குற்றவுணர்வை வெல்லுதல்

DENHOLM BERRY

அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு…

வணக்கம். என் பெயர் இராகா. நான் சென்னையில், ஆவடியில் வசித்து வருகிறேன்.

தங்களிடம் ஒரு கேள்வி…

ஒரு மனிதன் தவறு செய்து விடுகிறான். அந்த குற்ற உணர்வு அவனை துரத்தி கொண்டே இருக்கிறது. அந்த குற்ற உணர்விலிருந்து எப்படி விடுபடுவான? தன்னைத் தானே எப்போது மன்னித்து கொள்வான்?

தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்…

நன்றி

இராகா

*

தன்னைக் கடத்தல் வாங்க

அன்புள்ள இராகா,

ஒன்று, குற்றவுணர்வு ஒரு பிழையை உணர்த்துவதனால் அது நல்லதுதான். ஆனால் அதில் நீடிப்பது ஆன்மிகமான தேக்கநிலையை உருவாக்கும்.

குற்றவுணார்ச்சி கழிவிரக்கத்தை உருவாக்கி மிகையுணர்ச்சிகளில் அலையச் செய்யும். கழிவிரக்கம் தாழ்வுணர்ச்சியாகும். தாழ்வுணர்ச்சி வெற்றிபெற்ற அனைவர் மேலும் வெறுப்பும் காழ்ப்பும் உருவாகச் செய்யும். ஒட்டுமொத்தமாக அது எதிர்மனநிலையை அளிக்கும். எதிர்மனநிலை ஆன்மிகமான தேக்கநிலையை உருவாக்கிவிடும். எதுவானாலும் ஒருவர் தன்னியல்பாக இருப்பதே ஆன்மிகமான விடுதலை நோக்கிய தொடக்கம்.

ஒளிரும் பாதை வாங்க

ஒளிரும் பாதை மின்னூல் வாங்க

குற்றவுணர்ச்சியில் இருந்து விடுபட பிராயச்சித்தம் அல்லது கழுவாய் என ஏதும் செய்யவேண்டியதில்லை. பலசமயம் அது சாத்தியமும் அல்ல. தவறைச் சுற்றி தொடர்ந்து உழலவே அது வழிவகுக்கும். அதை விட்டு விலகுவதே விடுபடும் வழி.

குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபடும் ஒரே வழி, நீங்களே உங்களை மதிக்கும்படியான பணிகளில் ஈடுபடுவதுதான். அறிவுத்தளத்திலோ, சேவைத்தளத்திலோ, ஆன்மிகத்தளத்திலோ. அர்ப்பணிப்புடன் செய்யப்படும் நீண்டகாலப் பணி மெல்ல மெல்ல உங்கள் ஆளுமையை மாற்றியமைக்கும். உங்களை வளர்ச்சியுறச் செய்யும். அப்பிழையைச் செய்தபோதிருந்ததை விட பெரியவராக ஆகிவிட்டால் அதை நீங்கள் கடந்துவிட்டீர்கள் என்று பொருள்.

ஓர் எழுத்தாளனாக நான் புனைவிலக்கியத்தை முன்வைக்க வேண்டியவன். ஆனால் அதைக் கடந்து சிலவற்றை என்னுடைய நூல்களில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இரண்டு காரணங்கள், ஒன்று இன்றைய சூழலில் இச்சொற்கள் பலருக்கும் தேவையாகின்றன. இரண்டு, இவை நான் அறிந்து கடந்து வந்த பாதையில் உருவானவை.

சுருக்கமாக இதைச் சொல்வேன். இச்சமூகத்திற்கு எதையேனும் அளிப்பவர்கள் ஓர் அகப்பெருமிதத்தை அடைவார்கள். அங்கே குற்றவுணர்ச்சி அமைந்திருக்க  எந்த இடமும் இல்லை. ஆகவே அளிப்பவர் ஆகுக.

ஜெ

 

ஒளிரும் பாதை மின்னூல் வாங்க

தன்மீட்சி மின்னூல் வாங்க ‘

ஒளிரும் பாதை வாங்க

தன்மீட்சி வாங்க 

முந்தைய கட்டுரைசு சமுத்திரம்
அடுத்த கட்டுரைகதைக்கொண்டாட்டம், கடிதம்