துயரில் மலர்தல்

அன்புள்ள ஜெ

ஒரு பெரும் துயரில் வீழ்ந்து வெளிவர முயன்று கொண்டிருக்கிறேன்.என் ஒரே குழந்தையான 8 மாத ஆண் குழந்தை 9 நாட்களுக்கு முன்னால் உடல்நலக் குறைவால் இறந்தான்.35 வயதில் எனக்கு கிடைத்த குழந்தை.அது பெரும் துயராக என்னை சூழ்ந்திருக்கிறது.

நான் சில சிறுகதை தொகுப்புக்கள் தவிர கிட்டத்தட்ட உங்கள் அத்தனை நூல்களையும் வாசித்தவன்.வெண்முரசு இரண்டாம் வாசிப்பாக “குருதிச்சாரல்” வரை வந்துள்ளது.ஜெயமோகன் வாசகர்களுக்கே உரிய வாழ்க்கை மற்றும் ஊழ் பற்றிய புரிதல் எனக்கும் சற்றே உண்டு.மெல்லுணர்ச்சிகளுக்கு ஆளாகி துவளுவதில்லை.என் தன்னறம் என்ன என்று அறிந்தவன், அதன் வழி செல்கையில் அதில் கிடைக்கும் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் உணர்ந்தவன் என்பதால் லௌகீக பிரச்சினைகளுக்கு எல்லாம் சோர்ந்து போனதில்லை.

கழிந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக எதற்குமே வருந்தி அமர்ந்ததாக நினைவில்லை.எல்லாவற்றிலும் உங்கள் சொற்களை பிடித்து மேலேறியிருக்கிறேன்.ஆனால் மகன் இறப்பை கடந்து செல்லவே இயலவில்லை.கண்மூடினாலே குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பே கண்முன் வந்து நிற்கிறது.தூக்கமின்மையால், மது பழக்கம் இல்லாத நான் இப்போது சில நேரங்களில் மது அருந்தலாமோ என எண்ண தொடங்கியிருக்கிறேன்.மொத்த வாழ்வும் அர்த்தமிழந்ததை போல் உள்ளது.நம் ஊழ் என எண்ணி கடக்க முயற்ச்சிதாலும், உயிரில்லாத மகனின் உடலை மருத்துவமனையில் இருந்து வீடு வரை கையில் சுமந்து வந்ததை கடக்க முடியவில்லை.வலியை வாய் திறந்து சொல்ல இயலா பருவம்.அச்சிற்றுடல் எத்தனை வேதனையை அனுபவித்ததோ  என எண்ணுகையில் அடிவயிறு பதபதைக்கிறது.

“இன்றைய துக்கம் நாளைய மகிழ்ச்சியாக இருக்கலாம். நாம் அறிய இயலாத ஏதேனும் நோக்கம் இருக்கலாம்.உடல் வலிக்கையில் விடிந்தால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் உறங்க செல்வோம் அல்லவா.. அவ்வாறே இன்றைய துக்கத்தையும் கொள்க” எனும் உங்கள் சொற்களை மீண்டும் மீண்டும் எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்.ஆனாலும் எளிதாக கடக்க முடியவில்லை.

இறப்புக்கு பின் இன்றே நான் வெளியே சென்றேன்.நான் ஊரில் சாலையோரம் ஐந்து நாவல் மரங்கள் நட்டு பராமரித்து வந்தேன்.ஆறு மாதங்கள் ஆகியும் தளிர் விடாததால் சற்று வருத்தம் இருந்தது.ஆனால் நான் வெளியே வராத இந்த ஒரு வாரத்தில் ஐந்தும் ஒரே நேரத்தில் தளிர் எழுந்து நின்றிருக்கிறது.அதை பாத்ததும் மனதில் ஒரு புன்னகை எழுந்தது.அக்கணம் தளிர் எழுகை குறித்து நீங்கள் சொன்னது என் நினைவிற்கு வந்தது.அப்போது ஜெ விடம் இதிலிருந்து மீள ஒரு மீள் சொல் கேட்டால் என்ன என்று தோன்றியது.ஏனெனில் நான் அறிந்தவரை 500 வீடுகள் கொண்ட இவ்வூரில் எதையேனும் வாசிக்கும் ஒரே ஆள் நானே.எனவே இவர்கள் எவருரிடமும் கேட்டு பயனில்லை.எனக்கு, எனக்கு மட்டுமேயாக தத்துவார்த்தமாகவோ, அறிவுரையாகவோ இதிலிருந்து மீள ஒரு சொல் கூறுக ஜெ.(இக்கடிதத்தை வெளியிட வேண்டாம்).

