ந்து கிறுகிறுக்கிறது தலை.

மூர்க்கமாய்ப் பிணைகிற சர்ப்பங்களெ நினைவும், கனவும் இரவும், பகலும்.

மயக்கம் ஆகாசத்தை பூமிக்கும் பூமியை ஆகாசத்திற்கும் மாற்றி வைக்கிறது.

காண்கிற காட்சிகளிலெல்லாம் திருச்சாம்பல் மணக்கும் களிப்பெரு நடனம்.

இந்த புவி மிகப் பெரிய குடை ராட்டினம் என்று உணர நேர்ந்தால்? அப்படி உணர்ந்த ஒரு அகத்தின் நிலை இது. இந்த பூமியே பெரிய நெருப்பு உருண்டை ஒன்றில் இருந்து வந்த சிறிய நெருப்பு உருண்டைதான். அதன் மைய்யத்தில் உள்ளது நெருப்புதான். காணும் அனைத்தும் அதன் களி நடனம்தான். இறுதியில் எல்லாமே சம்பலாக ஏஞ்சப்போகும் ஒன்றின் களி நடனம். அது சாம்பல். உயர்ந்தவற்றில் எல்லாம் உயர்ந்த திரு வந்து நிறைந்த சாம்பல். திருச்சாம்பல். திருச்சாம்பல் மணக்கும் களி நடனம். அறிதல் என இங்கே அமைத்த எல்லாவற்றையும் வகுத்து சொல்லி விடும் ஒரே வரி.

மேற்கண்ட கவிதைகளில் படிந்த மெல்லிய சைவ அழகு போல, நீ தண்ணீர் தெளித்து எழுப்பிவிட்டால் இது நான் கண்ட கனவு என்று துவங்கும் கவிதையில் ஒரு மெல்லிய வேதாந்த சாயல் தொனிக்கிறது. இந்த தொகுப்பின் இரண்டாவது முக்கிய அம்சம், இது பேசும் மையமான விஷயம் எதுவோ அதன் எதிர் நிலையையும் இது பரிசீலிக்கிறது என்பதே. உதாரணமாக மேற்சொன்ன ஏழாவது கவிதைக்கு நேர் எதிராக, தனது முதல் நரையை கண்ட அன்று இரவு, மூர்க்கமாக ஒரு ஓநாய் போல சுய புணர்ச்சியில் ஈடுபடும் பெண் குறித்த கவிதையை சொல்லலாம். மற்றொரு கவிதை உண்டு கலாச்சாரம் என்று மேன்மை கீழ்மை உள்ளிட்டு மானுடம் அடைந்த சகல முக்கிய விஷயங்களின் பட்டியலை அந்த கவிதை அளிக்கிறது. அந்த கவிதையின் இறுதி வரி ‘நடு விரல்’ என்று முடிகிறது. மானுடம் இது மானுடம் என்று சொல்லும் வகைக்கு செய்த அடைந்த அனைத்துக்கும் எதிராக எழும் அந்த நடு விரல் எந்தத் தன்னிலையுடையது?

இந்த தொகுப்பு கொண்ட கவிதைகள் பேசும் தருணங்கள் பல  இத்தகு எதிர் நிலை, இந்த எதிர் நிலை உரசி செல்லும் புள்ளிகள் இவற்றை மய்யம் கொள்கிறது. அதன் வழியே இது முழுமைப் பார்வையை இலக்காக்கும் தனித்துவம் கொண்ட தொகுப்பாக அமைகிறது. நிற்க.

இன்று அதிகாலை கனவில் வழக்கம் போல நீங்கள் வந்தீர்கள். நான் ரம்யா கேட்ட எதுவோ குறித்து உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அப்போது நீங்கள் உண்டுகொண்டிருப்பதை எனக்கும் ஒரு பிடி அளிக்கிறீர்கள். வெல்லம் போட்ட சிவப்பரிசி அவுல். கனவில் காணும் வண்ணம், வாசனை, ருசி இவற்றுக்கு நனவில் காணும் வண்ணம், வாசனை,ருசி இவற்றை கடந்த ‘மேலான’ ருசி ஒன்று உண்டு. காரணம் அது புறத்தில் இருந்து புலன்கள் வழியாக, நனவு கடந்து கனவை தொடும் வண்ணமோ, மணமோ, ருசியோ அல்ல. கனவில் இருந்து நனவுக்கு எழும் வண்ணம் அது. வாசனை அது. கனவில் இருந்து நனவுக்கு எழும் கூடுதல் வண்ணமும், வாசனையும், ருசியும் கொண்டது பொன் முகலியின் இந்த இரண்டாவது கவிதை தொகுப்பு கொண்ட சில கவிதைகள்.

கடலூர் சீனு


விஷ்ணுபுரம் விருந்தினர்கள்

2023 டிசம்பர் 16, 17 தேதிகளில் கோவையில் நிகழும் விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொள்ளும் இலக்கியவாதிகள்

விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்

விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா

விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்

விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்

விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி

விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா

விஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
அடுத்த கட்டுரையுவன் காணொளிகள்