பூமர்

அன்புள்ள ஜெ

இந்த கேள்வி ஏற்கனவே உங்களிடம் வந்திருக்கும். இருந்தாலும் என் நிறைவுக்காகக் கேட்கிறேன். என் நண்பர்களுடன் நான் புழங்கும்போது ஒரு சொல் அடிக்கடி வந்து தாக்குகின்றது. நான் சமூகத்தை ஏதாவது விமர்சனமாகச் சொன்னால் உடனே ‘நீ ஒரு பூமர்’ என்று சொல்கிறார்கள். திரும்பத் திரும்ப   தெரிந்தோ தெரியாமலோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பலர் இதை சமூகவலைத்தளங்களில் ஒரு மேனியாவாகவே மாற்றியிருக்கிறார்கள். இன்றைக்கு கொஞ்சம் வாசிப்பவர், சிந்திப்பவர் சந்திக்கவேண்டிய முக்கியமான எதிர்ப்புநிலை என்பது இதுதான்.

சந்திரசேகர் மாணிக்கம்

அன்புள்ள சந்திரசேகர்,

இதே கேள்வியை சென்ற புதியவாசகர் சந்திப்பின்போது ஓர் இளம் வாசகர் சொன்னார்.  பூமர் என்றால் என்ன என்று நான் அவரிடம் கேட்டேன். அவர்  ‘தெரியவில்லை. பொதுவாக முட்டாள்தனமாகப் பேசுபவர்களை அப்படிச் சொல்கிறார்கள்’ என்றார். ‘சரி, உங்கள் நண்பர்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். அவர்களுக்கும் தெரியாது என்றார்.

உலகப்போருக்குப் பின் , 1945 முதல் இருபதாண்டுகளில் பிறந்தவர்களைச் சுட்ட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பயன்படுத்தப்படும் ஒரு சொல் Baby boomers என்ற சொல்லின் சுருக்கம். போருக்குப்பின் மேலைநாட்டில் மக்கள்தொகை குறைந்தது. ஆகவே நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டனர். ஆனால் கூடவே கடுமையான பொருளியல் நெருக்கடியும் இருந்தது.

ஆகவே அந்தத்தலைமுறையினர் பெரிய குடும்பத்தில், கடுமையான போராட்டங்களிடையே உருவாகி வந்தவர்களாக இருப்பார்கள். அதன்விளைவான சில குணாதிசயங்கள் அவர்களுக்கு இருக்கும். செலவழிக்க அஞ்சுவார்கள். விளைவுகளை கணக்கிட்டே எதையும் செய்வார்கள். எளிதாக எதையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் Gen X என்றும் Millennials என்றும் Gen Z: என்றும் Gen Alpha என்றும் பிரிக்கப்படுகிறார்கள். அந்தப்பிரிவினைகளுக்குரிய பொதுவான குணாதிசயங்களும் வரையறை செய்யப்படுகின்றன.

ஆனால் அதற்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை. சும்மா ஒரு பொதுமைப்படுத்தல். விற்பனை சார்ந்த துறைகளில் ஓரளவு பயன்பாட்டிலுள்ளது. அறிவுச்செயல்பாட்டில் உள்ளவர்கள் அதை பொருட்படுத்த மாட்டார்கள். அது உலகு முழுமைக்கும் உரிய பிரிவினையும் அல்ல.

பூமர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்களால்தான் இன்றைய உலகமே வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவியல், சிந்தனை, இலக்கியம், அரசியல், வணிகம், கலை எல்லாவற்றிலுமே. இன்று உலகமெங்கும் வழிபடப்படும் எல்லா திருவுருக்களும் பூமர் தலைமுறையினரே. அவர்களில் எவரையேனும் கொண்டாடாத எவரும் இருக்க மாட்டார்கள். சுத்த முட்டாள்கள் என்றால்கூட ஏதாவது அரசியல்வாதிகளையோ, பணக்காரர்களையோ, ஊடக பிம்பங்களையோ வழிபட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.