அவன் பிறந்தபோது இரு வீட்டாரும் தனித்தனியே வேறு இடங்களில் அவன் ஜாதகத்தை பார்த்தபோது அவனுக்கு ஆயுள் கெட்டி என்றே சொல்லப்பட்டது.இப்போது அவன் மருத்துவமனையில் இருந்த போதும் என் தாயார் கேட்டதற்கு அவன் உயிருக்கு ஆபத்தில்லை.நீளாயுள் உள்ளது என்றே சொல்லப்பட்டது.ஆனால்…

எனக்கு ஜோதிடத்தில் எல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை.இறப்பு நிகழ்த பின்னரே அது பற்றி சிந்திக்கிறேன்.சாஸ்திரப்படி நீளாயுள் உள்ளதென்றால் எப்படி இறக்க நேரிடும்.நீளாயுள் மற்றும் அவன் எதிர்காலம் பற்றி சொல்லப்பட்டவை எல்லாம் என்னாகும்? நீளாயுள் இருந்தாலும் இவ்வாறு இறக்க நேரிடுமா..?அவ்வாயுளுக்கான ஊழ் எவ்வாறு சமன்செய்யப்படும்?என்பன போன்ற கேள்விகளும் இப்போது மண்டேயை குடைகிறது.

அன்புடன்

அன்புள்ள ச,

உங்கள் கடிதம் கண்டேன். சில விஷயங்களுக்கு நம்மிடம் விளக்கம் இல்லை. வாழ்க்கையின் புதிர்கள் அப்படி எளிதாகச் சோதிடம் வழியாக முழுமையாக அறியமுடிபவை என்றால் ஏன் இத்தனை இலக்கியம், தத்துவம் , மெய்ஞானம் எல்லாம்? பல மெய்ஞானிகளையே அலைக்கழித்தவை இவை.

பொதுவாக ஜாதகங்களில் ஆயுள் சார்ந்து அறுதியாக ஏதும் சொல்லிவிடமுடியாது. சில அபாயங்கள் இருந்தால் சுட்டிக்காட்டலாம் என்பார்கள். நீளாயுள் என்று ஜோதிடம் உறுதியளிக்க இயலாது. ஆனால் எந்த கண்டமும் இல்லை என்றால் பெற்றோரின் மனமகிழ்வுக்காக நீளாயுள் என்று சொல்லிவைப்பது சோதிடர்களின் வழக்கம், அவ்வளவுதான்.

உங்கள் துயரை எந்தவகையிலும் குறைத்து மதிப்பிடமாட்டேன். அத்துயர் சிந்தனையும் கற்பனையும் கொண்டவர்களுக்குச் சற்று மிகுதி என்றும் அறிவேன். எல்லாரும் எல்லாரிடமும் சொல்லும் சொற்களே என்னிடமும் உள்ளன. காலம் கடந்துசெல்லட்டும். அதுவே ஆறும். இப்போதைக்கு எப்படியேனும் காலத்தை கடத்துவதொன்றே மானுடர் செய்யவேண்டியது.

லௌகீகவிவேகம் ஒன்றுண்டு. என் மூதாதையர் அதைச் சொல்ல கேட்டிருக்கிறேன். நெடுங்காலம் முதலே இந்த அறிவுரை இங்குள்ளது. ஒரு குழந்தையின் இறப்பை இன்னொரு குழந்தை மட்டுமே ஈடுசெய்யும். ஒரு குழந்தைக்கு இன்னொரு குழந்தை சமம் கிடையாது. ஆனால் ஒரு குழந்தைக்கு நாம் செய்யவேண்டியவற்றை இன்னொரு குழந்தைக்குச் செய்கையில் நாம் நிறைவடைய முடியும்.

இன்னொரு குழந்தையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் பெறுக என்றே நான் சொல்வேன். எவ்வண்ணமேனும். முற்றிலும் முடியாதென்றால் தத்து எடுப்பதென்றாலும் சரி. சென்ற காலங்களிலும் இப்படி சிலருக்குச் சொல்லியிருக்கிறேன். அவர்கள் அப்படி ஒரு குழந்தையைப் பெறுவது மறைந்த குழந்தையை மறக்கமுயல்வது என்று நினைத்து மறுத்தனர். ஆனால் இன்று இரண்டு குழந்தைகளுக்குப்பின் இந்தக்குழந்தைகள் மேல் அன்புசெலுத்தலே மறைந்த குழந்தைக்கான கடன்நிறைத்தல் என உணர்ந்துள்ளனர்

நலம் திகழ்க. மகிழ்வும் நிறைவும் தேடி வரும்

ஜெ

ஒளிரும் பாதை மின்னூல் வாங்க

தன்மீட்சி மின்னூல் வாங்க ‘

ஒளிரும் பாதை வாங்க

தன்மீட்சி வாங்க 

முந்தைய கட்டுரைஏ.கே.செட்டியார்
அடுத்த கட்டுரைதிருவருட்செல்வி – வாசிப்பு