இன்று விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வு

விஷ்ணுபுரம் விருது 2023 க்காக எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. நேற்றுமுதல் நடைபெற்று வரும் இலக்கிய உரையாடல் அரங்கு இன்று காலை 9 மணிமுதல் தொடர்ந்து நிகழும்.

இன்று மலேசிய எழுத்தாளர் எஸ். எம்.ஷாகீர், இந்திய வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா ஆகியோர் வாசகர்களை சந்திப்பார்கள். யுவன் சந்திரசேகருடன் வாசகர்கள் நிகழ்த்தும் உரையாடும் நிகழ்வும் அமைக்கப்பட்டுள்ளது.

ராமச்சந்திர குகா சென்ற சில ஆண்டுகளாக இந்திய சிந்தனைச்சூழலில் பெரிதும் கவனிக்கப்படும் இலக்கிய ஆளுமை. இன்றைய அரசியல் – சமூகவியல் சூழலில் காந்தியின் இடத்தை நிறுவியவர் என்னும் இடம் அவருக்கு உண்டு. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய வரலாற்றை விரிவாகவும் கூர்மையாகவும் ஆவணப்படுத்திய வரலாற்றாசிரியர்.

எஸ்.எம்.ஷாகீர் மலேசியாவின் முதன்மையான இலக்கிய ஆளுமையாகக் கருதப்படுபவர். விஷ்ணுபுரம் அரங்கு முதல்முறையாக ஓர் அயல்நாட்டுப்படைப்பாளியை அறிமுகம் செய்கிறது.

மாலை ஐந்தரை மணிக்கு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் கவிஞர் ஆனந்த்குமார் தயாரித்து அளிக்கும் யுவன் சந்திரசேகர் பற்றிய ஆவணப்படம் ’சுழற்பாதை யாத்ரீகன்’ திரையிடப்படுகிறது.

யுவன் சந்திரசேகரின் வாழ்க்கை, பின்புலம், அவருடைய எழுத்துமுறை ஆகியவற்றைப் பற்றி அவர் சொற்கள் வழியாகவும் அவருடைய நண்பர்கள் மற்றும் இலக்கிய விமர்சகர்கள் வழியாகவும் விரிவாக ஆராயும் இந்த ஆவணப்படம் விஷ்ணுபுரம் ஆவணப்படங்களின் கூர்மை, இலக்கியத்தரம் ஆகிய இயல்புகளைக் கொண்டது. விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் இன்று தமிழிலக்கிய வரலாற்றின் முக்கியமான பகுதிகளாக மாறியுள்ளன.

ஆறுமணிக்குத் தொடங்கும் விழாவில் விஷ்ணுபுரம் விருது ரூ 5 லட்சம் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. யுவன் சந்திரசேகருடன் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் நிகழ்த்திய நீண்ட உரையாடல் ’வேடிக்கை பார்ப்பவன்’ என்ற நூலாக வெளியிடப்படுகிறது.

விருதுவிழாவுடன் நிறைவடையும் இலக்கியக் கொண்டாட்டத்திற்கு அனைவரையும் அழைக்கிறோம்.
ஷாகீரின் உலகம்- கடிதங்கள்
குகாவை அறிதல்
ராமச்சந்திர குகா- தமிழ் விக்கி 
எஸ்.எம்.ஷாகீர்: தமிழ் விக்கி 
முந்தைய கட்டுரைகே.ஜி. சந்திரசேகரன் நாயர்
அடுத்த கட்டுரைநிகழ்வில்…