ஓர் இளைஞர் பூமர் என்று சொல்லி முந்தைய தலைமுறையினரை நிராகரிக்கிறார் என்றால் அவர் முற்றிலும் முதிர்ச்சியற்றவர் என்று பொருள். அவரிடம் ஓரளவு விளக்கலாம். அல்லது அவரே முதிர்ந்து வரட்டும் என்று விட்டுவிடலாம். முப்பது வயதுக்குமேல் ஒருவர் அதைச் சொல்கிறார் என்றால் அவரை ஒன்றும் செய்யமுடியாது. அவர் இங்குள்ள பல்லாயிரம் கோடி பாமரரில் ஒருவர். அவரை எவ்வகையிலும் பொருட்படுத்த வேண்டியதில்லை.

எந்தத் துறையானாலும் அதன் சாதனையாளர்கள் நமக்கு முன்னரே நிகழ்ந்திருப்பார்கள். நாம் அவர்களை ஆழ்ந்து அறியவேண்டும். அறியுந்தோறும் நாம் அத்துறையில் வல்லுநர்கள் ஆகிறோம். அவர்களை கடந்துசெல்கிறோம். அதுவே நம் வெற்றி. நமக்கு அடுத்த தலைமுறை நம்மைக் கற்று நம்மை கடந்துசெல்லும். அதுவே நாகரீகம் இயங்கும் விதம்.

அவ்வண்ணம் நம் முன்னோடிகளைக் கற்க சிறந்த வழி அவர்கள்மேல் நாம் கொள்ளும் வழிபாட்டுணர்வும் மோகமும்தான். எந்தத் துறையில் சாதனையாளர் என்றாலும் அவர் தன் துறையின் முன்னோடிகள்மேல் கொண்டுள்ள பெரும் பற்றை நாம் காணமுடியும். ஒரு தவம் போல அவர்களை எண்ணிக்கொண்டிருப்பதே அவர்களை அறியவும் கடப்பதற்குமுரிய வழி. ஒரே ஒரு விதிவிலக்கு கூட உலக வரலாற்றில் இல்லை.

ஏனென்றால் அந்தப் பற்று என்பது நாம் பயிலும் துறைமேல் கொண்டுள்ள பற்றின் இன்னொரு வடிவம். நாம் கொண்டுள்ள இலட்சியங்கள்மேல் இருக்கும் வெறியின் இன்னொரு வடிவம். அந்தப் பற்றின் வழியாகவே நாம் நம் முன்னோடிகளை அணுகி அறிகிறோம். காதலன் காதலியை அறிவதுபோல ஒவ்வொரு கணமும் நம் முன்னோடிகளையே தியானித்து, அவர்களையே எண்ணி, அவர்களிடமிருந்து நமக்குரியவை அனைத்தையும் பெற்றுக்கொள்கிறோம்.

உண்மையிலேயே அப்படி ஒரு பற்று முன்னோடிகள்மேல் ஒருவருக்கு இல்லை என்றால், அப்படி பற்றுகொள்ளத்தக்க எவரையும் ஒருவர் உணரவில்லை என்றால் அவர் மிகமிகப் பரிதாபத்துக்குரியவர். அவர்மேல் சீற்றம் கொள்வதில் பொருளே இல்லை. பிரியமான அனுதாபத்துடன் விலகிநின்று அவதானிக்கவேண்டிய ஒரு சமூகக் கச்சாப்பொருள் அவர், அவ்வளவுதான்.

ஜெ

மேட்டிமைவாதம் என்னும் சொல்…

மக்கள், பாமரர் எனும் சொற்கள்.

மக்கள், பாமரர்- இன்று

மக்கள் எனும் திரளை எதிர்கொள்வது…

பாமரரை எதிர்கொள்வது…

முந்தைய கட்டுரைஆ.சதாசிவம்
அடுத்த கட்டுரைஞானத்தை நோக்கிய பாதை